வழியனுப்பும் கூட்டத்தில் நாமும் சேர்ந்தோம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

வழியனுப்பும் கூட்டத்தில் நாமும் சேர்ந்தோம் | கம்பவாரிதி  இலங்கை ஜெயராஜ்
 

லகெங்கும் இசையாலே பெருமை நாட்டி
          ஒப்பற்ற புகழ்கொண்ட ஒருவன் இன்று
நிலவாழ்வை நீத்துப் பின் விண்ணைச் சேர்ந்தான்
        நிகரற்ற அவன் இசையைத் தேவர் கேட்கப்
பலகாலம் செய்ததவம் பலித்து வெல்ல
        பார் அவனை இழந்ததுவாம் பலரும் போற்ற
விலகாது செவி நிற்கும் அவனின் நல்ல
        விண்ணார்ந்த இசைப்புகழுக்(கு) இறப்பேயில்லை.
 

அற்புதமாம் தன் இசையால் எம்மை ஆண்ட
        அமரதேவப் பெரியோன் அகிலம் நீத்தான்.
தற்பெருமை சிறிதின்றி இசையில் மூழ்கி
         தரணியெல்லாம் ஆண்டமகன் அகிலம் நீத்தான்.
கற்புடனே இசைக்காகக் கனிந்து நின்று
        கரைந்த மகன் நமைவிட்டு அகிலம் நீத்தான்.
உற்றுலகம் கண் வைத்து உவந்த மன்னன்
        ஊர் அழவே நமைவிட்டு அகிலம் நீத்தான்.

பட்டங்கள் பதவியென பலவும் தேடி
        பாதத்தில் வந்து விழ அவற்றில் மூழ்கா(து)
இட்டத்தோடிசையே தம் வாழ்வு என்று
        எப்போதும் கரைந்ததனில் இனிதாய் மூழ்கி
முட்டில்லாக் குரலோடு முனிவன் போல
        முழுநேரம் இசைக்காக்கி வாழ்ந்து வென்றோன்.
சட்டென்று விதிசேர சரிந்தே போனான்.
        சரித்திரமாய் ஈழத்தில் பதிந்தே போனான்.

நாட்டினது தலைவன் தோள் கொடுத்தே தூக்கும்
        நல்ல புகழ் வேறெவர்க்கு வாய்க்கும் ஐயா?
பாட்டினது நுண்மையதால் பெற்ற ஏற்றம்
        பண்பாள உனக்கன்றி எவர்க்கும் இல்லை
ஏட்டினிலே இப்பெருமை கண்டபோது
        ஏற்றமது சரியென்றே எண்ணி நின்றேன்.
வாட்டமுறும் தமிழரினக் கலைஞர்க்கெல்லாம்
        வாய்த்திடுமோ இப்பெருமை? வஞ்சம் ஏனோ?

தவில் இசையால் உலகதனை ஆண்டு நின்றான்.
        தரம் மிக்க தட்சணா மூர்த்தி என்பான்.
அவிர் உணவாய் குழலிசையால் தேவர்க்கெல்லாம்
        அமுதனைய இசையீந்தான் பத்மநாதன்.
கவிதையிலே சிகரங்கள் தொட்டு நின்ற
        கவிராஜன் மாகவி எம் மண்ணில் வாழ்ந்தான்.
புவியினிலே உனை ஒத்து நின்ற இந்த
        புகழோர்க்கு அரசேதும் செய்யவில்லை.

ஒப்பற்ற திறமைகளால் உயர்ந்து நின்று
        உணர்வோடு புகழ் சேர்த்த பெரியோர் தம்மை
எப்போதும் ஒன்றாக நினைந்தே போற்றி
        ஏற்றமுறச் செய்வதனால் இனங்கள் சேரும்
தப்பற்ற வழிகாட்டி அரசு நின்றால்
        தமிழினமும் தமக்குள்ளே மகிழ்ந்து போகும்
வெப்புற்ற உளம் மாறி உறவு நீள
        வேற்றுமைகள் தொலைந்திந்த தேசம் மீளும்.

ஆற்றலிலே சிங்களவர் தமிழர் என்றும்
        அல்லாவின் வழி நிற்போர் இவர்கள் என்றும்
வேற்றுமைகள் ஒழித்தேதான் விளங்கச் செய்;யின்
        விண்ணார்ந்த பெரும் புகழைத் தேசம் எய்தும்
நேற்றுநடந்தவை மறப்போம் நினைவில் கொண்டு
        நேசமுடன் புலமைமிகு பெரியோர்க்கெல்லாம்
ஆற்றுகிற கடமைகளை இனிமேலேனும்
        அனைவர்க்கும் அரசு செயின் அகிலம் ஓங்கும்.

அஞ்சலியில் விஷம் வைத்துப் பேசவில்லை
        அனைவருமே ஒன்றாக வழிகள் சொன்னேன்.
பஞ்சமிலாதிசையளித்துப் பாரை வென்ற
        பண்பாளன் பிரிவால் கண் பனிக்க நின்றோம்.
வஞ்சமிலாதன்பாலே வணங்கி உன்னை
        வழியனுப்பும் கூட்டத்தில் நாமும் சேர்ந்தோம்.
விஞ்சைமிகு பெரும்புலவ மீண்டும் இந்த
        வியன் இலங்கை வரவேண்டும் வேண்டி நின்றோம்.
                 ✯
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.