அதிர்வுகள் 02 | சிரிப்புத்தான் வருகுதையா !

 
-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
'உங்கட அதிர்வுகளில தொடர்ந்து 'சீரியஸ்' விசயங்களா வருகுது.
சில நேரத்தில சனத்துக்கு அது 'போர்' அடிக்கப் பாக்கும்.
இடைக்கிடை கொஞ்சம் இறங்கி வந்து எழுதினால் என்ன?' என்று,
எனது எழுத்துக்களின் கடும் விமர்சகனான,
என் மாணவன் பிரசாந்தன் சொன்னான்.
எனக்கும் அது சரியாய்ப்பட்டது.
அதனால், இந்த வாரம் 'சீரியஸை' விட்டுவிட்டு,
'அதிர்வை'ச் சிரிப்பாக்கப் போகிறேன்.
சிரிப்பில் எத்தனையோ வகையுண்டு.
இயல்பாய் வாழ்க்கையில் நான் அனுபவித்த,
சில நகைச்சுவைகளை மறக்க முடிவதில்லை.
அப்படிப்பட்ட ஒரு சிலவற்றைச் சொல்கிறேன்.
 

òòòòò
லண்டனுக்கு நான் முதற்தரம் போயிருந்தபோது,
'ஆஸ்பத்திரி'யில் 'அட்மிற்' ஆகியிருந்த,
தெரிந்தவர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன்.
என்னோடு என் அண்ணனும் நண்பன் மகாராஜாவும் உடன் வந்திருந்தனர்.
மகாராஜா எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்.
நோயாளியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது,
குளிர் காரணமாக 'பாத்ரூம்' போகவேண்டும்போல் இருந்தது.
என் நண்பன் மகாராஜாவை உடன் அழைத்துக் கொண்டு,
அங்கிருந்த 'வோஷ்ரூமுக்குச்' சென்றேன்.
கரை வேட்டி சால்வையோடும் நெற்றி நிறையக் குங்குமத்தோடும்,
நான் உள்ளே சென்று ஆண்கள் பகுதிக்குள் நுழைந்ததுதான் தாமதம்,
உள்ளே நின்ற வெள்ளைக்காரக் கிழவன் ஒருவன்,
என்னைப் பார்த்து ஆங்கிலத்தில்,
ஏதோ பெரிதாய்ச் சத்தம் போடத் தொடங்கிவிட்டான்.
òòòòò
எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை.
மகாராஜாவைப் பார்த்தால் அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
'என்ன?' என்று கேட்டால் ஒன்றும் பதில் சொல்லாமல்,
'நீ வெளியில வா சொல்லுறன்' என்று,
என்னை அழைத்து வந்தான்.
அவன் சிரித்த சிரிப்பைப் பார்த்து,
வெளியில் நின்ற அண்ணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
'சிரித்தது காணும். இனிச் சொல்லு' என்று அவனை மிரட்டினார்.
அவன் அண்ணனைப் பார்த்து,
'அந்த வெள்ளைக்காரன் இவர ஒரு பொம்பிளை என்று நினைச்சிட்டான்.
அதுதான், உங்களுக்கு அந்தப் பக்கம் 'பாத்ரூம்' இருக்கு,
இஞ்ச ஏன் வந்தனியள்' என்று சத்தம் போட்டவன் என்று,
சொல்லிவிட்டுத் தொடர்ந்தும் சிரித்தான்.
அந்த அளவில் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
அவன், அண்ணனைப் பார்த்து,
'இஞ்சத்த வெள்ளக்காரக் கிழவங்கள்,
பொம்பிளயள் என்றால் 'பாத்ரூமுக்க' எட்டியும் பாப்பாங்கள்.
அந்தக் கிழவன் இவர பொம்பிள எண்டு நினைச்சபிறகும்,
வெளியில போகச் சொல்லிக் கத்துறான்.
அதில இருந்து என்ன தெரியுது?
நல்ல காலம் இவர் பொம்பிளயாப் பிறக்கேல.
பிறந்திருந்தால், கிழவங்கள்கூட இவரத் திரும்பியும் பாத்திருக்க மாட்டாங்கள்.
உங்கட பாடுதான் கஸ்ரமாய் இருந்திருக்கும்' என்று சொல்லிவிட்டுப் பிறகும் சிரிக்க,
இப்போது அண்ணனும் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்.
òòòòò
ஒருமுறை ரூபவாஹினித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு,
எங்களில் சிலரைப் பேச அழைத்திருந்தார்கள்.
நானும் திருமுருகனும் இரகுபரனும்,
வேறு இரண்டு முதிர்ந்த அறிஞர்களும்,
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
அக்காலத்தில் இன்றுபோல்,
பல தொலைக்காட்சிச் சேவைகள் வந்திருக்கவில்லை.
வானொலியில் நாங்கள்அனைவரும் பலதரம் பேசியிருக்கிறோம்.
தொலைக்காட்சியில் எங்கள் வடிவமும் தெரியப்போகிறது என்பதில்,
எல்லோருக்கும் சற்றுப் பரபரப்பு.
எங்களுடன் வந்திருந்த மூத்த அறிஞர்களுள் ஒருவர்,
தனது படம் தொலைக்காட்சியில் தெரியப்போவது பற்றி,
அதிக ஆர்வமடைந்திருந்தார்.
சின்ன வயதில் சினிமாவில் நடிக்க வேண்டுமென விரும்பியிருப்பார் போல.
இளம் பையன்களைப் போல, 'கிறீம்' தடவித் தடவி,
பத்துத்தரம் தலையிழுத்தார்.
திரையில், தான் வெள்ளையாய்த் தெரியவேண்டும் என்பதற்காக,
'பவுடரை' முகம் முழுவதும் அப்போ அப்பென்று அப்பினார்.
தங்கப் 'பிறேம்' போட்ட புதிய மூக்குக்கண்ணாடியை,
பல கோணங்களில் முகத்தில் பொருத்திப் பொருத்திப் பார்த்தார்.
பட்டு வேட்டி, நஷனல் எல்லாம் போட்டு,
மடிப்புச் சால்வையை கழுத்தின் இருபக்கமுமாக,
முழங்கால் வரை நீளத்தொங்கவிட்டார்.
நெற்றியில் விபூதியிட்டு சந்தனப்பொட்டு வைத்துக்கொண்டார்.
அவரது கோமாளித்தனமான மேற்படி செயற்பாடுகளை தூர இருந்து,
நானும் திருமுருகனும் இரகுபரனும்,
கிண்டலாக ரசித்துக்கொண்டிருந்தோம்.
òòòòò
கண்ணாடியில் மூழ்கியிருந்த அவர்,
திடீரென எங்களை நோக்கித் திரும்பி,
தனது வயதிற்கு மிஞ்சிய கம்பீர நடை நடந்து,
எங்கள் முன் வந்து நின்றார்.
நின்றவர் கண்ணாடி, சால்வை முதலியவற்றை,
மீண்டும் ஒருதரம் சரிசெய்து கொண்டு,
எங்களை நோக்கி, 'தம்பிமார் எப்படி இருக்குது என்ர தோற்றம்?' என்றார்.
உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டாமல்,
அவரை மகிழ்விப்பதற்காக,
'சேர் சினிமாக் கதாநாயகன் மாதிரி இருக்கிறீங்கள்' என்றேன்.
அவருக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை.
மகிழ்ந்தபடி, மறுபக்கத்திலிருந்தவரிடம் போய்,
அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டு நின்றார்;.
நான் பக்கத்திலிருந்த திருமுருகனின் காதுக்குள்,
'மூக்குக்குள் இரண்டு பஞ்சு வைக்காத குறைதான்,
மற்றும்படி எல்லாம் சரியாய்த்தான் இருக்குது' என்றேன்.
சந்தர்ப்பவசமாய் நான் சொன்ன சொற்களைக் கேட்டு,
அன்று திருமுருகன் சிரித்த சிரிப்பை,
இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.
òòòòò
அறியாமை குற்றமல்ல.
அறியாமையை அறியாமை கடும் குற்றம்.
இன்றைய கல்வி உலகில் இக்குற்றமே நிரம்பிக் கிடக்கிறது.
நமது அறியாமையை மறைக்க அறிந்தோர் போல,
சில வேளைகளில் நாம் நடிக்கத் தலைப்பட்டு,
மற்றவர்களின் சிரிப்பிற்கு ஆளாவோம்.
என் வாழ்வில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நடந்தது.
எங்கள் குடும்பத்திலேயே நான்தான் மக்கு என்று,
முன்னமே சொல்லியிருக்கிறேன்.
என் தந்தை வழி உறவினர்கள் எல்லோரும்,
நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்.
என் சகோதரர்களும் அவ்விடயத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
எனக்கோ ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வரவில்லை.
அன்று மட்டும் இல்லை, இன்றும் என் நிலை அப்படித்தான்.
òòòòò
ஒருமுறை என் அப்பாவின் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தோம்.
எங்கள் மாமா பெரிய 'எஞ்சினியர்'.
1940 களில் கப்பலில் லண்டன் சென்று படித்தவர்.
அவரது நடவடிக்கைகளே,
வெள்ளைக்காரத்தனமாய்த்தான் இருக்கும்.
மாமி வீட்டார் முழுப்பேரும் ஆங்கில வல்லமை பெற்றிருந்தனர்.
நாங்கள் போய் அவர்கள் வீட்டில் நின்றபோது,
ஒருநாள் மாமி, வீட்டுவாசல் படியில் உட்கார்ந்து,
முகத்தில் வேதனைக் குறிப்புக் காட்டியபடி அமர்ந்திருந்தார்.
அவருக்கு ஏதோ சுகமில்லை என்பதை மட்டும் என்னால் உணரமுடிந்தது.
சும்மா இருக்காமல், மாமியைச் சுகம் விசாரிக்கலாம் என நினைந்து,
'மாமி ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்கள் உங்களுக்கு என்ன செய்யுது?' என்று கேட்டேன்.
òòòòò
நான் அன்போடு கேட்டதும், நெகிழ்ந்து போன மாமி,
வேதனை தாங்காது கழுத்தில் கை வைத்து அழுத்தி,
'எனக்கு 'பைல்ஸ் ப்றப்ளம்' ஜெயா,
அதுதான் வலி தாங்காமல் கஸ்ரப்படுறன்' என்றார்.
எனக்கு அப்போது 'பைல்ஸ்' என்பது,
மூலநோயைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் என்பது தெரியாது.
'பைல்ஸ்' என்றால் என்ன? என்று,
நான் மாமியிடம் கேட்டிருக்கலாம்.
ஆனால், 'பைல்ஸ்' என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது என்பதை,
அவவுக்குத் தெரியப்படுத்த எனக்கு விருப்பமில்லை.
மாமி முகத்திற்கு அருகாய்,
கழுத்தில் கைகொடுத்து வேதனையை வெளிப்படுத்தியதை வைத்து,
அவருக்கு முகத்தில்தான் ஏதோ பிரச்சினை என ஊகித்த நான்,
'முகத்திலயோ 'பைல்ஸ்' மாமி'? என்று கேட்டேன்.
எனது கஸ்ர காலம், என் சகோதரர்களும் அப்போது உடன் இருந்தார்கள்.
அன்று அவர்கள் சிரித்த சிரிப்பையும்,
'ஜெயாவுக்கு முகத்தில மூலம் தள்ளுதாம்' என்று,
பல ஆண்டுகளாய் அவர்கள் என்னைக் கிண்டல் செய்ததையும்,
இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
òòòòò
இனி நான் சொல்லப்போகும் நகைச்சுவையை,
என்மேல் அளவுக்கதிகமான மதிப்பும் பக்தியும் வைத்திருக்கிறவர்கள்,
தயவு செய்து படிக்க வேண்டாம்!
என் சொல்லை மீறிப் படித்துவிட்டு,
நீங்கள் இதையெல்லாம் எழுதலாமா? என்று,
தொலைபேசியில் விசாரித்து என்னைச் சங்கடப்படுத்தவும் வேண்டாம்.
நகைச்சுவை என்று வரும்போது,
இடம், காலம் பார்க்காமல்,
நினைத்ததுமே என்னைச் சிரிக்க வைக்கும் இந்த விசயத்தை,
என் கௌரவம் கருதி சொல்லாமல் விடுவது,
என் வாசகர்களுக்கு நான் செய்யும் துரோகமாய் ஆகிவிடும் என்பதால்,
திட்டுக்களைப் பொருட்படுத்தாமல் அந்த நகைச்சுவையையும் எழுதப்போகிறேன்.
இனிப் படிப்பதும் படிக்காமலிருப்பதும் உங்கள் இஸ்ரம்.
òòòòò
யாழ். இந்துக் கல்லூரியில் விசாகராஜா என்று ஓர் ஆசிரியர் இருந்தார்.
மாணவர்களுக்கு 'ஜோக்' சொல்வதில் மன்னாதி மன்னன் அவர்.
பெரும்பாலும் அவர் சொல்லும் 'ஜோக்'குகள் 'யு ஜோக்'குகளாகவே இருக்கும்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்,
எதிர்பாராத விசயத்தை நகைச்சுவையாக்குவார்.
இது நாம் படிக்கும் காலத்தில் அவர்பற்றி இருந்த பதிவு.
கல்லூரியை விட்டு வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,
யாழ். இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம்,
சொற்பொழிவுக்காக என்னையும், பிரசாந்தனையும்,
ஒரு விழாவுக்காக கனடாவுக்கு அழைத்திருந்தது.
கனடாவுக்கான எனது முதற்பயணம் அது.
இங்கிருந்து பத்து மணித்தியாலங்கள் பயணித்து,
லண்டன் போய், லண்டன் 'எயார்போட்டில்' சில மணித்தியாலங்கள் காத்திருந்துவிட்டு.
பிறகு ஏழு மணித்தியாலங்கள் பயணித்துக் கனடா சென்று சேர்ந்தோம்.
பயணக் களைப்பில் உடம்பு நொந்து நூலாகி விட்டது.
முகம் முழுக்கக் களைப்பைத் தேக்கியபடி,
'எயார்போட்டை' விட்டு வெளியே வந்தால்,
எங்களோடு படித்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களுமாக,
பலபேர் பூச்செண்டோடும் மாலையோடும் எங்களை ஆரவாரித்து வரவேற்றார்கள்.
òòòòò
உச்சக் களைப்பில்,
எப்பயடா வீடு போய்ச் சேருவோம்? என்ற மனநிலையில் நாங்கள் இருந்தோம்.
அப்போது, ' 'ஹலோ!' ஜெயராஜ், என்னை ஞாபகம் இருக்குதே?' என்று கேட்டுக்கொண்டு,
மாணவர்களை விலக்கிக்கொண்டு ஒருவர் முன்னே வந்தார்.
தலையில் சற்று நரை, மெல்லிய கூனல், கண்ணில் சிறு குழி என,
சிலசில வித்தியாசங்கள் இருந்தாலும்,
விசாகராஜா மாஸ்ரர்தான் அவர் என்பது உடனே தெரிந்தது.
சந்தோசமாக, 'என்ன சேர் உங்கள மறக்க முடியுமோ?
உங்கள மறந்தாலும் உங்கட பகிடிகளை மறக்க முடியுமோ?' என்றேன்.
கூட இருந்த மாணவர்களும் ஆர்ப்பரித்து,
என்னை ஆமோதித்தார்கள்.
òòòòò
விசாகராஜா 'மாஸ்ரர் ' முகத்தில் பெரிய சந்தோசம்.
'நீ பழசையெல்லாம் நினைவு வைச்சிருக்கிறபடியால்,
உனக்கொரு பகிடி சொல்ல வேண்டியிருக்கு.
இப்ப நீ பெரிய சமயப் பிரசங்கி.
நான் சொல்லுறதைக் கேட்டு கோபிக்கப்படாது.
பகிடியாய் எடுக்க வேணும்' என்று,
'சஸ்பென்சாய்' முன்னுரையை நீட்டினார்.
ஏதோ பெரிய பகிடி விடப்போகிறார் என்று தெரிந்தது.
'நான் கோவிக்கேல சொல்லுங்கோ சேர்' என்றேன்.
òòòòò
முகத்தை வெகு 'சீரியசாய்' வைத்துக்கொண்டு,
'கனடாப் பெண்டுகள் எல்லாம்,
இப்ப பிள்ளையார் 'பென்ரன்' போடுறதில்லை.
ஏன் சொல்லு பாப்பம்' என்றார்.
சத்தியமாக எனக்கு ஏனென்று விளங்கவில்லை.
ஏதோ உள்ளூர் பிரச்சினையாக்கும் என்று நினைத்தேன்.
'எனக்குத் தெரியேல, நீங்களே சொல்லுங்கோ சேர்' என்றேன்.
அவர் எனக்கு அருகில் வந்து சற்றுக் குரலைத் தாழ்த்தி,
'வேறொண்டுமில்லையடாப்பா, நீ கேள்விப்படேலயே,
இப்ப பிள்ளையாரெல்லே பால் குடிக்கத் தொடங்கியிட்டாராம்.
அதுதான் எல்லாரும் 'பென்ரனைக்' கழட்டிப்போட்டுதுகள்' என்றார்.
அந்த நாட்களில்தான் பிள்ளையார்சிலை பால் குடிப்பதாய்,
உலகமெங்கும் கதை பரவியிருந்தது.
விசாகராஜா இதைச் சொன்னதும்,
மாணவர்களின் சிரிப்பில் 'எயார்போட்டே' அதிர்ந்தது.
அவர் சொன்ன விதம், முகத்தை வைத்திருந்த பாவம்,
குரலில் காட்டிய இரகசியம் எல்லாம் சேர்ந்து,
பிள்ளையார் கதை உச்ச நகைச்சுவையைத் தொட்டது.
இன்றும் எங்கிருந்தாலும் இக்கதை நினைவில் வந்தால்,
பைத்தியக்காரன்போல் நான் சிரிக்கத் தொடங்கி விடுகிறேன்.
òòòòò
சுனாமிபோல திடீர் திடீரென சிரிப்பு எங்கிருந்தெல்லாமோ வருகிறது.
நாங்களாகப் பூட்டியிருக்கிற போலிக் கௌரவங்களை விடுத்து,
கொஞ்ச நேரம் வாய்விட்டுச் சிரித்தால்,
என்ன நட்டம் வந்துவிடப் போகிறதாம்?
òòòòò
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.