வினாக்களம் - 40 | கம்பவாரிதி பதில்கள்

வினாக்களம் - 40 | கம்பவாரிதி பதில்கள்
 
வாசகர் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் 'தூண்டில்" கேள்வி-பதில் தொடரின் 39 பகுதிகள் நிறைவடைந்து 40 ஆவது பகுதியில் இன்று கால் பதிக்கிறோம். புதுமை நோக்கி இனி தூண்டில்  "வினாக்களம்" என்று பெயர்மாற்றப் படுகிறது.
 
நீங்களும் உங்கள் கேள்விகளை "Kambavarithy Ilankai Jeyaraj" எனும் முகப்புத்தக பக்கத்தினூடாகவோ அல்லது kambanlanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். உங்கள் கேள்விகளும் அதற்குரிய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பதில்களும் தொடர்ந்து உகரம் இணையத்தளத்தில் பிரசுரமாகும்.

 
கேள்வி 01: 
சுகுமாரன் ரவி: கம்பன் விழாவின் பின்னர் வெளிவந்த த.ஜெயசீலனின் கவிதையையும் அதைத் தொடர்ந்து வெளிவந்த உங்களின் கவிதையையும் பார்த்தோம். உங்களுக்குள் என்னதான் பிரச்சினை? கம்பன் கழகத்திற்குள்ளும் பிளவு உருவாகத் தொடங்கிவிட்டதா? 
 
கம்பவாரிதி பதில்:
 பணிவு, அன்பு ஆகியவற்றின் பெருமையினை சிலர் உணருகிறார்கள் இல்லை. அங்ஙனம் உணராத போது நிமிர்ந்துதான் அவற்றின் பெருமைகளை உணர்த்தவேண்டியிருக்கிறது. ஜெயசீலனுக்கு தனது தரமும் தெரியவில்லை. எனது தரமும் தெரியவில்லை. அவரை வளர்த்துவிட்டவன் என்ற முறையில் இரண்டினையும் உணர்த்தவேண்டியது என் கடமையாகிறது. உண்மையில் இப்பிரச்சினையை எங்களுக்குள்ளேயே தீர்த்திருக்கவேண்டும். சிறுபிள்ளைத்தனமாய் பொதுமேடைக்கு அவர் வந்துவிட்டபடியால் நானும் அவரைப் பொதுமேடையிலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. கம்பன் கழகத்திற்குள் பிளவா? என்று கேட்டிருக்கிறீர்கள். தேன்கூடு பிளக்காதா? பிளந்து வழியும் தேனை நக்கமுடியாதா? என்று பல நரிகள் காத்திருக்கின்றன. கம்பன் கழகம் ஒரு குடும்பம். அதனை எவரும் அசைக்க இறைவன் அனுமதிக்கமாட்டான். முரண்பாடுகள் கழகத்தைப் பலம் செய்யுமே தவிர ஒருக்காலும் பலயீனப்படுத்தாது. நாங்கள் ஒருவரை ஒருவர் தடவிக் கொடுத்து பொய்ச் சிகரம் கட்டிப் பூரிப்பவர்களல்லர். உண்மைச் சிகரத்தின் உச்சி தொட நினைப்பவர்கள். கழகத்திற்குள் மாறுபாடுகள் வரலாம். நிச்சயம் வேறுபாடுகள் வராது. 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: சப்புக்கொட்டிய  நரிகள்  சில சலித்துப்  போகின்றன.  


 
கேள்வி 02: 
பிருந்தகன்: இம்முறைக் கம்பன்விழாவில் வெளிநாட்டு விருந்தினர்களின் தொகை மிக அதிகரித்திருந்தது. இது தேவைதானா 
 
கம்பவாரிதி பதில்:
   முதலில் கம்பன் புகழை ஊரளவில் விரியச் செய்ய முயற்சித்தோம். பின்பு நாடளவில் விரியச் செய்ய முயற்சித்தோம். இன்று அதைனையே உலகளவில் விரியச் செய்ய முயற்சிக்கிறோம். கம்பனுக்கு என்று கழகம் அமைத்ததன் நோக்கம் அதுதானே. கம்பன் புகழோடு ஈழத்தமிழர்களின் புகழும் விரிவதை அறிந்து கொள்ளுங்கள்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: 'திறமான புலமை எனின் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்று பாரதி சும்மாவா சொன்னான்.
 

 
கேள்வி 03: 
தெய்வேந்திரம் ஜனந்தன்: சம்பந்தன் ஐயாவைக் கண்டித்து பலதரம் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இம்முறை கம்பன் விழாவில் அவருக்கு விருது கொடுத்துப் பாராட்டுகிறீர்கள். உங்களுக்கென்று ஒரு கொள்கையே கிடையாதா
 
கம்பவாரிதி பதில்:
      சரியே இல்லாத பிழையோ, பிழையே இல்லாத சரியோ இவ்வுலகத்தில் கிடையாது. விமர்சனம் என்பது பகை பற்றி எழுவதல்ல. உரிமை பற்றித்தான் ஒருவரைத் கண்டிக்கிறோம். பிள்ளையைப் பார்த்து ஒரு தாய் ' சனியனே துலைஞ்சு போ!" என்று சொல்வதன் அர்த்தம் எப்படியாவது உருப்பட்டு விடு என்பதுதான். அப்படித்தான் நான் எழுதிய கண்டனங்களும். கண்டனம் எழுதினேன் என்பதற்காக சம்பந்தன் ஐயாவின் தகுதிகளையும் இதுவரை இனத்திற்காக அவர் செய்த முயற்சிகளையும்; பாராட்டாமல் இருக்கமுடியுமா? இனத்திற்காக எதுவித தியாகமும் செய்யாமல் நேற்றுத்தான் அரசியலுள் நுழைந்து, நுழைந்த சில நாட்களுக்குள்ளேயே கட்சிக்குள்ளும் இனத்திற்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி, அரசியலே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இன்று அரசியலுள் நுழைய அத்திவாரம் இடுவோரைப் பார்க்கையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டின் மேலாக ஒரே கட்சியில் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட்டு இயங்கி பதவிகள் தேடிவந்த போதும் அதற்கு ஆசைப்படாமல், இக்கட்டான சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்று, முதுகில் குத்துபவர்களையும் பொறுமையோடு கையாண்டு, தனது முதுமையையும் பாராமல் இன்றுவரை இயங்கி வரும் சம்பந்தன் ஐயாவிற்கு இன்னும் நூறு விருதுகள் வழங்கலாம் போல் தெரிகிறது. தீமைகளைக் கண்டிக்கும் உரிமை இருப்பவர்களுக்குத்தான் நன்மைகளைப் பாராட்டும் உரிமையும் இருக்கிறது. 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: இது இவருக்குப் பாராட்டா? 'அவருக்கு" அடியா?
 

 
கேள்வி 04: 
சண்முகதாசன்: ஓமானிலும் சைவம் வளர்க்கிறீர்களாமே? ஒரு இஸ்லாமிய நாடு இதற்கெல்லாம் இடம் தருகிறதா?
 
கம்பவாரிதி பதில்:
    எனக்கும் அது ஆச்சரியம் தான். அந்நாட்டு மன்னர் மத சமரசத்தை தக்கபடி பேணுகிறார். தன் நாட்டை இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தியிருப்பதோடு, அங்கு வாழும் மற்றைச் சமயத்தார்க்கும் அவர்தம் வழிபாட்டிற்கான உரிமையை அவர் வழங்கியுள்ளார். எல்லா சமயத்தவரும் மற்றைச் சமயங்களை நோகடிக்காமலும் இழிவு செய்யாமலும் தத்தம் சமய முயற்சிகளில் ஈடுபட அவர் வழங்கியிருக்கும் உரிமை ஆச்சரியப்படுத்தியது. தனது மக்களை தேச, மதப்பற்றுகளிலிருந்து சிறிதும் விலகாமல் அதேநேரம் இன்றைய உலக விரிவினுள் தெளிவாக நகர்த்திவரும் அம்மன்னரை அந்நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் தெய்வமாய்ப் போற்றுகின்றார்கள். 

முதல் நாள் நான் மேடையேறும்போதே என்னை அங்கு அழைப்பித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் நாகேஸ்வரன் 'தயவு செய்து பேச்சின் தொடக்கத்தில் மன்னருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். முதலில் இது ஒரு பொய் மரபோ என நினைத்தேன். ஆனால் நான் மேடையில் வாழ்த்துச் சொன்னபோது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அவ்வாழ்த்தினை அங்கீகரித்து ஒருமித்து கரகோஷம் எழுப்பினர். மன்னரின் மேல் மக்கள் வைத்திருந்த பற்றுதலைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மன்னரின் பெயர் சொன்ன ஒவ்வொரு தரமும் அக் கைதட்டைக் காணமுடிந்தது. எங்கு பார்த்தாலும் மன்னரின் படத்தை மரியாதையோடு வைத்துப் போற்றுகின்றார்கள். 'உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்' என்ற கம்பனின் கவிதையடி நினைவில் வந்தது. 

சிவன், விஷ்ணு ஆகிய இருதெயவங்களுக்கும் இரண்டு பெரிய கோயில்கள் அங்கு இருக்கின்றன. விஷ்ணு கோயிலில் அமைந்திருந்த மண்டபத்தில் நான்கு நாட்கள் பெரியபுராணச் சொற்பொழிவுகளை ஆற்றினேன். விஷ்ணு கோயிலில் சிவன் பற்றிய பேச்சு. அதுவே ஒரு ஆச்சரியம். சமயப் பிளவுகளை உருவாக்கும் வக்கிரர்கர்களை அங்கு காணமுடியவில்லை. சிதம்பர ஆலயத்தினதும் நால்வரினதும் படங்கள் கொண்ட மிகப்பெரிய மேடை அமைப்பு. ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. வந்த கூட்டத்தில் தொண்ணூறு வீதமானவர்கள் இந்தியத் தமிழர்கள். அவர்கள் தமிழுக்கும் சைவத்திற்கும் எனக்கும் தந்த மரியாதை சிலிர்க்க வைத்தது. என்மேல் அன்பைப் பொழிந்தார்கள். என்னை அங்கு அழைப்பித்த நண்பர் நாகேஸ்வரன் சைவத்தின்மீது வைத்திருக்கும் பற்றை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அனைவரையும் அன்பால் ஒருங்கிணைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்கப் பாடுபடுகிறார். அவர் விரிவாய் விழாவை அமைத்திருந்த விதம். நேரக்கட்டுபாட்டைப் பேணிய நேர்த்தி மற்றவர்களிலிருந்து விடுவித்து எனக்கு ஓய்வுதரக்காட்டிய ஆர்வம். சிறுகுறையும் இல்லாமல் என்னைப் பேணிய பண்பு. பிரிந்து வந்தபோது நெகிழ்ந்து கண்ணீர் வடித்து அனுப்பி வைத்த முறை என அனைத்தும் நெஞ்சை நெகிழ்வித்தன. ஒரு பேச்சாளனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழுக்கும் சைவத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு சிறந்த விழா அமைப்பாளர் அவர். 

அங்கு வாழ்ந்த பலரும் அன்பைப் பொழிந்து விருந்திட்டு என்னைத் திக்குமுக்காடச் செய்தனர். குறிப்பாக நம் நாட்டைச்சேர்ந்த கோபி என்னும் இளைஞர், நாகேஸ்வரனின் வலது கையாய் இயங்கி விழாவைச் சிறக்கவைத்தார். அவரும் அவர் குடும்பமும் என்மேல் காட்டிய அன்புக்கும் ஓர் எல்லையில்லை. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழும் சைவமும் என்னைப் போற்றி வாழவைக்கின்றன. இன்னும் எத்தனை பிறவிகள் வந்தாலும் தமிழோடும் சைவத்தோடும் வாழும் வரத்தை இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டபடி இருக்கின்றேன்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்:         'ஆமென்'
 
 

 
கேள்வி 05: 
ஜெயதர்சன் சரவணா: திருகோணமலை பாடசாலையில் ஏற்பட்டிருக்கும் சமய விவகாரம் பற்றி
 
கம்பவாரிதி பதில்:
 கல்வியின் நோக்கம் அறிவு. அறிவின் நோக்கம் ஒழுக்கம். இதுதான் நம் தமிழ்மரபு. சமயப் பிரச்சினைகளைக் கொணர்ந்து ஒழுக்கத்தைச் சிதைப்பதை ஏற்கமுடியாது. சிலருக்கு இது ஒரு நோய். உள்ள ஒழுங்குகளை உடைத்து தம்மை சமயத் தீவிரவாதிகளாய்க் காட்ட இவர்கள் முயல்வர். உண்மை மதப்பற்றாளர்கள் மௌனமாய் இருக்க இத்தகு தீவிரவாதிகளால்த்தான் சமூகம் வீழ்கிறது. இத்தகையோர் எல்லாச் சமயத்தினுள்ளும் இருக்கிறார்கள். மதங்களை உண்மையாய் நம்புகிறவர்கள் இத்தகைய ஒருசிலரின் தூண்டுதல்களுக்கு ஆளாகக் கூடாது. அந்தந்த மதத்தின் பெரியவர்கள் இப்பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். ஏற்கனவே நம் நாட்டில் சிறுபான்மை இனம் அல்லலுற்றுக் கிடக்கிறது. இந்நிலையில் ஒற்றுமையாய் இருக்கும் சிறுபான்மை இனத்தாரிடையே 'மித்திரபேதம்" செய்து பகையூட்ட ஒருசில சக்திகள் முயல்கின்றன போல் தெரிகிறது. இதற்கு எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். அரசியலாளர் சிலரும் தமது வாக்குவங்கி நோக்கி இத்தகைய பிரச்சினைகளை வளர்க்க முயல்வதாய்த் தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நமது கல்வி அமைச்சே இது இந்துக்கல்லூரி, இது கத்தோலிக்கக் கல்லூரி, இது இஸ்லாமியக் கல்லூரி என கல்லூரிகளிடையே பிரிவுகள் உண்டாக்க அனுமதித்திருக்கிறது. ஒரு கல்லூரி எந்த மதத்தினை ஏற்று இயங்குகிறதோ அம்மதத்தினுடைய அடிப்படை ஒழுக்கநெறிகளை அது கடைப்பிடித்தாகவேண்டும். அக் கல்லூரிகளில் இணைவோர் எம்மதத்தவராயினும் அவ் ஒழுக்கநெறிகளை ஏற்று இயங்குதலே முறையாகும். அதே நேரத்தில் மாற்று மதத்தவரை வேண்டுமென்றே இழிவு செய்ய எம்மதத்தவரும் முயற்சிக்கக் கூடாது. இது சட்டமாக இல்லாவிட்டாலும் ஏற்கப்பட்ட கனவான் ஒப்பந்தமாக இருத்தல் வேண்டும்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: குடத்துப் பாலில் விழுந்த விஷத்துளிகள்!
 
 

 
கேள்வி 06: 
வினோதலிங்கம்: அண்மையில் அவுஸ்திரேலியா சென்று வந்ததாக அறிந்தேன். அங்கு ஒரு முருகன் கோயிலில் திருமாலின் சிலையை வைக்க சிலர் முயல அது சைவசித்தாந்தத்திற்கு எதிரானது எனக் கூறி அம்முயற்சியை சிலர் தடுத்துவிட்டதாக அறிந்தேன். அதுபற்றி நீங்கள் ஏதேனும் அறிந்தீர்களா? உங்கள் கருத்து என்ன?
 
கம்பவாரிதி பதில்:
 அறிவை ரசிக்கலாம். அறியாமையைச் சகிக்கலாம். அறிவின் பெயரால் நிகழும் அறியாமையை என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. இதனால்த்தான் தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் சைவசித்தாந்தத்தைக் கற்கவேண்டுமென நம் சித்தாந்த நூலாசிரியர்கள் வரைவு செய்கின்றனர். சித்தாந்தத்தை ஓரிரு வாரங்கள் மட்டும் கற்றுவிட்டு 'சித்தாந்த ரத்தினங்கள் "ஆவோரால் இத்தகைய தீமைகள் நடக்கத்தான் செய்யும். நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. சிவன் பார்த்துக்கொள்வான்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: ஏன் விஷ்ணு பார்த்துக் 'கொல்ல" மாட்டாரா?
 
 

 
கேள்வி 07: 
தட்சனாமூர்த்தி காங்கேயன்: தட்சணை வாங்குவதை அந்தணர்களின் உரிமை என்று ஆகமங்கள் சொல்கின்றன. அப்படியிருக்க நீங்கள் உங்கள் ஆலயத்தில் எப்படி அதை மறுக்கலாம்? நினைத்ததையெல்லாம் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?
 
கம்பவாரிதி பதில்:
 நல்ல கேள்வி! தட்சணை வாங்குவது அந்தணர்களின் உரிமைகளில் ஒன்று. அவ்வளவே! அதுதவிரவும் வேறு சில உரிமைகள் அவர்களுக்கு இருப்பதாய் ஆகமங்கள் சொல்கின்றன. அவைபற்றியும் சற்று அறிந்துகொள்ளுங்கள். வேதத்தை உலக நன்மை நோக்கி (தட்சணைக்காக அல்ல) தினமும் ஓதவேண்டும். தகுதியானவர்களைக் கொண்டுவித்து அவ்வேதத்தினை உலக நன்மை நோக்கி தினமும் ஓதுவிக்க வேண்டும். தேவர்களை திருப்தி செய்யும் வேள்விகளை தமது ஆத்ம விருத்தி நோக்கி தினமும் செய்யவேண்டும். தேவர்களை திருப்தி செய்யும் வேள்விகளை உலக நன்மை நோக்கி மற்றவர்களைக் கொண்டு தினமும் செய்விக்கவேண்டும். உலக நன்மை நோக்கி தான் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கவேண்டும். உலக நன்மை நோக்கி மற்றவர்களிடம் தான் தானம் பெறல்வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இந்த ஆறு தொழில்களும் அந்தணர்களின் உரிமைத் தொழில்கள் என்று ஆகமங்கள் சொல்கின்றன. அதனால்த்தான் அந்தணர்களுக்கு 'அறுதொழிலோர்" எனப் பெயர் வந்தது. இன்று அந்தணர்க்குரிய அந்த ஆறு தொழில்களையும் செய்வோரின் தொகை மிகவும் குறைந்து விட்டது. அபூர்வமாய் இவ் ஆறு தொழில்களைச் செய்வோரில் ஒருசிலர் அவற்றை தம் நன்மை நோக்கி மட்டுமே செய்கிறார்கள் அங்ஙனம் சுயநலனுக்காய் அறுதொழில் செய்வதில் பயனில்லை என்பதைக் குறிக்கவே 'இப்பதிலில் திரும்பத் திரும்ப உலகநன்மை நோக்கி" எனும் தொடரை நான்; பாவித்திருக்கிறேன். இவ் அறுதொழிலில் 'வேட்டல்" என்னும் ஆத்மார்த்த பூசையை மட்டுமே ஓர் அந்தணன் தனக்காகச் செய்யலாம். அதைக்கூட தன் ஆத்ம பலத்தைப் பெருக்கி உலக நன்மைக்காய் வழிபாடியற்றவே அவன் பயன்படுத்தவேண்டும் என்பது விதி. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து"(உலகம் நலமுற வாழவேண்டும்), 'சர்வே ஜனாம் சுகினோ பவந்து" (சகலமக்களும் நலமுற வாழவேண்டும்.) எனும் தொடர்களை இன்று திரிகரணசுத்தியோடு சொல்லும் அந்தணர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இனி உங்கள் கேள்விக்கான பதில். இவ் அறுதொழிலில் மற்றைய ஐந்து தொழில்களையும் செய்யும் அந்தணர்க்கு தட்சணை வாங்குவதான 'ஏற்றல்" எனும் உரிமை கடைசியாய் வழங்கப்பட்டுள்ளது. நான் சொன்னபடி இந்த ஆறு தொழில்களையும் செய்பவர்கள் யாராவது இருந்தால் அனுப்பி வையுங்கள். அத்தனை தட்சணைகளையும் அவர்களின் பாதங்களில் குவிக்கிறோம். ஒருசில அந்தணர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை தமது 'கஸ்ரமர்ஸ்" என்றே சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள். 'யாரொடு நோவேன் யார்க்கெடுத்து உரைப்பேன்?"
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: அவுட்டாக்க 'போல்' போட்டால் இந்தாள் 'சிக்சரெல்லோ" அடிக்குது.
 
***
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.