அரசியற்களம் 02 | போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்?

அரசியற்களம் 02 | போரிடும் உலகத்தை  வேரொடு சாய்ப்போம்?
 
-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

உலகைக் கவர்ந்த, இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெருமை,
நம் ஈழவளத் திருநாட்டுக்கு இருந்தது.
சொல்லும் போதே,
வளநாடு எனும் அடைமொழியையும் சேர்த்து உரைக்கும் வண்ணம்.
நம் இலங்கைத்தாய் அன்று எழிலோடு இருந்தாள்.
இன்றும் அவளின் இயற்கை எழிலிற்கு எந்தக் குறைவுமில்லை.
காண்பாரைக் கவர்ந்திழுக்கும் அத்தனை இலட்சணங்களுடனும்,
அவள் அழகு இன்றும் பொலிந்து தான் இருக்கிறது.
ஆனால் அன்றைய பெருமை இன்று அவளுக்கில்லை.
போர், கலவரம், நிம்மதியின்மை,
 

கொலை, களவு, ஆட்கடத்தல் என்பனவாய்ப் பழிகள் சூழ,
உலக அரங்கில்,
இன்று அவளின் தரம் தாழ்ந்து போயிருக்;கிறது.
காரணம் மனித மன வக்கிரங்கள்!

*****
பல்லினமும் ஒன்று சேர்ந்து வாழ்ந்த இத்தேசத்தில்,
ஒற்றுமையால், ஒரு காலத்தில் அழகு நிறைந்து கிடந்தது.
எவர் கண்பட்டதோ தெரியவில்லை.
‘இனத்துவேசம்’ என்ற விஷ வித்து தூவப்பட,
இனங்களுக்கிடையே பகை விளைந்து,
இன்று இலங்கை அன்னையின் புதல்வர்கள்,
ஒருவருக்கொருவர் எதிரிகளாகி தம்முள் மாறுபட்டு நிற்கின்றனர்.
அப்பகை வெடிப்பினூடு உள்நுழைந்து தம் சுயலாபம் தேட,
உலக நாடுகள் பல முனைந்த வண்ணம் இருக்கின்றன.
வலிமை மிக்க அந்நாடுகள் விரித்த வலைகளில்,
விழுந்தும், எழுந்தும் இலங்கை படும்பாடு பெரும்பாடு!

*****
இந்த துரதிஷ்ட சூழ்நிலையில்,
‘தேசம்’ என்ற நிலை மறந்து, ‘இனம்’ என்ற எண்ணம் வேரூன்ற,
அரசியல் தலைமைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
தேசத்தைச் சூழ்ந்த பெருங்கேடு இது என்பதனைக் கூட,
எந்த அரசியல் தலைமையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.
பெரும்பான்மைச் சிங்களத் தலைமைகள்,
இத் தேசம் தமக்கே உரியது! எனும் கருத்தை விதைப்பதில் மட்டும்,
வெட்கக்கேடான வீரியத்தோடு முனைந்து நிற்கின்றன.
ஒட்டு மொத்தமான தேச பக்தியை,
அதிகாரத்தால் மட்டும் கொணர்ந்து விடலாம் என்னும் அறியாமை,
அவர்களிடம் வளர்ந்து கொண்டே போகிறது.
ஆயிரம் அழிவுகளை உண்டாக்கி,
தமிழினத்தை அலைக்கழித்த போர் முடிந்த கையோடு,
தேசியகீதத்தை சிங்களத்தில் மட்டுமே இசைக்க வேண்டும் என்றும்,
பௌத்தத்தை தேசம் முழுவதும் விதைக்க வேண்டும் என்றும்,
முன்னை ஆட்சியாளர் சிலர் காட்டிய முனைப்பு,
பெரும்பான்மை இனத்தலைவர்களின் மனநிலைக்கான சான்றாய் இருந்தது.

*****
ஒற்றுமையோடு இத்தேசத்தில் வாழ்ந்த அனைத்து இனத்தாரும்,
ஒருவர் வீழ்ச்சி கண்டு மற்றவர் மகிழும் படியான மனநிலையில் இன்று இருக்கின்றனர்.
மற்றவரை அடிமை செய்தலையே இலட்சியமாக்கி கீழ்மையுறும் அளவிற்கு,
இன்று அரசியல் அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.
இப்பகையில் தாம் சார்ந்த அணி ஓங்க வேண்டும் என்பதற்காக,
தேச நலன்களை எவரிடம் அடகு வைக்கவும்,
அரசியற் தலைமைகள் தயாரான நிலையில் இருக்கின்றன.
இது தவறு! இது எங்கள் தேசம்! நாம் இலங்கையர்! என்ற எண்ணங்கள்,
இன்று எவரிடமும் இல்லை.
இனங்களை ஒற்றுமைப்படுத்தி அக்கருத்தை விதைக்க முயலும் சான்றோர் எவரும்,
எம்தேசத்தில் ஏனோ இன்று இல்லாது போயினர்.
முப்பதாண்டுப் போரில் விளைந்த அவலங்களால் விதைக்கப்பட்ட பகைக் காயங்களை,
ஆறச் செய்ய முனைவார் எவரும் இல்லாது இனப்பகை வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
இல்லை! இல்லை! வளர்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.
எதிரியின் மூக்குடைவதானால் எந்தக் கீழ் மகனும் இத்தேசத்திற்குள் நுழையட்டும்,
எனும் கருத்தே இன்றைய இராஜதந்திரமாகி இருக்கிறது.

*****
இன்பத்தை விட துன்பம் சிறந்தது என்பார்கள் அறிஞர்கள்.
இன்பம் மகிழ்வைத் தருகிறது.
துன்பம் அனுபவத்தைத் தருகிறது என்பது அவர்கள் கருத்து.
வெளிப்பட நடந்த முப்பதாண்டுப் போர்த்துன்பம்,
இத்தேசத்தின் எந்தத் தலைமைக்கும் அனுபவத்தைத் தந்ததாய் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட தமிழ்த்தலைமைகளின் நிலையும் இதுவே.
போர் முடிந்தது எனக் கொண்டாடி நிற்கிறது பேரினம்.
நடந்து முடிந்த கொடும் போரின் அடிப்படைக் காரணம் இனத் துவேசமே!
அந்த இனத்துவேசத்தின் காரியமாய் விளைந்தது தான்,
உலகையே இலங்கையை நோக்கித் திரும்ப வைத்த இனப்போர்.
காரணம் இனத்துவேசம்! அதன் காரியம் தான் போர்!
காரியத்தை ஒழித்துவிட்டு கைகொட்டி மகிழ்ந்து நிற்கிறது பேரினம்.
காரணம் அழியாது இருக்கும் வரையும்,
காரியம் மீண்டும் மீண்டும் விளையலாம் எனும் ஞானம் கூட,
பேரினத்தலைமைகளுக்கு இல்லை.

*****
பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் தமதாக்க,
பேரினஅரசியல் தலைமைகள் அனைத்தும்,
இனத்துவேசத்தைக் கருவியாக்கி வெற்றிக்காய் முயலும் வெட்கக் கேடு,
பல தசாப்தங்களாய் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
பேரினத்தைச் சார்ந்த அறிஞர்கள் கூட,
போரின் அவலங்கள் பற்றிப் பேசுகிறார்களே தவிர,
அதன் காரணம் பற்றிப்பேச மறுக்கிறார்கள்.
அடிப்படை அரசியல் அறிவில்லாத சிங்களப் பொதுமக்கள்,
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால்,
இனித் தம் இனத்தை யாராலும் அசைக்க முடியாது என,
பகற்கனவு கண்டு பரவசத்தில் திளைக்கிறார்கள்.
இனப்பகையால் நம் ஒற்றுமையில் விழுந்த ஓட்டைகளினூடு,
புலிகளை விட ஆபத்தான எதிரிகள் பலர்,
இத்தேசத்தினுள் புக எத்தனித்துக் கொண்டிருப்பது,
அப்பாவிகளான அவர்களுக்குத் தெரியவில்லை.

*****
சிங்களப் பெரும்பான்மை இனக்கட்சிகளில்,
ஆட்சி அமைக்கும் அதிகாரம்,
இரண்டு பெரிய கட்சிகளுக்கே இதுவரை உரியதாயிருக்கிறது.
இவ்விரண்டு கட்சிகளுமே தாம் ஆட்சி அமைக்க,
இனத்துவேசத்தைத் தூண்டும் உத்தியையே,
பலமிக்க கருவியாய்க் கருதிக்கொண்டிருக்கின்றன.
ஆட்சி இழந்து நிற்கும் போது,
சிறுபான்மை இனங்களில் அக்கறை காட்டுவது போல் நடிப்பதும்,
ஆட்சியில் அமர்ந்ததும் இனத்துவேசத்தை ஏற்றி விடுவதுமாக,
தம்முடைய கட்சி நலம் நோக்கி,
தேச நலத்தை இவை பலியாக்கி வருகின்றன.

*****
தம் பாரம்பரிய இருப்புச் சிதைக்கப்படுமோ? என்ற,
சிறுபான்மை இனங்களின் அச்சத்தின் வேரறுத்து அமைதி தர,
அக்கட்சிகளுள் எவையும் தயாராயில்லை.
ஆட்சிக்கு வரும் கட்சி ஒருவேளை அங்ஙனம் தயாராக முயன்றாலும்,
“பார்த்தீர்களா? அவர்கள் எதிரிகளை வளர்க்கும் அழகை” எனப் பிரச்சாரம் செய்து,
அவர்கள் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த,
இரண்டு பெரிய கட்சிகளும் எப்போதும் தயாராய் இருக்கின்றன.
இன்று நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதற்கான உதாரணங்கள்.
இந்நிலையில் இனங்களுக்கான ஒற்றுமை என்பது,
தொடுவானமாகத் தூரப்போய்க்கொண்டேயிருக்கிறது.

*****
கடந்த ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால்,
விஷம் விதைக்கும் இக்கருத்தோட்டத்திற்கு,
முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
உலக அரசியல் நகர்வுகளால்,
தம் நலம் நோக்கிப் புலிகளைப் பாதுகாக்கும் தேவை,
பிராந்திய, உலக வல்லரசுகளுக்கு இல்லாது போக,
புலிகள் அமைப்பும், அதன் தலைவர் பிரபாகரனும் அழிக்கப்பட்டனர்.
உலக அரசியல் தெரியாத பேரின மக்கள்,
அது காலத்தால் விளைந்த கதி என அறியாது,
அவ்வெற்றி மகுடத்தை அன்றைய ஜனாதிபதியின் தலையில் சூட்டி,
தம்மை இரட்சிக்க வந்த தேவகுமாரனாய்,
அவரை நினைந்து போற்றி மகிழ்ந்தனர்.
அக்காலத்தில் எவர் அரசில் இருந்திருந்தாலும்,
போரின் முடிவு இதுவாகத்தான் இருந்திருக்கும் என்பது,
அரசியல் அவதானிகள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.
போரில் வெற்றிபெற்று, வெற்றி மகுடம் சூட்டிக்கொண்ட சூழ்நிலையில்,
அன்றைய ஜனாதிபதியும், அவர் சார்ந்த அரச அணியும்,
நினைந்திருந்தால் இத்தேசத்தைப்பிடித்திருந்த இனத்துவேசச் சனியனை,
தொலைத்துத் தூர எறிந்திருக்கலாம்.
அந்த நல்ல வாய்ப்பை அன்றைய ஆளும் கட்சி அநியாயமாய்த் தவறவிட்டது.

*****
போர் முடிந்தும் பதட்டம் முடியாத சூழ்நிலையில்,
கொழும்பில் அன்றைய ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ,
தமிழினத் தலைமைப் பிரஜைகளுடன் நடத்திய  சில சந்திப்புக்கள்,
இவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து,
இனப்பகையை ஒழிக்கப் போகிறார்கள் எனும்,
பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டின.
அச்சந்திப்புக்களில்,
தமிழர்தம் பிரதிநிதிகளாய் கலந்து கொண்ட பிரமுகர்கள் பலர்,
ஆளுமை அற்று அரசினரை மகிழ்விக்க ஆற்றிய உரைகளும்,
புலிகள் ஒழிந்தார்கள் எனும் நம்பிக்கையில்,
அப்பிரமுகர்கள் அரசு அமைத்த கூட்டங்களில்,
கலந்து கொள்ளப் போட்டியிட்டமையும்,
அவர்களை மகிழ்விக்க பலவிதங்களில் முண்டியடித்தமையும்,
இவர்களை அடிமையாய் வைத்திருப்பது சிரமமில்லை எனும் எண்ணத்தை,
அரசினர்க்கு அன்று ஒருவேளை ஊட்டியிருக்கலாம்.
எது காரணமோ யாரறிவார்?
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில்,
அன்றைய அரசு இனப்பகையை ஒழிக்கும் என்பதான,
எதிர்பார்ப்பு சுக்கு நூறாய்ப் போனது.

*****
போர் முடிந்து அரசு நடத்திய வெற்றி விழாவில்,
தீவிரவாதிகளாய் இறந்து போனவர்களும் ,
எங்கள் தேசத்தின் புதல்வர்கள் தான்.
எங்கள் மக்களையே அழித்து,
நாம் கொண்ட வெற்றியில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.
கடந்தகால இனக்கலவரங்களில்,
கொடுமையாய் அழிக்கப்பட்ட தமிழர்களின் அவலத்திற்கு,
பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு,
எம் சிங்கள இனத்திற்கு இருக்கிறது.
பிரபாகரன் போன்றோரை நினையாது,
ஒரு காலத்தில்,
சிங்களவர்களுக்கேற்பட்ட அவமரியாதையைத் தவிர்ப்பதற்காக,
ஆங்கிலேயர்களுடன் போராடிய,
இராமநாதன் போன்ற தமிழத்தலைவர்களின்,
கண்ணியத்தை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இனியேனும் இத் தேசத்தில் இனப் பகை ஒழித்து,
இலங்கைத்தாயின் புதல்வர்களாய் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்!
புலிகள் நமக்கு எத்துணை தீங்கு விளைத்திருப்பினும்,
இனத்துவேசம், ஒரு தேசத்தை எத்துணை தூரம் சிதைப்பிக்கும் என உணர்த்தி,
இனத்துவேசம் கொண்டிருந்த எம் இனத்தின் கண்களைத் திறப்பித்த ,
நல்ல காரியத்தையும் செய்திருக்கின்றனர்.
தேசநலம் கருதியும், இன ஒற்றுமை கருதியும்,
நாம் படைவீரர்களுக்கு மட்டுமன்றி,
அப்புலிகளுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.” என்பதாய்,
அன்றைய ஜனாதிபதி ஓர் உரை நிகழ்த்தியிருப்பின்,
இத்தேசத்தின் பகை வேர் அறுந்து தொலைந்திருக்கும்.

*****
இது வெறும் நடைமுறைக்கு ஒவ்வாத,
இலட்சியப் பேச்சு என்று எவரும் உரைப்பின்,
அது வரலாறறியாத அவர்களின் தவற்றையே சுட்டிக்காட்டும்.
தன்னோடு போர் புரிந்த,
தமிழ் மன்னனான எல்லாளனை வீழ்த்திய பின்,
அவனுக்கு நடுகல் அமைத்து,
அஞ்சலி செய்ய ஒழுங்கு செய்த துட்டகைமுனு,
மேற் கருத்திற்கு முன்னுதாரணமாக,
சிங்கள இனத்தில் ஏற்கனவே இருந்திருக்கிறான்.

*****
சீக்கிய பொற்கோயிலின் மேல் தாக்குதல் நடத்தியபோது,
மறைந்த பாரதப்பிரதமர் இந்திராகாந்தி,
என் வாழ்க்கையில் நான் அதிகம் பதட்டப்பட்டது அந்த நாளில் தான். 
தேசத்தின் நலம் கருதி,
என் மக்களுக்கெதிராகவே மிகுந்த மனவேதனையோடு நான் நடத்திய போர் இது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு,
தன் மக்கள் மேலேயே போர் தொடுப்பதை விட,
கொடுமை வேறெதுவாகவும் இருக்க முடியாது.
சூழ்நிலையால் இத்துரதிர்ஷடம் நடந்து விட்டது.
இதில் வெற்றி என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று பேட்டியளித்து,
சீக்கிய மக்களின் மனதை ஆறுதல் படுத்தினார்.
அத்தோடு நின்று விடாமல்,
ஒரு சீக்கியரை ஜனாதிபதியாக்கி,
தீவிரவாதிகளுக்குத்தான் நாம் எதிரானவர்கள்,
சீக்கியர்களுக்கல்ல எனும் சமிக்ஞையைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.
நம் தேசத்திலும், தேச அயலிலும் நடந்த இம் முன்னுதாரணங்களை,
நம் தலைவர்கள் மறந்து போனது விதியின் வன்மையே!

*****
வெற்றிவிழாவில் அன்றைய ஜனாதிபதி,
மேற்கண்டவாறு ஓர் உரை நிகழ்த்தியிருப்பின்,
அக் காலத்தில் அவரைக் கடவுளாகவே கருதியிருந்த,
சிங்களப் பெரும்பான்னை மக்கள்,
நிச்சயம் அவர் கருத்திற்கு மதிப்பளித்து,
நீண்ட காலமாய்ப் புரையோடிக்கிடந்த இனத்துவேசப் புற்றுநோயை,
வெற்றிக்களிப்புத் தந்த பெருமிதத்தில் ஒழித்திருப்பர்.
அச்சூழ்நிலையில் எதிர்கட்சிகள்,
அதிகாரத்தில் அமர்ந்திருந்த அவர்களது ஆட்சிக்கு எதிராக,
இனத்துவேசப் பிரச்சாரம் செய்திருந்தால் கூட,
நிச்சயம் அது எடுபடாமல் போயிருக்கும்.
பகையூட்டி அரசாலும் பழைய பண்பில்லா முறைமையும் ஒழிந்திருக்கும்.

*****
அதுமட்டுமன்றி,
புலிகளின் சில பிற்கால நடவடிக்கைகளால்,
ஓரளவு மனம் வருந்தியிருந்தும்,
“இனவெற்றிக்கு இவர்களை விட்டால் வேறு யாருமில்லை!"  எனும் கருத்தால்,
அவ்வருத்தத்தை சகித்திருந்த தமிழர்களும்,
“ஆகா! பகையொழித்து இத் தலைவர் பேசுகிறார்.
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’
இனியேனும் ஒன்றுபடுவோம்!”என நினைந்து,
அன்றைய ஜனாதிபதியின்பால் ஈர்க்கப்பட்டிருப்பர்.
பகை செய்த இரண்டு இனத்தையும்,
ஒருமித்து ஈர்க்கும் வாய்ப்புப் பெற்றிருந்தும்,
அன்றைய ஜனாதிபதி அவ் வாய்ப்பை நழுவ விட்டது,
இத்தேசத்தின் துன்பம் இன்னும் முடியவில்லை என்பதற்காம்,
தீச்சகுனம் என்பதன்றி வேறெதுவாய் இருக்க முடியும்?

*****
மேற் சொன்ன நல்ல விடயங்கள் ஏதும் நடக்கவில்லை.
அவை நடக்காதிருந்திருந்தால் கூட பரவாயில்லை.
போர் முடிந்த புண் ஆறும் முன்னரே,
மேற்சொன்ன நல்ல விடயங்களுக்கு,
எதிரானதான பலவிடயங்கள் நடந்தன.
அகதிகளைக் கையாண்ட விதம்,
தமிழ்பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட சட்டம் மீறிய நிர்வாகம்,
தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற நடந்த முயற்சி,
சிங்களத்தை தேசத்தி;ன் தனி மொழியாய் ஆக்க முயலும் காரியம்,
அரச ஆதரவுடன் தமிழ்ப்பிரதேசங்களில் பௌத்தத்தை விதைக்கும் செயல் என,
பல விடயங்களும் அடுத்தடுத்து அரங்கேறி,
இனத்துவேசப் பகை விதையை மேலும் தூவின.
ஒற்றுமைக்காய் பயன்படுத்தப்பட வேண்டிய பல நல்ல விடயங்களையும்,
அன்றைய ஆட்சியாளர்கள் பகைக்கான கருவியாக்கினர்.

*****
அதுமட்டுமல்லாமல்,
தமிழ்நாட்டுத் தமிழர்களின் இருப்பு
பாரதத்தின் சார்பை,
தமக்கு முழுமையாய் அமைய விடாது எனும் எண்ணத்தால்,
சீனத்தின் ஆதரவு தமது இனத்துவேச ஆட்சி முறைக்கு,
பெரிதும் சார்பாகலாம் எனக் கணித்து,
அவர் தம் செயற்பாடுகள் நிகழத்தொடங்கின.
இதனால் இந்தியா நம் தேசத்தின் மேல் கசப்புற்றது.
புலிகளை அழிக்க, பாரதத்தின் ஆதரவைப் பணிந்து வேண்டிய அன்றைய ஆட்சியாளர்கள்,
பின்னர் சீன, இந்திய நாடுகளின் பிராந்தியப் போட்டியை தமக்குச் சாதகமாக்கி,
இந்திய நட்பைப் புறந்தள்ளி சீனச்சார்புடன் நடக்க முயன்றனர்.

*****
இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புமிக்க,
இந்திய தேசத்தின் பகை,
நிச்சயம் இலங்கைக்கு நன்மை பயக்கப்போவதில்லை என்பதையும்,
‘மயிலே மயிலே இறகு போடு’ என்ற பாரதத்தின் கெஞ்சுதல்,
தொடரும் என எதிர்பார்க்க முடியாது என்பதையும் விளங்காது,
முன்னைய அரசு சீனாவுடன் கைகோர்த்து வீறுநடை போட முயன்றது.
மேல் சாத்வீக நடைமுறை  பாரதத்திற்கு வெற்றி தராத பட்சத்தில்,
சிறகு பிடுங்கும் படலத்தை அது மீண்டும் தொடங்கலாம் என்பதை,
முன்னைய அரசு ஏனோ மறந்தது.
முன்பே அக்காரியத்தை இங்கு பாரதம் செய்தமை வரலாற்று உண்மை.

*****
சீன தேசத்தின் ஆதரவு தமக்கு இருக்கையில் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாது,
எனும் கருத்து அன்றைய இலங்கை அரசுக்கு இருந்தது.
அக்கருத்து இலங்கைக்கு நன்மை பயக்கும் ஒரு கருத்தாய் அமையமுடியாது என்பதை,
ஏனோ முன்னைய தலைமை நினைய மறுத்தது.
‘அயலோ, தாயோ’ என்பது தமிழர்தம் பழமொழி.
அயல் நாட்டைப் பகைத்து,
எங்கோ இருக்கும் சீனாவின் பலத்தை நம்பியது,
முன்னைய தலைமையின் பிழையான கணிப்பு.
(அத் தவறான கணிப்பினால்தான்,
முன்னைய ஜனாதிபதி,
தொடர்ந்த தேர்தலில் தோல்வியடையவேண்டி வந்தது.
தேர்தல் தோல்வியின் பின்னர்,
வல்லரசு சக்திகள் பல தனக்கெதிராய்ச் செயல்பட்டதாய்,
முன்னைய ஜனாதிபதி வெளிப்படப் பேசியிருந்தார்.
இது காலம் கடந்த ஞானம்.)

*****
இங்ஙனமாய், தேவையற்று
இனப்பகையை ஊதிப்பெரிதாக்கி அந்த நெருப்பில்,
குளிர்காயத் தலைப்பட்ட முந்தைய அரசினர்,
மாற்றினத்தாரிடம் கையாண்ட அடக்குமுறையில் ருசிகண்டதால்,
அதை மெல்ல மெல்ல விரிவித்து,
தன் இனத்தாரிடமும் செலுத்த முயல,
அவர்களுக்குள்ளேயே பகை விளையத்தொடங்கியது.
இனத்துவேச எழுச்சியில் கொண்டிருந்த நம்பிக்கையால்,
முன்னைய ஜனாதிபதி தன் பதவிக்காலம் இரண்டாண்டுகள் இருக்கத்தக்கதாக,
ஜனாதிபதித் தேர்தலை திடீரென அறிவிக்க,
அவரின் பகைவர் எல்லாம் ஒன்று சேர்ந்து,
யாரும் எதிர்பாராத வண்ணம் அவர் ஆட்சியைக் கைப்பற்றினர்.
உலகமே வியந்த மாற்றமிது.

*****
நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமை தலைகீழாகி,
புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் அமெரிக்க, இந்திய நட்புக்கு முன்னுரிமை கொடுத்து,
சீனச்சார்பைப் புறந்தள்ளிச் செயற்பட்டனர்.
கோடிக்கணக்கில் முதலிட்டு சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட,
கடல் நகரத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது
அதற்கான அடையாளம்.

*****
அதுவரை எதிரிக்கட்சிகளாகவே இருந்த,
சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்,
மேற்படி ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்,
இலங்கை வரலாற்றில் முதன்முதலாக ஒன்றிணைந்தன.
இரு கட்சியும் ஒன்றிணைந்ததால்,
அதுவரை இனப்பிரச்சனைத் தீர்வில்,
ஒருவர் ஏற மற்றவர் இழுத்த நிலைமாறி,
சுமுகசூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டாயிற்று.
இரு அணித்தலைவர்களும் கூட,
இனப்பிரச்சினைத் தீர்வின் அவசியத்தை,
வெளிப்பட உரைத்து நற் சமிக்ஞை காட்டினர்.
நம் நாட்டைப் பிடித்த துன்பம் தொலைந்தது என நினைந்து,
பலரும் மகிழ்ந்தனர்.

*****
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.
புதிய ஜனாதிபதியின் மென்மைப் போக்கை,
தமிழ், சிங்களத் தலைமைகள் இரண்டுமே புரிந்து கொள்ளவில்லை.
அதனால் அடுத்தடுத்து தலையிடிகளை,
புதிய ஜனாதிபதி சந்திக்க வேண்டிவந்தது.
உறுதியான முடிவெடுக்காத அவரின் நழுவல் போக்கும்,
எதிராளிகளை உறுதிப்படுத்திற்று.
வரலாற்றில் தமக்கு கிடைத்தற்கரியதாய்க் கிடைத்த,
இவ் அற்புத சந்தர்ப்பத்தை,
காலம், இடம், வலி என்பவை அறிந்து,
இராஜதந்திரத்துடன் பயன்படுத்தத் தெரியாமல்,
தமிழ்த்தலைவர்களும் குழப்பியடித்தனர்.
இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த பின்பு,
பழையபடி ஆட்சி ஏற முன்னாள் ஜனாதிபதியும்,
அவர் குழுவினரும் முனைந்து நிற்கின்றனர்.
முடிவு என்னாகுமோ, எவர்க்கும் தெரியவில்லை.

*****
அமெரிக்க சார்பினாலும், புதிய வலிய தலைமையினாலும்,
பாகிஸ்தானின் பகை பற்றிய கவலை சற்று நீங்க,
தன்னை வலிமைப்படுத்தி நிற்கும் இந்தியாவினால்,
“தன் பிராந்திய வல்லரசுத் தகைமைக்குத் தீங்கு வருமோ” எனும் அச்சம்,
இன்று சீனாவைப் பற்றியிருக்கிறது.  
தென்கிழக்காசியாவில் போர் வெடித்தால்,
அச்சூழலில் பிரதேச முக்கியத்துவம் பெறப்போகும் இலங்கை,
இன்று அவ்விரு நாடுகளின் ஈர்ப்புக்கான தளமாகியிருக்கிறது.

*****
இந்திய, அமெரிக்கக் கூட்டு ஆதரவை இழப்பதால்,
இலங்கை பேரழிவுகளைச் சந்திக்கலாம்.
அமெரிக்காவின் உலகளாவிய இன்றைய அதிகாரம்,
அதன் ஆளுமைக்கு மறைமுகமாக உட்பட்டு நின்று,
வெளியே ஜனநாயகச் சாயல் காட்டும்,
ஐ.நா. போன்ற உலக அரங்குகளில்,
இலங்கையைக் குற்றவாளியாய்; நிறுத்த,
பெரிதும் துணை செய்யும் என்பது நிஜம்.
அது போலவே அயல் நாட்டுப் பகையின் மறைமுக நகர்வு,
இலங்கையைப் பழையபடி போர் மண்ணாக்கி விடவும் கூடும்.
பழைய ஆட்சியாளர்களை நம்பி,
இலங்கையைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முனைந்த சீனாவும்,
தன் நோக்கத்தை விட்டுவிடப்போவதில்லை.
அதன் நகர்வு எப்படியிருக்கப்போகிறது என்பதுவும்,
புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்தச் சூழ் நிலைகளை இலங்கை எப்படிச் சமாளிக்கப் போகிறது?
இதுதான் இன்று இலங்கையின் முன் எழுந்து நிற்கும்,
'மில்லியன் டொலர்' கேள்வியாகும்.

*****
இப்படியாய்ப் புலிகளையும் , தமிழினத்தையும்  அடக்கவென,
பல வல்லரசுகளோடும் மாறிமாறிக் கைகோர்த்த இலங்கை அரசு.
இன்று அவற்றிற்கிடையிலான பகை வலையில் வீழத்தயாராகி நிற்கிறது.

*****
ஒருவேளை நிறையப் புத்திசாலித்தனத்தையும்,
மாற்று அரசுகளின் பலவீனங்களையும் பயன்படுத்தி,
இச்சூழ்நிலையை வெல்லலாம் என,
பழைய ஆட்சியாளர்கள் போல் இனிவரும் ஆட்சியாளர்களும் நினைத்தல் கூடும்.
இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வீணான வேலையாய் முடியும்.
இப்பிரச்சனைகளைச் சமாளிக்க மிகச் சுலபமான ஒரு வழி இருக்கிறது.
அதுதான் நிரந்தரமான வழியாகவும் இருத்தல் கூடும்.
அவ்வழிதான் என்ன?

*****

ஒரு நிமிடம் மனச்சுத்தியோடு இனத்துவேசத்தை அழிக்க,
எல்லா இனத்தாரும் ஒன்றுபட்டு முடிவு செய்து விட்டால்,
சிறிய இலங்கை பெரிய பலம் பெற்றுவிடும்.
பலம்பெற்ற இலங்கைக்குள் வெளிச்சக்திகள்,
வீணே புகுதல் முடியாத காரியமாகிவிடும்.
இதுவே மேல்ப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான சுலபமான வழி.

*****
போருக்கான செலவை விட,
சமாதானத்திற்கான செலவு மிகக் குறைவானதே,
இனப்பிரச்சனையில் புத்தியைப் பயன்படுத்துவதை விட,
இதயத்தைப் பயன்படுத்துவதே உகந்த செயல்.
திறந்த இதயத்தோடு செயல்பட்டால்
சகோதரர்களாய் வாழ்ந்த மக்களுக்குள்,
மீண்டும் ஒற்றுமையை உருவாக்குவது சுலபம்.

*****
சிங்களவர்களும், தமிழர்களும் மொழியால் நெருங்கியவர்கள்.
மதத்தால் உறவானவர்கள்.
புத்தரைச் சிங்களவர்களுக்கு உபகரித்த பெருமை இந்து மதத்திற்கு உண்டு.
குடும்ப உறவு முறை, தெய்வநம்பிக்கை என,
பல்வேறு விடயங்களால் இரு இனங்களுக்கிடையில் நெருங்கிய உறவிருந்தும்,
அவ் ஒற்றுமைகளை உறவாக்காமல் வேற்றுமைகளை விதையாக்கி,
பகை வளர்த்தமை நம் அறியாமையின் அடையாளம்.

*****
பிரிந்து கிடக்கின்ற இத் தேச மக்கள்,
உடனடியாய் உணர வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
புத்தியை மட்டும் நம்பி, தத்தம் இன வெற்றிக்காய்,
கட்சிகளால் போடப்படும் சில கணக்குகள்,
இந்து சமுத்திரத்தின் அழகிய முத்தை,
அச்சமுத்திரத்தின் ஆழத்தில் மூழ்கடித்து விடும் ஆபத்தை,
மிக அருகில் கொணர்ந்திருக்கின்றன.
அவை பற்றி மக்கள் உடன் அறியவேண்டும்.
மக்களுக்கு அவ் ஆபத்தை அறிவிக்கும் கடமை அறிஞர்களுக்கு உண்டு.
தம் கௌரவம் நோக்கி அவர்கள் மௌனித்து இருப்பின்,
அது பெரும் தேசத்துரோகமாகிவிடும்.
மக்களுக்கு மட்டுமன்றி,
தத்தம் தலைமைகளுக்கும் அவ் ஆபத்தை உணர்த்தி,
இத்தேசத்தைக் காக்க எல்லா இன அறிஞர்களும்,
ஒன்றுபட்டு செயலாற்ற முன் வரவேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.

*****
ஒருவரையொருவர் அடிமைப்படுத்தும் எண்ணம் ஒழியாது விட்டால்,
ஒட்டுமொத்த இலங்கையரும் வேறெவர்க்கும் அடிமையாகும் காலம்,
வெகு விரைவில் நம்மை நெருங்கிவிடும்.
மாற்றான் புகுந்தால் இந்த நாடு மண்ணாகும்.
உண்மை உணர்ந்து இத் தேசத்தின் எல்லா இனத்தலைவர்களும்,
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க,
இனியேனும் முன்வருவரா?
அல்லது தொடர்ந்தும் கனியிருக்கக் காய் கவர முயல்வரா?
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
வரப்போகும் நல்ல பதிலில்தான்,
இத்தேசத்தின் வாழ்க்கை இருக்கிறது.

*****

 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.