அதிர்வுகள் 17 | “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து”

அதிர்வுகள் 17 |  “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து”
 
ற்சாகமாய் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
நாவுக்கரசர் குருபூசைத்தினம் அது.
அதற்காக அந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேடையில் நாவுக்கரசர்பற்றி ஒரு பண்டிதர் உருக்கமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்.
மற்றும் மூவர் பேசக் காத்திருந்தனர்.
தொடர்ந்து பேசவிருந்த பேராசிரியர்,
பண்டிதரின் பேச்சை அலட்சியம்பண்ணி,
தன் கையிலிருந்த தாள்களில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.
முன்வரிசை நிறையக் கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர்.
அதன்பின் அடுக்கடுக்காய்,
தாய்மார்கள், அறிஞர்கள், பொதுமக்கள் என,
மண்டபம் ஓரளவு நிறைந்திருந்தது.
 


❉❉❉

மாணவர் தொகையே அங்கு அதிகம்.
அங்குமிங்கும் பார்த்துக்கொண்டும்,
தங்களுக்குள் சேட்டை விட்டுக் கொண்டும்,
பேச்சாளரைக் கிண்டலடித்து ‘கொமன்ட்ஸ்’ சொல்லிக்கொண்டும்,
அக்கறையில்லாமல் அவர்கள் இருந்த விதத்தில்,
சபையை நிரப்புதற்காய்,
விருப்பமின்றி அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
அருகிலிருந்த நண்பரிடம் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் யார்? எனக் கேட்டேன்.
அவர் விரல் நீட்டிய மூலையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்!

❉❉❉

சிவப்பழமான தோற்றம்.
அங்கம் முழுவதும் பளிச்சென்ற விபூதிக்குறிகள்.
கழுத்து வலிக்கும் அளவுக்கு பெரிய உருத்திராக்க மாலைகள்.
பாடப்புத்தகத்தில் பார்த்த நாவுக்கரசர் போலவே,
வேட்டியை முழங்கால் அளவுக்கு உயர்த்திக்கட்டியிருந்தார்.
கண்களில் கருணையும், உதட்டில் புன்னகையும் பூட்டப்பட்ட முகம்.
அவற்றில், செயற்கை அதிகரித்திருந்தாற் போல் ஒரு பிரமை.

❉❉❉

இப்படிப் பல பேரைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், இவரது தோற்றத்தில் கண்ட,
இன்னொரு மாற்றம் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.
பெரியதொரு உழவாரத்தைக் கையில் பிடித்துத் தோளில் சாய்த்திருந்தார்.
இந்த வேடத்தோடு சபையோரமாக அங்குமிங்கும் நடப்பதும்,
சபையிலிருந்த மாணவர்களையும், பெண்களையும் பார்த்து,
இடையிடையே பொய்யாய்ச் சிரிப்பதும்,
தன்னைத் திரும்பிப் பார்த்தவர்களை நோக்கி,
ஆசீர்வதிக்குமாப் போல் அபயகரம் காட்டுவதும்,
யாராவது ஏதாவது கேட்டால் முடிந்தவரை முதுகை வளைத்து,
ஒரு கரத்தால் வாயைப்பொத்தி,
புன்னகை மாறாமல் பதில் சொல்வதுமாக,
இயங்கிக் கொண்டிருந்த அவரது செயலில்,
ஒரு கோமாளித்தனம் தெரிய,
மாணவர்கள், பேச்சுக் கேட்பதை விடுத்து,
அவரையே பார்த்துக் கேலி பேசிக்கொண்டிருந்தனர்.

❉❉❉

எனக்கும் அவர் செயல் சற்று மிகையாகவே பட்டது.
நாவுக்கரசர்மேல் அன்பு இருப்பது சரிதான்.
ஆனால், இது என்ன வேஷம்? என மனத்துள் கேள்வி எழுந்தது.
அவரைக் கேலி பேசிக்கொண்டிருந்த இளைஞர்களில் சிலர்,
அப்போது புகழ் பெற்றிருந்த சில நடிகர்களைப்போல,
தலைமுடியைக் கோதிக்கொண்டும்,
ஒருவிதமாக விரலால் மூக்கைத் தடவிக்கொண்டும்,
உதட்டைக் கோணிச் சிரித்துக்கொண்டும் இருந்தனர்.
எந்த இலட்சியமும் இல்லாத ஒரு நடிகன் மேல் கொண்ட ஈர்ப்பு,
அந்த இளைஞர்களை, தமது தோற்றத்தையே மாற்றும் அளவிற்குச் செய்கிறதென்றால்,
மகாபுருஷனான ஒருவர்மேல் கொண்ட ஈர்ப்பால்,
அவர்போல் உடையுடுத்தி, அவர்போல் பேசி, அவர்போல் வணங்கி நிற்கும்,
இவர் செயலில் என்ன தவறு இருக்க முடியும்? புத்தி பதிலுரைத்தது.
கோமாளித்தனத்திற்கு,
நாகரீகம் என்பதற்காக அங்கீகாரமும்,
பழமை என்பதற்காக இழித்துரைப்பும் தேவையா?
புத்தியின் பதிலில் நியாயம் தொனிக்க மௌனித்தேன்.

❉❉❉

கூட்டத்தில் திடீர்ச் சலசலப்பு.
பேசிய ஒருவர் திருமால் பற்றிய ஒரு கதையைச் சொல்ல,
தன்னைக் கடும் சைவராய்க் காட்டிக்கொள்ளும் மற்றொருவர்,
சபையிலிருந்து கொதித்தெழுந்தார்.
சைவக்கூட்டத்தில் விஷ்ணுவைப்பற்றி எப்படிப் பேசலாம்?
கடவுளர்களுக்குள் கட்சி பிரித்து,
சபை பற்றிய அக்கறையின்றி,
நடுவில் எழுந்து நின்று அவர் கூச்சல் போட்டார்.
கூட்டம் குழம்பும் சூழ்நிலை உண்டாயிற்று.
மாணவர்களுக்கு அளவில்லாத கொண்டாட்டம்!

❉❉❉

கூட்டத்தை ஒழுங்குசெய்திருந்த,
நாவுக்கரசர்போல் வேடமணிந்த தொண்டர்,
அதுகண்டு ஓடிவந்தார்.
கூச்சல் போடுபவரின் கைபிடித்து மெல்ல வெளியே அழைத்து வந்தார்.
தன் கூச்சலால் சபையில் முக்கியம் பெற்றிருந்த அக்கடுஞ்சைவர்,
இவர் கைபிடித்து அழைக்க, பெருமித நடையோடு வெளியே வந்தார்.
ஒரு ஓரத்திற்கு அவரை அழைத்துச் சென்று,
நான் முன்சொன்ன பாணியில் கைகட்டி, வாய்பொத்தி,
பணிவு நிறைந்த வார்த்தைகளைத் தேடித்தேடி எடுத்து,
‘அக்டிங்’ நாவுக்கரசர் மெல்லப் பேசத்தொடங்கினார்.
ஐயா, மிகவும் சிரமப்பட்டு இந்த விழாவை ஒழுங்கு செய்திருக்கிறேன். 
நாவுக்கரசரின் பெருமை பேசப்படுகிற இடம் இது. 
உங்களைப் பணிந்து கேட்கிறேன். 
தயவு செய்து சத்தம் போட்டுக் கூட்டத்தைக் குழப்பாதீர்கள்.
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும், அருளும் கலந்திருந்தன.

❉❉❉

இதற்கிடையில் இருவரையும் சுற்றி சிறு கூட்டம் கூடிவிட்டது.
சத்தம் போட்டு சபைக் கவனத்தைத் திருப்பி,
திடீர் கதாநாயக அந்தஸ்து பெற்றிருந்த வீர சைவர்க்கு,
இவரது பேச்சுப் பிடிக்கவில்லை என்பதை,
அவரது முகம் காட்டிற்று.
கூட்டமும் கூடிவிட,
இவருக்கு நான் பயப்படுவதா? என்று எழுந்த ஆணவத்தில்,
நீர் யார் அதைக் கேட்க? 
உம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போம்? 
அவன் சைவத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக்கொண்டு,
என்னால் சும்மா இருக்க முடியாது’  என்று,
தன் அந்தஸ்த்தை நிலைநிறுத்திக் கொள்ள,
வீர சைவர் மேலும் குரல் உயர்த்தினார்.

❉❉❉

தொடர்ந்து நடந்த சம்பவங்கள் ஆச்சரியமூட்டின.
அதுவரை கூனிக்குறுகி சிரிப்பு மாறாத முகத்தோடு,
அன்பு வார்த்தை பேசிக்கொண்டிருந்த ‘அக்டிங்’ நாவுக்கரசரின் முகம்,
விறுவிறுவெனச் சிவந்தது.
வேட்டியை இழுத்துத் தொடை தெரிய மடித்துக்கட்டினார்.
கூனிய முதுகை நேராக்கி நெஞ்சை நிமிர்த்தினார்.
கையிலிருந்த உழவாரத்தைத் தலைகீழாய்ப் பிடித்து,
வீர சைவரை அடிக்குமாற்போல் கையை உயர்த்தி,
என்னையோடா யார் என்று கேட்கிறாய்?,
இரு, இப்ப யார் என்று காட்டிறன் மடப்பயலே…..’
வீர சைவரின் குரலைவிட ஐந்து மடங்காய்
இவர் குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.
அதுவரை பேசிய செந்தமிழ் நடை எங்கோ தொலைந்துபோக,
தொடர்ந்து வந்து விழுந்த அவரது வார்த்தைகள் அத்தனையும்,
எழுத்தாக்கம் பெறக் கூடாதவை.
'அக்டிங்" நாவுக்கரசரின் ஆவேசம் கண்டு,
அந்த வீரசைவர் நடுங்கிப்போனார்.
தன் தோல்வியைக் காட்டிக்கொள்ளாமல்,
ஏதோ சொல்லியபடி,
அடுத்த நிமிடம் வீரசைவர் காணாமல் போனார்.

❉❉❉

பக்தி என்பது அவரவர் ஆன்மாவுக்கானது.
அதிலும், வேஷமா? வியந்தேன்.
கோபப்பட்ட ‘அக்டிங்" நாவுக்கரசரைச் சமாதானப்படுத்த முயன்று,
பலரும் தோற்றுக்கொண்டிருந்தனர்.
சோர்வுடன் இருந்த மாணவர்களுக்கு அளவற்ற சந்தோஷம்.
வீட்டுக்குப் போக நினைத்துக்கொண்டிருந்த அவர்கள்,
அவ்வெண்ணத்தைக் கைவிட்டு சண்டைக்காட்சியில் லயித்து நின்றனர்.
மேடையிலிருந்த படத்தில் நாவுக்கரசர் அநாதையாய் நின்றுகொண்டிருந்தார்.
குருபூசை குழம்பிப் போயிற்று.

❉❉❉

‘அக்டிங்’ நாவுக்கரசரின் ஆவேசமும்,
திடீரென அவர் கொண்ட சண்டியன் தோற்றமும்,
சைவத்திற்காய் உயிர் கொடுக்குமாற்போல் பேசிய,
வீரசைவரின் திடீர் கோழைத்தனமும் வியப்பூட்ட,
அதிர்ந்து போனேன்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்ற,
மணிவாசகரின் திருவாசகம்
நெஞ்சினுள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

❉❉❉❉❉❉
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.