ஆகமம் அறிவோம் | பகுதி 3 | ஆச்சாரிய லட்சணம்

ஆகமம் அறிவோம் | பகுதி 3 | ஆச்சாரிய லட்சணம்
 


ங்களுக்கு இம்முறை,
ஆகமங்களின் சரியா, கிரியா பாதங்களில்,
கூறப்படும் விடயங்களுக்கான எஜமானர்களாய்க் கருதப்படும்,
ஆச்சாரியர்களின் லட்சணங்கள் பற்றிச் சொல்லப்போகிறேன்.
இந்த லட்சணங்கள் அமையாத ஒரு சில ஆச்சாரியர்கள்,
நான் கூறப்போவது கண்டு சற்று கொதிப்படையலாம்.
ஆனால் இங்கு எனது கருத்து என்று,
எதையும் நான் சொல்லப்போவதில்லை.
ஆகமங்களில் சொல்லப்பட்டவற்றையும்,
ஆகமம் கற்ற அறிஞர்களால் சொல்லப்பட்டவற்றையும் மட்டுமே,
இவ் அத்தியாயத்தில் நான் சொல்கிறேன்.
தேவையில்லாமல் என்னோடு சண்டைக்கு வரவேண்டாம் என்று,
இப்போதே கேட்டுக் கொள்கிறேன்.
 
 
 
 CLICK HERE TO DOWNLOAD
 

 

 



நமது ஆகமங்கள்,
பிராமணர், ஷத்திரியர், வைஷிகர், சூத்திரர் ஆகிய நால் வர்ணத்தவருமே,
ஆச்சாரியராகத் தகுதியுடையவராவர் என சொல்கின்றன.
ப்ராம்மணா: க்ஷத்ரியா: வைஷ்யா: சூத்ரா: ஸ்ரீந்த குலோத்பவா:
ஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந என,
இக்கருத்தை சுப்ரபேத ஆகமம் உறுதிபடச்சொல்கிறது.

கல்லானது சிவ சம்ஸ்காரத்தினாலன்றோ,
போக மோட்சங்களைத் தருவதாய் மாறுகின்றது.
கல்லே சிவத்தன்மை அடையுமாகில்,
சூத்திரம் அங்ஙனம் ஆகான் என்பது எங்ஙனம்?
என்று ஸ்கந்த காலோத்தர ஆகமம்,
கேள்வி எழுப்புகின்றது.
வாஷாண ஸ்ரீவஸம்ஸ்காராத் புக்தி முக்தி ப்ரதோ பவேது
பாஷாண: ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது

சைவபுராணம் பசு சாத்திரத்தைப் பற்றாதுவிட்டு,
சிவ சாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமமணர் முதலான,
நான்கு வர்ணத்தாருமே ஆச்சாரியர் யாவரென்று கூறுகிறது.
ஸ்ரீவ ஸாஸ்த்ர ஸமாயுக்தா: பஸ்ரீரி ஸாஸ்த்ர பராங்முகா:
ப்ராம்மணாதி சதுர்வர்ணா ஆசார்யாஸ் ப்ரகீர்த்திதா:



சிதம்பரம் மறைஞானசம்பந்த சுவாமிகள்,
ஆகமங்களை நன்கு ஆராய்ந்து,
‘சைவசமய நெறி’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
அந்நூல் பற்றி முன்னரே சொல்லியுள்ளேன்.
அந்நூலில் அந்த நாயனார்,
ஆச்சாரிய இலக்கணம், மாணாக்கர் இலக்கணம்,
பொது இலக்கணம் என்று மூன்று அதிகாரங்களை அமைத்துள்ளார்.
அந்நூல் பற்றி பின்னர் எழுதவுள்ளேன்.
அந்நூலில் அவரும் நான்கு வர்ணத்தாருக்கும்,
ஆச்சாரிய உரிமை உண்டு என்கிறார்.
உத்தமராவார் அவர் தம்முள்ளும் சிறப்புடைய
உத்தமரே நாற்குலத்துள்ளோர்



அதுமட்டுமல்லாமல்,
நான்கு வர்ணத்தாருள்ளும் காம முதலிய மனக்குற்றங்களும்,
அங்கவீனம் முதலிய உடற்குற்றங்களும்  இல்லாதவர்களே,
ஆச்சாரியராகத் தகுதி உடையவர் என்றும் சொல்கிறார்.
அவருள்ளும்  உள்ளும் அவலத்தை அற்றார்
அவரவருள் தேசிகர்  ஆதற்கு.



ஆச்சாரியருக்குரிய தகுதிகள்

ஆச்சாரியருக்குரிய தகுதிகள் என்ன?
இந்த விடயம் பற்றி,
நமது நாட்டைச் சேர்ந்த,
ஆகமப் புலமைபெற்ற பேரறிஞர்களான,
அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக்குருக்கள்
பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் ஆகியோர்,
ஆகம மேற்கோள்களைக் கொண்டு முறையே,
தமது மகோற்சவ விளக்கம்,
சைவத்திருக்கோயில் கிரியை நெறி ஆகிய நூல்களில்,
ஆச்சாரியர்களின் தகுதி பற்றித் தெளிவாய்க் குறிப்பிட்டுள்ளனர்.



அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் உரைப்பவை

முதலில் நமது அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,
ஆச்சாரிய லட்சணம் பற்றி எழுதிய,
விடயங்களைக் கீழே தருகிறேன்.
உடல் ஊனம் அற்றவராய் இருத்தல்.
சமய ஆசார சீலராய் இருத்தல்.
ஆடம்பரம் இன்றி இருத்தல்.
பொறாமை முதலிய தீய குணங்கள் இன்றி இருத்தல்.
என்பனவான நற்குணங்களைப் பெற்றும்,
  ✷ பூணூல்
  ✷ உருத்திராட்சம்
  ✷ தோள்ச் சால்வை
  ✷ விபூதி
  ✷ தலைப்பாகை
எனும் ஆச்சாரியருக்குரிய பஞ்சமுத்திரைகளை,
தரித்தும் உள்ளவரே,
ஆச்சாரியராவதற்குத் தகுதியுடையவராவார்.
ஆச்சாரியர் கிரியைகளை மாறுபட்டுச் செய்தால்,
அவர் சயரோகத்தால் தண்டிக்கப்படுவார் என்கிறார்.



பேராசிரியர்  கைலாசநாதக்  குருக்கள் உரைப்பவை

கைலாசநாதக்குருக்கள் அவர்கள்,
பிரதிஷ்டைக் கிரியைகளை நிகழ்த்துகின்ற,
ஆச்சாரியன்
சைவசித்தாந்தத் தத்துவஅறிவு.
தேவர், அக்கினி, குரு ஆகியோரிடம் பக்தி.
நல்லொழுக்கம்.
சிறந்த தவஒழுக்கம்.
மக்கள் அன்புக்குப் பாத்திரமாகும் தன்மை.
இன்னல்களைத் தாங்கும் திறன்.
செல்வமிகுதி.
புலனடக்கம்.
ஆசை அற்ற தன்மை.
வேதப் பொருள் சுட்டும் தத்துவம் அறிதல்.
தத்துவவாதத் திறன்.
தர்மம்.
கிரியைகளில் நிபுணத்துவம்.
பற்றற்ற தன்மை.
பெருமையற்ற இயல்பு.
மற்றவர்களை இழித்து இகழாத பண்பு.
உயரிய விடயங்களில் தியானம்.
சிவக்கடமையில் ஈடுபாடு.
சாத்திர ஞானம்.
சமய ஆசாரம்.
அழகு.
என்பவற்றை உடையவனாயும்,
குடுமி உடையவனாயும்,
தீட்சை பெற்றவனாயும்,
மந்திரங்கள், கிரியைகள், முத்திரைகள் ஆகியவற்றை,
நன்கு அறிந்தவனாயும்,
பதம், வாக்கியப்பிரமாணங்களை அறிந்தவனாயும்,
வாஸ்து வித்தையில் பயிற்சி மிக்கவனாயும்,
சிற்பக்கலை அறிவு வாய்த்தவனாயும்,
சாமுத்திரிகா லட்சணங்களுடன் கூடியவனாயும்,
இருக்கவேண்டும் என்கிறார்.



நமது யாழ்ப்பாணத்து ஆலயங்களில்,
குமாரதந்திரம் எனும் ஆகமத்தை,
அடிப்படையாய்க் கொண்டே,
கிரியைகள் நடத்தப்படுவதாய்,
பல அந்தணர்களும் கூறிவருகின்றனர்.
குமாரதந்திரம் பெரும்பாலும் முருகன் ஆலயங்களிலேயே,
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ் ஆகமம் சிவாகமங்களில் ஒன்றன்று.
இது சிவாகமங்களில் ஒன்றான லளித ஆகமத்தின்,
துணை நூலாகக் கருதப்படுகின்றது.
இவ் ஆகமத்தில் ஐம்பத்திரண்டு படலங்கள் உள்ளன.
அதில் வரும் ஐம்பதாவது படலம்,
ஆச்சாரிய லட்சணம் பற்றிக் கூறுகிறது.
அப்படலத்தில்,
தகுதி, தகுதியீனம் என இருவகையாய்,
ஆச்சாரிய லட்சணம் உரைக்கப்பட்டுள்ளது.



குமாரதந்திரம் உரைக்கும் ஆச்சாரிய தகுதிகள்

ஆகமங்களை அறிந்திருத்தல்.
பதினெட்டுப் புராணங்களையும் அறிந்திருத்தல்.
நான்கு வேதங்களையும் அறிந்திருத்தல்.
வேத அங்கங்கள் ஆறினையும் அறிந்திருத்தல்.
ஜபம் செய்யும் முறையை அறிந்திருத்தல்.
ஹோமம் செய்யும் முறையை அறிந்திருத்தல்.
தெய்வம், அக்கினி, குரு ஆகியோரிடம் பக்தி கொண்டிருத்தல்.
பக்தி உள்ளவனாய் இருத்தல்.
ஆரோக்கியம் உள்ளவனாய் இருத்தல்.
பரிசுத்தனாய் இருத்தல்.
குறைவில்லா அங்கங்களைப் பெற்றிருத்தல்.
சைவ ஆசார சீலனாய் இருத்தல்.
உண்மை பேசுகிறவனாய் இருத்தல்.
புலனடக்கம் உள்ளவனாய் இருத்தல்.
ஆகமங்களில் ஈடுபாடுடையவனாய் இருத்தல்.
குடுமி உள்ளவனாய் இருத்தல்.
திருநீறு அணிந்திருத்தல்.
ஆடம்பரமற்றவனாய் இருத்தல்.
பொறாமை இல்லாதவனாய் இருத்தல்.
மனச்சலனமற்றவனாய் இருத்தல்.
தவம் செய்பவனாய் இருத்தல்.
எளியவனாய் இருத்தல்.
ஆசாரியனுக்குரிய ஐந்து அங்கங்களைத் தரித்திருத்தல்.

இவற்றை உடையவரே,
கடவுட் பூசை தகுதி உடையவராவார் என்று,
குமாரதந்திரம் சொல்கிறது.



குமாரதந்திரம் உரைக்கும் ஆச்சாரிய தகுதியீனங்கள்

அழகில்லாதவன்.
தெய்வநம்பிக்கை இல்லாதவன்
குறைந்த அங்கங்களை உடையவன்.
அவதூறு பேசுபவன்.
பிறர் மனைவியோடு தொடர்புடையவன்.
அசுத்தமானவன்.
பூ விழுந்த கண் உடையவன்.
குறும்பன்.
திமிர் பிடித்தவன்.
ஆடம்பரமானவன்.
கள் குடிப்போன்.
புலாலுண்பவன்.
பாவச் செயல்களைச் செய்வோன்.
வியாதி உடையோன்.
முடவன்.
அளவுக்கு மிஞ்சிய அங்கங்களைப் பெற்றவன்.
கருமையான பற்களை உடையவன்.
வக்கிர சரீரம் உள்ளவன்.
விதவைக்குப் பிறந்தவன்.

இது முதலான தகுதியீனங்களை உடையோனை,
பூசைக்குத் தகுதியில்லாதவனாய்,
உரைக்கிறது குமாரதந்திரம்.
ஆசையின் காரணத்தால் இத்தகையோரை,
நாம் பூசைக்குச் சேர்த்துக் கொண்டால்,
அதனால் பூசை செய்கின்றவனாகிய கர்த்தாவும்,
பூசையின் எஜமானாகிய தலைவனும்,
நாசத்தை அடைவார்கள் என்று அவ் ஆகமம் கூறுகிறது.



இதுதவிர,
ஆச்சாரியனுக்கான சில சலுகைகளையும்,
இவ் ஆகமம் எடுத்துக் கூறுகிறது.
❚➤ திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஆகியவற்றைச் செய்யும் போது,
இடைநடுவில் ஆச்சாரியனுக்கு பிறப்பு, இறப்பு சம்பந்தமான தீட்டுக்கள் வந்தால்,
அது அவனுக்குத் தீட்டு ஆகாது.
❚➤ அக்காலத்தில் ஆச்சாரியனே சென்று பிதுர்க்காரியம் செய்யவேண்டி இருந்தால்,
இறப்பு சம்பந்தமான முதல்நாள் கிரியை மட்டும் சென்று செய்துவிட்டு குளித்த பிறகு,
நேராகக் கோயிலுக்கு வந்து இடையில் விட்ட ஆலயக் கிரியைகளை,
அவனே செய்யலாம். தாமரை இலையில் எங்ஙனம் தண்ணீர் ஒட்டாதோ,
அதுபோலவே இக்காலத்தில் ஆச்சாரியனை தீட்டுக்கள் பீடிக்காது.
❚➤ தொடக்கிய ஆலய காரியத்தை முடித்த பிறகே,
மரணம் சம்பந்தமான மற்றக் கிரியைகளை,
வீடு சென்று அவன் செய்யவேண்டும்.
இங்ஙனமாய் குமாரதந்திரத்தின்,
ஆச்சாரிய லட்சண விதிப்படலத்தில்,
ஆச்சாரியர்களுக்கான சலுகைகள் உரைக்கப்பட்டுள்ளன.



உத்தரகாமிக ஆகமத்தில்,
முப்பதாவதாக அமைந்த பிராயச்சித்த படலத்தில்,
ஆச்சாரியர்கள் பற்றிய வேறு சில செய்திகள் பதிவாகியுள்ளன.
காது கேட்காதவர்கள்.
பாப ரோகம் உள்ளவர்கள்.
வலிப்பு போன்ற நோயுள்ளவர்கள்.
அவலட்சண உருவை உடையவர்கள்.
குறைந்த அவயவம் உடையவர்கள்.
நீளமான அவயவம் உடையவர்கள்.
சிகை இல்லாதவர்கள்.
சம்பளம் வாங்கிப் பூசை செய்பவர்கள்.
என்பவர்களால் பூசை செய்யப்பட்டால்,
அதற்காக என்னென்ன பிராயச்சித்தங்கள் செய்யவேண்டும் என்று,
இப் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.



அதுதவிர,
❚➤ குறைந்த அல்லது வளர்ச்சியடைந்த அங்கம் உள்ளவர்களாலும்,
சிகை இல்லாதவர்களாலும் செய்யப்பட்ட பூசையால்,
ராஜ்ஜியத்தில் குழப்பம் ஏற்படும் என்றும்,

❚➤ கூலிக்குப் பூசை செய்கின்ற ஆச்சாரியர்கள்,
லிங்க பிரதிஷ்டை முதலிய காரியங்கள் செய்திருந்தால்,
மறுபடியும் லிங்க பிரதிஷ்டை செய்து,
சாஸ்திரோக்தமாக பூசையைச் செய்யவேண்டும் என்றும்,
இவ் ஆகமம் குறிப்பிடுகின்றது.



மேற்கூறியவை,
ஆகமப்பிரமாணமாக உள்ள விடயங்கள்.
இவ் விடயங்களை ஆலய தர்மகர்த்தாக்களும்,
அந்தணர்களும் அறிந்திருப்பது நல்லது.
சமய அறிஞர்களாய்ச் சொல்லிக்கொள்ளும் பலருக்கும் கூட,
இவ்விடயங்கள் பற்றித் தெரியாதது பெரிய குறை.



உதாரணத்திற்கு நடந்த ஒன்றைச் சொல்கிறேன்.
சில காலத்தின் முன்பு,
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்,
மகோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,
அதனை நடத்திய ஆச்சாரியருடைய மகன்,
சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவ் ஆலயத்தினர்,
கூடி ஆராய்ந்த பின்னர் அந்தணரை அழைத்து,
கட்டிய காப்பைக் கழற்றி வைத்துவிட்டு செல்ல உத்தரவிட்டனர்.
வேறொரு அந்தணருக்குக் காப்புக் கட்டி,
உற்சவத்தினை நடாத்தி முடித்தனர்.



இதனை யாரையும் குறை சொல்ல நான் இங்கு குறிப்பிடவில்லை.
ஆகம அறிவின்மையால்,
நாம் தவறிழைக்கிறோம் என்பதை விளங்கச் செய்யவே இதனைச் சொன்னேன்.
கொடுமை என்னவென்றால்,
பேசுகிற எல்லோரும் தமக்கு ஆகமஅறிவு உள்ளதாகவே உரைத்து,
தாம் தாம் விரும்பியவற்றை இவையே ஆகமநெறி என்று,
தாமும் மயங்கி மற்றவரையும் மயக்குகின்றனர்.
நானும் ஆகம அறிவு உடையவன் அல்லன்,
ஆனால் ஆகமம் பற்றி அறிய வேண்டும் என்ற விருப்பால்,
நூல் பிரமாணத்தோடு நான் தேடியவற்றை மட்டுமே,
இத்தொடரில் எழுதி வருகிறேன்.
சைவ உலகம் பயன் கொள்ளட்டும்.



குறிப்பு:- இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ள நூல்கள் கம்பன்கழக நூலகத்தில் உள்ளன. விரும்புவோர் அவற்றைப் பார்வையிடலாம்.

கிரகணங்களின் போது,
ஆலயங்களைப் பூட்டவேண்டுமா?
அதுபற்றி அடுத்தவாரம்.
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.