அதிர்வுகள் 19 | கந்தையா அப்பு !
அதிர்வுகள் 18 Nov 2015
மனம் கிராம வாழ்க்கையையே சுற்றிச்சுற்றி வருகிறது.
நகரத்தின் செயற்கையைக் கண்டு சலித்ததாலோ என்னவோ,
கிராமத்தின் இயற்கையில் அன்று பதிந்த மனம்,
இன்றும் அதனையே நாடி நிற்கிறது.
மண், மரம், மனிதர் என ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு பழைய ஞாபகம் பதிந்திருக்கிறது.
எண்ணும் போதெல்லாம் இனிக்கிறது மனம்.
இம் முறை நினைவில் வந்தவர் கந்தையா அப்பு.
₪₪₪
எங்கள் கிராமத்தில் நாலு பரப்புக்காணியில்லாமல்,
யாரும் வீடு கட்டமாட்டார்கள்.
கிராமத்தில் என்ன கிராமத்தில்.
யாழ்ப்பாணம் முழுவதுமே பெரும்பாலும் அது எழுதப்படாத சட்டம்.
முன்னுக்குக் கிணற்றடி, பிள்ளைகள் விளையாட முற்றம்.
ஒன்றோ இரண்டு மாமரங்கள், சில பூங்கன்றுகள்.
பின்னுக்கு மாட்டுக் கொட்டில்,
மாவிடிக்கும் கொட்டில் என்பதற்கான இடங்கள்.
நான்கு அறைகள், நடுக்கூடம், முன்னும் பின்னும் அமைந்த விறாந்தைகள்,
குசினி என விரிந்த வீடு.
இவை அமைக்க கட்டாயம் நாலு பரப்புக்காணி வேண்டும் என்று அப்போது கருதப்பட்டது.
கொழும்பில் இன்று ஒரு பரப்புக்கூட இல்லாத ஏழு 'பேர்ச்' நிலத்தில் வீடு கட்டினால்,
அது பெரியவீடு என்று சொல்லப்படுகிறது.
காலமாற்றம்!
எங்கள் ஊரில் முதன்முதலாக.
இரண்டு பரப்புக்காணியில் நான் வீடுகட்டப்போய்,
ஊராரிடம் வாங்கிய விமர்சனத்திற்கு ஓர் அளவில்லை.
அது வேறுகதை.
₪₪₪
எங்கள் பழையவீடு நாலு பரப்புக்காணியில்தான் இருந்தது.
எங்கள் காணிக்கு அடுத்தகாணி ஆசையம்மாவினுடையது.
அந்த வெற்றுக்காணியில் ஒரு பெரிய புளியமரம் நின்றது.
அதற்கு அடுத்த காணியிற்தான் கந்தையா அப்புவின் குடும்பம் இருந்தது.
₪₪₪
என் அம்மாவுக்கு அவர் சித்தப்பா.
எங்களுக்குப் பாட்டா முறை.
நாங்கள் மிகச் சின்னப்பிள்ளைகளாய்,
சிலாபத்தில் இருந்து விடுமுறைக்காய் வரும்போது,
பாட்டா வீட்டிற்கு அடிக்கடி ஓடுவோம்.
அப்போது பாட்டியும் உயிரோடு இருந்தார்.
ஊரில் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.
சின்னப்பிள்ளைகளான எங்களுக்கு,
போகும்போதெல்லாம் இலந்தைப்பழம் தருவார்.
ஆசையம்மாவின் வளவில் ஒரு பெரிய இலந்தை மரம் நின்றது.
பரம்பரையாய் அந்த ஒழுங்கையினுள் வாழ்ந்த எங்கள் உறவெல்லாம்,
இன்று இல்லாமல் போய்விட்டாற்போல்,
இலந்தைமரங்களும் ஊருக்குள் இன்று இல்லாமல் போய்விட்டன.
அந்த இலந்தை மரத்துப் பழங்களைச் சேகரித்து,
பத்திரமாய் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுப்பது பாட்டியின் வேலை.
தன் வீட்டிற்கு எந்தக் குழந்தை வந்தாலும்,
சின்ன டப்பாவில் வைத்திருக்கும் சர்க்கரையை பாட்டி கிள்ளிக் கிள்ளித்தருவார்.
அப்போதெல்லாம் அதுதான் எங்களுக்குச் 'சொக்லேட்'.
அதனால் அவரை ஊர்ப்பிள்ளைகள் எல்லாம்,
சர்க்கரை ஆச்சி என்றுதான் கூப்பிடுவார்கள்.
₪₪₪
கந்தையா அப்புவுக்கும், சர்க்கரை ஆச்சிக்கும் நான்கு ஆண்பிள்ளைகள்.
பெண்பிள்ளைகள் கிடையாது.
அவர்களுள் கடைசிப்பிள்ளை சற்று வலது குறைந்தவர்.
அவரைக் 'குஞ்சையா' என்றுதான் நாங்கள் கூப்பிடுவோம்.
கடைசிப்பிள்ளை என்பதால் வந்த பெயர்போல.
ஒரு வேலையைச் சொன்னால்,
பின் 'நிறுத்து!' என்று சொல்லும் வரையில்,
'குஞ்சையா' அதைச் செய்து கொண்டேயிருப்பார்.
சாப்பிடத் தொடங்கினாலும் அப்படித்தான்.
போடப்போடச் சாப்பிட்டுக்கொண்டேயிருப்பார்.
போட்டவர் களைத்துப்போய் 'போதுமே?' என்று உரத்துக் கேட்டால்,
தலையைச் சரித்து, வாயைச் சுழித்து, நாடியை முடிந்தவரை கீழ் இழுத்து,
'ஓம்ம்ம்.......'.என்று அதற்குப் பிறகுதான் அவரிடமிருந்து பதில் வரும்.
அப்பிராணி.
₪₪₪
நாங்கள் அம்மாவின் ஊருக்கு வாழச்சென்ற போது,
சர்க்கரை ஆச்சி இறந்து விட்டிருந்தார்.
ஒருநாள் மாலை அவ மயங்கி விழுந்ததாகவும்,
காரில் அவவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதாகவும்,
கொண்டு போன பின்பு திடீரென ஊருக்குள் ஒரு புயல் காற்று வீச,
இலந்தை மரத்தில் ஒரு கொப்பு முறிந்து விழுந்ததாகவும்,
பிறகு சர்க்கரை ஆச்சி செத்த செய்தி வந்ததாகவும்,
காற்றாய் வந்து இலந்தைமரக் கொப்பை முறித்தது ஆச்சிதான் என்றும்,
எங்களது சீனிமாமா குடித்துவிட்டு வெறி வரும்போதெல்லாம்,
ஒவ்வொரு தரமும் அழுதழுது சொல்லுவார்.
₪₪₪
சர்க்கரை ஆச்சி இறந்தபிறகு,
கந்தையா அப்புவின் நிலைமை கவலைக்கிடமானது.
மூன்று ஆண்பிள்ளைகளும் திருமணம் செய்து சென்றுவிட,
'குஞ்சையா'வும், கந்தையா அப்புவும் மட்டும்தான் அந்த வீட்டில் இருந்தார்கள்.
சொந்த மச்சாளைத் திருமணம் செய்த அப்புவின் இரண்டாவது மகனான,
மதியாபரணம் மாமா ஒருவர்தான் எங்கள் ஊரில் வசித்தார்.
மற்றப்பிள்ளைகள் வெளியூர்களில்.
'குஞ்சையா' தமையன் வீட்டில் முழுநேரம் நின்று வேலை செய்ய,
கந்தையா அப்பு தனித்துப் போனார்.
மதியநேரம் நடக்கமுடியாமல் நடந்து சென்று,
மருமகள் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கி வருவார்.
இரண்டு தரம் சாப்பாடு கொண்டு வரும்போது கீழே விழுந்து போனதால்,
மதியம் 'குஞ்சையா' உணவு கொண்டுவந்து கொடுப்பதாக ஒழுங்கு செய்யப்பட்டது.
₪₪₪
சர்க்கரை ஆச்சி போல கந்தையா அப்பு நல்லவரில்லை.
நடக்க முடியாத நிலையிலும்,
அவரின் சேட்டைக்கு ஒரு அளவேயில்லை.
ஒருநாள் திடீரென அவர் வீட்டில் பெரிய சண்டைச்சத்தம்.
நாங்கள் எல்லாம் விழுந்தடித்து ஓடினோம்.
அப்பு வீட்டின் பக்கத்து வீட்டுப் பொன்மலர்,
கோபத்தில் சன்னதமாடிக்கொண்டிருந்தாள்.
பொன்மலர் வீட்டுக்கோழி கந்தையா அப்பு வீட்டுக்கு வர,
கையில் கிடந்த சோற்றைப் போட்டு,
கோழி கிட்ட வந்ததும் கையிலிருந்த தடியால் ஒரே அடி.
சுருண்டு விழுந்த கோழியை எடுத்து,
ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே குழம்பு வைத்திருக்கிறார் அப்பு.
கோழியைத் தேடிவந்த பொன்மலர்,
வெளியில் கிடந்த கோழியின் செட்டையாலும்,
உள்ளே சட்டிக்குள் கிடந்த கோழிக்கறியாலும்,
கந்தையாஅப்புவின் களவைப் பிடித்துவிட,
அன்று பெரிய யுத்தமே நடந்தது.
₪₪₪
இவையெல்லாம் சிலகாலம் தான்.
நாளாக நாளாக கந்தையா அப்பு,
படுத்துக்கிடந்த மரவாங்கே கதி என்று ஆனார்.
அதிலேயே உணவு, அதிலேயே மலசலக்கழிப்பு,
அதிலேயே படுக்கை என ஒரு புழுப்போல் அவர் வாழ்க்கை தொடர்ந்தது.
வெளியூர் மருமகள்களோ, மகன்களோ திரும்பியும் பார்க்கவில்லை.
எப்போதாவது ஒரு 'விசிற்றுடன்' அவர்களின் புத்திரக்கடமை முடிந்துவிடும்.
ஊரிலிருந்த சொந்த மருமகளிடமிருந்து உணவு மட்டும் வரும்.
அதையும் 'குஞ்சையா' கொண்டு வந்து சேர்க்க,
மதியம் இரண்டுமணியாகும்.
அதற்குள் பசியில் குளறத் தொடங்கிவிடுவார் அப்பு.
₪₪₪
குளிப்பதென்றால் கந்தையா அப்புவுக்கு சன்மவிரோதம்.
குளிக்க வைக்க முயற்சித்து முடியாமற்போக,
மூர்க்கப்படும் 'குஞ்சையா'விடம் அடியும் வாங்குவார்.
படுத்துக்கிடக்கும் வாங்கு முழுவதும் மலம் காய்ந்து கிடக்கும்.
கட்டிலை விட்டு எழும்பவேமாட்டார்.
யாராவது பக்கத்து வளவுக்குள் சாப்பாடு கொண்டு வந்து கூப்பிட்டால் மட்டும்,
சிரமப்பட்டு தாண்டித்தாண்டி வந்து ஆவலோடு வாங்குவார்.
மனுசனுக்குத் தீராப்பசி.
பழஞ்சோறு, கஞ்சி என்று எதுவானாலும் வாங்கி விழுங்கித்தள்ளுவார்.
₪₪₪
'குஞ்சையா' சாப்பாட்டைக் கொண்டுவந்து,
'ஏண்டாப்பாய்' மேசையில் போட்டுவிட்டு தன்வேலை பார்க்கும்.
கந்தையா அப்புவும், அவரிடம் நின்ற நாயும், அயல் கோழிகளும்,
அவரோடு சமபந்தி போசனம் செய்யும்.
இந்தக் கண்றாவியை எல்லாம் ஊர்பார்த்து,
'நொடுக்கு' விடுமே தவிர அவருக்கு உதவ முன்வராது.
எப்பவாவது வீட்டில் மிஞ்சிய சோற்றை,
அவருக்குக் கொடுப்பதோடு ஊரின் கடமை முடிந்துபோகும்.
₪₪₪
அப்பொழுது நான் 'ஓ.எல்' படித்துக்கொண்டிருந்தேன்.
ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி, மச்சான், மருமகன் என,
ஒழுங்கைக்குள் என் ஒத்த வயதுடைய,
உறவு இளைஞர்கள் ஒரு இருபது பேராவது இருந்தார்கள்.
எப்போதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையை,
கந்தையாஅப்பு 'கிளீனிங்டேயாகப்' பிரகடனப்படுத்துவேன்.
இருபதில் ஐந்தாவது என்னோடு சேரும்.
கந்தையஅப்பு அபிஷேக முயற்சிகள் தொடங்கும்.
₪₪₪
முதலில் அவரைக் குளிக்கக் கிணற்றடிக்குக் கொண்டுவரவேண்டும்.
குளிப்பதென்றால் அசையமாட்டார்.
வலிந்து பிடித்தார் என்றால்.
ஐந்தென்ன பத்துப்பேர் சேர்ந்தாலும் அவரை அசைக்கமுடியாது.
அவரைக் கிணற்றடிக்குக் கொண்டு வர வியூகம் வகுப்போம்.
கிடாரத்தில் தண்ணீர் பிடித்து வளவுக்குள் கிடக்கும்,
பாளை, தென்னம்மட்டையெல்லாம் பொறுக்கி வைத்து,
அடுப்பு மூட்டி வெந்நீர் தயாரிப்போம்.
சுடுதண்ணீர் வைப்பதற்கு ஆச்சியிடம் கிடாரம் வேண்டுவது என்பது,
அரசாங்கத்திடம் உரிமை வாங்குவதைவிட கடுமையான காரியம்,
வெந்நீர் தயாரித்து முடிந்ததும்,
உடன்வந்த நாலு பேரையும் வேலிக்குள் மறைந்து நிற்கச் சொல்லிவிட்டு,
ஒரு பெரிய சட்டியை எடுத்துக்கொண்டு புளியவளவுக்குள் நிண்டு,
கந்தையா அப்புவைக் கூப்பிட்டு 'சோறு வேணுமோ?' என்று கேட்பேன்.
அது தனக்கு வைக்கும் 'பொறி' என்பது தெரியாமல்,
மனுசன் ஆவலாக வேலிதாண்டி வருவார்.
₪₪₪
புளியவளவுக்குள் அவர் வந்ததும்,
ஒழிந்து நின்ற என் படையணியினர் பாய்ந்து வெளியே வருவார்கள்.
கந்தையா அப்பு சிறைப்பிடிக்கப்படுவார்.
மிகச்சிரமப்பட்டு அவரை இழுத்து வந்து கிணற்றுக்குந்தில் உட்காரவைப்போம்.
தனக்குத் தெரிந்த தூஷண வார்த்தைகள் அத்தனையும் பிரயோகித்து,
எங்களுக்கு இலட்சார்ச்சனை நடாத்துவார்.
அதுபற்றி எதுவித கவலையும்படாமல் எங்கள் காரியத்தைத் தொடங்குவோம்.
முதலில் துகிலுரிப்புப்படலம்,
அவரது வேட்டி முழுவதும் மலமும், சலமுமாக நாறும்,
அதை உரிந்து ஒரு மூலையில் போட்டுவிட்டு,
மற்றவர்கள் பிடிக்க நான் தண்ணீர் வார்க்கத் தொடங்குவேன்.
தண்ணீர் மேலில் பட்டதும் மனுசன் குளறோகுளறென்று குளறுவார்.
₪₪₪
வீட்டில் கெஞ்சி வாங்கி வந்த,
'மில்க்வைற் சோப்' கட்டி கரையும்வரையும்,
அவர் உடலெல்லாம் தேய்ப்போம்.
மனிதனின் விரல் நகங்களெல்லாம்,
மலம் காய்ந்து கட்டிபட்டுக் கிடக்கும்.
தென்னம் 'பொச்சு' எடுத்து தேய்தேய் என்று தேய்த்தாலும்,
அது முழுதாய்ப் போகாது.
ஒருமாதிரி குளிக்கவார்த்து முடித்து,
தோய்த்த வேட்டி உடுத்து வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனால்,
எங்களை எரிச்சல்படுத்துவதற்காக,
வேண்டுமென்று புதுவேட்டியில் மூத்திரம் பெய்வார் அப்பு.
பிறகு இரண்டாம் குளிப்பு நடக்கும்.
₪₪₪
இங்கு குளியல்படலம் நடக்கையிலேயே,
எங்களில் ஓரிருவர் அவர் படுத்துக்கிடக்கும் வாங்கில்,
காய்ந்து கிடக்கும் அழுக்கெல்லாவற்றையும்,
மண்வெட்டி போட்டு விறாண்டி கழுவி முடித்து வைத்திருப்பார்கள்.
அப்பு போய் உட்கார்ந்ததும்,
அம்மாவிடம் சொல்லி, ஏதாவது ஒரு குழம்பு, நிறையச் சோறு சமைப்பித்து,
சருவச்சட்டி நிறையக் கொண்டுவந்து கொடுப்பேன்.
உறைப்பால் கண்ணீர் வழிய மனிதன் அதை அள்ளி அள்ளிச் சாப்பிடுவார்.
இப்போது நினைத்தாலும் நெஞ்சு உருகுகிறது.
₪₪₪
ஒருநாள் கந்தையா அப்பு செத்துப்போனார்.
அவர் செத்ததே 'குஞ்சையா'வுக்குத் தெரியவில்லை.
இரண்டாம் நாள் கழித்துத்தான் கண்டுபிடித்தார்கள்.
ஊரெல்லாம் கூடி செத்தவீடு நடந்தது.
உயிரோடு இருக்கும்போது வராத,
மகன், மருமகள்மாரெல்லாம் வந்து அழுமாப்போல் நடித்தார்கள்.
இரண்டுநாள் கிடந்ததில் பிரேதம் பழுதாகத் தொடங்கியிருந்தது.
கிரியைகள் செய்த ஐயர்,
பிரேதத்தைக் குளிக்கவார்க்கச் சொல்ல,
ஊர் இளைஞர்கள் சிலர்,
பின் வளவுக்குள் மேசையோடு பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.
அவர்களுக்கு நல்ல வெறி.
அதுவரை அப்பு படுத்துக்கிடந்த 'றபர்சீற்',
அவரின் முதுகோடு ஒட்டிக்கிடந்தது.
குளிக்க வார்ப்பதற்காய் அப்புவின் உடலை ஒருவர் நிமிர்த்த,
இன்னொருவர் நல்ல வெறியில் அந்த 'றபர்சீற்றை' பிடித்து இழுத்தார்.
அப்புவின் முதுகு ஓட்டையாகி அழுக்கு இரத்தம் பாய்ந்தது.
₪₪₪
ஒருமாதிரி குளிக்க வார்த்து புதுவேட்டி கட்டி,
அப்புவின் பிரேதத்தைக் கொண்டுவந்து கிடத்தினார்கள்.
பிரேதம் பழுதாகத்தொடங்கியிருந்தது.
பிணநாற்றத்தின் கொடுமையை அன்றுதான் அறிந்தேன்.
வந்த பெண்களெல்லாம் தூரத்தூர நின்று,
மூக்கை மூடிக்கொண்டு அழுதுவிட்டுப் போனார்கள்.
வரவர நாற்றம் கூடியது.
இதற்கிடையில்,
பிரேதத்தை தூக்கிக்கொண்டுதான் போகவேண்டுமென்று,
அப்புவின் ஒரு மகன் பிடிவாதம் பிடித்தார்.
குடித்துவிட்டு நின்ற இளைஞர்கள் சிலர் தூக்க முன்வர,
அவர்களாலும் அந்த நாற்றத்தைச் சகிக்க முடியவில்லை.
அனுபவம் உள்ள தனநாயகம் அப்பு,
'ஆளுக்கொரு சுருட்டைக் கொழுத்திக் கொடுங்கடா,
சுருட்டு மணத்தில உந்த மணம் தெரியாது' என்றார்.
ஒருமாதிரியாக கந்தையா அப்புவின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்தன.
₪₪₪
கந்தையா அப்புவின் செத்தவீட்டில் நான் கண்ட காட்சி.
அவரது இரண்டாவது மருமகள் நாகரீகக்காரி.
செத்தவீட்டுக்கே 'ஹான்ட் பாக்குடன்' தான் வந்தார்.
''மணக்குது மணக்குது' எண்டு அரியண்டப்பட்டு ஓடித்திரிந்தார்.
தன் அருவருப்பை வெளிப்பட எல்லோருக்கும் காட்டியதன் மூலம்,
தன் நாகரீகத்தை மிகைப்பட வெளிக்காட்டினார்.
கந்தையா அப்பு இறந்து ஒருவருடம் கூட ஆகவில்லை.
அந்த மருமகளுக்குத் திடீரென்று 'பிளட்கான்சர்'.
கொழும்பு கொண்டு செல்லப்பட்டு டாக்டர்கள் கைவிட்டதால்,
அவரைக் காரிலேயே யாழ்ப்பாணம் கொண்டு வந்தார்களாம்.
வரும்வழியிலேயே கண், காது, மூக்கு, வாய் என,
எல்லாத்துவாரங்கள் வழியாகவும் இரத்தம் பொங்கிப்பொங்கி வழிய,
அந்த அம்மையார் காரிலேயே இறந்து போனாராம்.
சில நாட்களின் பின்,
'குஞ்சைய்யா' கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது,
துலா விழுந்து செத்துப்போயிற்று.
₪₪₪
எல்லாம் சரி இந்தக் கதையில்,
நீ என்னதான் சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா?
ஒன்றுமேயில்லை.
இது வெறும் ஓர் அனுபவப்பதிவுதான்.
ஆனால் இதைப்படிக்கும் போது,
ஓர் கதை படித்த சுவாரஸ்யம் ஏற்படுகிறதல்லவா?
அதுதான் ஆச்சரியம்.
சிறுகதை எழுதுகிறோம், நாவல் எழுதுகிறோம் என்று சொல்லும் பலபேர்,
அதற்காக இரண்டுநாள் தூங்கவில்லை.
ஒருமாதம் சிந்திக்கவேண்டியிருந்தது.
கஷ்டப்பட்டு இதற்கு ஒரு வடிவம் கொடுத்தேன்.
அதனாற்றான் இப்படி ஒரு சிருஷ்டியை வழங்கமுடிந்தது.
என்றெல்லாம் பெருமை பேசுகிறார்கள்.
எந்தத் சிருஷ்டியும் மனிதரால் உருவாக்கப்படுவதில்லை.
அனைத்தும் ஆண்டவனுடைய படைப்பில் தானாய் அமைந்து கிடக்கின்றன.
அதைக்கவனிப்பதும், வெளிப்படுத்துவதுமே ஒரு ஆக்ககர்த்தாவின் வேலை என,
எப்போதும் என் மனம் சொல்லும்
₪₪₪
இது உண்மைதானா என்று அறிவதற்காய்,
வெறுமனே என் மனதின் ஆழத்தில் கிடந்த.
ஒரு சம்பவத்தைத் தொகுத்துச் சொல்லிப்பார்த்தேன்.
இது இலக்கியமாகி இருக்கிறதா? இல்லையா? என்பதை,
நீங்கள் தான் சொல்லவேண்டும்.
₪₪₪₪₪₪