வேரொடும் சாய்ப்போம் !

வேரொடும் சாய்ப்போம் !
 
லகம் இறைவனின் விநோதப் படைப்பு.
மாறுபட்ட இருவேறு உலகத்து இயற்கை, விந்தையானது.
அறம், மறம்,
செல்வம், வறுமை,
அறிவு, அறியாமை,
நன்மை, தீமை என,
மாறுபட்டுக் கிடக்கும் இவ்வுலகின் இயற்கையால்,
உலகம் என்றும் போர்க்களமாய்க் காட்சி தருகிறது.
 

☀☀☀

நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான மோதல் என்பது,
இவ்வுலகு இயன்ற காலம் தொடக்கம் நிகழ்வது.
நன்மையை விழுங்க நினைப்பது தீமையின் இயல்பாம்.
அவ்வியல்பால்,
தீமை, நன்மையைத் தேடித் தேடிப் பகை கொள்ளும்.
மறம் அறத்தோடு என்றும் மோத முயலும்.
வலிமை பெற்ற மறம், அறத்தை வெல்வதாய் ஆர்ப்பரித்துரைக்கும்.
மறத்தின் வலிவும், அறத்தின் நலிவும்,
மறம் வென்றிடுமோ? என உலகோரையும் ஐயுறச் செய்யும்.
ஆனால், எத்துணை வலிமை பெற்றிருப்பினும்,
மறம் வென்றதாய் வரலாறு இல்லை.
எத்துணை நலிவுற்றிருப்பினும் அறம் தோற்றதாயும் வரலாறு இல்லை.
இஃது, வரலாறு உரைக்கும் வலிய செய்தி.

☀☀☀

வலிமையுற்றிருந்தும்,
மறத்தால் அறத்தை வெல்ல இயலாமற் போவதேன்?
அஃதே இறையருள்.
அறம் இயற்கையின் ரூபம்.
மறம் அதன் விகாரம்.
இயற்கை, என்றும் ஒரு தன்மைத்தாய் நிலைக்கும்.
செயற்கையே ஆன மறமோ,
எத்துணை முயலினும்,
முடிவில் தன் முதல் நிலையான,
அற வடிவைச் சார்தலைத் தவிர்க்கமுடியாதாம்.
அதனாலேயே,
இயற்கையே ஆன அறத்தினை,
மறம் வெல்லுதல் என்றும் ஆகாதாம்.

☀☀☀

இவ்வுண்மையை வரலாறு உரைப்பினும்,
அறத்தின் மீதான மறத்தின் மோதல்,
என்றும் நடந்தவண்ணமே இருந்தது, இருக்கின்றது, இருக்கப்போகிறது.
இதனால், உலகு என்றும் போர் மயமானதேயாம்.
நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போரில் நலிவுறுவோர் பலர்.
காரணமற்று வருந்தும் அவர்தம் நலிவு நீக்க,
போர்க்கு எதிரான அறவோர்தம் குரல்,
அன்றுதொட்டு இன்றுவரை ஒலித்து வருகிறது.

☀☀☀

அன்று அக்கருத்தை மனத்திருத்தி,
கம்பநாடன், போர் ஒடுங்கும் வழி உரைப்பானாய்,
வசிட்டர் வாயினூடு,
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது என,
உரத்துப் பேசினான்.
பின்வந்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்,
அதே கருத்தை உள்வாங்கி,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம் என
பாட்டன் வழிநின்ற பேரனாய்ப் பாரெங்கும் உரத்துக் கூவுகின்றான்.

☀☀☀

அயோத்தியா காண்டம்.
கன்ன மூலத்தினில் திடீரெனத் தோன்றிய ஒரு நரையால்,
நிலையாமை உணர்ந்த தசரதன்,
உடனடியாய் இராமனுக்கு முடிசூட்டத் தீர்மானிக்கிறான்.
மந்திரக் கிழவரொடும் மன்னரொடும் ஆலோசித்து,
மறுநாளே இராமனுக்கு முடிசூட்டுவதாய் நிச்சயம் செய்கிறான்.
முடிசூட்டு விழா நிச்சயமானதும்,
வசிட்டரை வருவித்து,
இராமனுக்கு அறமுரைக்க வேண்டிப் பணிகின்றான்.

பொருந்து நாள் நாளை, நின் புதல்வர்க்கு என்றனர்,
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான், பிழைப்பில் செய் தவம்
வருந்தினான் வருக என, வசிட்டன் எய்தினான்.

நல் இயல் மங்கல நாளும் நாளை அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு, வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது என, தொழுது சொல்லினான்.

☀☀☀

தசரதன் வேண்டுகோளை ஏற்று,
இராமனின் மனை புகுந்த வசிட்டன்,
உயர் அறங்களை அவனுக்கு ஓதத் தலைப்படுகிறான்.
அங்ஙனம் அவன் ஓதும் உயர் அறங்களில்,
இன்றுவரை கற்றோர் உலகம்,
உச்சிமேல் வைத்து உவக்கும் செய்தியாய்க் கொள்வது,
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது எனும் கருத்தினையேயாம்.
நட்டார், பகைவர், நடுநிலையார் எனும் முத்திறத்தாரோடும்,
பகை கொள்தலை ஒருவன் தவிர்ப்பானானால்,
புகழ் ஒடுங்காது நிற்கப் போர் ஒடுங்கும் என,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க,
வசிட்டன் வழியுரைக்கிறான்.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்கல் செல்லாது அது தந்த பின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

☀☀☀

போர் ஒடுங்கிய புத்துலகைக் காணும் வழியினை,
வசிட்டன் வாயால் வழிமொழிகிறான் கம்பன்.
கவிச்சக்கரவர்த்தியின் கருத்தே,
புரட்சிக் கவிஞனின் உள்ளத்துள் புகுந்ததற்காம் சாட்சியாய்,
மேற் பாடலில் வரும்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?
எனும் தொடர் விளங்குகிறது.
அக் கருத்தினை மனத்திருத்தியே,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம் என,
வீறொடு பேசினார் பாரதிதாசனார்.
முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுதும் எனும் இலக்கண வரம்பைப் பின்பற்றி,
கம்பனின் கருத்தை மட்டுமன்றி அவன் பயன்படுத்திய,
வேரொடும் எனும் சொல்லையும்,
தம் பாடலில் புரட்சிக்கவிஞர் அமைத்து மகிழ்கிறார்.

☀☀☀

முனிவரான வசிட்டனின் கருத்து,
இராமன் மனதை ஈர்த்தது.
யாரொடும் பகை கொள்ளாமல் வாழ,
அவன் உறுதி கொள்கிறான்.
அவன் கொண்ட அம் முடிவுக்கு,
தொடரும் வாழ்வில் ஆயிரம் சோதனைகள் அடுத்தடுத்து வருகின்றன.
அந்தணனான வசிட்டன் உரைத்த அறநெறி,
அரச வாழ்வில் அப்படியே கொள்ளத்தக்கதாய் இல்லை!
யாரொடும் பகை கொள்ளாமல் வாழ நினைப்பினும்,
மறவோர் அறவோரைத் தேடிப் பகை கொள்ளும் தீமையை,
தன் வாழ்வின் அனுபவத்தால் இராமன் உணர்கிறான்.
தாடகை, கூனி, மாரீசன், சுபாகு, சூர்ப்பனகை, இராவணன் என,
மறத்தின் வடிவாய் வலியப் பகை கொள்ளும்,
இத்தீயோர் வரிசை நீள்கிறது.

☀☀☀

அந்தணரான வசிட்டரின் வழிநின்று,
போரிலா உலகத்தைக் காண நினைத்த,
இராமனின் பேரவா இடர் உற,
சத்திரிய நிலை நின்று,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்பதற்காம் வழியினை,
இராமனின் சிந்தை புதிதாய் நிர்ணயிக்கிறது.
யாரொடும் பகை கொள்ளாமல் அற வரம்பு காக்க முனைதல்,
அப்பண்பு உணராமல் மறவோர் பகைப்பின்,
அப்பகையால் நடுநிலை தவறிவிடாமல்,
அறத்தினைக் காக்கக் கருதி மட்டும் போர் செய்தல் என,
வசிட்டர் கருத்தை உள்வாங்கிப் புதுப்பித்து,
சத்திரிய நிலை நின்று,
புதிய கொள்கைநிர்ணயம் செய்கிறான் இராமன்.

☀☀☀

இலட்சியத்திற்கும், நடைமுறைக்கும் இடையில்,
சமரசம் கண்டதான இராமனது அக்கொள்கை நிர்ணயம்,
கிஷ்கிந்தா காண்டத்தில் வெளிப்படுகிறது.
வாலிவதை முடிந்த பின்பு,
சுக்கிரீவனுக்கு அரசளித்த இராமன்,
அவனுக்கு அரச நீதிகளை எடுத்துரைக்கிறான்.
அப்போது,
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் என,
வசிட்டர் உரைத்த அரசநீதியில்,
தன் அனுபவப் பதிவேற்று,
மாற்றம் செய்துரைக்கிறான் இராமன்.
முன் சொன்ன போர் பற்றிய தனது கருத்தினை,
சுக்கிரீவனுக்கான அறிவுரையில்,
அவன் தெளிவுறப் பதிவு செய்கிறான்.

நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும், அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

☀☀☀

மேற்பாடலில்,
வசிட்டனின் கருத்தினை உள்வாங்கி,
அனுபவத்தால் இராமன் செய்த மாற்றங்கள்,
தெளிவுற வெளிப்படுகின்றன.
இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில்,
அன்பினால் உலகைக் காக்கும் அவசியத்தை உரைக்கும் இராமன்,
அதே நேரத்தில் அவ்வன்பினை உணர்வார்க்கே,
அந் நடைமுறை சரியாம் என்பதையும் தெளிவு பட உரைக்கின்றான்.
யாரொடும் என, வசிட்டன் வகுத்த வரம்பினைச் சற்று மாற்றி,
தாங்குதி தாங்குவாரை என, இராமன் புதிய வரைவு செய்கிறான்.
அது மட்டுமன்றி தீமை வலிந்து தாக்கவரின்,
அற வரம்பு சிதையாவண்ணம்,
அதனைத் தாக்குதலும் தர்மமே என அழுத்தி உரைக்கிறான்.
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை
அற வரம்பினைக் காக்கச் செய்யும் போரில்,
காட்ட வேண்டிய வலிமையையும்,
இராமன் குறிக்கத் தவறினானில்லை.
சுடுதியால் எனும் இராமனின் உத்தரவில்,
அக்கருத்தை நாம் உணருகிறோம்.

☀☀☀

போரில் சமநிலை தவறாமல் நிலை நிற்றல் சாத்தியமா?
இராமனின் கொள்கையில் நாம் ஐயுறுகிறோம்.
யாரொடும் பகை கொள்ளலன் எனும் வசிட்டரின் கருத்தினைப் போலவே,
இஃதும் யதார்த்த முரணன்றோ!
பகை என்று வந்து விட்டால்,
வெறுப்பும் உடன் வருதல் இயல்பன்றோ!
அவ் வெறுப்புண்டாகின்,
அற வரம்பு இகவா வண்ணம், போர் செய்தல் எங்ஙனம்?
வினா எழும்ப, சிந்திக்கிறோம் நாம்.
இலட்சியமாய்த் தான் உரைத்த கொள்கையை,
நடைமுறையில் யதார்த்தப்படுத்திக் காட்டுகிறான் இராமன்.

☀☀☀

யுத்த காண்டம்.
முதல்நாள் போரில் தோற்றுத் திரும்பிய இராவணன்,
பாட்டனான மாலியவானுக்கு,
போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கிறான்.
அப்போது அவன் சொல்லும் ஒரு செய்தி,
அறம் காக்க, பகையற்றுப் போர் செய்யும்,
இராமனின் கொள்கைப் பிரகடனத்தை,
நடைமுறைச் சாத்தியமாய்த் தெளிவுறுத்துகிறது.

எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்ததன்றி, சினம் உண்மை தெரிந்ததில்லை.

இராமனின் வலிய போரை,
அவன் கூனிமேல் விளையாட்டாய்ப் பாணம் இட்ட நிகழ்வோடு ஒப்பிட்டு,
இராவணன் பேசுவது,
பகையற்று இராமன் செய்த போரினை உறுதி செய்கிறது.
சினம் உண்மை தெரிந்ததில்லை எனும் தொடரால்,
பகையற்று அற வரம்பு இகவா வண்ணம், போர் செய்யும் இராமனின் கொள்கை
நடைமுறைச் சாத்தியமானதே என,
கம்பன் நமக்கு உணர்த்துகின்றான்.
பின்நாளில், பாரதி இக் கொள்கையினையே,
போருக்கு நின்றிடும் போதும் மனம்
பொங்கலில்லாத அமைதி மெய்ஞ்ஞானம்
என்று வழிமொழிகிறான்.

☀☀☀

அற வரம்பு இகவா வண்ணம், போர் செய்தற்காம் உபாயத்தினை அறிய,
நம் மனம் அவாவுகிறது.
பகைவன் மறத்தின் கருவியாய்ச் செயற்படுகிறான்.
அறவழி நிற்போர், மறத்தினை அழிக்க நினைவரேயன்றி,
மறத்தினை உட்கொண்ட பகைவனை அழிக்க நினையார்.
அதனால்தான், தன் உயிரனைய சீதையை வெளவ்விய பின்பும்,
இராமன், இராவணனை  அழிக்க நினையாமல்,
அவனை அறவயப்படுத்த பல தரம் தூது அனுப்பமுயல்கிறான்.
இராமனுக்கு மறத்தின் மேல் வெறுப்பன்றி,
இராவணன் மேல் வெறுப்பில்லை என்பது இச் செயலாற் புலனாகிறது.

☀☀☀

பல தரம் முயன்ற பின்பும்,
அறவயப்படாத இராவணன்மேல் போர் தொடுத்தல்.
தவிர்க்க முடியாது போக,
இராவணன் மேல் இராமன் போர் தொடுக்கின்றான்.
அப்போதும் மறம் ஒழிய வேண்டும் எனும் எண்ணம்,
இராமன் மனதில் இருந்ததேயன்றி,
இராவணன் ஒழிய வேண்டும் எனும் எண்ணம்,
கிஞ்சித்தும் அவன் மனதில் இருக்கவில்லை.
அந் நடுநிலமையால் தான், முதல் நாள் போரில் இராவணன் தோற்றதும்,
இன்று போய்ப் போர்க்கு நாளை வா! என உரைத்து,
இராமனால் இராவணனை மீள அனுப்ப முடிகிறது.
அப்போரில் நிகழ்ந்த தனது வெற்றியை அறத்தின் வெற்றியாகவும்,
அப்போரில் நிகழ்ந்த இராவணனின் தோல்வியை
மறத்தின் தோல்வியாகவுமே,
இராமன் உரைக்கின்றான்.

☀☀☀

மறவோர் போர் செய்கையில்,
விளையும் வெற்றியினைத் தமதாய்க் கொள்வர்.
அறவோர், தாம் கொள்ளும் வெற்றியினை,
அறத்தின் வெற்றி இஃதென்று அறைவரேயன்றி,
அதனைத் தமதாய்க் கொள்ளார்.
இம் மனநிலை கொண்டோரே,
பகையின்றி நடுநிலையோடு,
அறத்துக்காய்ப் போர் செய்தல் இயலுமாம்.
மேல் நடுநிலைக் குறிகளோடு,
பகையின்றிப் போர் செய்த இராமன்,
தனது வெற்றியினை அறத்தின் வெற்றியாய் உரைத்து,
இக்கருத்தை உறுதி செய்கிறான்.

அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.

இப்பாடலில் இராவணனை கொல்வது தன் நோக்கமன்று என்பதை,
யான் அது நினைக்கிலென் எனும்,
தனது கூற்றால் உறுதி செய்கிறான் இராமன்.
அறம் வெல்ல மறம் தோற்கும் என,
இராமன் வார்த்தையாய் உரைத்த இக் கருத்தினை,
தனது கருத்தாகவும் பதிவு செய்யக் கம்பன் தவறினானில்லை.
முதல்நாள் போரில் இராவணன் தோற்று,
நாணித் தலைகுனிந்து விரலால் நிலம் கீறி நின்ற நிலையை,
உரைக்கும் பாடலில் அச்செய்தியைக் கம்பன் தெளிவுறப் பதிவுசெய்கிறான்.

அறம் கடந்தவர் செயல் இது என்று, உலகெலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட, நின்றான்
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆலன்ன மெய்யன்.

☀☀☀

இக் கட்டுரைக்குப் புறம்பாய்,
ஒரு கேள்விக்குப் பதிலுரைத்தல் இவ் விடத்தில் அவசியமாகிறது.
இராவணனைப் பல தரம் அறவழிப்படுத்த முயன்ற இராமன்,
வாலிக்கு அவ் வாய்ப்பை நல்காதது ஏன்?
கேள்வி பிறப்பது இயல்பு.
இங்கு அரச நீதி பற்றிய ஓர் உண்மையை நாம் அறிவது அவசியம்.
அரச நீதி கூறும் வள்ளுவக்கடவுளார்,
சொந்த விடயத்தில் தம்மை ஒறுப்பாரை,
கருணையோடு பொறுக்க அரசர்க்கு அனுமதி அளிக்கிறார்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
அதே வள்ளுவர்
வழக்காய் ஒரு விடயம் வந்த பின்னர்,
அவ் வழக்கிற்குரிய வழக்காளிகளின் மேல்,
கண்ணோட்டம் செய்யாது நீதி செய்தல் வேண்டும் என்கிறார்.
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை.
இராமன் இவ் அரசநீதி நோக்கியே,
தனக்குத் தீமை செய்த இராவணனை பலதரம் மன்னித்தும்,
சுக்கிரீவனுக்குத் தீமை செய்த வாலியை மன்னியாதும்,
செயற்பட்டனன் என்க.

☀☀☀

இருவேறுபட்ட இயற்கையால்,
உலகம் என்றும் போர் மயமாகவே இருக்கும்.
அப்போரில்,
வலிமையாய்த் தோன்றும் மறம் தோற்க,
நலிவுற்றுத் தோன்றும் அறம் வெல்லும்.
இஃது இயற்கையின் நியதி.
போரற்ற உலகத்தைக் காண அறவோர் என்றும் முனைவர்.
அவர் தம் குரலாய், கம்பன் வசிட்டரூடு,
யாரொடும் பகை கொள்ளாத கொள்கையை முன்வைக்கிறான்.
ஆனால்,
அக்கொள்கையின் நடைமுறைச் சாத்தியமின்மை உணரப்பட,
பின்னர் அக்கொள்கையில் சிறிது மாற்றமியற்றி,
அன்பு செய்தலும்,
அவ்வன்பினை உணராதார் பகை கொள்ளின்,
அறம் காத்தற்கு மட்டுமாய்,
நடுநிலையோடு,
பகையின்றி வலிய போர் செய்தலுமான,
புதிய கொள்கையினை இராமனினூடு அறிவிக்கிறான் கம்பன்.
அச் செய்தியினைத் தன் காவியத்துள்,
கருத்தாகவும், கதையாகவும் சித்தாந்தப்படுத்துகிறான்.

☀☀☀

கம்பனை மறுத்துநின்ற,
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்,
கம்பனின் இக்கருத்தினை உட்கொண்டே,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம் என,
விளம்பினார் போலும்.
போரிட நினையும் உலகத்திற்கு,
கெட்ட என அடையிடும்,
புரட்சிக் கவிஞரின் கருத்தால்,
அவர் குறிப்பது மறவோர் தம் உலகினையே என உணர்கிறோம்.
கெட்ட போரிடும் உலகத்தை,
போரிட்டே தோல்வியுறச் செய்தல் வேண்டும் எனும் கருத்தினையும்,
புரட்சிக் கவிஞர் ஒப்பி உரைக்கின்றார்.
கெட்ட போரிடும் உலகத்தைச் சாய்ப்போம்
எனும் கவிஞரின் அறைகூவலால் இக்கருத்து உணரப்படுகிறது.
அதுமட்டுமன்றி கெட்டவர்க்கு எதிரான போரினை,
கடுமையாய்ச் செய்தல் வேண்டும் என்பதனை,
இராமன் சுடுதியால் தீமையோரை எனும் தொடரால் உரைத்ததனை,
வேரொடும் சாய்ப்போம் எனும் தனது தொடரால்,
தாசனார் வழிமொழிகின்றார்.
உயர் கருத்தில்,
கவிச்சக்கரவர்த்தியும், புரட்சிக்கவிஞரும்,
ஒன்றுபட்டு நிற்பது கண்டு நம் உள்ளம் உவக்கிறது.

☀☀☀

மொத்தத்தில்,
போரற்ற உலகினை அடைய,
போரே வழியாம்.
ஆனால், போரற்ற உலகினுக்கான போர்,
அறவயப்பட்டது!
அன்பு வயப்பட்டது!
அகிம்சை வயப்பட்டது!
கவிச்சக்கரவர்த்தி இக்கருத்தை முன்மொழிய,
புரட்சிக் கவி அதனை வழிமொழிகிறான்.
அறம் காக்க நினைவோர் அரிய இக்கருத்தினை,
அகத்தினுள் இருத்துவார்களாக!

☀☀☀☀☀☀
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.