ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான் ! | செங்கையாழியான்

ஈழத்து எழுத்துலகின்  ஏந்தல் போனான் ! | செங்கையாழியான்
 
எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
          ஏற்றமுறு செங்கையா ழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
          பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
          வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
          சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !
 

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்
          எண்ணரிய ஆக்கங்கள் தந்தோன் போனான்
ஆழத்து உரைநடையால் அகிலம் மெச்ச
          அற்புதமாம் கதைகள் பல செய்தோன் போனான்
வேழத்து நிமிர்வுடனே நின்றோன் போனான்
          வேறெவர்க்கும் அஞ்சித் தன் கருத்தை மாற்றா
காலத்தால் அழியாத புகழோன் போனான்
          கற்றவர்கள் மனம் வாடிக் கலங்கப் போனான்

‘காட்டாறும்’ ‘பிரளயமும்’ பிடிக்கச் செய்தான்
          கனிவுடனே ‘சாம்பவி’யைக் காட்டி வைத்தான்
வாட்டாத ‘வாடைக்காற்ற’தனுள் மூழ்க
          வளமான தமிழாலே வழிகள் செய்தான்
வீட்டாலே ‘ஆட்சியவள் பயணம்’ போன
          விதம் சொல்லி ‘மரணங்கள் மலிந்த பூமி’
ஏட்டாலே உலகெல்லாம் உணரச் செய்தான்
          எழில் கொஞ்சும் எழுத்தை இனி எங்கே காண்போம்?

போராலே யாழ் உள்ளோர் பொசுங்கும் போது
          புறங்காட்டி ஓடாத புனிதன் நீயே!
வேரோடு இனம் சரிந்து வீழ்ந்தபோது
          விட்டோடிப் போகாத வீரன் நீயே!
காரோடிச் சுகம் காணும் கருத்தைவிட்டு
          கனிவோடு எம்மருகே நின்றோன் நீயே!
ஆரோடு உன் பிரிவைச் சொல்லி நாங்கள்
          அழுதிடுவோம் அத்தனையும் மனதில் நிற்கும்.

கம்பனது கழகத்தை உன் வீடாக
          கருதித்தான் பற்பலவாம் துணைகள் செய்தாய்
நம்பியெமை முன்னேற்ற உன்னாலான
          நல்வழிகள் பலவும் தான் திறந்து விட்டாய்
வெம்பி மனம் நொந்தேதான் ஊரைவிட்டு
          வேற்றொருவர் துணையின்றி இருந்தபோது
தெம்புதர எமைத்தேடி வந்தே எங்கள்
          தீப்பசியைத் தீர்த்ததனை மறக்கலாமோ ?

தேற்றமுற ஒரு வார்த்தை தேடிச் சோர்ந்தோம்
          திகழ் புகழோய் திருநாடு சென்ற உந்தன்
மாற்றமிலாப் பெருமையெலாம் மனதில் நிற்க
          மரணமதும் உனக்குண்டோ  மாண்புளோனே !
நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் உண்மை
          நிஜமாக்கி வானேறிச் சென்றே விட்டாய்
ஆற்றல் மிகு உன் பணிகள் அனைத்தும் இங்கு
          அசையாது நிலை நிற்கும் அமைதி காண்பாய்.
                           ✽
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.