புழுதி மணலில் இறகு - கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன்
கவிதை முற்றம் 22 Jul 2015
குட்டித் துயில் கலைந்து
மெல்ல
எட்டிப் பார்க்கிறான்,
சாக் கூடையில்
பூக்கள் நிரப்பும், இயமன்.
உதிரும் பூத்தான்
என்றில்லை.
தேன் அறாத் தினப்புது மலர்…
அப்போது கருக்கட்டும் போது…
எதுவெனினும்
இல்லைக் கவலை.
தொடர் யுத்தம் நின்றுபோன பின்,
அவன் நம்பிக்கை
மோட்டார் சைக்கிள்கள் மீதாக
இருந்தது.
குருட்டு இளைஞரின்
முரட்டு வேகத்தில்
போய்ப் பறிக்க வேண்டிய
தேவை இருந்ததில்லை
அவனுக்கு.
அதனால்,
மெல்லக் கண்ணயர்ந்தவன்
ஒற்றைப் பெண்குயில் அலறலில்
இப்போதுதான் விழிக்கிறான்
கண் கசக்கியபடி.
புங்குடுதீவுப் புழுதி மணலில்
சரிந்து படிகின்றன
பிடுங்கி எறியப்பட்ட
இறகுகள்.
புதிய நம்பிக்கை
துளிர்க்கிறது, அவனுள்..
போதையிலாடும் வெறிகள் மீதும்..
அதன் பாதை தொடரும் குறிகள் மீதும்..
*****