உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 15 | காமமும் கடப்பித்தார் !

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 15 | காமமும் கடப்பித்தார் !
நூல்கள் 08 Nov 2016
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
 
பிராமணியத்தை வெறுத்த என் குருநாதர்

குருநாதரின் முதல் பயணத்தில் நடந்த,
மறக்க முடியாத சில அனுபவங்களையும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.
பேரறிஞரான கி.வா. ஜகந்நாதன் அவர்களை,
எங்கள் குருநாதர் தனது ஆசிரியரெனச் சொல்வார்.
கி.வா.ஜ. அவர்கள் யாழ்ப்பாணத்திற்குப் பலதரம் வந்து சென்றுள்ளார்.
அக்காலத்தில், கி.வா.ஜ. அவர்களது யாழ்ப்பாணப் பயணங்களை,
கி.வா.ஜ.வின் நண்பரான,
நீர்வேலி ராஜேந்திரக் குருக்கள் என்பவர்தான் ஒழுங்கு செய்வார்.
எங்கள் குருநாதர் வந்ததை அறிந்த ராஜேந்திரக் குருக்கள்,
அவரைக் காணவென குமாரதாசன் வீட்டிற்கு வந்தார்.
அவர் பிராமணியப் பற்றுடையவர்.
எங்கள் குருநாதரும் பிராமணர் ஆதலால்,
வந்தவுடனேயே, குருக்கள் எங்கள் குருநாதரைப் பார்த்து,
“நீங்கள் எல்லாம் இங்க தங்கக் கூடாது.
வெளிக்கிடுங்கோ எங்கட வீட்டுக்குப் போக” என்று,
கி.வா.ஜ. வின் தொடர்பை மனதில் வைத்து உரிமையாய் உத்தரவிட்டார்.
ஜாதி அடிப்படையில் அவர் பேசிய பேச்சு
குருநாதருக்குப் பிடிக்கவில்லை.
குருநாதர் உட்கார்ந்து இருந்த இடத்திற்கு நேர்மேலே,
சுவரில் குருநாதரின் படத்தை நாங்கள் மாட்டியிருந்தோம்.
அதைக் குருக்களுக்குக் கையால் காட்டிய குருநாதர்,
“ஜெயா! குருக்களுக்கும் எனக்கும் காப்பி கொண்டு வா!” என்றார்.
நான் கோப்பி கொண்டு வந்து கொடுக்க,
குருநாதர் அதனைத் தான் முதலில் எடுத்துக் குடித்து,
“குருக்கள் நீங்களும் சாப்பிடுங்கோ” என்றார்.
வேறு வழியில்லாமல் குருக்களும் எங்கள் வீட்டில்,
கோப்பி குடிக்க வேண்டியதாயிற்று.
 

“இங்கே இனி அழைத்து வராதே!”

அதே பயணத்தின்போது ஒருநாள்,
குருநாதரை குருக்கள் தன் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்தார்.
குருநாதர் “நீங்களும் வாங்கடா” என,
எங்களையும் குருக்கள் வீட்டிற்கு அழைத்துப் போனார்.
அங்கு, மதிய விருந்துக்கு,
வேறு பல அந்தணர்களையும் குருக்கள் அழைத்திருந்தார்.
என்னையும், குமாரதாசனையும் கண்டதும்,
குருக்களுக்கு முகம் கறுத்துப் போனது.
எங்களிருவரையும் வெளித்திண்ணையில் இருத்தி விட்டு,
அந்தணர்களோடு குருநாதரை உள்ளே அழைத்துச்சென்று உணவிட்டார்கள்.
எங்களுக்கு திண்ணையிலேயே விருந்திடப்பட்டது.
திரும்பி வரும் பொழுது குருநாதரின் முகத்தில் கடுங்கோபம்.
“இனி இப்படியாகப் பேதம் பார்க்கும் இடங்களுக்கு,
என்னைச் சாப்பிட அழைச்சுக்கிட்டுப் போகாதே!” என்று
எனக்கு உத்தரவிட்டார்.
ராஜேந்திரக் குருக்களிடம்,
இந்த ஒரு குறையைத் தவிர, பல நிறைகளும் இருந்தன.
அவர் ஒரு சிறந்த இரசிகர், ஆளுமையாளர்.
ராஜேந்திரக்குருக்களின் தொடர்பு கழகத்தோடு பல காலம் நல்லபடி நீடித்தது.

குரங்கு வந்தது

இவ்விழாவில் குருநாதரின் நிறைவு நாள் பேச்சன்று,
ஆதீனத்தில் கூட்டம் நெருங்கியடித்தது.
திடீரென வங்கி முகாமையாளர் வைத்தியநாதன் என்னிடம் ஓடி வந்து,
என் கையைப் பிடித்து,
“ஜெயா ஓர் அதிசயத்தைப் பார்த்தியா?”என்றார்.
உணர்ச்சி வேகத்தில் அவர் கண்கள் கலங்கியிருந்தன.
படபடக்கும் குரலில்,
“ஜெயா! இராமாயணம் சொல்லுகிற இடத்தில எல்லாம்,
ஆஞ்சநேயர் வந்து கேட்பாரென்பது ஐதீகம்.
இங்கேயும் வந்திட்டார் பார்த்தியாப்பா” என்றார்.
அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் பார்த்தேன்.
ஆதீன மதிலில் ஒரு குரங்கு குந்தியிருந்தது.
நல்லூரடியில் குரங்குகளை அதுவரை நான் கண்டதேயில்லை.
அன்றைக்கு, அவ்வளவு கூட்டத்தின் மத்தியில்,
மதிலில் குந்தியிருந்த குரங்கைக் கண்டு,
நானும் வெலவெலத்துப் போனேன்.
இந்த அனுபவத்தின் பின்பு,
என் வாழ்வின் சிக்கலான பல நேரங்களிலெல்லாம்,
அதிசயமாய் ஆஞ்சநேய தரிசனம் கிடைத்தது.
அது பற்றி ஆங்காங்கு பின் சொல்கிறேன்.

இரும்பும் கரைந்தது

அந்த விழாவில் குருநாதர்,
'கம்பனில் தொண்டு', 
'கம்பனில் தவம்', 
'கம்பனில் தியாகம்' போன்ற,
பல தலைப்புக்களிலும் உரையாற்றினார்.
அத்தனை உரைகளும் உச்சமானவை.
பட்டிமண்டப நடுவராக இருந்து தீர்ப்புச் சொன்னார்.
நாங்கள் எல்லோரும் பெயருக்கு வாதிட்டோம்.
குருநாதரின் தீர்ப்புக்காகவே கூட்டம் காத்திருந்தது.
அத்தீர்ப்பில் கும்பகர்ணன் பற்றி,
குருநாதர் பேசிய பேச்சை மறக்க முடியாது.
நாங்கள் யாழ். இந்துக் கல்லூரியில் படிக்கையில்,
சபாலிங்கம் என்பவர் அதிபராய் இருந்தார்.
அவர் ஒரு இரும்பு மனிதர்.
அவரைக் கண்டு யாழ். இந்துக் கல்லூரியே அந்தக் காலத்தில் நடுங்கியது.
தனது இருக்கையில் இருந்து அவர் எழுந்தாலே,
யாழ். இந்துக் கல்லூரி முழுவதும் மௌனத்தில் ஸ்தம்பிக்கும்.
அத்துணை ஆளுமைமிக்க மனிதர் அவர்.
நாங்கள் கம்பன் கழகம் தொடங்கிய காலத்தில் அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
அத்தகைய இரும்பு மனிதர்,
எங்கள் குருநாதரின் பேச்சைக் கேட்டு விம்மி விம்மி அழுதார்.
அவரே அப்படி அழுதாரென்றால்,
நல்லூர் மணி கேட்டதுமே விம்மி அழுகின்ற,
எங்கள் வித்துவான் ஆறுமுகம் அழுத அழுகையை
சொல்லவும் வேண்டுமோ!

என்ன தவம் செய்தேனோ!

நல்லை ஆதீனத்தில் குருநாதர் பேசுகையில்,
சபை சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்திருக்கும்.
அத்தனை பேர் முகங்களும்,
அசைவின்றி குருநாதர் முகத்தையே பார்த்திருக்கும்.
நான் குருநாதர் முகத்தைப் பார்க்காமல்,
குருநாதரை இரசிக்கிறவர்களின் முகங்களை,
ஓரமாய் நின்று இரசித்துப் பார்ப்பேன்.
அதை, பேச்சுக்கிடையில் கவனித்த குருநாதர்,
ஒருநாள் மேடையிலேயே,
“இளமைக்காலத்தில் நான் பேசிறபோது,
எங்கப்பா என்னைப் பார்க்காம சபையைப் பார்த்து மகிழ்வார்.
இன்னைக்கு என் பிள்ள அதேமாதிரிப் பண்ணுறான்” என்றார்.
குருநாதரிடம் இருந்து இப்படியெல்லாம் வார்த்தைகள் கேட்க,
என்ன தவம் செய்தேனோ!

சால்வை பறந்தது!

இவ்விழாவில் பட்டிமண்டபம் நடந்த அன்று,
குருநாதர் உணர்ச்சி வசமாகித் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.
அவருடைய சட்டையெல்லாம் வியர்வையில் தோய்ந்துவிட்டது.
குரல் உச்சஸ்தாயியை அடைந்திருந்தது.
அந்நேரம் அவருடைய தோளிலிருந்த சால்வை,
மெல்ல மெல்ல வழுக்கிக் கீழே விழப்போனது.
விழாமல் அதனைப் பிடித்துக்கொண்ட குருநாதர்,
உணர்ச்சி வேகத்தில் அதனை,
சுழற்றி மேடையின் ஓரத்திற்கு எறிந்தார்.
அவரது உணர்ச்சி வயப்பாடு கண்டு நான் சற்றுப் பயந்துபோனேன்.
நிகழ்வு முடிந்து வீடு திரும்பியதும்,
அவரருகிற் சென்று,
“ஐயா! இவ்வளவு உணர்ச்சி வயப்படுவது 
உடலைப் பாதிக்குமே!” என்றேன்.
“துண்ட தூக்கிப்போட்டத சொல்லுறியாடா?” எனக் கேட்டவர்,
“நா ஒண்ணும் ஒணர்ச்சி வசப்படலடா.
சபை என்னோட இருக்குமா? துண்டோட போகுமா? என்னு 
சோதிக்கத்தான், துண்ட அப்பிடிப் போட்டுப் பாத்தேன்,
சபை என்னோடதான் இருந்துதப்பா” என்றார்.
அதுகேட்டுப் பிரமித்தேன்.

கோப்பிக்காக நடைப்பயணம்

குருநாதர் வந்திருக்கும் பொழுது,
அவருக்காக நிறையப் பால் வாங்கி,
தைலம் போல் அதைக்காய்ச்சி வைத்து,
அவருக்குக் கோப்பி ஊற்றிக் கொடுப்பேன்.
என் ஆசிரியர்களான வித்வான்கள்,
வேலனும், ஆறுமுகமும் உணவுப்பிரியர்கள்.
குருநாதருக்கு நான் ஊற்றிக் கொடுக்கும்,
கோப்பியின் ருசியை ஒருநாள் அறிந்து,
அதன் பின்னர் தினமும் மாலையில்,
“ஜெயராஜிட்ட போய் நல்ல கோப்பி குடிச்சிட்டு வரலாம்” என்று சொல்லி,
தினமும் நல்லூரிலிருந்து கல்வியங்காடுவரை நடந்து வருவார்கள்.

தாயும் ஆனான்

அன்று விழாவின் நிறைவு நாள் மாலை நிகழ்ச்சி தொடங்கவிருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் அன்றிரவே,
குருநாதரை தலைமன்னாருக்கு அழைத்துச் செல்ல,
ஒழுங்கு செய்திருந்தோம்.
நிகழ்ச்சிக்குப் புறப்பட, குருநாதர் தயாராய் இருந்தார்.
அவர் புறப்படப் போகிறார் என்ற எண்ணம்,
என்னைப் பெரிதும் வாட்டியது.
“விட்டுடிதி கண்டாய்!” என,
“கற்றாவின் மனம்போல” நெஞ்சு கசிந்துருகியது.
குருநாதரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தபடி,
தாங்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.
அவர் எந்தப் பிரதிபலிப்புமின்றிச் சிலைபோல இருந்தார்.
பிறகு, காரில் விழா மண்டபத்திற்குப் புறப்பட்டோம்.
குருநாதரை அழைத்துப்போக,
வேலன் மாஸ்டரும் வித்துவான் ஆறுமுகமும் வந்திருந்தனர்.
என் சோர்வைக் கண்ட வித்துவான் வேலன்,
“இவன் ஒரு பெண்போல மாறிவிட்டான்” என்றார்.
அதுகேட்ட குருநாதர்,
“தப்பு சார். அவன், ஒரு தாயாகவே இப்ப மாறிட்டான்” என்றார்.
இவற்றைத் தற்புகழ்ச்சிக்காக நான் சொல்லவில்லை.
குருநாதரை நினைக்க உண்டாகும் மனநெகிழ்ச்சி,
இச்செய்திகளைப் பதிவுசெய்ய விரும்புகிறது.
அவ்வளவே!

காமமும் கடப்பித்தார்

இலங்கைக்கான முதற்பயணம் முடித்து குருநாதர் தாயகம் திரும்புகிறார்.
தலைமன்னாரில் நானும், என் நண்பர்களும்,
அவரைப் பயணம் அனுப்பச் சென்றிருந்தோம்.
சினிமாவும், பெண்களும், சிரிப்பும், கூத்துமாயிருக்கும்,
எனது இளம் நண்பர்கள் குருநாதரின் பிரிவைத் தாங்காமல்,
விம்மி விம்மி அழுதார்கள்.
“இவர்களா அழுகிறார்கள்?” என்று.
எனக்கோ எல்லையற்ற ஆச்சரியம்.
இளமைக்குள் காலடி எடுத்து வைத்து மகிழ்ந்திருந்த அந்த வயதில்,
அவர்கள் முகம்வாடிக்கூட நான் அதிகம் பார்த்ததில்லை.
இலக்கியத்தின் பக்கம் தலைவைத்தும் படுக்காதவர்கள் அவர்கள்,
கண்ணீர்விட்டுக் கதறும் அளவுக்கு,
அந்த ஒருசில நாள் பழக்கத்திலேயே,
அத்தனைபேரையும் குருநாதர் கவர்ந்து நின்றார்.
குருநாதரின்  முகத்திலும் வாட்டம்.
வார்த்தையேதும் பேசாது கலங்கிய கண்களோடு எங்களோடு நின்றவர்,
ஒரு கையால் பேர்ஸையும்,
மறு கையால் வேட்டித் தலைப்பின் ஒரு நுனியையும் பிடித்துக்கொண்டு,
ஒன்றுமே பேசாமல் திடீரெனக் கப்பலை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.
பேசினால் உணர்ச்சி வயப்பட்டு விடுவோமோ எனும்,
அவரது அச்சத்தை உணர முடிந்தது.
நாம் யாழ் திரும்பும்போது அத்தனை பேர் இருந்தும்,
எங்கள் வண்டியில் பயங்கர நிசப்தம்.
சாதாரணமாய் இருந்திருந்தால்
பாட்டாலும் கூத்தாலும் பஸ் அதிர்ந்திருக்கும்.
நீண்டநேர மௌனத்திற்குப்பின்,
எங்கள் நண்பன் கிரி கலங்கிய குரலில் பேசத்தொடங்கினான்.
அவன் இன்பத்துறையில் எளியவனாய் விளங்குபவன் என்று,
சொல்லியிருக்கிறேன்.
அன்று அவன் சொன்னது
இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
இதையெல்லாம் எழுதலாமா? என்று கேட்பீர்கள்.
கொச்சையானாலும் அவன் வாசகம் தந்த வலிய கருத்தை,
பதிய வேண்டியிருக்கிறது.
“மச்சான் இந்த அஞ்சாறு நாளா சுதிகூட வரயில்லையடாப்பா”,
இளையோரையும் கவர்ந்த குருநாதரின் ஈர்ப்புக்காம்,
சாட்சி வாசகமாய் அவனது அந்தக்கூற்று அமைந்தது.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாகம் 016ல்...


- இந்தியாவுக்குப் படிக்கச் சென்றோம்
- காப்பைக் கழற்றித் தந்தார்
- அட்மிஷன் கிடைத்தது
- மனம் குழப்பிய சிந்தாமணி
- மீண்டும் படிப்பைக் குழப்பினோம்
- கம்பர் எந்த வட்டாரம்?
- இரண்டாவது அலுவலகம்
- எஸ்.ரி. சிவநாயகம்

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.