அதிர்வுகள் 06 | செல் விருந்து காத்திருப்பார் !

அதிர்வுகள் 06 | செல் விருந்து காத்திருப்பார் !
 
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
உலகம் விசித்திரமானது.
உலகில் உள்ளோர் அதைவிட விசித்திரமானவர்கள்.
சுகம் தேட முயன்று துன்பம் காண்பதும்,
துன்பவாழ்க்கையில் இன்பம் பெறுவதும்,
இவ்விசித்திரத்தின் விளைவுகள்.
நம் நாட்டின் அவலச் சூழ்நிலையால்,
துன்பத்திலிருந்து தப்ப முயன்று,
இன்பம் தேடி வெளிநாடுகளுக்கு ஓடிய பலர்,
அவ்வின்பத்தேடலில் துன்பம் பெற்றிருப்பது சுவாரஸ்யமான விடயம்.
அதென்ன இன்பத்தேடலில் துன்பம் என்கிறீர்களா?
அது பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

****

சில ஆண்டுகளுக்கு முன்,
சொற்பொழிவுகளுக்காக கனடா சென்றிருந்தேன்.
ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு ஒருதரமேனும் சென்றுவராதவன்,
கடவுளால் சபிக்கப்பட்டவன் எனும் கருத்து,
இன்று ஈழத்தமிழர் மனங்களிலெல்லாம் ஆழப்பதிந்து விட்டது.
ஏன்! தமிழ்நாட்டவர் மனங்களிலும் தான்.
அந்தப்பாதிப்பு எனக்குள்ளும் அப்போது இருந்திருக்கும் போலும்!
வெளிநாட்டில் எங்கள் பேச்சுக்களைக் கேட்கிறார்களோ இல்லையோ,
அங்கு ஒருதரம் போய்வந்தால்தான்,
உள்நாட்டில் எங்கள் பேச்சைக் கேட்கிறார்கள்.
அந்த விதிக்கு அஞ்சி நானும் பயணம் புறப்பட்டேன்.

****

யாழ். இந்துக்கல்லூரியில் எனது ஆசிரியராக இருந்த,
சந்தியாப்பிள்ளை மாஸ்ரர் என்பவர் தான்,
என்னை அழைத்திருந்தார்.
நான் எழுதப்போகும் விடயத்தோடு அவருக்குத் தொடர்பிருப்பதால்,
அவரைப்பற்றி சில வார்த்தைகளை,
இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

****

நாங்கள் படிக்கும் காலத்தில்,
எங்கள் கல்லூரியின் ‘ஆமிகடேற்ஸ்’ பொறுப்பாசிரியராய் இருந்தவர் அவர்.
‘ஆமி ரெயினிங்’ அவரை மிகக் கம்பீரமான ஆண்மகனாய் ஆக்கியிருந்தது.
கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில் இருப்பார்.
அவர் நடக்கும்போது உடம்பு நூற்றியெண்பது பாகை காட்டும்.
எங்கள் வகுப்பறை ‘கொறிடோர்களில்’, அவர் நடக்கையில்,
அவரது சப்பாத்துக்கால்கள் எழுப்பும் ‘டொக் டொக்’ என்ற சத்தத்தில்,
மாணவர்கள் ஒடுங்கிப்போவார்கள்.
அவரின் முறுக்கிய மீசையிலும்,
உத்தரவாய்ப் புறப்படும் அதிரும் வார்த்தைகளிலும்,
தீட்சண்யமான பார்வையிலும்,
இராணுவமிடுக்கு வெளிப்படத் தெரியும்.
அத்துணை கம்பீரமானவர் அவர்.

****

சூழ்நிலை காரணமாக கனடா சென்றவர்,
என்னை மறக்காமல் ஒரு விழாவிற்குப் பேச அழைத்திருந்தார்.
நானும் என் மாணவன் பிரசாந்தனும் அவர் அழைப்பில் அங்கு சென்றோம்.
கிட்டத்தட்ட இருபது வருடங்களின் பின்னான சந்திப்பு.
முதுமையில் இப்போது சோர்ந்திருப்பார் என நினைந்து சென்றால்,
சிறிதும் மாறாது அதே கம்பீரத்துடன் அப்படியே இருந்தார்.
எழுபது வயதைத் தாண்டிவிட்டாரென்று,
எந்தக் கோயிலில் சத்தியம் பண்ணினாலும் எவரும் நம்பமாட்டார்கள்.
அதே மிடுக்கு, அதே நடை, அதே குரல்,
ஆச்சரியப்பட்டேன்.
நாங்கள் சென்ற விழா நல்லபடி முடிந்தது.

****

விழா முடிந்த மறுநாள்,
ஆசிரியர் வீட்டில் மதிய விருந்து.
எங்கள் கல்லூரி பழைய மாணவர் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதிலொருவர் ‘ரொறன்ரோ’வைக் கடந்திருந்த,
‘ஒட்டோவா’ மாநிலத்திலிருந்து வந்திருந்தார்.
அவரின் பெயர் மூர்த்தி என்று,
மாஸ்ரர் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
எனக்கு அவரோடு முன்பு பழக்கமிருக்கவில்லை.
அந்த மாநிலத்தில் மிகப்பெரிய தளபாடக்கடை ஒன்றை,
அவர் வைத்திருப்பதாய் அறிமுகம் செய்கையில் மாஸ்ரர் சொன்னார்.
மாஸ்ரர் அவரோடு மிக உரிமையாய் நடந்து கொண்டார்.
‘டேய் மூர்த்தி ஜெயராஜ் ஆக்களை நாளைக்கு,
உங்கட இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகவேணும்,
நாங்கள் நாலு பேர் உன்ர காரிலேயே வரலாம் தானே?’ என்றார்.
எந்த முகக்கோணலும் இல்லாமல்,
‘வித்பிளஸர்’ என்றார் மூர்த்தி.
அடுத்த நாள் காலை நாம் புறப்படுவதென்று முடிவாயிற்று.

****

கனடாவில் இருந்த எனது மருமகன் மயூரனும்.
என்னோடு வந்து தங்கியிருந்தான்.
மாஸ்ரரும் நானும் பிரசாந்தனும் அவனுமாக,
அடுத்த நாள் காலை மூர்த்தியின் காரில் புறப்பட்டோம்.
கனடா வீதிகள், பெண்கள் வரையும் புருவக் கோடுகள்போல,
கருமையாகவும், அழகாகவும் வளைந்தும், நீண்டும் எம்மை ஈர்த்தன.
வீதிகளில் வாகனங்களைத் தவிர ஆட்களைப் பார்க்க முடியவில்லை.
அந்த வீதிகளின் சுத்தத்தின் முன்.
எங்கள் சுவாமிஅறைச் சுத்தமும் தோற்றுப்போய்விடும்.
விரித்த கைபோன்ற இலைகளுடன்.
தேசத்தின் ஒருமை உணர்த்தி.
ஒரே ஜாதி மரங்கள் வீதியெங்கும் நிறைந்து நின்றன.

****

வீதியோரங்களில் இடையிடையேயிருந்த,
‘கொஃபிபார்களில்’ கிடைத்த கரும்கோப்பிகள்,
எங்கள் ஊர் கசாயங்களை நினைவூட்டின.
அவை தாகம் தீர்ப்பதோடு குளிர் நீக்கும் மருந்துகளாயும் உதவி செய்தன.
எங்கள் ஆச்சியின் காலத்து,
மூக்குப்பேணி ‘சைசில்’ இருந்த பேப்பர் குவளைகளில்,
அதனைக் கொதிக்கக் கொதிக்கத் தந்தார்கள்.
அந்த ஒருபொழுதுப் பயணத்திலேயே,
மூர்த்தியும் எங்களது நண்பராகியிருந்தார்.
சிரித்துப் பேசி அனுபவித்துச் சென்றதால்,
நாம் மூர்த்தியின் வீட்டடிக்குப்போக இரவு பதினொரு மணியாகிவிட்டது.

****

சந்தியாப்பிள்ளை மாஸ்ரர் மூர்த்தியைப் பார்த்து,
‘மூர்த்தி! லேற்றாய்ப் போச்சு இனிப்போய் வீடுகளில கரைச்சல் பண்ணக்கூடாது.
வழியில எங்கயும் சாப்பிட்டுப் போவம்’ என்று,
யதார்த்தம் உணர்ந்து பேசினார்.
‘சீச் சீ அதெல்லாம் வீட்ட போய்ப் பார்த்துக்கொள்ளலாம் சேர்’ என்று.
அவசரமாய் மாஸ்ரரின் கருத்தை மறுத்த  மூர்த்தி,
நேராகக் காரை தன் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்தினார்.
யாழ்ப்பாணத்தாரின் விருந்தோம்பல் பண்பு,
கனடா வந்தும் போகவில்லையே என்று மகிழ்ந்து போனேன்.

****

மாளிகை போன்ற பெரியவீடு.
ஏற்கனவே வாசலில் நின்ற அழகிய மூன்று கார்களும்,
பாவிப்பின்றி,
முதுகன்னிகள் போல் மூப்பின் முதல் நிலை காட்டி நின்றன.
பயணக்களைப்பில் பசி வயிற்றினுள் உரு ஆடத்தொடங்கியிருந்தது.
வீட்டின் பிரமாண்டம் விருந்தின் பிரமாண்டத்தைக் கற்பனை செய்யச்செய்து,
பசிக்கு மேலும் உரு ஊட்டிற்று.
உள்ளே போனதும் உடன் ஒரு வெந்நீர்க் குளிப்பு,
பின்னர் சுடச்சுட விருந்து,
அதன் பின்னர் புதைகுழிபோல் ஆளை உள் ஈர்க்கும் மெத்தையில்,
நல்ல சுகமான தூக்கம் என,
மனம் நிகழ்ச்சி நிரல் போட,
காரால் இறங்கி நடந்த மூர்த்தியை,
உற்சாகமாய்ப் பின்தொடர்ந்தோம்.

****

ஏனோ தெரியவில்லை அதுவரை கலகலப்பாய் வந்த மூர்த்தியிடம்,
திடீரென அந்தக் கலகலப்பு காணாமல் போனது.
நான்கைந்து தரமாய்,
வீட்டின் ‘கோலிங் பெல்லை’ தயக்கமாய் அடித்தார்.
உள்ளே எந்த ‘அசுமாத்தமும்’ இல்லை.
பிறகு எங்களைத் திரும்பிப் பார்த்த அவர்,
உதட்டில் ஒரு விரல் வைத்து,
‘மௌனியுங்கள்’ என்றாற்போல் ஜாடை காட்டினார்.
இருளும், பனிக்குளிரும், அவர் நடவடிக்கையும்,
ஏதோ பேய்ப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தன.
வீட்டை அண்மித்ததும்.
அவர் நடவடிக்கையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களால்,
குழம்பிப் போயிருந்த நாங்கள்,
அவர் சைகை காட்டியதும்,
மௌனாஞ்சலி ‘லெவலுக்கு’ மௌனமானோம்.

****

தன் காற்சட்டைப் ‘பொக்கற்றில்’ கையை விட்டு,
வீட்டின் மாற்றுச்சாவியை மெல்ல வெளியே எடுத்த மூர்த்தி,
அதை மிகக் கவனமாக கதவின் பூட்டினுள் சத்தம் வராமல் நுழைத்து,
மிக நிதானமாகக் கதவைத் திறக்க முயன்றார்.
அவரது செயலில் கண்ணிவெடி அகற்றும் லாவகம் இருந்தது.
‘கிளிக்’ என்று கதவு திறந்து கொண்டது.
மூர்த்தியின் மிக நிதானித்த செயற்பாட்டில்,
அந்தச்சத்தம் கூட, வெடிச்சத்தம்போல் எமக்குப் பயத்தை ஊட்டியது.
கதவை மெல்லத் தள்ளித் திறந்தார் மூர்த்தி.
அவரைத்தாண்டி உள்ளே எட்டிப்பார்த்த நாங்கள்,
உண்மையில் சற்றுத் திகைத்துத்தான் போனோம்.

****

உள்ளே பிரமாண்டமாய் இருந்த அந்த ‘ஹோலின்’ நடுவில்,
அழகான ‘குஷன் செற்றியில்’,
ஆட்கள் உள் நுழைந்ததை கவனிக்காத அலட்சியத்துடன்,
மூர்த்தியின் மனைவி ஏதோ புத்தகம் படிக்கும் பாவனையில் உட்கார்ந்திருந்தார்.
தோள் அளவாய் வெட்டப்பட்டிருந்த அவளது கூந்தலும் அலட்சியமாய்ப் பறந்தது.
எங்களைக் கண்டும் காணாதவள் போல்,
வேண்டுமென்றே கால்மேல் காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டாள் அவள்.
எந்தநேரமும் நான் வெடித்து விடுவேன் என்று,
அவள் அணிந்திருந்த ‘ஜீன்ஸ்’ இறுக்கத்தால் மிரட்டிக்கொண்டிருந்தது.
உதட்டில் அவள் பூசியிருந்த சிவப்புச்சாயம்,
சிவந்திருந்த அவள் கண்களின்முன் சற்று மங்கினாற்போல் தெரிந்தது.

****

எழும்பிக் கதவைத் திறவாத நிராகரிப்பு,
கண்டும் காணாத அலட்சியம்,
கால்மேல் கால் தூக்கிப் போட்டுக்கொண்ட செருக்கு,
கண் சிவப்பு, காட்டிய கோபம் என அனைத்தும் சேர்ந்து,
எங்கள் வருகையை அவள் விரும்பவில்லை என்பதையும்,
அவள் ஏதோ கடும் வெறுப்பில் இருக்கிறாள் என்பதையும்,
தெளிவுற எமக்கு உணர்த்தின.

****

உள்ளே நுழைந்த எங்களை,
அவள் ‘வாருங்கள்’ என்று அழைக்கவும் இல்லை.
‘வெளியே போங்கள்’ என்று துரத்தவும் இல்லை.
எழும்பவும் இல்லை, சிரிக்கவும் இல்லை, முறைக்கவும் இல்லை.
மொத்தத்தில் எதுவித பிரதிபலிப்பும் இன்றி,
‘நீங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை’ என்றாற்போல,
அந்தப்பெண் தனது வெறுப்பை வெளிப்படையாய்க் காட்டிற்று.

****

திறந்த வீட்டில் ஏதோ நுழையுமாற்போல்,
மூர்த்தியின் பின்னால் நாமும் வீட்டிற்குள் நுழைந்தோம்.
மூர்த்தியாவது எங்களை மனைவிக்கு அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்த்தால்,
அவரோ பால் குடிக்கச் செல்லும் கள்ளப்பூனை போல்,
சத்தம் வராமல் காலடி வைத்து மனைவியைக்கடந்து உள்ளே சென்று,
கள்ளக்காதலியை அழைக்குமாப்போல்,
உள்ளே மறைந்து நின்று கொண்டு,
ஜாடை காட்டி எங்களை உள்ளே அழைத்தார்.

****

என்ன செய்வதென்று தெரியாமல்,
சந்தியாப்பிள்ளை மாஸ்ரரை நான் நிமிர்ந்து பார்த்தேன்.
அவரும் மூர்த்தியின் பாவனைகள் கண்டு சற்றுப் பயந்திருப்பார்போல.
நிமிர்ந்து பார்த்த என்னை நோக்கி,
வேகமாய் உள்ளே போங்கள் என,
கண்களாலேயே அவரும் ஜாடை காட்டினார்.
எதற்கும் அஞ்சாத மாஸ்ரரிடம்,
முதல் முதல் அச்சத்தின் சாயல் கண்டு நான் வியந்து போனேன்.

****

எங்களை உள்ளே அழைத்த மூர்த்தி,
ஒரு சிறு அறையினுள் அவசரமாய் எங்களைத் தள்ளி,
‘கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள் வந்து விடுகிறேன்’,
என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல்,
மாஸ்ரரிடம் கேட்கலாம் என வாய் திறக்கப்போனேன்.
மாஸ்ரரோ அவசர அவசரமாக என்னைப் பார்த்து,
மூர்த்தியைப் போலவே உதட்டில் விரல் வைத்து மௌன ஜாடை காட்டி,
எழுத்துக்களில் எல்லாம் ஓட்டை விழுந்தாற்போல,
‘உஷ், உஷ்’ என்று சத்தம் வர,
மிக மெல்லிய குரலில் “‘சம்திங் றோங்’,
நாங்கள் ‘லைற்றை’நூத்திட்டு படுப்பம்” என்று சொல்லிவிட்டு,
நாங்கள் சுதாகரிப்பதன் முன்னரே ‘லைற்றை’ அணைத்து விட்டு,
போட்டிருந்த லோங்சைக் கூட மாற்றாமல்,
கட்டிலில் விழுந்து படுத்து விட்டார்.

****

இராணுவ மிடுக்குடைய சந்தியாப்பிள்ளை மாஸ்ரரின்,
மிரண்ட செய்கை எம்மை மேலும் மிரட்ட,
இருட்டில் தட்டுத்தடுமாறி பிரசாந்தனும் மயூரனும் நானும்,
அறைக்குள் இருந்த மற்றொரு கட்டிலில் ஏறிப்படுத்துக்கொண்டோம்.
அடுத்த நிமிடமே வெளியில் போர் தொடங்கிற்று.

****

முதலில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில்,
வாக்குவாதம் தொடங்கிற்று.
கணவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும்,
சமத்துவம் குன்றாமல் மனைவி மறுவார்த்தை பேசினாள்.
அவர்கள் வாதத்தின் சத்தம் மெல்ல மெல்லக்கூடி,
மூன்றாவது ‘பிச்சின்’ மேல் ஸட்ஜத்தைத் தாண்டியது.
நடுச்சாம மௌனத்தில் எழுந்த அவர்கள் சத்தத்தில்,
அண்டை அயலெல்லாம் அதிர்ந்தன.

****

ஒரு கட்டத்தில் ‘பளார்’ என ஒரு சத்தம்,
அதைத் தொடர்ந்து,
‘ஜிலிங்’, ‘டொமாஆஆர்’, ‘மடேர்’, ‘பலாங்’, ‘டுடும்’ என,
பல்வேறு சத்தங்களால் வீடு அதிரத்தொடங்கியது.
நிமிடக்கணக்கில் அல்ல மணிக்கணக்கில் அச்சத்தங்கள் தொடர்ந்தன.
வீடே இடிந்து விடுமாற்போல் அதிர்வுகள்.
யாழ்ப்பாணத்தில் விமானக்குண்டு வீச்சின்போது கூட,
அப்படி நான் அதிர்ந்தது இல்லை.
அப்படி ஒரு சத்தம்.
ஏதோ பிழை நடந்துவிடப் போகிறது என உள்மனம் பதறியது.

****

இதற்கிடையில் எனக்கும் பிரசாந்தனுக்கும் நடுவில் கிடந்த,
எனது மருமகன் மயூரன்,
தலை முழுதும் போர்த்திருந்த பெற்சீற்றை மெல்ல விலக்கி,
‘கிசுகிசு’ குரலில் “இங்க கொலை ஏதாவது நடந்தால்,
வீட்டுக்க இருக்கிறவையலையும் சேர்த்துத்தான்,
‘பொலிஸ்’ பிடிச்சுக்கொண்டு போகும்” என்று,
புதுக்குண்டைத் தூக்கிப் போட்டான்.

****

பயணக்களை, பசி, தாகம், பயம் என அனைத்தும் வருத்த,
தாகத்தால் தொண்டை ஒட்டிக்கொண்டது.
அறையின் இருள் கண்களுக்குச் சற்றுப் பழகியிருந்ததால்,
இருளில் சன்னமாய்த் தெரிந்த சந்தியாப்பிள்ளை மாஸ்ரரைப் பார்த்து,
“சேர் தண்ணி விடாய்க்குது! என்ன செய்யலாம்?” என்றேன்.
அவர் மெல்ல எழுந்து உட்கார்ந்து,
“சத்தம் போடாமல் படு! வெள்ளெனத் தண்ணி குடிக்கலாம்” என்பதை,
ஊமையன்போல் அபிநயித்துக் காட்டினார்.
அவரது பாவனையில் தெரிந்த பயம் கண்டு,
மறுபேச்சு இல்லாமல் இழுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டேன்.

****
காலையில் கதவைத்திறந்தால் இரத்த வெள்ளத்தில்,
இரண்டு பேர் கிடக்குமாப்போல்,
இரவிரவாகக் கனவுகளும் வந்து பயமுறுத்தின.
எப்படியோ தூங்கிவிட்டேன்.

****

டக்...டக்....டக்........ சத்தம் கேட்டு,
நாலு பேரும் திடுக்கிட்டு எழும்பினோம்.
விடிந்திருந்தது.
சந்தியாப்பிள்ளை மாஸ்ரரின் கண்களில் மிரட்சி.
“பொலிஸோ தெரியேல்ல, நீங்கள் பேசாமல் கிடவுங்கோ,
நான் போய்ப் பார்க்கிறன்” என்று சொல்லிவிட்டு.
மெல்லப் போய்க் கதவைத்திறந்தார்.
வாசலில் மூர்த்தி சிரித்தபடி நின்றார்.

****

“குட்மோனிங் சேர்” என்றவர்,
“என்ன எல்லாரும் படுத்திருக்கிறியள்,
வெளிக்கிடுங்கோவன் வெளியில போகலாம்” என்று,
இரவு எதுவுமே நடக்காதவர்போல,
பழைய உற்சாகத்துடன் சிரித்தார்.
எங்களுக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்!
இரவு என்ன நடந்தது என்று கேட்க நாகரீகம் இடம் தரவில்லை.
அவரது பழைய உற்சாகம் கண்டு வியப்பாய் இருந்தது.
எல்லோருமாய் வெளிக்கிட்டு அவரோடு புறப்பட்டோம்.

****

போகும்போது எங்களின் கண்கள் வீடு முழுவதையும் துழாவின,
மூர்த்தியின் மனைவியைக் காணவேயில்லை.
காலையிலேயே அலுவலகத்திற்குப் போய்விட்டாரோ?
அல்லது சடலம் எங்கும் சாக்குக்குள் கிடக்கிறதோ?
எப்படியும் இங்கிருந்து வெளிக்கிட்டால் போதும் எனும் மனநிலையில்,
ஓடிப்போய் காருக்குள் உட்கார்ந்தோம்.
காரில் மூர்த்தி உற்சாகமாய்க் கலகலத்துக் கொண்டு வந்தார்.
மாஸ்ரர் எங்களை நோக்க நாங்கள் மாஸ்ரரை நோக்க,
புதிரோடு பொழுது கழிந்தது.

****

பகல் முழுக்க ஊர் சுற்றி விட்டு,
மாலை வேறொரு நண்பரின் காரில்,
மீண்டும் ‘ரொறன்ரோ’ திரும்பத் தயாரானோம்.
எல்லோரது மனங்களும்,
‘மில்லியன்’ பெறுமதிக் கேள்விகளால் நிரம்பியிருந்தன.
எதைக் கேட்பது? யாரிடம் கேட்பது?
எப்படிக் கேட்பது? தயக்கத்துடன் அவ்வளவற்றையும் விழுங்கிவிட்டு,
விடைபெறத் தயாரானோம்.

****

மூர்த்தி மெல்ல மாஸ்ரருக்கு அருகில் வந்தார்.
அவர் கண்கள் சற்றுக் கலங்கியிருந்தன.
“சேர் எனக்கு ஒரு உதவி செய்ய வேணும்” என்றார்.
மாஸ்ரர் தன் கோபங்களையெல்லாம் அடக்கிக்கொண்டு,
“சொல்லு மூர்த்தி, என்ன செய்ய வேண்டும்?”என்று கேட்க,
மூர்த்தி தலையைச் சொறிந்தபடி,
“நீங்கள்  வந்து தன்னட்டச் சொல்லிட்டு போவியள் என,
அவ பார்த்துக்கொண்டிருப்பா,
அவட்ட சொல்லாமல் போனா கொஞ்சம் கவலைப்படுவா,
‘பிளீஸ்’ கோபிக்காம ஒருக்கா ‘ஒபிசுக்கு’ வந்து,
அவட்ட சொல்லிட்டு போங்கவன்” என்றார்.
நாங்கள் திகைத்தே போனோம்.

“செல் விருந்து காத்திருப்பார்”
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.