அதிர்வுகள் 01 | ஆச்சியும் பால் அப்பமும்

-கம்பவாரிதி இ. ஜெயராஜ்-

லகில் நாம் யார் மேல் அதிகப் பற்று வைத்திருக்கிறோம்?
இக்கேள்விக்கான விடையை சற்றுச் சிந்தியுங்கள்!
தாயின்மேல், தந்தையின்மேல், சகோதரரின்மேல்,
காதலியின்மேல், காதலனின்மேல், கொள்கையின்மேல் என,
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான விடைகள் தோன்றியிருக்கும்.
உங்கள் மனத்தொடர்பின் பலம் கொண்டு.
மேற்படி விடையினை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள்.
நேசிப்பின் விளைவுதானே பற்று.
நெருக்கமான பற்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாய் இருக்கலாம்.
அதனால் உங்கள் விடைகள் வெவ்வேறாய் இருப்பதில் தப்பில்லை.
ஆனால், நான் சொல்லப்போகிற விடயம்.
உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாய் இருக்கப் போகிறது!
என்ன என்கிறீர்களா?சொல்கிறேன்!

*******************

வேறொன்றுமில்லை.
நீங்கள் அத்தனைபேரும் சொன்ன விடைகள் முழுவதும் பொய்யானவை!
யாராவது உண்மை சொல்கிறீர்களா என்று அறியத்தான் இக்கேள்வியைக் கேட்டேன்.
நான் எதிர்பார்த்தது போலவே எல்லோரும் பொய்யான விடையையே சொன்னீர்கள்.
'எங்களைப் பொய்யர்கள் என்று சொல்ல இவர் யார்?',
நீங்கள் கோபிப்பது புரிகிறது.
ஆனாலும் நான் சொன்னதுதான் உண்மை.
நான் சொன்ன உண்மையை உணர கொஞ்சம் தத்துவஞானம் வேண்டும்.
'இவர் பெரிய தத்துவஞானி. எங்களுக்கு தத்துவம் சொல்ல வந்துவிட்டார்' என்று,
தயவு செய்து முறைக்காதீர்கள்.
பொறுமையாய் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!

******************

மனித எண்ணங்களின் அடிப்படை,
'நான்', 'எனது' எனும் பற்றுக்களிலேயே தங்கியிருக்கிறது.
ஒருவன் தன்மேல் வைத்திருக்கும் பற்றிற்கு 'நான்' என்று பெயர்.
இதனைத்தான் தத்துவவாதிகள் 'அகங்காரம்' என்கிறார்கள்.
அப்படித் தன்மேல் கொண்ட பற்றிலிருந்து பிறக்கும் பிற பற்றுகளுக்கு,
'எனது' என்று பெயர் இதனைத் தத்துவவாதிகள் 'மமகாரம்' என்கிறார்கள்.
அவர்கள் எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன?
நான் சொல்லவந்த விடயத்திற்கு வருகிறேன்.
ஒருவனுக்கு தன்மேல் பற்றுப் பிறந்த பிறகுதான்.
மற்றவர்கள் அல்லது மற்றவைகள்மேல் பற்றுப் பிறக்கிறது.
தன்னைத் திருப்தி செய்யவே.
ஒருவர் தனக்குத் தேவையான உறவுகளிலும்,
பிறவிடயங்களிலும் பற்று வைக்கிறார்.
இந்த அடிப்படையைக் கொண்டுதான்,
நீங்கள் சொன்ன விடைகள் எல்லாம் பொய் என்று சொன்னேன்.

********************

இப்போது சொல்லுங்கள்,
நம்மில்தான் நாம் அதிக பற்று வைத்திருக்கிறோம் என்பதைத் தவிர,
மேற்கேள்விக்கான உண்மை விடை வேறொன்றாக இருக்க முடியுமா?
உண்மை சற்று கசக்கத்தான் செய்யும்.
ஆனாலும் உண்மை உண்மைதானே!
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என.
உறவுகளில் நாம் செலுத்தும் பற்றுக்கள் பெரியவை போல் தெரிந்தாலும்,
அதில் உண்மையில்லை.
ஒவ்வொருவரும் தம்மேல் தாம் வைக்கும் பற்றே,
பெரிய பற்று என்பதே சத்தியமான உண்மை.

**********************

நெருக்கமான உறவுக்குரியவர்களைப் பார்த்து,
'நான் என் உயிரினும் மேலாய் உன்னை நேசிக்கிறேன்' என்பதெல்லாம்,
வெறும் பித்தலாட்டம்.
யாழ்ப்பாணத்தில் கடும் போர்க்காலத்தில் வாழ்ந்தபோது,
குண்டு வீசும் விமானங்கள் வானத்தில் சுற்றத்தொடங்கியதும்,
தாம் ஓடிப்போய் பதுங்குகுழிக்குள் நின்றுகொண்டுதான்,
கணவன் மனைவியையும், காதலன் காதலியையும்,
பெற்றோர் பிள்ளைகளையும் கூப்பிட்டார்கள்.
அக்காட்சியில், சுயபற்றின் பலத்தை நான் தரிசித்திருக்கிறேன்.

************************

மேல் உண்மையை உணர்த்தும்.
நம் வாழ்க்கையில் நடக்கின்ற மற்றொரு விடயத்தைச் சொல்லட்டுமா?
எங்கள் கல்யாண வீடுகளில் உறவுகளைத் திருப்திப்படுத்துவதற்காக,
வந்த எல்லோரையும் மணமக்களோடு நிறுத்திவைத்து புகைப்படம் எடுப்பார்கள்.
பிறகு ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு நாம் செல்லும் போது,
கல்யாண 'அல்பம்' நமக்குக் காட்டப்படும்.
இது எல்லோர்க்கும் நிகழும் அனுபவம்.

*************************

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி!
நெஞ்சில் கை வைத்து உண்மையாய்ப் பதில் சொல்லுங்கள்!
அப்படிக் காட்டப்படும் 'அல்பத்தில்',
உங்கள் கண்கள் முதலில் எந்தப்படத்தைத் தேடும்?
நாம் நின்ற படத்தைத்தான் என்பதில் யாருக்கேனும் ஐயம் உண்டா?
எந்தப்படத்தை அதிக நேரம் நாம் இரசித்துப் பார்ப்போம்?
முன் சொன்ன பதிலே இதற்கான பதிலுமாம்.
எல்லாப் படமும் நன்றாக வந்து நம் படம் மட்டும் பிழைத்திருந்தால்,
இந்த 'போட்டோகிராபருக்குப்' படம் எடுக்கத் தெரியவில்லை என்று திட்டுவதும்,
எல்லாப்படமும் பிழைத்திருந்தும் நம் படம் மட்டும் சரியாக வந்திருந்தால்,
இவன் நல்ல 'போட்டோகிராபர்' எனப் பாராட்டுவதும்,
நம்மில்தான் நமக்கு அதிகமான பற்று என்பதற்கான நிரூபணங்கள்.

**************************

'ஆச்சியும் பால் அப்பமும்' எனத் தலைப்பிட்டுவிட்டு,
தொடர்பில்லாமல் நான் ஏதேதோ எழுதுவதாய் நீங்கள் நினைப்பது புரிகிறது.
மேற்சொன்னவை எல்லாம் முன்னுரைக்குள் அடங்கும்.
இனித்தான் விடயத்திற்குள் வரப்போகிறேன்.
சுயபற்றின் மிகுதியை யதார்த்த வாழ்வில் நான் கண்டுகொண்ட ஒரு சம்பவமே,
இவ்வார அதிர்வாகிறது.
இனி நான் சொல்லப்போகும் கதை,
மேல் உண்மையை நிரூபணம் செய்யும்.
முன்னுரை நீண்டுவிட்டபடியால் முடிவுரை சொல்லமாட்டேன்.
இக்கதையின் முடிவே கருத்தின் முடிவுமாம்.
உய்த்து உணர்க! அல்லது உணர்ந்து உய்க!

************************

எழுபதுகளில் என்று நினைக்கிறேன்.
அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
வவுனியா, புசல்லாவை, சிலாபம் என,
அப்பா 'ரான்சராகிப்' போன இடங்களிலெல்லாம் சென்று வாழ்ந்துவிட்டு,
படிப்பிற்காக அம்மாவோடு யாழ்ப்பாணம் வந்திருந்தோம்.
அம்மாவின் சொந்த ஊர் சண்டிலிப்பாய்.
அம்மாவின் தங்கையின் கணவருக்கு,
தனக்குத் தந்ததை விட ஆச்சி அதிக சீதனம் கொடுத்துவிட்டதாய்,
எங்கள் அப்பாவிற்கு ஆச்சியாக்களோடு கோபம்.
அதனால் எங்களை சண்டிலிப்பாய்க்கு அனுப்பாமல்,
நல்லூரில் தங்க வைத்திருந்தார்.

************************

என் அம்மாவோடு உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர்.
அதில் நால்வர் பெண்கள்.
எங்கள் அம்மாதான் பெண்களுக்குள் மூத்தவர்.
விதவையான ஆச்சி கஷ்டப்பட்டு,
முடிந்த அளவு தன் பிள்ளைகளை ஏதோ வகையில் கரையேற்றியிருந்தார்.

************************

என் அம்மாவின் குடும்பத்தில் கடைசிப்பிள்ளை மலர் ஆசையம்மா.
அப்போது அவருக்கு முப்பத்துமூன்று வயது முடிந்திருந்தது.
அம்மா தன் தங்கைமாரை சொந்தப் பிள்ளைகளைப்போல் பராமரித்து வளர்த்ததால்,
ஆசையம்மாக்கள் அனைவருக்கும் எங்கள்மேல் கொள்ளைப் பிரியம்.
அதிலும் திருமணமாகாமல் இருந்த மலர் ஆசையம்மாவிற்கு,
எங்கள்மேல் இருந்த அன்பிற்கு அளவேயில்லை.
அப்பாவிற்கு ஆச்சியிலும் மாமாமாரிலும் கோபம் இருந்ததே தவிர,
மலர் ஆசையம்மாவை அவரும் பிள்ளையாய்த்தான் நினைப்பார்.
எல்லோரும் ஆசையம்மாவின் கல்யாணம் பற்றியே கவலைப்பட்டார்கள்.
பல கல்யாணங்கள் குழம்பி,
கடைசியில் மலர் ஆசையம்மாவிற்கு கல்யாணம் முற்றானது.

************************
மலர் ஆசையம்மாவிற்கு கல்யாணம் முற்றாக,
குடும்பம் முழுவதிலும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது.
ஆச்சிக்கு அளவற்ற மகிழ்ச்சி.
பந்தல், பலகாரச்சூடு என கல்யாணவீடு அல்லோகல்லோலப்பட்டது.
கல்யாண வீட்டிற்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருந்தன.
வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்ததும்,
நாங்களும் சண்டிலிப்பாய் போவதாக முடிவாகியிருந்தது.
வியாழன் மாலை வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நிற்க,
அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணர் ஒருவர் அதிலிருந்து இறங்கினார்.
அடிக்கடி வராத அவர் திடீரென வந்ததில் அம்மாவுக்குப் பதற்றம்.
ஏதாவது விஷேசம் என்றாற்தான்,
அந்தக்காலத்தில் கார் பிடித்து 'ரவுணுக்கு' வருவார்கள்.
'என்னண்ண? என்னண்ண?' என்று அம்மா பதறி ஓடிவர,
துவாயால் வாய் பொத்தி உடம்பு குலுங்க,
'தங்கச்சி! எங்கட மலரல்லே செத்துப்போச்சு' என்று இடியிறக்கினார் அவர்.
அம்மா இட்ட ஓலத்தில் அயலெல்லாம் எங்கள் வீட்டில் கூடிவிட்டது.

************************

கல்யாண வீட்டிற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில்,
உறவுப்பெண்களெல்லாம் கூடி.
ஆச்சி வீட்டில் பலகாரச்சூடு நடத்தியிருக்கிறார்கள்.
ஒரு பெண் குடிக்கத் தண்ணீர் கேட்க,
மலர் ஆசையம்மா தண்ணீர் அள்ள கிணற்றிற்குச் சென்றிருக்கிறா.
மாரிக்கிணறு நிறைந்து கிடந்திருக்கிறது.
துலாக்கயிறு வழுக்க ஆசையம்மா கிணற்றுள் விழுந்த சத்தம்,
கூடியிருந்து பலகாரம்சுட்ட உறவுப்பெண்களின் கதைச்சத்தத்தில்,
யார் காதிலும் விழவில்லை.
ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் கேட்ட பெண்,
'எங்க தண்ணி அள்ளப்போன மலரைக் காணேல்ல?' என்று கேட்டதன் பின்னர்தான்,
எல்லோரும் கிணற்றடிக்கு ஓடியிருக்கிறார்கள்.
அதற்கு முன் மலர் ஆசையம்மாவின் கதை முடிந்துவிட்டிருந்தது.

************************

துன்பத்தின் உச்சந்தொட்ட செத்தவீடு அது.
மணமேடை ஏறவேண்டியவர் பிணமேடை ஏறியிருந்தார்.
பகையான உறவுகள் கூட பதைத்து அழுதன.
ஆச்சிபட்ட துன்பத்திற்கு ஓர் அளவேயில்லை.
தீயிலிட்ட புழுவாய் அவர் துடித்துத் துடித்து அழுதார்.
பச்சைத்தண்ணீர்கூட வாயில் விடவில்லை.
'வயசானவா, சாப்பிடாட்டி அவவுக்கு ஏதும் நடந்திடும்.
கட்டாயப்படுத்தியெண்டாலும் ஏதேனும் குடுங்கோ'-சிலர் சொல்ல,
பித்தளை மூக்குப்பேணியில் கோப்பி கொண்டுவந்து,
பல்லில்லாத ஆச்சியின் பொக்கை வாய்க்குள் அதனை அழுத்தி நுழைத்து.
கொஞ்சம் கோப்பியைப் பருக்கினார் பெரிய மாமா.
அடுத்த நிமிஷம் 'தூ' என அதனை வெளியில் துப்பி விட்டு,
'என்ர பிள்ளை போயிட்டுது, நான் இனி ஏன் உசிரோட இருக்க வேணும்' என்று,
ஆச்சி கதறிய கதறல் கேட்டு,
அவர்மேல் சீதனக் கோபம் கொண்டிருந்த எங்கள் அப்பாகூட,
கண்கலங்கினார்.

************************

செத்தவீடு முடிந்து ஐந்து நாட்களாகியிருந்தன.
துக்க மௌனம் வீட்டைக் காடாக்கியிருந்தது.
'என்ர குஞ்சோட நானும் போகப்போறன்' என்று,
அழுதழுது களைத்து ஆச்சி ஓர் மூலையில் சுருண்டு படுத்திருந்தா.
மற்றவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தனர்.
உறவுகள் நெருங்கியிருந்த காலமது.
ஊர் முழுவதும் உறவு நிறைந்திருந்தது.
அவர்கள் கொண்டுவந்து குவித்திருந்த 'பட்டினிப்பண்ட' உணவுகள்,
குசினியில் குஞ்சுப் பெட்டிகளில்; குவிந்து கிடந்தன.

************************

உறவுகள் ஒன்றாகி நின்றதால்,
சின்னப் பிள்ளைகளான நாங்கள் துக்கம் கரைந்து,
சாப்பாட்டிலும் விளையாட்டிலும் ஈடுபடத்தொடங்கியிருந்தோம்.
எனக்கு ஆச்சியை நிரம்பப் பிடிக்கும்.
அறைக்குள் சுருண்டு கிடந்த ஆச்சியைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
அவ சாப்பிட்டதாகத் தெரியவில்லை.
நான் கொடுத்தால் ஒருவேளை சாப்பிடுவாவோ? எண்ணம் வர,
மெல்ல ஆச்சிக்குப் பக்கத்தில் போயிருந்து,
அவவின் தலையைத் தடவி,
'ஆச்சி! ஆச்சி!' எனக் கூப்பிட்டேன்.

************************

சுருண்டு கிடந்த ஆச்சி மெல்லத் தலைநிமிர்த்தி,
'என்னப்பு?' என்றார்.
சாப்பிடச்சொன்னால் கோபிப்பாவோ?
மாமா குடுத்த கோப்பியைத் துப்பியதுபோல துப்புவாவோ?
'என்ர பிள்ளை போனபிறகு எனக்கென்ன சாப்பாடு?' என,
மீண்டும் கதறத் தொடங்குவாவோ?
ஆச்சி மீண்டும் அழத்தொடங்கினால்,
'உனக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?' என்று,
அம்மாவிடம் குட்டு வாங்க வேண்டி வருமோ?.
மனத்துள் ஆயிரம் கேள்விகள்; எழ,
ஆச்சியின் 'ரியாக்ஷன்' எப்படியிருக்க போகிறது என்பது தெரியாமல்,
நெஞ்சு படபடத்தது.
துணிவை வரவழைத்துக்கொண்டு,
'ஆச்சி ஒருக்கா எழும்புங்கோவன்' என்றேன்.
நான் சொன்னதும் ஆச்சி மெல்ல எழும்பி என் தலையைத் தடவினா.
அவவின் செயலால் மெல்லத் துணிவு வர,
மெல்லிய குரலில்,
'ஆச்சி சாப்பாடுகள் வந்திருக்கு கொஞ்சம் சாப்பிடுங்கோவன்' என்றேன்.

************************

இரண்டு கைகளையும் தூக்கி அவிழ்ந்து கிடந்த தலைமயிரை ஒன்றுகூட்டி,
இலந்தைப்பழம் அளவாய் ஒரு குடுமியைக் கட்டிக்கொண்ட ஆச்சி,
ஏனோ தெரியவில்லை சுற்றும்முற்றும் பார்த்தா.
தற்கொலை செய்ய நஞ்சுகிஞ்சு வாங்கித்தா! என்று கேட்கப்போகிறாவோ?.
எனக்கு நடுக்கம்பிடித்தது.
அப்படி அவ கேட்டுவிடக்கூடாது என்று,
மனத்தினுள் ஐயனாரை வேண்டிக்கொண்டேன்.
சுற்றும்முற்றும் பார்த்த ஆச்சி,
யாரும் இல்லை என்று தெரிந்ததும்,
என்னைப் பார்த்து, சற்று ஆர்வம் தொனிக்கும் மெல்லிய குரலில்,
'இண்டைக்கு ஆரும் பால் அப்பம் கொண்டு வந்தவையளே?' என்றா.

************************

கதையும் முடிஞ்சுதாம்! கத்தரிக்காயும் காய்ச்சுதாம்!
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.