பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?

பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?
 
 
 
 
லகமதை நேசித்த ஒருவன் போனான்!
உயர் கம்பன் தொண்டரிலே ஒருவன் போனான்!
விலையற்ற பெரும்புகழை தமிழுக்காக்கி
விரலதனின் முன்னின்ற வீரன் போனான்!
பலகற்றோர் தமைக் கூட்டி பாரில் நல்ல
பண்பான விழவெடுத்த பெரியன் போனான்!
நிலமுற்றும் தன் உறவாய் நேசித்தாண்ட
நிமிர் நெஞ்சன் வானமதை ஆளப்போனான்!

பொன்னாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டி
புகழ் அறிஞர் தமைப்போற்றும் புகழோன் எங்கே?
பொன்னாக செல்வத்தை வாரிக்கொட்டி
புகழ் அரிய கம்பனுக்கு மனதைத் தந்து
பொன்னாக அவன் கவியைப் போற்றி நின்று
புகழதனை உலகெல்லாம் பரவச் செய்த
பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?
புலவர்க்கு இனி எவர்தான் புகழைச் செய்வார்?

 

சட்டத்தின் நுணுக்கங்கள் சரியாய்க் கற்று
சகத்தினிலே இவர்க்கு நிகர் வேறார் என்று?
எட்டத்தான் முடியாத உயரந்தொட்டும்
எங்களது கம்பனுக்கே இதயம் தந்தோன்!
பட்டோடு பணம் பரிசில் பலவும் தந்து
பாரிலுள தமிழ்ப்புலவர் தம்மைக் காத்த
மட்டில்லா பெருமனிதன் மறைந்ததாலே
மண்விட்டுப் போனதுவோ புலவர் வாழ்வும்.

எங்களது ஈழத்தின் இளையோர் தம்மை
இதயத்தில் வைத்திருத்திப் புதல்வரென்ன
பொங்குகிற அன்பதனைப் பொழிந்து நின்ற
புண்ணியனும் போனானோ? புகழைத்தந்தோன்
தம்குருதி வற்றிடவும் தனித்து நாங்கள்
தவிக்காது இருப்பதற்காய் தயையைக் கொட்டி
மங்குகிற நிலையினிலும் வந்து நின்று
மாண்பான விழவெடுத்த மாட்சி என்னே?


கம்பனது அடிப்பொடியின் காலைத் தொட்டோம்
கனிவான குருநாதர் இராதாகிருஷ்ணர்
தம் பெரிய கருணையினால் ஈர்த்து ஆள
தரணியிலே எமக்கென்று இடமும் பெற்றோம்
எம்முடைய நலம் வேண்டி கம்பவாணர்
ஈர்த்தாளப் புதுவையினை ஊராய்ப் பெற்றோம்
உம்பரென அவர் ஆக, ஓய்வேயின்றி
உருவேறாய் எமைக் காத்த தேவும் போச்சே?

தனியொருவராய் நின்று எம்மைத் தாங்கி
தயை அதனை வான் மழையாய்க் கொட்டி நின்ற
மனிதரிலே மாணிக்கம் மறைந்து போக
மனதளவில் ஏதிலிகள் ஆகிப்போனோம்
இனி எவர்தாம் எமை உம்போல் தாங்கி நின்று
ஏற்றங்கள் செய்திடுவார்? இடமேயில்லை!
அணியிழந்து கம்ப இனம் வாடிப்போச்சே!
அவனியிலே இனி எம்மை யாரே காப்பார்?

நடுச்சாமம் தனில் கூட வாயில் நின்று
நமையெல்லாம் வரவேற்க இனியாருள்ளார்?
தடுக்காத மனத்தோடு தயையே பொங்க
தள்ளரிய பரிசுதர யாவர் உள்ளார்?
ஒடுக்காத உணர்வுகளால் உயிராய் எண்ணி
உரிமையதால் ஓடிவர எவரே உள்ளார்?
அடுக்காது காலா! உன் கொடிய செய்கை
அழுதாலும் தீர்ந்திடுமோ? துயரே சொல்லாய்.

கம்பனது காலடியின் அருகில் சென்று
கனிவோடு நீ இருக்கக் 'கம்பவாணர்',
நம்பிய என் சொல்காத்து நடுக்குறாதே
நல்லபடி கழகத்தைக் காத்து நின்றாய்!
தம்பியராய் ஈழத்தின் கழகத் தொண்டர்
தமை ஈர்த்து நீ செய்த தொண்டு என்னே?
நம்முடைய பெயர் நினைந்து அவர்கள் வாழ்வார்
நலம் விளையும் என்றுன்னை அணைத்துக்கொள்வார்.
                 *****

யாமோ ஏங்கித் தவிக்கின்றோம்.
அகில இலங்கை கம்பன் கழகம் சார்பாக அமைப்பாளர் ஸ்ரீ.பிரசாந்தன்
 
 
வாதா எதுவும் வாங்காமல்
வருடந் தோறும் கம்பனுக்கு
ஆதாரம்மாய் நின்றவனே!
அதற்குள் என்ன அவசரமோ?
ஈதோ இலங்கைக்கொரு பாலம்
என்றே எண்ணி இருந்தோமே!
யாதோ அலுவல் மேலிடத்தில்
யாமோ ஏங்கித் தவிக்கின்றோம்.

குள்ள முனிவன் தோற்றத்தில்
கொடுத்துச் சிறந்த ஏற்றத்தில்
உள்ளம் எல்லாம் கவர்ந்தவனே!
உறவாய் வந்து கலந்தவனே!
பிள்ளை, பேரர் என எம்மைப்
பேணி ஏற்றி வித்திட்டாய்!
இல்லை இங்கு உனைப்போல
ஒருவர் எனப்பேர் வைத்திட்டாய்.
                 *****
 
புண்ணிய நல் நெஞ்சத்தை தொழுவதெங்கே?
அகில இலங்கை கம்பன் கழக இளநிலை நிர்வாகிகள் சார்பாக அமைப்பாளர் அ.வாசுதேவா

ஊர்புகழப் புதுச்சேரிக் கழகந்தன்னை
உயிரூட்டி உலகுக்காய் ஈந்த வள்ளல்
பேர் உயரப் புகழுக்காய்ப் பொழுதைப் போக்கி
பெரு நன்மைப் பேறுகளை துய்க்காதென்றும் 
சீர் வளரச் செய்கருமம் செய்தே வென்றோன்!
செகம் வாழ நாளுந்தான் தன்னைத் தந்தோன்!
பார் புகழும் வழக்கறிஞனான போதும்
பதவி நிலை பாராமல் உழைத்த மேலோன்!

தான்வாழ எண்ணாமல் தரணி வாழ 
தருமங்கள் நாளுந்தான் செய்து நின்று
மாண்பாக எம் நெஞ்சின் மதிப்பை வென்ற
மங்காத புகழோனே முருகேசையா! 
வான் பார்த்த பூமியதாய் எங்கள் நெஞ்சம்
வரவுக்காய் வாடுதை எவர்க்குச் சொல்வோம்?
தூண் போல எமைத்தாங்கி துயரம் போக்க
தூயவரே உமையன்றி இனிமேல் யாரோ?

நோயதனைப் பாராமல்  எம்மைத்தாங்கி
நொடிப் பொழுதும் பிரியாமல் நெருங்கி நின்றீர்!
தாயவரை வென்றீரே தகுந்த அன்பால்
தழர்வோடும்  எம் கம்பன் விழவு கண்டீர்!
மாயமென உலகதனை உணர்ந்ததாலோ
மண்விட்டு வைகுண்ட வாசல் சென்றீர்?
தூயவரே உமதன்பைக் கொண்டதாலே
தூயரென நாமும்தான் உயர்வு கொண்டோம்.

காண்கின்ற போதெல்லாம் கருணையோடு
கணக்கின்றிப் பரிசீயும் கைகள் எங்கே?
நீண்ட வழி பாராமல் நிதமும் ஏகும் 
நேயமிகு கால்கள் இனிக் காண்பதெங்கே?
வேண்டாமை நெஞ்சோடு வாழ்த்து ஈயும் 
விருப்புமிகு திருவாயின் வனப்பு எங்கே?
பூண்ட பெரும் அன்பாலே பூரிக்கின்ற 
புண்ணிய நல் நெஞ்சத்தை தொழுவதெங்கே?
 
எல்லோரும் வாழவென வாழ்ந்த கோவே!
எழிலார்ந்த திருவடிகள் சேர்ந்தீர் வாழ்க!
நில்லாத உலகதனை நீத்த நீவீர்
நிலையான பேரின்ப வீடு காண்பீர்!
பொல்லாத காலன் கை சேர்ந்தீர் என்று
புலம்புவது பொய்யன்றோ ஞாயம் இல்லை
அல்லாத செயலெதுவும் செய்திடாத
ஐயா நீ ஆண்டவனின் அடிகள் சேர்வாய்!
                 *****
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.