ஆண்டவனின் அம்மை: பகுதி 7 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அருட்கலசம் 29 Nov 2019
(சென்ற வாரம்)
அத்தேயத்திலேயே ஓர் வணிகன் புதல்வியை, வதுவை செய்து வாழத் தொடங்கினான் பரமதத்தன். அங்கும் அவன் இல்லறம் நல்லறமாயிற்று.
⬥ ⬥ ⬥
உளம் மகிழ பரமதத்தனின் அப்புதிய இல்லறமும் சிறந்தது.
காரைக்காலில் நம் தெய்வத்தாயாகிய புனிதவதியை,
கைவிட்டுவந்த செய்தியைத் தன் அகத்தினுள் மறைத்ததன்றி,
வேறு குறையேதும் இல்லாமல் இல்லறம் நிகழ்த்தினான் பரமதத்தன்.
மங்கள மனைமாட்சி சிறக்க அதன் நன்கலமாய்,
அவனது புதிய மனைவி ஓர் நன்மகவைப் பெற்றெடுத்தாள்.
பிறந்த அப்பெண்குழந்தைக்குப் பெயரிட விழவெடுத்தான் பரமதத்தன்.
தெய்வம் என்றஞ்சி பிரிந்து வந்த நம் புனிதவதியாரின் நினைவு,
அவன் அகத்தினுள் ஆழக்கிடந்தது.
அதனால், பெற்ற தன் மகவுக்கு பெருந்தெய்வமான,
அப்புனிதவதியின் உற்ற நாமத்தையே இட்டு உளம் மகிழ்ந்தான் அவ் ஏந்தல்.
பெறலருந் திருவி னாளைப் பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல் அணங்கனாள் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியுறாமற் பொதிந்த சிந்தனையினோடு
முறைமையின் வழாமை வைகி முகமலர்ந்தொழுகு நாளில்
மடமகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்(பு)
உடனுறை(வு) அஞ்சி நீத்த ஒருபெரு மனைவியாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடனமைத்(து) அவர்தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.
⬥ ⬥ ⬥
கடல்கடந்து சென்ற பரமதத்தன்,
வளம் பல பெருக்கிப் பின்னர் வாழ்கிறான் பாண்டி நாட்டில் என்பதாய்,
காரைக்கால் மண்ணில் கதைகள் பரவலாயிற்று.
வந்த அச்செய்தியால் வாடினர் உறவினர்.
உற்ற அச்செய்தி உண்மையோ என அறிய,
கிளைஞரை அனுப்பி விசாரித்தனர்.
உண்மைச் செய்தி அதுவென,
வந்தவர் உரைக்கக்கேட்டு வாடிய அவர்கள்,
யாது செய்வதென ஆராய்ந்தனர்.
இறுதியில் அன்னையை அழைத்துச் சென்று,
அவள் காதல் கணவனின் கைகளில் சேர்ப்பதே,
தம் கடமையாம் என முடிவு செய்தனர்.
அம்மொழி கேட்டபோதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்தராகி 'மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையினாளைக் கொண்டுபோய் விடுவ' தென்றார்.
⬥ ⬥ ⬥
அதன்போது நம் அன்னை தெய்வத்தன்மை பெற்றிருந்தாளில்லை.
சாதாரண ஒரு பெண்ணாய்,
காமம் வருத்தக் கணவனின் எண்ணத்தால் வாடி அவள் வாழ்ந்ததை,
நமக்கு உணர்த்துதற்காய்,
நம் தெய்வத்தாயின் தெய்வீகம் குறைத்து,
கொம்மைவெம் முலையினாள் என,
தெய்வச் சேக்கிழார் வர்ணிப்பது ஒரு நோக்கத்துடனேயாம்.
சிவனருளால் மாங்கனி கிடைத்த பின்பும்,
நம் அன்னை தனைக்கொண்ட நாயகனுக்காய்,
இல்லறமங்கையாய் ஏங்கிக் கிடந்ததை,
நம்போன்றோர்க்கு நயமுற வலியுறுத்தற்காகவே,
அன்னையை அங்ஙனம் அவர் வர்ணித்தார் என்க!
அதனால் இல்லறத்திற்கு உகந்தவள் அல்லல் இம்மங்கை,
அதனாற்றான் பரமதத்தன் அவளைப் பிரிந்தான் என,
உரைப்பார்தம் மடமைக்கொள்கையை மறுத்துரைக்கிறார் சேக்கிழார்.
⬥ ⬥ ⬥
அன்னையை அழகியதோர் பல்லக்கில் ஏற்றி,
உறவினர்கள் பயணம் தொடங்கினர்.
அன்னை பல்லக்கில் ஏறி அமர்ந்த அவ் அரியகாட்சி,
திருமகள் செந்தாமரையில் ஏறி அமர்ந்ததற்கு ஒப்பாயிற்றாம்.
இங்ஙனமாய் நம் அன்னையின் தெய்வவடிவை,
ஏற்றமுற வர்ணிக்கிறார் நம் சேக்கிழார் பெருமான்.
வணிகர் குல மரபிற்கேற்ப பல்லக்கைச் சுற்றி அழகிய திரைகளிட்டு,
அன்னையை மறைத்து அப்பல்லக்குப் பயணம் தொடங்கிற்றாம்.
அப்பல்லக்கைச் சூழ்ந்து அன்பு செய் சுற்றத்தாரும்,
அழகிய தோழியரும் அணிவகுத்துப் புறப்பட்டனர்.
மாமணிச் சிவிகை தன்னில் மடநடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந் தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு எழினி வீழ்த்துக் காதல்செய் சுற்றத் தாருந்
தேமொழி யவருஞ் சூழச் சேணிடைக் கழிந்து சென்றார்.
⬥ ⬥ ⬥
நம் அன்னையின் திருமணத்தின்போது,
அவளை மென்னகை மயில் என வர்ணித்த தெய்வச்சேக்கிழார்,
இங்கும் அவளை மடநடை மயில் என மீண்டும் வர்ணிக்கின்றார்.
இவ் ஒத்த வர்ணிப்பினால்,
மணம் செய்த நாளில் போலவே இப்போதும் நம் அன்னை,
மணாளனுக்கு ஏற்ற மங்கையாய் விளங்குதலை,
மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறார் அவர்.
⬥ ⬥ ⬥
சிலபகல் கழிந்து செந்தமிழ் திருநாடான பாண்டிநாட்டை,
அன்னையும் அவர் சுற்றத்தாரும் வந்தடைந்தனர்.
கணவன் தாங்கத் தவறிய நம்அன்னையைத் தாங்கி,
அப்பல்லக்கும் பாண்டிநாடும் பாக்கியம் பெற்றுய்ந்தன.
தேவியை அழைத்து வந்த செய்தியை,
பரமதத்தன்பால் சொல்லி அனுப்பினர் அச்சுற்றத்தார்.
சிலபகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடெய்தி
மலர்புகழ்ப் பரமதத்தன் மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவியாரைக் கொண்டு வந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவனார்க்குச் சொல்லிமுன் செல்லவிட்டார்.
⬥ ⬥ ⬥
இப்பாடலிலும் பரமதத்தனைப் பாராட்டி நிற்கிறார் நம் தெய்வச்சேக்கிழார்.
இரண்டாம் அடியில் விரிந்த புகழினைக் கொண்ட பரமதத்தன் என்பதை உரைக்க,
மலர்புகழ்ப் பரமதத்தன் எனும் தொடரை இடுகிறார் அவர்.
மலர் புகழ் என்பது வினைத் தொகையாம்.
வினைத்தொகை எனும் இலக்கணம் முக்காலத்தையும் உள்ளடக்கி நிற்பது.
முன்பும் மலர்ந்த புகழ், இப்போதும் மலருகிற புகழ், இனியும் மலரும் புகழ். என,
இம்மலர்புகழ் எனும் தொடர் விரியுமாம்.
பெரும்செல்வன் நிதிபதியின் புதல்வனாய் முன்பும் புகழ் பெற்றவன் இப் பரமதத்தன்.
பாண்டிநாட்டில் பலரும் போற்ற இப்போதும் அவன் புகழ்பெற்று நிற்கிறான்.
ஆண்டவனின் அன்னையாகி அழியாப்புகழ் பெற்ற நம் அன்னை,
தன் பெண்ணுடல் உதறிப் பேயுருக்கொண்டு தெய்வமாய்த் திகழக் காரணமானவன் ஆதலால்,
அன்னையின் அருட் புகழ் நிலைக்கும் எக்காலத்தும் அவன் புகழும் நிலைக்குமாம் என்பதால்,
வருங்காலத்தும் இவன் புகழ் வாழும் என்பதை உணர்ந்தே,
மலர்புகழ்ப் பரமதத்தன் என வினைத்தொகையால் அவனை விளித்தனர்,
நம் தெய்வச் சேக்கிழார்.
⬥ ⬥ ⬥
அதுமட்டுமன்றி அவனைத் தொலைவில்சீர்க் கணவன் எனவும் குறித்து,
முடிவில்லாத பெருமை கொண்ட கணவன் என வர்ணித்ததன் மூலம்,
அன்னையின் புகழ் நிலைக்கும் அளவும் அவன் புகழும் நிலைக்குமாம் என்பதை,
மறைமுகமாய் நமக்கு உணர்த்தி நிற்கிறார் அவர்.
⬥ ⬥ ⬥
உற்றார் அன்னையை அழைத்து வந்த செய்தியை அறிகிறான் பரமதத்தன்.
தன் உண்மை நிலையை ஊருக்கு ஒழித்ததாலும்,
தன் உறைவிடத்தை உறவுக்கு மறைத்ததாலும்,
அவன் சிந்தையில் தீரா அச்சம் விளைகிறது.
யாது செய்வதென? என ஆராய்ந்த அவன்,
தனது மறுதாரத்தையும் மகளையும் அழைத்துக் கொண்டு,
அன்னை தன்னைத் தேடி வருமுன்,
முன்னே சென்று அவரைக் காண்பதே முறையென நினைந்து,
அவர் இருப்பிடம் நாடி ஓடி வருகிறான் அவன்.
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் 'செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையும் கொண்டு பயந்தபெண் மகவினோடு
முந்துறச் செல்வேன்' என்று மொய் குழலவர்பால் வந்தான்.
⬥ ⬥ ⬥
(அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)