நேர்காணல் -15
சென்ற வாரம் …..
ஈஸ்வரனால்த்தான், “சிவசங்கர் மேனன்” போன்ற புகழ்பெற்ற இந்தியத் தூதரெல்லாம் எங்கள் கம்பன்விழாவில் வந்து பேசினார்கள். அந்த அளவோடு “ஹைக்கொமிஷன்” தொடர்பை நாங்கள் நிறுத்திக் கொண்டோம். அதனால் ஐங்கரநேசனின் கோரிக்கையை, “அது எம்மால் முடியாத காரியம்” என்று சொல்லி நான் நிராகரித்துவிட்டேன்.
இந்த வாரம் …..
இந்திய இராணுவ வருகைக்கு முன்னால், இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது, நாம் பெற்ற பல அனுபவங்களை உங்களுக்குச் சொல்லி வருகிறேன். அந்த வரிசையில் இன்னும் சில மனப்பதிவுகளை இங்கு சொல்லலாம் போல் தோன்றுகிறது.
#நிருபர் :
நீங்கள் சொல்லும் விடயங்களெல்லாம் எங்களுக்குப் புதியவையாகவே இருக்கின்றன. ஆகவே நீங்கள் இதே பாணியில் உங்கள் கருத்துப் பதிவுகளைச் சொல்லுங்கள் ஐயா!
#பதில் :
நான் முன்னர் சொன்ன “சகடை” விமானம் குண்டுவீசிய கால அனுபவத்தின்போதான மறக்கமுடியாத ஒரு சம்பவம் பற்றியும் இங்கு நான் சொல்லவேண்டும்.
யாழ் “கோட்டை” மீதான புலிகளின் தாக்குதல் அதிகரித்தபோது, இலங்கை விமானப்படையின் விமானக் குண்டுவீச்சும் அதிகரிக்கத் தொடங்கியது. இரவு, பகல் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் விமானங்கள் சுற்றிச் சுற்றிக் குண்டுகளை வீசி வந்தன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், அப்போது அன்னை “சிவத்தமிழ்ச்செல்வி”, “துர்க்கா துரந்தரி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையில் நடந்து வந்தது. தமிழ்ப் பண்டிதரான அந்த அம்மையார், சிறந்த சமயச் சொற்பொழிவாளராய் விளங்கி வந்தார்.
அவர் திருமண வாழ்க்கையைத் துறந்து, தமிழுக்காகவும், சமயத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அவரது சொற்பொழிவுகளுக்கு அக்காலத்தில் பெரும் மதிப்பு இருந்தது. பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் எல்லாக் கோயில்களிலும் அவரது உரைகள் நிகழ்ந்து வந்தன. அப்போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றி வந்தார்.
நீரோட்டமான அம்மையாரது பேச்சு கற்றவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்பட்டது. அக்காலத்தில் இன்றுபோல வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் அக்காலத்திலேயே அம்மையார் சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளிலிருந்து சொற்பொழிவுகளுக்காக அழைக்கப்பட்டார்.
இங்ஙனமாய் சமயப் பணியாற்றி மக்களிடம் மிக நல்ல பெயர் பெற்றிருந்த அந்த அம்மையாரிடம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தை, அதன் உரிமைக்காரர்கள் ஒப்படைத்து, அவ் ஆலயத்தைத் தலைமையேற்று வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டனர். அம்மையார் அவர்கள் அவ் வேண்டுகோளை ஏற்று, அவ் ஆலயத்தின் தலைவியாகச் செயலாற்றத் தொடங்கினார்.
அம்மையார் பொறுப்பேற்றபொழுது, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் இன்றிருப்பதுபோல் பெயர் பெற்று இருக்கவில்லை. அவ் ஆலயத்தில் வழிபடுவோர் தொகையே மிகக் குறைவானதாகத்தான் இருந்து வந்தது. அக்காலத்தில் பராமரிப்பு இன்மை காரணமாக அவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தினுள் எல்லாம் வெளவால்கள் குடியேறி இருந்ததாகவும், “டயர்கள்” எரித்துப் போட்டு அவற்றைத் துரத்துவதாகவும் அச்சூழலைச் சார்ந்த ஒருவர் எனக்குச் சொல்லியிருக்கிறார்.
அம்மையார் தலைமையேற்ற பிறகு அவ் ஆலயம் மிக வேகமாக வளர ஆரம்பித்தது. தனது சொற்பொழிவுத் திறனால் யாழ்ப்பாணம் முழுவதிலும் அறியப்பட்டிருந்த அம்மையார் அவர்கள், இவ் ஆலயப் பொறுப்பை ஏற்றதும், எல்லா ஊர் மக்களும் அவ் ஆலயத்தை நோக்கி வர ஆரம்பித்தனர். தனக்கு இருந்த செல்வாக்கை, அன்னை துர்க்கையின் செல்வாக்காக மடைமாற்றினார் அம்மையார்.
தான் பேசச் சென்ற இடங்களிலெல்லாம், ஏழு செவ்வாய்க்கிழமைகள் வந்து துர்க்கையைத் தொழுதால் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று அம்மையார் செய்த பிரச்சாரம், யாழ்ப்பாணச் சைவமக்கள் மத்தியில் மிக நன்றாக எடுபட்டு, துர்க்கை அம்மன் ஆலயத்தை நோக்கி யாழ்ப்பாணமே திரளத் தொடங்கியது.
அக் காலத்தில் மானிப்பாயில் இருந்த, கிறிஸ்தவர்களின் அந்தோனியார் கோயிலுக்கு நேர்ந்து ஏழு வாரம் சென்று மெழுகுவர்த்தி ஏற்றும் ஒரு வழக்கம் இருந்தது. பல இந்துக்கள்கூட அந்த நேர்த்திக் கடன்களைச் செய்ய ஆரம்பித்திருந்த காலம் அது.
அம்மையாரின் பிரச்சாரத்தால், மெழுகுவர்த்தியோடு அந்தோனியார் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த இந்துக்கள் அனைவரும், நெய் விளக்கோடு அன்னை துர்க்கையை நாடி தெல்லிப்பழைக்குத் திரளத் தொடங்கினர்.
அதுநாள்வரை அளவெட்டியில் தனது வீட்டில் வசித்து வந்த சிவத்தமிழ்செல்வி அம்மையார் அவர்கள், நிர்வாகப் பொறுப்பேற்ற சில காலங்களின் பின்னர், துர்க்கை அம்மன் ஆலயத்திலேயே நிரந்தரமாக வந்து குடியேறினார். அவரது வருகை கோவிலின் சிறப்பை மேலும் உயர்த்தியது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக அம்மையார் செய்த ஓர் காரியத்தை நான் இங்கு சொல்லவேண்டும். அதுவரை மக்கள்தான் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அம்மையார் பெரியதொரு புரட்சியைச் செய்து, ஆலயத்தை மக்களை நோக்கி நகர்த்தத் தொடங்கினார்.
#நிருபர் :
ஆலயத்தை மக்களை நோக்கி நகர்த்துவதா? புரியவில்லை. சற்று விளங்கும்படி சொல்லுங்களேன்!
#பதில் :
சொல்கிறேன்! அம்மையார் சமூக உணர்வு மிக்கவர். அதனால் அவர் ஆலயத்தைப் பொறுப்பேற்ற பிறகு, அங்கு சேர்ந்த நிதிகளை, சமூகப்பணிகளுக்காகச் செலவு செய்யத் தொடங்கினார். அன்னையர் இல்லம், மகளிர் இல்லம், இந்து இளைஞர் சங்கம் , பெண்கள் தொண்டர் சபை எனப் பலவிதமான சமூக அமைப்புக்களை உருவாக்கி, மிகத்திறம்பட அவற்றைக் கட்டுப்பாட்டோடு நடத்தத் தொடங்கினார்.
அதனால் கோயிலின் மதிப்பு முன்பைவிட உயர்ந்தது. அக் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டு, பல சிறுமிகள் ஏதிலிகளாய்த் தவித்திருந்தனர். அதுபோலவே யாழில் வசித்த பலர் குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவிட, தனித்துப்போன பல தாய்மார்களும் பேணுவாரின்றி இருக்கும் நிலைமை ஏற்பட்டது. இத்தகையவர்களுக்கெல்லாம் அம்மையார் தொடங்கிய இல்லங்கள் அடைக்கலம் தந்து ஆறுதல் செய்தன.
அம்மையார், தன் இல்லத்தில் இருந்த தாய்மாரையும், பெண்பிள்ளைகளையும் ஒரு வீட்டுத்தலைவி போல் இருந்து பாதுகாக்கத் தொடங்கினார். அம்மையாரின் இந்தச் சமூகப்பணிகள் பல நாடுகளிலும் வசித்த தமிழ்மக்கள் அனைவர் மத்தியிலும் பிரபல்யமாக, பல இடங்களிலிருந்தும் அம்மையாரின் பணிகளுக்காக ஆதரவுக்கரங்கள் நீளத்தொடங்கின. அதனால் அம்மையாரின் சமூகப்பணிகளும் நீளத்தொடங்கின.
இவைமட்டுமின்றி அம்மையார் அந்த ஆலயத்தையும் மிக வேகமாகக் கட்டி எழுப்பத் தொடங்கினார். திருமுறை மண்டபம், தீர்த்தக்கேணி ,தேர், வாசற் கோபுரம், அன்னதான மண்டபம், கல்யாண மண்டபம், யாத்திரீகர் விடுதி, ஆய்வு நூலகம் என ஆலயக் கட்டிடப் பணிகளும் மிக வேகமாய் உருவாக்கப்பட்டன.
அம்மையாரின் ஆலயத்திற்கு வந்தவர்களெல்லாம் பசியாறிப் போனார்கள். இப்பணிகளோடு நில்லாமல் தனது சமயப்பணிகளையும் அம்மையார் தொடர்ந்து செய்து வந்தார். அக் காலத்தில் அவ்வாலயத்தில் அம்மையார் நடாத்திய சைவ சித்தாந்த மாநாட்டில், தமிழக அறிஞர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். அங்ஙனம் வந்தவர்களில் ஒருவரால் அம்மையாருக்கு “துரக்காதுரந்தரி” எனும் பட்டம் அளிக்கப்பட்டது. அதுவரை காலமும் “சிவத்தமிழ்ச்செல்வி”யாக இருந்த அம்மையார் பின்னர் “துர்க்காதுரந்தரி” யாகப் போற்றப்பட்டார்.
#நிருபர் :
போர்க்காலச் சூழல்பற்றிச் சொல்லத் தொடங்கிய நீங்கள் இந்த அம்மையார் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம் என்ன?
#பதில் :
இருக்கிறது. இவையெல்லாம் போர் தொடங்கிய காலக் காரியங்கள். பின்னாளில் போர் வலுக்கத் தொடங்கியதும், பலாலியிலிருந்து நடைபெற்ற இராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் தத்தம் ஊர்களை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். அதனால், தெல்லிப்பழை ஊர் யாழ்ப்பாணத்தின் எல்லை ஊராக மாறியது.
ஊர் எல்லையிலிருந்த துர்க்கை அம்மன்ஆலயத்தை நிர்வகித்து, நம் தமிழினத்திற்கே ஆறுதல் தந்து கொண்டிருந்த அம்மையார், தன்னைத் தேடி அடைக்கலமாக வந்த அனைவரையும் ஓர் எல்லைக் காளி போல் இருந்து காத்து வந்தார்.
அம்மையாரோடு துணை நின்ற பெண் தொண்டர்கள் பலர், போரின் காரணமாக மெல்ல மெல்ல ஊரையும், நாட்டையும் விட்டு வெளியேற, அம்மையாரின் நிலை தனித்த நிலையாயிற்று. ஆனாலும் அம்மையார் அதனால் சற்றும் மனந்தளராமல், தன்னோடு உடன் நின்ற ஒரு சிலரை மட்டும் வைத்துக் கொண்டு, ஓர் இரும்புப்பெண்மணி போல, தன் நிர்வாகத்தை முன்பு போலவே அசையாது நடாத்தி வந்தார்.
அக்காலத்தில் ஆலயத் தொண்டராக மட்டுமன்றி, அம்மையாரின் தொண்டராகவும் சேவையாற்றி வந்த திரு. சிவபாலன் அவர்களை என்னால் மறக்க முடியாது. அவரும் தனது தனி வாழ்க்கையைத் துறந்து ஒரு ஞானி போல வாழ்ந்து வந்தார்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற தமிழ் அறிஞரான பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர் அவர். பண்டிதமணியைப் போலவே அவரும் நீண்ட தாடி வைத்திருந்தார். அவர் அம்மையாரின் முழு நம்பிக்கைக்கு உரியவராய் செயலாற்றி வந்தார்.
எதற்கெடுத்தாலும் அம்மையாரின் வாயில் சிவபாலனின் பெயர்தான் வந்து விழும். அம்மையாரின் மனம் நோகாமலும், ஆலயத்திற்கு வரும் அடியார்களின் மனம் நோகாமலும் சிரித்த முகத்தோடு அவர் எப்போதும் செயலாற்றி வந்தார்.
ஆலயத்தின் தேர்முட்டியடியில் தங்கியிருந்து, அம்மையாரையும் ஆலயத்தையும் சுற்றிச் சுற்றி வந்து, அம்மையாரின் பணிகளுக்கு உறுதுணையாய் அவர் செயலாற்றி வந்தார். அம்மையாரைத் தெரிந்த அனைவருக்கும் அவரையும் தெரிந்திருந்தது.
அக்காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருநாள் இரவு, ஆலய வளாகத்தினுள் புகுந்த சில கொள்ளையர்கள், அம்மையாரையும் அங்கிருந்தவர்களையும் கட்டி வைத்துவிட்டு, ஆலயத்திலிருந்த தங்க நகைகளையெல்லாம் அபகரித்துச் சென்றனர். அச்செய்தி அடுத்தநாள் காலையில் ஊரெங்கும் பரவ, அதிர்ந்துபோன யாழ் மக்கள் கவலையோடு ஆலயம் நோக்கி ஓடிவரத் தொடங்கினர்.
அம்மையார் அச்சம்பவத்தால் அதிர்ச்சி அடையாமல் மிக நிதானமாக நின்றார். ஏதோ ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான் அக்கொள்ளையை நடத்தியதாகப் பேச்சு அடிபட்டது. ஏதும் செய்யமுடியாத நிலையில் நிர்க்கதியாய் நின்ற அம்மையார் தனக்குள் மனம் வருந்தி இருப்பார் போல. அதுகண்ட அன்னை துர்க்கை, அம்மையாரின் துயர் நீக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டாள்.
இச்சம்பவம் நடந்து ஓரிரு தினங்களுக்குள், யாழ் மக்களை ஆச்சரியப்படுத்தும் செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. ஒருநாள் விடியற்காலையில் கோயில் வளாகத்திற்குள், திருடப்பட்ட நகைகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி, கொண்டு வந்து யாரோ போட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.
அச்செய்தியை அறிந்து யாழ் மக்கள், சிவத்தமிழ்ச்செல்வியையும் அன்னை துர்க்கையையும் வியந்து போற்றத் தொடங்கினார்கள். அப்போதும் சிவத்தமிழ்ச்செல்வி அவர்கள், மிக நிதானமாக நடந்து கொண்டார். நடந்த அச் சம்பவத்தை, தனதும் ஆலயத்தினதும் பிரச்சாரத்திற்காக அவர் பயன்படுத்த முனையாததுகண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
#நிருபர் :
இச் சம்பவத்தைத்தான் போர்க்காலப் பதிவுகளில் ஒன்றாக நீங்கள் சொல்ல நினைத்தீர்களா?
#பதில் :
இல்லை. அப் போர்க்காலத்தில், இவ் ஆலயத்தில் இதைவிட மோமசமான ஓர் அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது. இப்போது நான் சொன்னவை எல்லாம் அச்சம்பவத்தின் முழுப்பாதிப்பையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவைதான். இனி அச் சம்பவம் பற்றிச் சொல்கிறேன்.
(தொடரும்)