நட்புக்காய்க் கரம் நீட்ட முன்னே வாரீர்!
கவிதை முற்றம் 29 Jun 2015
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
உலகமெலாம் போற்றிடவே உயர்ந்து நின்று
ஒப்பற்ற இந்துமகா கடலினுள்ளே
விளங்குகிற முத்தெனவே விரும்பும் வண்ணம்
வீசுபுகழ் கொண்டிருந்த இலங்கை அன்னை
விலங்குகளாய் மனிதரெலாம் மாறி இங்கு
வீணான இனவாதம் பேசப்பேச
நலங்களெலாம் சீரழிய நலிந்து தேய்ந்து
நல்லவர்கள் மனம் வாடச் சிதைந்தே போனாள்.
மலைகளொடு கடல் வானம் மரங்கள் என்னும்
மற்றிவைகள் அன்றெனவே வாழ்ந்திருக்க
கொலை புரியும் விலங்குகளும் பறவை தாமும்
கொஞ்சமுமே திரிபின்றிக் கூடி நிற்க
அலைகடலில் மீன்களொடு ஆமை, நண்டு
அத்தனையும் அன்றிருந்தவாறே நிற்;க
நிலையில் உயர் மானிடர்கள் மட்டும் இங்கே
நீசத்தால் மதி திரிந்து நீறாய்ப் போனார்.
சிங்களவர் தமிழரொடு முஸ்லிம் மக்கள்
சேர்ந்திருந்த பறங்கியரும் ஒன்றாய்க் கூடி
இங்கெமது நாடொன்றே இதனால் நாங்கள்
எல்லோரும் ஒருதாயின் மக்கள் என்றே
தங்கமென வாழ்ந்திருந்த வாழ்வு போச்சே!
தரித்திரரால் பகை சூழ நாசமாச்சே!
எங்கெமது பண்பாடு? இனிய அன்பு,
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லாம் போச்சே!
தமிழர் தரும் புட்டோடு தனித்த நல்ல
தரம்மிக்க கூழதுவும் சலியாக் கள்ளும்
அமிழ்தனைய நொங்குகளும் அன்பால் நல்கும்
அரியதரம், முறுக்கோடு சிப்பிதானும்
சிமிழ் எனவே செய்த பனங் கட்டியோடு
சேர்த்துண்ணத் தருகின்ற ஒடியல் துண்டும்
உமிழ் நீரை வருவிக்கும் உணலாம் என்று
ஓடி வரும் சிங்களவர் எங்கே போனார்?
'கிரிபத்தும்' 'பனிப்புட்டும்' கிறங்கச் செய்யும்
கிளர்வு தரும் 'கொண்டகவுன்' கீரைக் கஞ்சி
பறித்து இலை உள் வைத்து பாகாய்ச் செய்யும்
பாங்கான சுவை மிகுந்த 'அலப்பை'யோடு
தெறித்து உயர் செட்டை நிமிர் சிறந்த அப்பம்
சேர்ந்துண்ணத் தருகின்ற 'கட்டச்சம்பல்'
பறித்தபலா 'பொலஸ்' கறியும் உண்ண என்று
பாய்ந்து வரும் தமிழர் எலாம் எங்கே போனார்?
பொங்கலொடு 'றம்ஷானும்' 'பொசனும்' நல்ல
புகழ் இயேசுபிரானவரின் 'கிறிஸ்மஸ்' தானும்
தங்கள் விழா என நினைந்து தரணி பொங்க
தமிழரொடு முஸ்லிம்கள் தம்முள் ஒன்றாய்
சிங்களவர் பறங்கியர்கள் எல்லாம் சேர்ந்து
சிறந்துறவு பேணியதோர் காலம் எங்கே?
மங்கியதே அப்பெரிய வாழ்வு எல்லாம்
மனிதர்களின் சிறுமையினால் விளைந்ததன்றே!
வடக்கோடு தெற்கதுவும் சேர்ந்தே நின்று
வளர்தேசம் எமதென்று மகிழ்ந்து நின்ற
நடப்பெல்லாம் இன்று வெறும் கனவேயாக
'நமக்கு அவர் பகை'யென்று வெளியாய்ப் பேசும்
கடப்பரிய பகைக் கடலை வளர விட்டோம்
கண்ணிருந்தும் குருடர்களாய் ஆகிவிட்டோம்
மடப்பயல்கள் இவர் என்று மனிதர் பேச
மண்ணதனில் விலங்குகளாய் மாறிவிட்டோம்.
போரென்று அரசியலார் கூவிக் கூவி
போற்றுகிற நட்பதனை இழக்கச் செய்தார்.
வேரொன்று கிளைகள் தாம் வேறு வேறு
விருட்சமது ஒன்றேதான் என நினைந்து
பேர் சொல்லி வாழ்ந்திருந்த தேசம் தன்னை
பித்தர்களும் மண்ணாக்கிப் பிரியச் செய்தார்.
ஆர் வந்து இக்குறையைத் தீர்ப்பாரென்று
அழகுமிகு இலங்கைத்தாய் அழுது நின்றாள்.
நல்லவர்கள் மௌனிக்க நாசம் செய்யும்
நயமில்லாத் தீயவர்கள் எழுந்து பேச
சொல்லரிய தீமையெலாம் விளைந்து போச்சே!
சொர்க்கமதாம் இலங்கையதும் சிதைந்து போச்சே!
கள்ளர்களும் விதை தூவி 'நெருஞ்சி' தன்னை
கனிந்த பயிர் இதுவென்று மாயம் செய்ய
தள்ளறிய பகை விளைந்து தரணி எங்கும்
தாளாத பெருஞ் சேதம் விளைந்து போச்சே!
பகை வளர்த்துக் கண்டதொரு சுகமும் இல்லை
பண்பான நட்போடு உறவு என்று
வகை வகையாய் உயிர் பலவும் வளங்கள் தானும்
வற்றிடவே சிதைந்ததனைக் கண்ணால் கண்டோம்
தகையுடைய பெரியோர்கள் இனியும் மௌனம்
தமதுடமை என இருந்தால் தரணி மாயும்
நகை முகத்தைக் காட்டி இனி நல்லோர் தாமும்
நட்;புக்காய்க் கரம் நீட்ட முன்னே வாரீர்!
சென்றதினி மீளாது தெரிந்து கொள்வீர்!
சேமமதை மீட்பதுவே அறிவதாகும்
கொன்றனைய தீமை பல செய்வரேனும்
கொடுமைகளை அழிப்பதற்கு அவர் தாம் செய்த
ஒன்றெனினும் நன்று தனை உன்னச் சொல்லி
உயர் புலவன் வள்ளுவனும் சொல்லி வைத்தான்.
நன்றவனின் வார்த்தையினை இனியென்றாலும்
நல்லவர்கள் உலகுக்கு உரத்துச் சொல்வீர்!
முன் நடந்த தீமைகளை மறக்கமாட்டோம்
முனைந்தே நாம் அவையறுப்போம் என்று சொல்லும்
பின்னறிவுப் பெருமக்காள்! பேதையோரே!
பிதற்றாதீர் அன்போடு ஒரு சொற்கேளீர்!
முன் நடந்த தீமைகள் போல் முன்னின் முன்னாய்
மூண்டிருந்த அன்பினையும் நினைக்கப் பாரும்
விண்ணளந்த பெருமைகளை மீண்டும் இந்த
வீங்கு புகழ் தேசத்தில் வளர்க்கப்பாரும்.
நல்லவர்கள் ஒன்றாவோம் நயமாய் எங்கள்
நாட்டினிலே அன்பதனை விளையச் செய்வோம்
அல்லவர்கள் தமை எதிர்த்து ஒதுக்கித்தள்ளி
அயலவர்கள் நாம் என்று உரிமை கொள்வோம்.
வல்லவராய் நல்லவர்கள் இருந்தே விட்டால்
வற்றல் மனம் உடையவரும் தொலைந்தே போவார்.
தள்ளரிய பெரும் புகழை மீண்டும் இந்த
தரணிக்கே ஆக்கிடுவோம்! சகத்தை வெல்வோம்!
*********