‘கோல் கீப்பர்’ | காலைக்கதிருக்காக கம்பவாரிதி இ. ஜெயராஜ்

‘கோல் கீப்பர்’ | காலைக்கதிருக்காக கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 
‘ஊ உ உ’ என்று ஒருமித்து எழுந்த சத்தத்தில் துரையப்பா அரங்கு அதிர்ந்தது.
வானைத் தொடுமாப்போல் இந்துக்கல்லூரி மாணவர்கள் எல்லோரும் துள்ளிக்குதித்தார்கள்.
வினாடி நேரத்தில் வெற்றிபெற்ற உற்சாகம் அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் ஒட்டிக் கிடந்தது.
தோல்வியடைய இருந்த நிலையில் தானும் வென்று தன் ‘சமூகத்தையும்’ வெற்றி பெற வைத்து,
அந்த அரங்கில் திடீரென ஒருவன் கதாநாயகனாகிறான்.



புதிதாய் வெளிவரும் ‘காலைக்கதிரின்’ வாழ்த்துரையில்,
தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இது என்ன ஒரு முன்னுரை என்று நினைப்பீர்கள்.
மேற்சொன்ன முன்னுரைக்கும் ‘காலைக்கதிருக்கும்’ ஒரு தொடர்பு இருக்கிறது.
அந்தத் தொடர்பு பற்றி பின்னர் சொல்கிறேன்.
 



அது 1970களின் கடைசிப் பகுதி என்று நினைக்கிறேன்.
காலப் பதிவில் நான் எப்போதும் பலயீனமானவன்.
அதனால் இப்பதிவு நூறு வீதம் சரியாய் இருக்கும் என்று என்னால் சொல்லமுடியவில்லை.
பிழையாக இருந்தாலும் இக்கட்டுரைக்கு அதனால் ஒன்றும் நட்டம் வந்துவிடப்போவதில்லை.



யாழ் இந்துக்கல்லூரிக்கும், மகாஜனாக்கல்லூரிக்குமான ‘புட்போல் மச்’ நிகழ்ச்சி அது.
மகாஜனாக்கல்லூரி ‘டீம்’ ‘புட்போலில்’ எப்போதும் பலத்தோடு இருப்பது வழக்கம்.
எனக்கும் விளையாட்டுக்களுக்குமான தூரத்தை நூறுகாத இடைவெளி என்று சொன்னால்,
அது பெரும்பாலும் பிழையான கணிப்பாய்த்தான் இருக்கும்.
நிச்சயம் அவ் இடைவெளி ஆயிரம் காத தூரத்தைக் கடப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படிப்பட்ட நான் புதிதாய் முளைத்திருந்த நண்பர்களின் கட்டாயத்தால்,
அந்த ‘மச்’சைப் பார்க்க துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்றிருந்தேன்.



விளையாட்டைப் பார்க்க விளையாட்டாப் போன எனக்குள்,
‘புட்போல்’ வெறி திடீரெனத் தொற்றிக்கொண்டது.
கையே தொடாமல் காலால் பந்து நகர்த்தும் இளைஞர்களின் ஊக்கம் என்னை பிரமிக்கவைக்க,
வினாடிக்கு வினாடி வெறிபிடித்த ‘புட்போல்’ ரசிகனாய் மாறிக்கொண்டிருந்தேன்.
இரு கல்லூரிகளும் சமநிலைப்பட்டு அடுத்த நகர்வுக்காகப் போராடிக் கொண்டிருந்தன.
இதுவரை வென்றே பழகியிருந்த அணியின் கண்களில் மெல்லிய தோல்வி மிரட்சி!
அவர்களுக்கு எதிராய் விளையாடத்  தொடங்கியிருந்த மற்ற அணி,
எப்படியும் வென்றுவிட வேண்டும் எனும் ஊக்கத்தில் பதறிக்கொண்டிருந்தது.
‘மச்’ முடியும் நேரம் வந்துவிட,
இரண்டு ‘டீமு’க்கும் ஐவைந்து ‘பனால்டி’ அடிக்கும் வாய்ப்பு நடுவர்களால் வழங்கப்படுகிறது.
இரு அணி ஆதரவாளர்களும் உட்கார்ந்திருந்த படிகளின் நுனிக்கு வந்துவிடுகிறார்கள்.



காலசூத்திரம் அறியாததால்,
எவர் வெல்வார்? எவர் தோற்பார்? என்பதை அறியும் ஆர்வத்தில்,
‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’,
அங்குள்ளார் அசைவற்றுச் சிலைகளைப் போல இருக்கின்றனர்.
பந்தின்மேல் அசையாது ஆயிரக்கணக்கான விழிகள் நிலைகுத்தி நிற்கின்றன.



முதலில் யாழ் இந்துவுக்கான வாய்ப்பு.
பலம் பொருந்திய எதிராளியை எப்படியும் வென்றுவிடவேண்டும் எனும்; ஓர்மம் அவர்கள் முகத்தில்,
அந்தப்பதட்டத்துடன் முதல் பந்தை ‘கோல் போஸ்டுக்குள்’ செலுத்த முனைந்து,
தோற்றுப் போகிறான் இந்துக்கல்லூரியின் புகழ் பெற்ற வீரன்.
மகாஜனா ஆதரவாளர்களின் சத்தத்தால் மைதானம் அதிர்கிறது.
அடுத்து மகாஜனாவுக்கான வாய்ப்பு.
‘எங்களை யாரால் வெல்லமுடியும்’ எனும் திமிர்பாவம் அவர்கள் முகத்தில்,
அந்த அலட்சியத்துடன் அவர்கள் அடித்த பந்து,
 ‘கோல் போஸ்டுக்கு’ வெளியே பாய்கிறது.
ஷ் ஷ் ஷ் என்ற சத்தத்துடன் நாக்கைக் கடித்துத் தலையில் கைவைக்கிறார்கள் ஆதரவாளர்கள்.
‘திமிரும் ஆணவமும்தான் இவங்களைத் தோக்க வைக்கப்போகுது’,
அவர்களின் வாய்கள் முணுமுணுக்கின்றன.



அடுத்து இந்துக்கல்லூரிக்கான வாய்ப்பு.
வெற்றி நோக்கிய ஏக்கம் அவர்கள் முகத்தில்.
அதனால் குறி பார்த்து அடித்த பந்து ‘கோல் போஸ்டுக்குள்’ பாய்ந்து செல்ல,
மைதானத்தில் இந்து சமூகத்தின் ஆரவாரம்.
மீண்டும் மகாஜனாவின் சந்தர்ப்பம்.
இப்போது எதிராளி நிமிர்வதைக் கண்டு அவர்கள் முகத்தில் பயம் கூடியிருந்தது.
பயம் பதட்டத்தைக் கூட்ட மீண்டும் அவர்களுக்குத் தோல்வி.
அவர்களது ஆதரவாளர்களின் விழிகள் வெளியே விழுந்துவிடுமாப்போல் புடைத்து நிற்கின்றன.



மூன்றாம் சந்தர்ப்பத்தைத் தோல்விப் பயத்தால் இருவரும் தவறவிடுகின்றனர்.



நான்காவது சந்தர்ப்பம்.
வெற்றி தந்த ஊக்கத்தில் இம்முறை யாழ் இந்து இலகுவாய் பந்தை ‘கோல் போஸ்டுக்குள்’ செலுத்துகிறது.
மீண்டும் மகாஜனாவின் கால்களில் பந்து.
அதுவரை இருந்த, ‘எங்களை எவரால் வெல்லமுடியும்?’எனும் அலட்சியம் சற்றுக் குறைந்து,
அவர்கள் முகத்தில் பயத்தின் ரேகைகள் படரத் தொடங்கியிருந்தன.
இதுவரை மற்றவர்களை எள்ளி நகையாடி இழிவு செய்து விளையாடிப்பழகிய அவர்கள்,
இப்போது வானம் பார்த்து வழிபடத் தொடங்கியிருந்தனர்.
வெற்றி கால் நழுவிப்போக,
இம்முறையும் வாய்ப்பு அவர்களை விட்டு வழுக்கிப்போகிறது.



ஒருவரை ஒருவர் உராய்ந்தால் தீப்பற்றிக் கொள்ளுமோ எனும் அளவிற்கு மைதானத்தில் ‘ரென்ஷன்;’
எப்படியும் வென்றுவிடவேண்டும் எனும் உறுதி இந்துக்கல்லூரி வீரரிடம்.
இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தோல்வி உறுதியாகிவிடும் எனும் அச்சம் மகாஜனா வீரர்களிடம்,
பதட்டத்தின் உச்சத்தில் இருசாராரும்.
மகாஜனா வீரன் ஒருவன் மெல்ல பந்தின்  அருகில் வருகிறான்.
எல்லோரது கண்களும் அவனது கால்களிலும், பந்திலும் பதிந்திருக்கின்றன.
கடவுளைப் பிரார்த்தித்து பின் சென்று வேறு திசையில் அடிப்பது போல் காட்டி ஏமாற்றி,
மாற்றுத் திசைநோக்கி பந்தை ஓங்கி உதைக்கிறான்.
வஞ்சனையால் வெல்ல நினைக்கும் புத்தியின் உத்தியில்,
அசையாத நம்பிக்கை வைத்து ஆணவத்தோடு அவன் நிற்க,
பந்து குறி பார்த்து ‘கோல் போஸ்ரினுள்’ நுழைய முனைகிறது.
‘கீப்பர்’ ஒரு திசையில் நிற்க, பந்து மறுதிசை நோக்கிப் பறக்க,
மகாஜனா மாணவர்கள் வெற்றி நிச்சயம் என்று துள்ளிக்குதிக்கிறார்கள்.
இந்து சமூகத்தின் கண்களிலோ ஏக்கம்!



அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அதிசயம் நிகழ்கிறது.
தோற்கும் நிலையில் நின்ற தன் இனத்தாரின் துயரம் உணர்கிறான் இந்து ‘கோல் கீப்பர்’,
பந்தை அடித்த எதிரி, இனி இவனால் என்ன செய்ய முடியும்? என்ற அலட்சியத்தோடு நிற்க,
என்ன நடந்தது என மற்றவர்கள் ஊகிக்கும் முன்னர் ‘கோல்கீப்பரின்’ முகத்தில் திடீரென மாற்றம்.
‘உரு’ வந்தால் போல ஒருதரம் உடலைச் சிலிர்க்கிறான் அவன்.
வினாடியில் நிலத்தில் காலூன்றி உந்தி எம்பிக்கிளம்பி ஒரே பாய்ச்சலாய் அவன் பாய,
ஆஞ்சநேயன் போல் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குப் பறக்கிறது அவன் உடல்.
நிமிட நேரத்தில் ‘கோல் போஸ்டுக்குள்’ நுழைய இருந்த பந்தை அவன் விரல் நுனி தட்டிவிட,
‘ஒதுங்கி நிற்கும் இவனால் இனி என்னை என்ன செய்ய முடியும்?’ என,
குதூகலத்துடன் பறந்து வந்த பந்து,
மற்றவர்கள் பரிதாபமாய்ப் பார்க்க ‘கோல் போஸ்டை’ விலத்தி வெளியே போய் அனாதையாய் வீழ்கிறது.
ஏமாற்றிப் பந்தை அடித்தவன் ‘அலமந்து’ போய்விடுகிறான்.
கல்லூரித் தலைவர்கள் எல்லோரும் ஓடி வந்து அந்த ‘கோல் கீப்பரைத்’; தோளில் தூக்கிக் கொள்ள,
திடீரென அவன் கதாநாயகனாகிறான்.



இது என்ன கதை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
அன்று கதாநாயகனான அந்த ‘கோல் கீப்பர்’ தான்,
‘காலைக்கதிரை’ இன்று வெளிக்கொணரும் எனது நண்பன் வித்தியாதரன்.



எதிராளிகளால் தோற்றுத் துவளப்போகிறோம் என்ற நிலையில் இருந்த தனது கல்லூரிச் சமூகத்தாரை,
அன்று எங்ஙனம் வெகுண்டெழுந்து வினாடியில் வெல்லச் செய்தானோ,
அதேவேகம் இன்றும் வித்தியாதரனிடம் வந்தாற்போல் தெரிகிறது.
யாழுக்கு ஒரு புதிய பத்திரிகையை அறிமுகம் செய்து, அதை வளர்த்தெடுத்து,
அரசு-போராளிகள் என்ற இரு வேறுபட்டார் இடத்தும் தன் சுயத்தை இழக்காமல்,
குண்டுத்தாக்குதல், ஊழியர் உயிர் பறிப்பு, திடீர் இடப்பெயர்ச்சி என்பனவற்றையெல்லாம் எதிர் கொண்டு,
அதிராமல் அவற்றிற்கு முகம் கொடுத்து, உயிர் கொடுக்கும் எல்லைவரை சென்று,
போர்க்காலத்தில்  ஊடகதர்மத்தைத் தன்னால் முடிந்தவரை காக்க முனைந்த வித்தியாதரன்…



போர் முடிய,
‘விட்டுடுதி கண்டாய்’ என அதுவரை வேண்டி நின்றவர்களால் கைவிடப்பட்டான்.
அதற்கும் அவன் அஞ்சினான் இல்லை.
‘உம்மை நம்பியோ யாம் தமிழை ஓதினோம்?’ என அனைத்தையும் உதறி சிலகாலம் ஒதுங்கி நின்றான்.
வஞ்சனையால் வீழ்ந்து வளம் இழந்தான் இவன் எனப்பலரும் நினைக்க,
நஞ்சனைய அவர் மருளும்படியாக,
இன்று மீண்டும் அதே ‘கோல் கீப்பரின்’ பாய்ச்சல் நிகழ்கிறது.
அவனது பாய்ச்சலில் வெல்ல நினைந்தார்தம் பந்து வீழுமா?
தன் சமூகத்தின் வாழ்வை எதிரிகளின் வஞ்சனையிலிருந்து,
மீட்டெடுக்கத் துடித்தெழும் இவனது துஞ்சாத்துணிவு கண்டு,
அன்று இவனைத் தோளில் தூக்கிய கல்லூரித் தலைவர்கள் போல்,
இன்றும் இவனை நம் தலைவர்கள் தோளில் தூக்குவரா?
பலம் மிக்க எதிரிகளின் எதிர் வினையைக் கையாள,
நல்லார் இவனுக்குத் துணை நிற்பரா?
வெற்றி கைகூடின், முன்புபோல் வீணர் கைவயப்பட்டு இவன் வீழாதிருப்பனா?
கேள்விகள் நம்முள் தொடர்ந்து எழுகின்றன.
தோற்கும் நேரத்தில் வெல்வதும் வெல்விப்பதுவும்தான் ‘வித்தியின்’ இயல்பு.
எனவே அவன் மீண்டும் வெல்வான், வெல்விப்பான் என நம்புவோம்.
‘வித்தி’க்கும் ‘காலைக்கதிரு’க்கும் என் வாழ்த்துக்கள்!



நேர்மையாய் வித்திக்கு நான் சொல்லும் இவ்வாழ்த்தில்,
யாரையேனும் மறைமுகமாய்த் தாக்கும் குற்றக் குறிப்பேற்றி,
கொண்டாடவேண்டாமெனக் குறுமதியரைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.



‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ 
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.