தீபா-வலி ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

தீபா-வலி ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது,
நம் தமிழ்ச்சங்கச் சான்றோர் வகுத்த முடிவு.
‘இதென்ன அரசியல் கட்டுரையை,
திடீரென இலக்கியக் கட்டுரையாய் ஆக்குகிறீர்?’
உங்களில் சிலபேர் முறைப்பது தெரிகிறது.
அவசரப்படாதீர்கள்.
காரணத்தோடுதான் அந்த மேற்கோளைச் சொல்லியிருக்கிறேன்.
அதென்ன காரணம் என்கிறீர்களா?
கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள்.
முடிவில் விஷயம் தானே தெரியும்.
 



இது சற்று முன்னரே எழுதியிருக்கவேண்டிய கட்டுரை.
வெளிநாடுப்பயணங்களால் இப்போதுதான் எழுத நேரம் கிடைக்கிறது.
‘சரி உன் புகழ் பாடாமல் விஷயத்திற்கு வா!’
உங்கள் அவசரம் புரிகிறது.
விடயம் இவ்வளவுதான்.
நடந்து முடிந்த தீபாவளியின் போது,
சினிமா டைரக்டராயும், நடிகராயும் இருந்து,
இப்போது அரசியல்வாதியாய் ஆகியிருக்கும்,
தமிழகத்தைச் சேர்ந்த சீமான் அவர்கள்,
கனடாவில் நம் மக்கள் அழைப்பில் கனடா சென்று பேசும்போது,
தீபாவளி வரலாற்றில் நீண்டகாலமாய்ச் சொல்லப்பட்டு நரகாசுரன்,
நம் தமிழர்தம் முப்பாட்டன் என்றும்,
ஆரிய சூழ்ச்சியால் அவன் கொல்லப்பட்டான் என்றும்,
நமது அறியாமையால் நம் மூதாதையரின் கொலையை,
நாமே கொண்டாடி வருகிறோம் என்றும்,
ஒரு புதுத் தீபாவளிப்பட்டாசைக் கொளுத்திப் போட,
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நற்பெயரைக் கெடுக்கவென்றே அங்கு சென்ற,
நம் தமிழ்ச் சந்ததியை வெள்ளைக்காரச் சந்ததியாய் மாற்ற,
ஓயாது முயன்று கொண்டிருக்கும் ஒருசில புலம்பெயர் அரைகுறைகள்,
அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல்,
தாமும் இனப்பற்றாளர்கள் எனக் காட்ட நினைந்து,
சீமானின் கூற்றை இணையத்தளங்களில் ஆங்காங்கே,
கட்டுரையாகவும், கவிதையாகவும், நாடகமாகவும் கூட,
வழிமொழிந்து நிற்கின்றனர்.


ஒரு காலத்தில் தமிழகத்தில்  திராவிட கழகங்களின் எழுச்சியின் போது,
இதே போலத்தான் இராவணனைத் தமிழன் என்றும்,
ஆரியனான இராமன் அவனைக் கொலை செய்ய,
ஆரியமாயையில் அகப்பட்ட கம்பன்,
இராமனைப் புகழ்ந்து இராவணனை இகழ்ந்து,
காவியம் படைத்தான் என்றும்,
அதனால் கம்பனையும் கம்பகாவியத்தையும்,
தமிழர்கள் நிராகரிக்கவேண்டும் என்றும்,
ஒரு புதுப்பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கினார்கள்.


இவர்களது பிரச்சாரத்தைக் கண்டு,
கம்பனை ஆழக் கற்றோர் தமக்குள் சிரித்துக் கொண்டனர்.
மேற் பிரச்சாரக்காரரின் நோக்கம் அவர்களுக்குப் புரிந்தது.
தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் எத்தனையோ தலைமுறையாய்,
வேருன்றி நிற்கும் கம்பனைத் தொட்டால்,
சமூகத்தின் கவனம் தம்மேல் திரும்பும் எனும் அவர்களின் உத்தி அறிந்து,
அப் பெரியவர்கள் உயர்ந்தவை அழியா எனும் நம்பிக்கையோடு,
வாளாது ஒதுங்கி இவர்தம் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்தனர்.


அக்காலத்தில் இப்பிரச்சினையைக் கிளப்பியவர்கள்,
வலிமை மிக்க ஆற்றலாளர்கள் என்பது நிஜம்.
அறிஞர் அண்ணாத்துரை போன்ற,
அறிவும், சொல்வன்மையும் மிக்க ஒருசிலர் ஒன்றிணைந்தே,
இப்பிரச்சினை பற்றி பிரச்சாரம் செய்யத் தலைப்பட்டனர்.
பொய் உடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே
என்ற பெரியோர்தம் கூற்றுக்கு இயைய,
இவ்வல்லமையாளர்களின் வாய் ஜாலத்தில் மயங்கி,
குறிப்பிட்ட ஒரு இளையதலைமுறை,
கம்பகாவியச் சொத்தினை இழந்து போயிற்று.


ஆனால் கம்பன் தோற்றானல்லன்.
ஓடி முயன்ற இவர்தமை,
கம்பன் அசையாது இருந்து வென்றான்.
கம்பகாவியத்தை எரிப்போம் என்றவர்கள்,
கால ஓட்டத்தில் கம்பனை அங்கீகரித்துப் பணிந்தனர்.
திருவாசகத்தையும், கம்பனையும் கற்காதவர்கள்,
தமிழராக மாட்டார்கள் என்று அண்ணா,
பிற்காலத்தில் வெளிப்படையாகவே பேசினார்.
அதுபோலவே கலைஞர் கருணாநிதியும்,
கம்பன் விழாக்களில் கலந்து உரையாற்றி மகிழ்ந்தார்.
இவை நடந்து முடிந்த வரலாறுகள்.


அவ் வல்லமையாளர்கள் தம் தோளில் ஏற்றி,
ஆற்றாது தோற்று இறக்கிய,
அவ் ஆரிய எதிர்ப்புக் காவடியை,
சற்று வடிவம் மாற்றி தன்தேவைக்காக,
இப்போது சீமான் தூக்கத் தலைப்பட்டிருக்கிறார்.


இவரும் முன்னையவர்களுக்குச் சற்றும் தாழாத,
சொல்வன்மையாளர் என்பதை எவரும் மறுக்கத் துணியார்.
தன் சொல்வன்மையை மட்டுமே முதலாகக் கொண்டு,
அரசியலில் இறங்கி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் இவர்.
ஆரம்பத்தில் தமிழர்தம் உணர்ச்சியைத் தூண்ட,
எரிந்து கொண்டிருந்த ஈழப்பிரச்சினையை,
கையில் எடுத்து களத்தில் குதித்தார் சீமான்.
அவரது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய உரைகளைக் கேட்டு,
அவர் பின்னால் பெருங்கூட்டம் கூடியது.
போர் மண்ணிலிருந்து தம் உயிர்காக்கத் தப்பி ஓடி,
வெளிநாடுகளில் பாதுகாப்பாக வசித்துக் கொண்டு,
ஈழத்தமிழர்களின் இரட்சகர்கள் நாமே என்று காட்டி வந்த,
புலம்பெயர் ஈழத்தமிழர்களில் ஒருசிலர்,
சீமானின் சிஷ்யர்கள் ஆனார்கள்.
இவர்களால் சீமான் பயனுற சீமானால் இவர்கள் பயனுற,
இக் கூட்டு வலிமையுற்று நீடித்தது.


வெறும் வார்த்தை அழகு எத்தனை நாள் நீடிக்கமுடியும்.
வெறும் சொல் அழகால் மட்டும் பொருளை நிறுத்த முடியுமா?
நெஞ்சினிலே உண்மை ஒளி உண்டனால்,
வாக்கினிலே ஒளி உண்டாகும்
என்று பாரதி சும்மாவா சொன்னான்.
சீமான் கட்டிய வார்த்தைப் பந்தங்கள்,
கால ஓட்டத்தில் கழறத் தொடங்கின.
மேடைதோறும்  ‘ஒரு ஈழத்தமிழ்ப் போராளிப் பெண்ணையே,
திருமணம் செய்வேன்’ என்று முழங்கியும்,
பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தும் வந்த சீமான்,
பிறகு அக் கூற்றை முற்றாய் மறந்து,
வசதிமிக்க முன்னால் அமைச்சர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து,
தனது வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார்.


பின்னர் புதுக்கட்சி தொடங்கிய சீமான்,
இன்று ஓர் கட்சித்தலைவராய்,
தன் நாக்கு வலிமையால் வாக்கு வலிமை தேடி,
வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர்தான் அண்மையில் நரகாசுரனை,
தமிழர்தம் முப்பாட்டனாய் முன்மொழிந்திருக்கிறார்.
சில நாட்களின் முன்தான்,
முருகப்பெருமான்தான் தமிழர்தம் முப்பாட்டன் என்று சொல்லி,
மேடைதோறும் வேலேந்தி விளையாட்டுக் காட்டினார் இவர்.
முருகனே நம் முப்பாட்டன் என்று சொல்லிவந்த இவர்,
இன்று திடீரென நரகாசுரனுக்கு அப்பட்டத்தை வழங்கி,
தமிழ் இனத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
முருகனும் தமிழர்தம் முப்பாட்டனாம்.
நரகாசுரனும் தமிழர்தம் முப்பாட்டனாம்.
நல்ல வேடிக்கை!
முருகனுக்கும், நரகாசுரனுக்குமான இரத்த உறவின் வழிதேடி,
பல பேராசிரியர்கள் தம் ஆய்வைத் தொடங்கிவிட்டதாய்க் கேள்வி.


சீமானைக் குறை சொல்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.
அவர் தேவை புரிகிறது.
அவர் தேடல் புரிகிறது.
ஒரு காலத்தில் சிலர் கம்பனைப் பயன்படுத்தியது போல,
இப்போது அவர் நரகாசுரனைப் பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை.
அஃது அவர்கள் நாட்டின் அரசியல்.
அங்கு அவர்கள் எதுவும் செய்துவிட்டுப் போகட்டும்.
காலம் மாற அவர்தம் கருத்து மாறும்.
கருத்து மாற காட்சிகள் மாறும்.
ஏன் கட்சிகளும் மாறலாம்.
அங்கு இவை ஒன்றும் புதுவிடயங்கள் அல்ல.
எனது பிரச்சினை வேறு.


ஈழத்தமிழர்கள் ஆழமானவர்கள்.
இறைவழிபாட்டில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்.
பண்பாட்டில் ஊறியவர்கள்.
தமிழ்மேல் தாளாத காதல் கொண்டவர்கள்.
சுதந்திரவேட்கை மிக்கவர்கள் என்று,
உலகமே இன்று நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இதுவரை நம் தமிழர்கள் அங்ஙனம் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஒற்றுமையாய், உறவாய் ஒரு கிராமம் போல,
தம் தாய் மண்ணை நெருக்கி நேசித்து வாழ்ந்தவர்கள் அவர்கள்.
கடந்த சில தசாப்தங்களாக உரிமைக்காய் நிகழ்ந்த போரும்,
அப்போர் சார்ந்து நிகழ்ந்த சம்பவங்களும்,
அப்போர்ச் சூழலைப் பயன்படுத்தி,
உள்நுழைந்த வேற்றாரின் விருப்பு விளையாட்டுக்களும்,
நம் ஈழத்தமிழர்களின் இயல்பு வாழ்க்கையை ஓரளவு சிதைத்துவிட்டன.
ஒரளவென்ன ஓரளவு நிறையவே சிதைத்துவிட்டன.


அச் சிதைவைப் பயன்படுத்தி,
ஆங்காங்கு வணிகம் நடாத்த சிலர் முற்பட்டு நிற்கின்றனர்.
அவருள் சிலர் நம்மவர். சிலர் மாற்றவர்.
யாரானாலும் இவர்தம் மாயவலையில் இருந்து மீளுதலே,
நம் இனத்தின் உறுதிக்காம் முதல் வழி.


என்னவோ தெரியவில்லை குற்றவாளிகளாய் வரலாற்றில் பதிவான,
அரக்கர் கூட்டத்தை நம் மூதாதையராய் இனங்காட்டுவதில்,
சிலருக்கு ஏதோ மகிழ்ச்சி.
இராவணனைத் தமிழன் என்றார்கள்.
இதிகாச இலக்கியக்கதைகள் என்றோ நடந்து முடிந்தவை.
இக்கதைகளை உறுதி செய்ய புராணங்கள், இலக்கியங்களை அன்றி,
நிச்சயமான வேறு சான்றுகள் கிடையா என்பது திண்ணம்.
அவை தவிர்ந்த வரலாற்றுச் சான்றுகளை இவர்களால் தேட முடியாது..
ஆனால் சற்றும் கூச்சமின்றி,
ஏதோ இராவணனதும், நரகாசுரனதும், முருகனதும்
‘பேர்த்சேர்டிவிகேற்’ கிடைத்தாற்போல,
இவர்தாம் எம் மூதாதையர் என்று,
இவர்கள் போடும் கூக்குரலைக் கேட்ட,
கற்றார் எவரும் நகையாதிரார் என்பது திண்ணம்.


இராவணன் பற்றி பேசும் இலக்கியங்கள் எல்லாமே,
அவன் மாற்றான் மனைவியை விரும்பியதையும்,
பறக்கும் தன் வாகனத்திற்கு இடையூறாய் இருக்கும் காரணத்தால்,
சிவன் இருந்த கயிலை மலையை இடம்பெயர்க்க முனைந்ததையும்,
பின் சிவனால் அம்மலையின் கீழ் நசிக்கப்பட்டு,
சாமகீதம் பாடி அவரை மகிழ்வித்து வரம் பெற்றதையும்,
தெளிவுறச் சொல்கின்றன.
மாற்றான் மனைவியை விரும்புபவனும்,
சிவனைப் போற்றாதவனுமாகிய இவனா நம் குல முதல்வன்.
கேட்கவே நகைப்பாயிருக்கிறது.


வரலாற்றைக் கடந்த ஓர் நல்லவனை,
நம் மூதாதையன் இவன் என்று,
கற்பனையாயேனும் சொல்லிப் பெருமைப்படின்,
அதனை அறிவுடமை எனலாம்.
அதைவிட்டு,
தேடி எடுத்து ஒரு தீயவனை நம் மூதாதையனாய் உரைக்க முற்படுகிறோம்.
என்னே எமது அறியாமை!


இராவணனை நம்மவனாக்க
இவர்கள் சொல்லும் காரணம் அவன் திராவிடனாம்.
இலக்கியம் கற்காத குற்றம்.
அனைத்து இலக்கியங்களும்,
இராவணன் பிரம்மனுடைய புதல்வனுடைய புதல்வன் என்கின்றன.
பிரம்மன் வழிவந்ததால் அவன் பிராமணன்.
சூர்ப்பணகையிடம் பேசும் இராமன்,
‘அந்தணர் பாவை நீ அரசரில் வந்தோன் நான்’ என்கிறான்.
இது கூடத் தெரியாமல் அவனைத் திராவிடன் என்கின்றார்கள் இவர்கள்.


எந்தப் பாஷையைப் பேசினாலும்,
ஒருவருக்குத் துன்பம் வரும்போது அவரது தாய்ப்பாஷை தானே வரும்.
கயிலையை இராவணன் தூக்க சிவன் அவனை அழுத்துகிறார்.
துன்பம் பொறாத இராவணன் சாமவேதம் பாடினான் என்கிறது வரலாறு.
எந்த இலக்கியத்திலும் அவன் தமிழ்ப்பாடல் பாடியதாய் சான்று இல்லை.
அதிலிருந்தே அவன் தமிழன் இல்லை என்று தெரியவில்லையா?


வேறுசிலர்,
சம்பந்தர் தனது எல்லாப் பதிகங்களிலும் வரும்,
எட்டாவது பாடல்களில் இராவணனைப் பாடியிருப்பதால்,
அவனைச் சிவபக்தன் என்று சொல்லி வருகிறார்கள்.
உண்மை அறியாத உத்தமர்கள்.
சைவத்தின் வியாக்கியானகர்த்தாவாகிய சேக்கிழார்,
சம்பந்தர் இராவணனை எட்டாம் பாடலில் வைத்ததற்கான காரணம் சொல்கிறார்.

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்.

பிழை செய்தவர்களும் வந்தடைந்தால் இறைவன் அருள்செய்வான் என்பதைக்காட்டவே,
சம்பந்தர் எட்டாம் பாடலில் இராவணனை வைத்தார் என்கிறார் அவர்.
அவர் கருத்தை மீறி அவனைச் சிவபக்தன் என்கிறார்கள் இவர்கள்.
ஓர் உண்மைச் சிவபக்தன் இறைவன் இருக்கும் கயிலையைக் கண்டால்,
அதை வலம் வந்து வணங்குவானா? அன்றேல்,
அதனை நகர்த்திவிட்டு செல்லத் துணிவானா?
இதனைக் கூட சிந்திக்கமுடியாத இவர்கள் அறிவை என் சொல்ல.


நரகாசுரன் கதையும் இதுதான்.
இவனும் மகாவிஷ்ணுவிற்கும் பூமிதேவிக்கும் பிறந்த புதல்வன் என்றே,
புராணங்கள் கூறுகின்றன.
தாயால் மட்டுமே மரணம் வரவேண்டும் என்று வரம் பெற்று,
உலகை தனது கொடுமையால் இருள் சூழச் செய்தவன் இவன்.
இவனது கொடுமையினின்றும் உலகை மீட்க,
மகாவிஷ்ணு, பூமாதேவியின் அவதாரமாய்த் திகழ்ந்த,
தன் மனைவியாகிய சத்தியபாமையைக் கொண்டு,
இவனைக் கொன்றார் என்பது வரலாறு.
தாயால் கொல்லப்படும் அளவிற்கு தீயவனாய் விளங்கியவன் அவன்.
எங்காவது தாயே தன் பிள்ளையைக் கொல்வாளா?
அந்த அளவிற்கு அவன் கொடுமை விரிந்திருந்தது.
அவன்தான் நம் மூதாதையனாம்.
இந்தப் புராணங்கள் எல்லாம் பொய்யென்றால்,
அவன் நம் மூதாதையன் என்பதற்காம் சான்று,
எங்கு இருக்கிறது என்று இவர்கள் சொல்லவேண்டும்.
பாரம்பரியமாக நாம் பேணிவந்த மரபுகளை,
அரசியல்வாதிகளின் கற்பனையான கதைகேட்டு மாற்றிக்கொள்ள,
ஈழத்தமிழர்கள் இடமளியார்கள் என்பது திண்ணம்.


நம் தமிழும் சமயமும்,
யோகக்காட்சி வாய்த்த ஆன்றோர்களால் வகுக்கப்பட்டவை.
அவற்றில் அரசியல் விளையாட்டுக்களுக்கு,
ஒருக்காலும் இடமளிக்கமுடியாது.
தமிழ்நாட்டார் தங்கள் முடிவை தெரிவிக்கிறார்களோ  இல்லையோ,
ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தில்.
தமது அசையாத்தன்மையை அறுதியிட்டு உரைத்து நிற்கிறார்கள்.
எம்மவரிலும் சில சில்லறைகள் இவ் அசைவுகளால் சிதறி சத்தம் எழுப்பலாம்.
ஆனால்,
நம் ரிஷிகளால் வகுக்கப்பட்டு நம் அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்டு,
நம் மூதாதையர்களால் பின்பற்றப்பட்டு வந்த உயர் மரபுகளை,
ஆழம்மிக்க ஈழத்தமிழர்கள் எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டார்கள்,
என்பது மட்டும் திண்ணம்.


இக் கட்டுரையின் ஆரம்பத்தில்,
‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ எனும்,
சங்கச் சான்றோருடைய மேற்கோளைக் குறிப்பிட்டிருந்தேன்.
இத் தொடர் ஆழமானது.
எண்ணிக்கையின் அளவை வைத்து,
உலகு என்பதன் அர்தத்தைத் தீர்மானிக்காமல்,
ஒருவரானாலும் உயர்ந்தவரை வைத்தே,
உலகைத் தீர்மானித்தல் வேண்டும் என்பதனையே,
மேற் சங்கத் தொடர் நமக்கு உறுதி செய்கிறது.
அதனாற்றான் சொல்கிறேன்.
உயர்ந்தவர்களால் வகுக்கப்பட்ட நம் பாரம்பரிய மரபுகளை,
தம் தேவைக்காய்ப் பேசுவோர்தம் கவர்ச்சிப் பேச்சில் மயங்கிக் கைவிடுதல்,
நிச்சயம் உண்மைத் தமிழர்தம் செயலாகாது.


இணையங்கள் ஊடாக,
இப்பொய்ச் செய்தியின் புகழ் பரப்ப நினைப்போர்க்கு ஒரு வேண்டுகோள்.
தீபாவளியைத் தீபாவலி ஆக்காதீர்கள்.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.