புள்ளி அளவில் ஒரு பூச்சி - மஹாகவி. து. உருத்திரமூர்த்தி

புள்ளி அளவில் ஒரு பூச்சி -  மஹாகவி. து. உருத்திரமூர்த்தி

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம் ஒத்திருந்த வேளை!

ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு புறங்கையால் தட்டினேன்.

நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு

வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
'தாயே' என அழுத
சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.

காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டா நம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.

மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின் சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!

காதில் அப்பூச்சி கதை ஒன்றே
வந்து வந்து மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.