அதிர்வுகள் 25 | உள்ளமும் உடம்பும் !

அதிர்வுகள் 25 | உள்ளமும் உடம்பும் !
 
றுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம்.
யானையின் பலம் தும்பிக்கையிலே,
மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று,
அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன்.
பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம்.
ஆனாலும், மனம் மட்டும் உறுதியாகிவிட்டால்,
நாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
 

மனதை ‘அகம்’ என்றும் உடம்பைப் ‘புறம்’ என்றும்,
நம் இலக்கியங்கள் பேசுகின்றன.
அத்திவாரத்தின் பலம் தான் கட்டிடத்தின் பலம்.
அகம்தான் புறத்தின் வலிமையை உறுதி செய்கிறது.
அதனாற்றான், “உள்ளத்தனைய உயர்வு” என்கிறார் வள்ளுவர்.
இன்று பலரும் உடம்பைப் பற்றிக் கவலைப் படுகின்றனரே தவிர,
உள்ளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.


ஆண்கள் உடலை உறுதிசெய்ய நினைந்து,
‘ஜிம்’களில் குவிகின்றனர்.
பெண்களில் பலர் உடம்பை அழகுபடுத்தக் கருதி,
‘பியூட்டி பாலரே’ கதியெனக் கிடக்கின்றனர்.
உள்ளத்தில், பலமும் அழகும் வராத பட்சத்தில்,
உடலில் அவை நிரந்தரமாய் வர வாய்ப்பேயில்லை! எனும் உண்மை,
பாவம் அவர்களுக்குத் தெரிவதேயில்லை.
அத்திவாரத்தைப் பலப்படுத்தாமல்,
கட்டிடத்தைப் பலப்படுத்த நினைக்கும்,
அவர்களின் அறியாமையை யாரிடம் சொல்லி அழ?


குட்டி போட்டிருக்கையில் பூனை நாயையும் மிரட்டுகிறது.
குஞ்சு பொரித்திருக்கையில் கோழி பருந்தையும் துரத்துகிறது.
அன்பின் மிகுதியால் உளத்தில் பலம் வர,
அச்சிறு ஜீவன்கள்,
தம்மைவிடப் பலம் பொருந்தியவற்றை,
எதிர்த்து வெல்வதைக் கண்கூடாய்க் கண்டிருக்கிறோம்.
அதிலிருந்து பலம் உடலைப் பொறுத்த விடயம் அல்ல,
உள்ளத்தைப் பொறுத்த விடயம் என்பதை,
நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


அதேபோற்றான் உடல் அழகும்.
உண்ணாவிரதத்தால் வாடி இருந்த காந்தியும்,
சிலுவையில் தொங்கும் இயேசுவும்,
தவத்தால் மெலிந்த பரமஹம்சரும்,
கூனித்துவண்ட அன்னை தெரேசாவும்,
அழகாய்த் தெரிவதன் காரணம் என்ன?
சந்தேகமே இல்லை அவர்களது உள்ளத்தினழகே,
உடல் அழகாய் வெளிப்படுகிறது.


உள்ளத்தில் வீரத்தையும், அழகையும் ஏற்றக்கூடிய,
பயிற்சி நிலையங்களைத்தான் இனி நாம் ஆரம்பிக்க வேண்டும்.
இலக்கியங்களும் சமயங்களும் அந்தப் பயிற்சியைத்தான் எமக்கு ஊட்டுகின்றன.
ஆனால், அவற்றை இன்றைய தலைமுறை அதிகம் அணுகுவதில்லை.
கல்வி நிலையங்களிலும் அவற்றிற்கு இரண்டாம் இடம்தான்.
அதனாற்தான், இன்றைய தலைமுறை,
உண்மை அழகும் வீரமுமிழந்து,
சுயமற்று ‘குருக்கன்’ அடித்த வாழைகளாய்,
ஈர்ப்பின்றிக் கிடக்கின்றது.
அதனால், இந்த வார அதிர்வில்,
மனதின் பலம் பற்றிய சில விடயங்களை,
சொல்லலாம் என நினைக்கிறேன்.


உள்ளம் உடலைக் கட்டுப்படுத்துமா?
உங்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம்.
கட்டுப்படுத்தும் என்பதற்கான,
நானறிந்த ஓர் உதாரணத்தைச் சொல்லுகிறேன்.
இளமைக்காலத்தில் நண்பர்கள் என்னை,
 ‘சைக்கிளில்’ ‘டபிள்’ ஏற்றிச் செல்வார்கள்.
‘என்னது உன்னையா?’ என்று ஆச்சரியப்படாதீர்கள்.
இன்று போல் அன்று எனது உடம்பு இவ்வளவு பருத்திருக்கவில்லை.
ஆனால் அப்போதும் நான் ஓரளவு குண்டாய்த்தான் இருப்பேன்.
அதைவிடுவோம்! சொல்ல வந்த விடயம் அதுவல்ல.



என்னை ‘சைக்கிளில்’ ‘டபிள்’ ஏற்றிச் செல்லும் நண்பன்.
சில வேளைகளில் பேச்சுச் சுவாரஸ்யத்தில்,
வீதியில் இருக்கும் குழிகளைக் கவனிக்க மாட்டான்.
அதனால் குழியில் ‘சைக்கிள்’ விழப்போகும்,
அப்படி விழுந்தால் என் பாரத்தினால்,
நிச்சயம் ‘றிம் ரியூப்’பில் இடிக்கும் என்பது தெரியும்.
‘றிம் ரியூப்’பில் இடித்தால் காற்றுப் போய்விடும்,
அவ் அச்சத்தால்,
நான் மனதால் உடம்பை “எக்கித்தம்” பிடிப்பேன்.
உடனே என் உடல் பாரம் குறையும்.
அப்போது குழியில் ‘சைக்கிள்’ விழுந்தாழும்,
‘றிம்’ இடிக்காமல் இருக்கும் அதிசயத்தை,
பல தரம் கவனித்திருக்கிறேன்.


உடம்பு முழுவதும் சைக்கிளில் இருக்கையில்,
அதன் முழுப்பாரமும் சைக்கிளில்தான் பொறுக்க வேண்டும்.
ஆனால், நான் மனதால் “எக்கித் தம்பிடித்தால்”,
எப்படியோ என் உடம்பின் பாரம் குறைகிறது.
இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இதை வைத்துத்தான்,
உடம்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்.
உள்ளத்திற்கு இருப்பதாய் நான் முடிவு செய்தேன்.


எனக்கு நீந்தத் தெரியும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நீரில் குப்புறக் கிடந்து நீந்த மாட்டேன்.
அப்படி நீந்த முயற்சித்தால்,
ஓரிரண்டு தரம் கைகளையும் கால்களையும் அடித்துவிட்டு,
தவளை போவதுபோல தண்ணீருக்குள் போய்விடுவேன்.
ஆனால், தண்ணீரில் நிமிர்ந்து கிடந்து என்னால் நீந்த முடியும்.
முன்பு கீரிமலைக் கேணியில் குளிக்கையில்,
கைகளையும் கால்களையும் நீட்டி,
தண்ணீரின் மேற்பரப்பில் பாயில் படுத்தாற்போல்,
நான் படுத்திருப்பதைக் கண்டு,
என் நண்பர்கள் எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.


பலூன் தண்ணீரில் மிதப்பதில் என்ன ஆச்சரியம்? என்கிறீர்களாக்கும்.
‘சீரியஸாய்’ நான் பேசும்போது இதென்ன கிண்டல்?
விடயத்திற்கு வாருங்கள்.
அங்ஙனம் நான் நீந்தப் பழகியது எப்படித் தெரியுமா?
தண்ணீரில் கிடந்தபடி,
மனதைச் சலனமற்று ஒருமுகப்படுத்துவேன்.
உடனே உடம்பு தண்ணீரின் மேற்பரப்பில் தானாய் மிதக்கும்.
அப்படி மிதக்கையில் ஒரு விநாடியேனும்,
மனச்சமநிலை கெட்டால்,
உடனே உடம்பு தண்ணீருக்குள் தாழத் தொடங்கிவிடும்.
ஆரம்பத்தில் எனக்கே இது புதுமையாய் இருந்தது.
இவ் விடயத்திலும்,
உடம்பை மனது கட்டுப்படுத்தும் உண்மையை உணர்ந்து,
நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.


ஒருமுறை ‘சுவிஸ்’ முருகன் கோயிலிற்கு,
என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.
நானும் ‘சுவிஸ்’ போயிருக்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பதாய்,
தயவு செய்து தப்பாய் நினைத்துவிடாதீர்கள்.
இராமயணத் தொடர்சொற்பொழிவு அது.
காலை மாலை இரண்டு நேரமும் பேசவேண்டும் என்று அவர்கள் கேட்க,
ஏதோ ஒரு உற்சாகத்தில் நானும் சம்மதித்து விட்டேன்.


அங்கு போய் அந்தக் குளிரில் பேசத்தொடங்கினால்,
இரண்டு, மூன்று நாட்களிலேயே,
தொண்டை மெலிதாய் அடைக்கத்தொடங்கிவிட்டது.
அடுத்தடுத்த நாட்களில்,
‘காறினால்’ தொண்டையிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது.
ஏழாம் நாளோ எட்டாம் நாளோ ஞாபகம் இல்லை.
மாலையில் பேசத்தொடங்கினேன்.
ஐந்து நிமிடம் பேசியதும் திடீரென,
தொண்டையிலிருந்து சத்தம் வராமல் போய்விட்டது.


பயந்து போனேன்.
என்னென்னவோ முயன்றும் சத்தம் வந்தபாடில்லை.
சபை என்னை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.
அந்த நிமிடத்தில் மனதில் ஏதோ ஒரு உறுதி தோன்ற,
முருகனைத் தியானித்து மனதை வலிமைப்படுத்திக் கொண்டு முயன்றேன்.
என்ன ஆச்சரியம் வழமை போல சத்தம் வரத்தொடங்கியது.
அதுமட்டுமல்ல அன்றிலிருந்து தொண்டையில் எந்தப் பாதிப்புமில்லாமல்,
மிகுதி நாட்களில் நன்றாகப் பேசமுடிந்தது.
உள, உடல் தொடர்பை வெளிப்படுத்தி,
என்னை ஆச்சரியப்படுத்திய மற்றொரு சம்பவம் இது.


அண்மையில் நான் படித்த ஒரு செய்தி.
ஜப்பானின் ஒரு ‘மோட்டார்கார்க் கொம்பனியில்’,
ஓர் இளைஞன் வேலை செய்தானாம்.
ஒருநாள் மதியம் அவனைக் காணவென,
அவனது காதலி வந்திருக்கிறாள்.
அவள் வந்தபோது அக்காதலன்,
‘கேபிளில்’ தொங்கவிடப்பட்டிருந்த ஒரு காரின்கீழ்ப் படுத்திருந்து,
வேலை செய்து கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது, அக்காரைப் பிணித்திருந்த ‘கேபிள்’ கயிறு அறுந்து போக,
கார் அக்காதலன் மேல் விழும் தறுவாய்க்கு வந்திருக்கிறது.
அதைக் கண்ட அக்காதலி,
ஒரு நிமிடத்தில் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு,
விழ இருந்த அந்தக் காரை,
தனது ஒற்றைக் கையால் தாங்கிப் பிடித்து நின்றிருக்கிறாள்.


பல தொன்கள் நிறையுள்ள அக்காரை,
அந்த மெல்லிய பெண்,
ஒற்றைக் கையால் தாங்கிப்பிடித்த அதிசயம் கண்டு,
அங்குள்ளவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயினராம்.
பின்னர் அனைவருமாய்ச் சேர்ந்து,
அக்காரினை ஏதோ விதமாய் இறக்க.
அப்போதுதான்,
தான் தனி ஒருத்தியாய் அக்காரினைத் தாங்கிப்பிடித்த உண்மையை அறிந்து,
அப்பெண் உடனேயே மயங்கி விழுந்து போனாளாம்.
அப்பெண்ணின் அந்த மெல்லிய கரங்களுக்கு,
ஒரு காரினைத் தாங்குகிற பலத்தைக் கொடுத்தது எது?
சந்தேகமே இல்லை. அவளது மனதேதான்.


மனதிற்கும் உடம்பிற்குமான தொடர்பினை,
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள்,
தனது நூல்களில் தெளிவுபட எழுதியிருக்கிறார்.
அதையெல்லாம் வாசிக்க இப்போது எவருக்கு நேரமிருக்கிறது?
அவர் எழுதியவற்றில் ஒரு விடயம் என்னை மிகவும் ஈர்த்தது.


மேற்கு நாட்டைச்சேர்ந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர்,
உள்ளத்திற்கும் உடம்பிற்குமான தொடர்பினை ஆராயக்கருதி,
தன்னிடம் வந்த ஒரு நோயாளியை ‘ஹிப்னரிசம்’ முறையில்,
ஆழ் நித்திரைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
பின்னர் அந்த நோயாளியை.
தனது மனக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,
அவரது உடம்பில் வெறும் ஈர்க்குக் குச்சியால் தொட்டு.
“நான் இப்பொழுது உன்னை நெருப்பால் சுடுகிறேன்”  என்று சொல்லியிருக்கிறார்.
டாக்டர் சொன்னதைக் கேட்டதும்,
ஆழ் நித்திரையிலிருந்த அந்த நோயாளி.
உண்மையிலேயே நெருப்பால் சுடப்பட்டவன் போல் துடித்தானாம்.


அதுவல்ல ஆச்சரியம்.
சில நிமிடங்களில் அந்த நோயாளியின் உடம்பில்.
டாக்டர் ஈர்க்குக் குச்சியால் தொட்ட இடங்களிலெல்லாம்.
கொப்பளங்கள் உருவாகினவாம்.
இச் செய்தியை வாசித்து நான் வியந்து போனேன்.


சின்ன வயதில் எனக்குக் காய்ச்சல் வந்தால்.
கடுமையாய்க் காய்ச்சல் காயும்.
நான் சுருண்டு படுத்துவிடுவேன்.
அம்மா என்னைப் போர்வையால் போர்த்தி,
மருந்துகள் தந்து பராமரிப்பார்.
என்னைப் படுக்கையால் எழும்ப விடமாட்டார்.
எங்களின் அப்பாச்சி தெய்வநம்பிக்கையும், மனத்துணிவும் மிகுந்தவர்.
ஒருநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது,
எனக்கு நல்ல காய்ச்சல்.
வழக்கம் போல நான் சுருண்டு படுத்திருந்தேன்.
அப்பாச்சி அங்கே வந்து, “எழும்பு, எழும்பு உதென்ன படுக்கை,
கிடக்கக் கிடக்க காய்ச்சல் கூடத்தான் செய்யும் குறையாது.
எழும்பிப்போய் முகம் கை காலைக் கழுவிற்று,
திருநீற எடுத்துப் பூசு” என்று என்னை விரட்டினார்.


நான் அம்மாவைப் பரிதாபமாய்ப் பார்த்தேன்.
மாமியாரை எதிர்த்து எதுவும் சொல்லமுடியாமல்,
அம்மாவும் மௌனித்து நிற்க,
மனதுக்குள் அப்பாச்சியைத் திட்டியபடி,
எழும்பிப்போய் முகம் கை கால் கழுவி திருநீறு பூசினேன்.
என்ன ஆச்சரியம் சில நிமிடங்களில் காய்ச்சல் விட்டு விட்டது.
அன்றிலிருந்து இன்று வரை,
காய்ச்சல் வந்து விட்டால்,
எனது முதல் வைத்தியம் அப்பாச்சி சொன்னதுதான்.


இதைச் சொல்லும் போது இன்னொரு ஞாபகம் வருகிறது.
வித்துவான் குமாரசுவாமி என்கின்ற தமிழ் ஆசிரியர் இருந்தார்.
அவர் நயினாதீவைச் சேர்ந்தவர்.
எறும்பு போல் எப்போதும் உற்சாகமாய் இருப்பார்.
பெரிய படிப்பாளி. பென்சன் எடுத்துவிட்டு,
நல்லூரடியில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார்.
விடிகாலையில் வந்து எங்களுக்குப் பாடம் சொல்லித்தருவார்.


ஒரு மார்கழி மாதம் நல்ல பனிக்காலம்.
வித்துவான் சேருக்கு நல்ல காய்ச்சல் என்று கேள்விப்பட்டேன்.
அடுத்த நாள் காலையில் வகுப்பிற்கு வரமாட்டார் என நம்பி நான் படுத்திருக்க,
எதிர்பார்க்கமால் விடிகாலை வந்து கதவைத் தட்டினார்.
எங்களுக்கு ஆச்சரியம்,
என்ன சேர் நூற்றிமூன்றில் காய்ச்சல் காயிறதா நேற்று மகள் சொன்னா,
நீங்கள் இண்டைக்கு இந்தக் குளிருக்க வந்திருக்கிறீங்கள்” என்று கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டு,
நோய்க்கு இடம் கொடுத்தால் அது வெண்டிடும்.
அதுதான் விடியக்காலம எழும்பி,
பச்சத்தண்ணியை தலையில வாத்திட்டு வந்தனான்”  என்றார்.
வழக்கமா காய்ச்சல் வந்தால் அவர் அப்படித்தான் செய்வாராம்.
அவர் சொல்ல நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். ❃

பழைய ‘மனோகரா’  படத்தில்,
“பொறுத்தது போதும் பொங்கியெழு மகனே!” என்று,
கண்ணாம்பாள் உத்தரவிட்டதும்,
மனோகரனாய் வந்த சிவாஜிகணேசன்,
தன்னைக் கட்டியிருந்த சங்கிலிகளையெல்லாம் அறுத்தெறிந்து,
எதிரிகளைப் பந்தாடுவதும்,
‘அடிமைப்பெண்’ படத்தில்,
நோஞ்சானாய் வளர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் பலசாலியாவதும்,
‘சரஸ்வதி சபதத்தில்’ ஊமை சிவாஜி பாடத்தொடங்குவதும்,
வெறும் மிகைக்காட்சிகள் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் உள்ளத்தில் உறுதிவந்துவிட்டால்,
மேற்சொன்ன விடயங்கள் எல்லாம் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


இதுபற்றி இன்றைய உளவியலாளர்கள் கதைகதையாக எழுதித்தள்ளுகிறார்கள்.
பாரதியார் தனது சுயசரிதையில்,
தனக்கு பன்னிரண்டு வயதில் வந்த காதல் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒன்பது வயது பொண்ணொருத்தியை,
தான் துரத்தித் துரத்திக் காதலித்தாகவும்,
ஒருநாள் அவளும் தன்னைக் காதலிக்கத்தொடங்கியதாகவும் சொல்லுமிடத்தில்,
அது எப்படி நடந்ததோ? என ஆச்சரியப்பட்டு,
பின் அதற்கான விடையையும் தானே கூறுகிறார்.
புலன்களோடு கரணமும் ஆவியும்,
போந்து நின்ற விருப்புடன் மானிடன்,
நலன்கள் ஏதும் விரும்புவன் அங்கவை,
நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர். 
யானும் மற்றது மெய்யெனத்தேர்ந்துளேன்.” என்று,
மனதின் வலிமை செயலாகும் என்ற உண்மையை அடித்துச் சொல்கிறார்.


உள்ளமும், உடம்பும் பற்றிச் சிந்திக்கையில்,
மற்றொரு சுவாரஷ்யமான சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எண்பதுகளில் யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்திக்கு அருகில்,
சிற்றம்பலம் என்கிற விஷக்கடி வைத்தியர் இருந்தார்.
அவர் புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
அவர்களின் பரம்பரையே இவ்வைத்தியத்தில் ஈடுபட்டு வந்திருந்தது.
என்மேல் அன்பு கொண்டவர் அவர்.
பாரம்பரிய வைத்திய முறையால் விஷம் இறக்குவதில் நிபுணர்.
ஒருமுறை என்னோடு பேசிக் கொண்டிருந்த பொழுது,
அவர் சொன்ன செய்தியைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.
அச்செய்தியும் உடல் மனம் சம்பந்தப்பட்டதுதான்.
அதைச் சொல்கிறேன்.


ஒரு நாள் இரவு பத்து மணியளவில்,
வைத்தியர் வீட்டிற்கு பாம்பு கடித்த ஒருவனைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பாம்பு கடித்ததும் இனி மரணம்தான் என்ற பயத்தால்,
அவன் முக்கால் மயக்கத்தில் கிடந்திருக்கிறான்.
அவனைப் படுக்கையில் கிடத்தச் சொல்லி,
வைத்தியர் சோதித்திருக்கிறார்.
அவனுக்கு அதிகம் விஷமில்லாத,
‘கோடலிப்பாம்பு’ தான் கடித்திருக்கிறது என்ற உண்மை,
சோதனையில் வைத்தியருக்குத் தெரிந்திருக்கிறது.
அதனால், அவர் பதற்றப்படாமல் வைத்தியத்திற்கு ஆயத்தம் செய்திருக்கிறார்.
ஆனால், பாம்பு கடித்தவனோ மரண அச்சத்தில்,
எழும்ப முடியாதவனாய்க் கட்டிலில் சுருண்டு கிடந்திருக்கிறான்.
அப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.


மானிப்பாய் என்ற ஊரில் ஒரு மாலைப்பொழுதில்,
கள் இறக்குவதற்காக கந்தன் என்கின்ற மரம் ஏறுகிற இளைஞன் சென்றிருக்கிறான்.
அவன் போன வழியில் ஒரு மரத்தின் கீழ் பெரிய நாகபாம்பு கிடந்து சீறியிருக்கிறது.
கிராமத்தில் பாம்புக்கு யாரும் அதிகம் பயப்பட மாட்டார்கள்.
அந்த முரட்டு இளைஞன் சீறிய அந்த நாகபாம்பை,
அருகிலிருந்த ஒரு சிறு கல்லை எடுத்து எறிந்து சீண்டியிருக்கிறான்.
பின்னர், மரங்களில் ஏறிக் கள் இறக்கியபின்,
அதே பாதையால் ‘மைம்மல்’ பொழுதில் வந்திருக்கிறான்.
அவனால் சீண்டப்பட்ட நாகம் கோபப்பட்டு,
அவனுக்காய்க் காத்திருந்து அவன் காலில் கொத்தியிருக்கிறது.
வாயில் நுரை தள்ள அந்த இடத்திலேயே அந்த இளைஞன் விழுந்து போனானாம்.


ஊராரெல்லாம் சேர்ந்து,
உடனே ஒரு ‘டாக்சி’ பிடித்து,
இரவோடிரவாக யாழ். ஆஸ்பத்திரிக்கு,
அவனைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
பாம்பு கடித்தவனின் உறவினனின் ‘டாக்சி’ அது.
டாக்டர்கள் அவனைச் சோதித்தபின்,
அவன் இறந்துவிட்டதாய்ச் சொல்லி,
ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ பண்ணினால் வீணாக 24 மணி நேரம்,
உடம்பை ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும் என்பதால்,
இப்படியே திரும்பக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அப்போது, அந்த ‘டாக்சி’ டிறைவருக்குத் தெரிந்தவரான அங்கிருந்த ஒரு டாக்டர்,
“கொட்டடிச் சந்தியில் ஒரு விஷக் கடி வைத்தியர் இருக்கிறார்.
இரவு பத்து மணிக்கு மேல் பார்ப்பாரோ தெரியாது.
எதுக்கும் அவரிடம் ஒருதரம் கொண்டுபோய்க் காட்டிப்பார்” என்று சொல்லியிருக்கிறார்.
உடனே அந்த ‘டாக்சி’ டிறைவரும் உறவினர்களும்,
அந்தப் பாம்பு கடித்தவனின் இறந்தபோன உடம்பை ஏற்றிக்கொண்டு,
டாக்டர் வீட்டிற்கு இரவு பதினொரு மணியளவில் வந்திருக்கிறார்கள்.


கோடலிப் பாம்பு கடித்தவனுக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தபடியால்,
நல்ல காலமாய் அன்று விழித்திருந்த டாக்டர்,
டாக்சி ஹோர்ன்’ அடித்ததும்.
வாசலில் சென்று பார்த்திருக்கிறார்.
அந்த ‘டாக்சி’ றைவரை வைத்தியருக்கு முன்னமே தெரிந்திருக்கிறது.
“என்ன விண்ணன்? என்ன இந்த நேரத்தில?”என்று டாக்டர் கேட்க,
விண்ணன் என்கிற அந்த ‘டாக்சி டிறைவர்’
நடந்த எல்லாவற்றையும் சொல்லி,
பாம்பு கடித்தவனை ஒருதரம் பார்க்கும்படி கேட்டிருக்கிறான்.
இறந்துவிட்டான் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு தான் என்ன பார்ப்பது?
உள்ளே கொண்டு வந்து அவன் இறந்து போயிருந்தால்,
இந்த நேரத்தில் வீடெல்லாம் கழுவ வேண்டி வருமே என்று எண்ணிய டாக்டர்,
“டொக்டர்மார் சொன்ன பிறகு என்னத்தப் பார்க்கிறது?” என்றிருக்கிறார்.
விண்ணன், “எனக்காக ஒருதரம் பார்க்க வேணும் ஐயா!” என்று கெஞ்ச,
மறுக்க முடியாமல், “அப்ப அங்கேயே கிடக்கட்டும் வந்து பார்க்கிறன்” என்று சொல்லிவிட்டு,
காரில் கிடந்த பாம்பு கடித்தவனின் நாடியைப் பிடித்துப் பார்த்திருக்கிறார்.
அதில் எந்தச் சலனமும் இருந்திருக்கவில்லை.
ஆனால், உடம்பில் மெல்லிய சூடு மட்டும் இருந்திருக்கிறது.


டாக்டரின் மனதில் சிறு சந்தேகம்.
“பொறு விண்ணா” என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர்,
கோடலிப் பாம்பு கடித்தவனுக்காக அவிந்து கொண்டிருந்த மருந்தில் ,
ஒரு பெரிய பொட்டணியைத் தோய்த்து சுடச்சுடக் கொண்டுவந்து,
காரில் கிடந்த சடலத்தின் தலையில் வைத்துப் பார்த்திருக்கிறார்.
ஒத்தடத்தை வைத்ததும் விறைத்து நிமிர்ந்து கிடந்த தலை ஒரு பக்கமாய்ச் சரிந்திருக்கிறது.
உயிர் இருக்கிறதோ? என டாக்டருக்கு சிறு சந்தேகம்.
சூடு பட்டதும் நரம்புகள் தளர்ந்து,
விறைத்த தலை சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால்,
அவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை.
ஆனாலும், இன்னொரு தரம் முயன்று பார்க்கலாம் என்று,
மீண்டும் ஒருதரம் சுடச்சுட அதே இடத்தில் ஒத்தடம் கொடுத்திருக்கிறார்.
இப்போது, சரிந்து கிடந்த தலை நிமிர்ந்திருக்கிறது.
டாக்டருக்கு முழு நம்பிக்கை வந்துவிட,
“விண்ணா ஆளக் கொண்டுவந்து உள்ளுக்குள் கிடத்து” என உத்தரவிட்டிருக்கிறார்.


கோடலிப் பாம்பு கடித்தவனுக்குப் பக்கத்திலேயே,
நாகபாம்பு கடித்தவனையும் கொண்டுவந்து கிடத்தியிருக்கிறார்கள்.
அவன் இறந்துவிட்டதாய் நினைந்து உறவினர்கள் கதற,
கொண்டு வந்து கிடத்தப்பட்ட உடலைக் கண்டதும்,
கோடலிப்பாம்பு கடித்தவனுக்கு இன்னும் மயக்கம் கூடிப்போனது.
நாகபாம்பு விஷம் கடுமையானதுதான்.
ஆனாலும், புடையன் பாம்பு விஷம்போல் இல்லாமல்,
மருந்து கொடுத்தால் உடனே அது இறங்குமாம்.
மருந்துப் புகையொன்றைத் தயார் செய்து,
கொண்டுவந்து கிடத்தப்பட்டவனது மூக்கில்,
குழாய் வைத்து டாக்டர் ஊதிய மறுகணம்,
செத்துக் கிடந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கியிருக்கிறான்.
வந்த அத்தனைபேரும் டாக்டரைக் கடவுளாகவே நினைத்துக் கும்பிட்டார்களாம்.


இந்தக் கதையைப் பதிவு செய்வதல்ல எனது நோக்கம்.
இந்தக் கதையைச் சொன்னபிறகு,
டாக்டர் சொன்னதைத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
செத்துவிட்டதாய்ச் சொல்லப்பட்ட நாகபாம்பால் கடிக்கப்பட்டவன்,
ஒரு புகை ஊதலுடன் எழும்பி உட்கார்ந்ததும்,
அதுவரை முக்கி முணங்கி முக்கால் மயக்கத்தில் கிடந்த,
கோடலிப்பாம்பால் கடிக்கப்பட்டவன்,
உடனேயே விஷம் இறங்க,
எழும்பி உற்சாகமாய் சிரித்துப் பேசத் தொடங்கினானாம்.
இந்தச் செய்தியை டாக்டர் சொன்னதும்,
“கோடலிப்பாம்பு கடித்தவனுக்கு,
மருந்து குடிக்காமல் எப்படி விஷம் இறங்கியது?”  என்று கேட்டேன்.
“செத்துப் போனதாய்ச் சொல்லப்பட்ட நாகபாம்பு தீண்டியவன்,
ஒரு மருந்துடன் எழும்பி இருந்ததைக் கண்டதும்,
கோடலிப் பாம்பு கடித்தவனுக்கு என்மேல் பெரிய நம்பிக்கை வந்துவிட்டது.
செத்தவனே ஒரு மருந்துடன் எழும்பிவிட்டான்.
எனக்கு இனி விஷம் இறங்கிவிடும் என்று நினைத்ததுதான் தாமதம்,
அவனுக்குத் தானாகவே விஷம் இறங்கிவிட்டது.
அதுதான் இரகசியம்” என்று சொல்லி,
டாக்டர் விழுந்து விழுந்து சிரித்தார்.
உடம்பைக் கட்டுப்படுத்துகிற மனதின் பலம்,
இப்போது உங்களுக்குத் தெரிகிறதா?


மனதின் வலிமைபற்றி முடிந்தவரை சொல்லிவிட்டேன்.
கட்டுரை முடிந்து விட்டது.
ஆனாலும் ஒன்றைச் சொல்ல மனம் விரும்புகிறது.
அவ்வளவு ஆற்றல் மிகுந்தவரான,
பரம்பரையாய் விஷக் கடி வைத்தியத்தில் புகழ்பெற்றிருந்த,
அந்தச் சிற்றம்பல டாக்டர்,
கனடாவில் ‘கோர்ட்’ போட்டுக்கொண்டு,
அரசு தரும் பணத்தில்,
‘ஐஸ்ஸ_’க்குள் பயனின்றி வாழ்ந்து கொண்டிருந்ததை
அங்கு சென்றிருந்தபோது கண்டேன்.
சில நாட்களின் முன் ஒரு நண்பர் தொலைபேசி மூலம் 
சிற்றம்பல வைத்தியர் இறந்துவிட்ட செய்தியை சொன்னார். 
ஒரு தனிமனிதனின் மரணத்துடன் ஈழத்தமிழினத்தின் 
பாரம்பரிய ஓர் அறிவுச் சொத்து மறைந்து போனது.
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.