இழந்த நலம்
அருட்கலசம் 03 Sep 2015
வெளியை நோக்கியபடி விரிந்திருந்தன.
திறந்திருந்த அக்கண்கள் தேடுவது எதனை?
தெரியவில்லை.
ஆகாயம் கடந்து அப்பாலும் போயிற்று அப்பார்வை.
அவர் மோனம்,
வானம் கடந்த ஞானம் உரைத்தது.
அரசமரம் ஒன்றின்கீழ் அமர்ந்திருந்தது,
அந்த ஞானப் பேரொளி.
ஞானக் கடலுக்கு நிழல் கொடுக்கும் பெருமிதத்தில்,
அவ் அரசமரம் அசைந்து ஆர்ப்பரித்தது.
அதன் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பூங்குயில்,
அந்த ஞானியின் மோனம் கலைக்க விரும்பாமல்,
குரல் அடக்கி மெல்லக் கூவிற்று.
மனக்குரங்கை அடக்கிய அம்மகானின் முகம் பார்த்து,
ஒரு கிழக்குரங்கு தன் இயல்படக்கி மௌனித்து நின்றது.
சீறும் புலியொன்று தன் சினமடக்கி,
ஆறும் அகங்கொண்ட அம்முனிவர் முகம் பார்த்துக்கிடக்க,
அதன் மடியில் ஒரு சிறுமுயல் ஆழ்ந்து உறங்கியது.
முழுமையாய் விடியாத மெல்லிருள் சூழ்ந்த அப்பொழுதில்,
பாம்பொன்று தன் பாழும் விஷம் ஒழித்து,
சீற மறந்து அச்சித்தர் மேல்,
ஊர்ந்து விளையாடி உவகையுடன் கிடந்தது.
தன் மனவொடுக்கத்தால்,
எல்லா உயிர்களையும் ஈர்த்திருந்த,
அந்த ஞானியின் அருகில்,
கைகட்டி, வாய்பொத்தி
தெய்வக்களையோடு நின்றிருந்தான் ஒரு சீடன்.
***
அவன் முகத்திலும் ஞானஒளி.
சூழ்நிலை தவமாக,
தவமே சூழ்நிலையாக,
ஏதோ நினைந்து சீடன் மெல்லக் கனைக்கிறான்.
வெளிபார்த்த குருவின் கண்கள்,
அவன் விழி பார்க்கின்றன.
பார்வையின் பாஷையால்,
சீடனின் ஐயம் உணர்ந்த,
ஞானியின் மௌனம் கலைகிறது.
தன் பார்வையாற் பணிந்த சீடனின் குனிந்த தலை நிமிர்த்தி,
முறுவல் பூத்தபடி ஐயம் உரைக்க அம்முனிவர் பணிக்கின்றார்.
அம் மரத்தின்கீழ் ஓர் ஞானயாகம் தொடங்கிற்று.
***
கைகட்டி வாய்பொத்திக் கனிந்த முகத்தோடு,
குருவின் அருள்விழி நோக்குகிறான் சீடன்.
குருவின் கண்கள் உத்தரவு கொடுக்க,
சீடனின் வாய் திறக்கிறது.
“எது நலம்?” இரண்டே சொற்களில் கேள்வி.
சொற்சுருக்கத்தில் சீடனின் ஞானப்பெருக்கம் வெளிப்பட,
குருவின் முகத்தில் மலர்ச்சி.
‘ஏன் இந்த ஐயம்?’
“கந்தரனுபூதி கற்றதால் வந்தது.”
‘அனுபூதி கற்று ஐயமா?’
ஹா .... ஹா .... ஹா ....
கேள்வியிற் தவறோ? - சீடன் முகத்தில் அச்சம்.
அவன் அச்சம் குருவின் முகத்தில் கருணையை வருவிக்க,
‘பாடல் சொல்?’ உத்தரவு பிறக்கிறது.
உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப வினோதனும் நீ அலையோ!
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! சுர பூபதியே
‘இதில் என்ன ஐயம்?’
“இழந்த நலம் என்கிறார் அருணகிரியார்.”
‘அதிலென்ன தவறு?’
“எது நலம்?”
மீண்டும் சீடனிடமிருந்து அதே பழைய கேள்வி.
‘நீயே சொல்!’
கேள்வியை மாணவனிடமே திருப்புகிறார் குரு.
பதில் எதிர்பார்த்தவனிடம் கேள்வி திரும்ப,
தடுமாறி நிற்கிறான் சீடன்.
***
‘நீயே சொல்! எது நலம்?’
மாணவனை விளக்கம் செய்ய,
குருவின் வார்த்தைகள் நீள்கின்றன.
“பெறுதல் நலம் என்றுரைப்பார் பெரியோர்.”
தடுமாறிப் பதிலுரைத்த சீடன்,
தயங்கிக் குருவின் முகம் பார்க்கிறான்.
தாடிக்குள் மறைந்திருந்த குருவின் முகத்தில்,
மெல்லிய புன்னகை படர்ந்ததாய் ஒரு பிரமை.
இகழ்ச்சிக் குறிப்பு அதில் தெரிய நாணுகிறான் சீடன்.
‘பெறுதலே நலமாகின் இழத்தல்?’
மீண்டும் குருவிடமிருந்து கேள்வி.
“துயரன்றி வேறென்ன?”
இம்முறை சீடன் குரல் நலிந்திருக்கிறது.
ஹா .... ஹா .... ஹா ....
வாய்விட்டு ஞானி சிரிக்க,
மருள்கிறான் அவன்.
***
‘அஞ்சாதே! உலகம் உரைப்பதை நீ உரைத்தாய்.
இதில் உன் தவறு ஏதுமில்லை.’
குருவின் வார்த்தையினால் தெளிவுற்று,
மீண்டும் அவர் முகம் பார்க்கிறான் சீடன்.
‘பெறுதல் நலம், இழத்தல் துயர் என்பது,
நம் அறியாமையில் விளைந்த விளக்கம்’ குரு உரைக்க,
“எங்ஙனம்?” வாய்பொத்திச் சீடனிடமிருந்து மீண்டும் கேள்வி.
‘நாம் எதையும் பெறுவதுமில்லை, எதையும் இழப்பதுமில்லை.
உலகில் பொருளாய்த் தெரிபவையெல்லாம் மாயையே.’
பதிலுரைத்த குரு,
சீடனின் முகம் நோக்குகிறார்.
விளங்காமையை, சீடனின் முகம் உரைக்க,
குருவின் விளக்கம் தொடர்கிறது.
***
‘பெறுதல் நலமென்றாயே எங்ஙனம்?’
“உடைமை பெருக உயர்வு பெருகும் அல்லவா?”
இது சீடன்.
‘உடைமை என்றால் என்ன?’
“ஒரு பொருள் எனதாகும்போது உடைமையாகிறது.”
‘எனது பொருள் என்கிறாயே! நீ என்றால் யார்?’
“நான் என்றால்.. நான் என்றால்.. நான் என்றால்.. நான் தான்.”
‘நான் என்பது எதனை?’
சீடன் தடுமாறுகிறான்.
ஹா .... ஹா .... ஹா ....
மீண்டும் வாய்விட்டுச் சிரிக்கிறார் குரு.
‘நான்தான் ஆணவம் என்னும் அகங்காரம்.
அந்த அகங்காரத்திலிருந்து பிறப்பது தான்,
எனது என்னும் மமகாரம்.
அவை இரண்டுமே பொய்கள்.
அந்தப் பொய்களை நம்பித்தான் பெறுவது நலம் என்கிறாய்.
புரிகிறதா?’
“புரியுமாப்போல் இருக்கிறது.”
சீடனின் பதிலில் தயக்கம்.
மீண்டும் குருவின் விழிகள் வெளிநோக்க,
தொடர்ந்த உபதேசத்திற்காய்க் காத்திருக்கிறான் சீடன்.
***
குருவின் மடியில் தவழ்ந்த நாகம்,
ஒளி வரத்தொடங்க,
நெளிந்து தன் புற்றுக்குள் புக முயல்கிறது.
புலியின் அசைவால்,
முயலின் தூக்கம் மெலிதாய்க் கலைய,
அது புரண்டு குருவின் முகம்பார்த்து,
பின் மீண்டும் உறக்கத்துட் புகுகிறது.
தன் முகம் பார்த்துக் காத்திருக்கும் சீடனை நோக்கி,
மீண்டும் குருவிடமிருந்து வார்த்தைகள்.
‘பொய் என்றால் என்ன?’
“இல்லாததே பொய்.”
‘மெய் என்றால்?’
“இருப்பது.”
‘இந்த உலகில் மெய்யான பொருள் ஏதும் உண்டா?’
குருவின் கேள்வியால் குழம்புகிறான் சீடன்.
“உலகிலிருக்கும் பொருள்கள் மெய் இல்லையா?”
தயக்கமாய்ச் சீடனிடமிருந்து கேள்வி.
‘நீயே சொல்!’
குருவின் உத்தரவால்,
மீண்டும் சீடன் முகத்தில் தடுமாற்றம்.
‘மெய்ப்பொருளுக்கு இருக்கவேண்டிய இலட்சணம் என்ன?’
குருவின் கேள்வி தொடர்கிறது.
“அது எப்போதும் இருக்கவேண்டும்.”
நலிந்த குரலில் சீடனின் பதில்.
‘நீ சொன்ன பொருள்கள் எல்லாம் எப்போதும் இருக்குமா?’
“வந்து....அவை....எப்போதும்....,”
வார்த்தைத் தடுமாற்றம்,
அவன் சிந்தனைத் தடுமாற்றத்தை வெளிப்படுத்த,
‘சிந்தித்துச் சொல்!’
உத்தரவிடுகிறார் குரு.
மீண்டும் மாணவனிடம் மௌனம்.
பின் மெல்ல மாணவன் வாய் திறக்கிறான்.
“உலகில் உள்ள எல்லாப் பொருள்களும்,
தோன்றல், நிலைத்தல், அழிதல் உடையன.
ஆதலால் எப்பொருளும் என்றும் நிலைப்பதில்லை.”
‘அங்ஙனமாயின் நீ சொன்ன பொருள்கள் எல்லாம்,
மெய்யா? பொய்யா?’ - மீண்டும் குரு.
“பொய்யே தான்.”
சீடனின் வார்த்தைகளில் சிறிது மகிழ்ச்சி வெளிப்பட,
குருவின் உபதேசம் தொடர்கிறது.
‘பொய் நலமாகுமா?’
“நலமாகாது.”
‘பெறுவதால் நலம் என்கிறாய்,
பெறுவது பொய் என்கிறாய்,
பொய் நலமாகாது என்கிறாய்,
இப்போது சொல்! பெறுவது நலமா?’
வெள்ளமாய்;க் குருவின் கேள்விகள் பெருக,
“ஒருக்காலும் இல்லை!”
பதில் தன் வாயிலிருந்தே வந்துவிட்ட மகிழ்ச்சி,
சீடன் முகத்தில்.
***
சீடனின் தெளிவுகண்ட மகிழ்ச்சியில்,
குருவின் ஞானோபதேசம் தொடர்கிறது.
‘பொருள் எல்லாம் பொய் என்றாயே!
அப்பொருள்களைப் பெற்றது யார்?’
“நான்.”
‘நான் என்றால்?’
மீண்டும் குருவிடமிருந்து கேள்வி.
“நான் என்றால் ஆணவம் என்றீர்கள்.”
‘அது வேறு. இப்போது வேறு விதமாய் மீண்டும் சிந்தி!
நான் என்றாயே! நான் என்பது உடலா? மனமா? புத்தியா?’
“தெளிவாய்த் தெரியவில்லை, மூன்றும் சேர்ந்ததோ?”
பதிலில் ஐயம் சேர்க்கிறான் சீடன்.
‘அப்படியே இருக்கட்டும்,
இம்மூன்றும் எப்போதும் நிலைக்குமா?’
“இல்லை. இம்மூன்றுமே தோன்றி, இருந்து, அழிபவை.”
‘அழிபவை பொய்தானே?’
“அதிலென்ன ஐயம்?”
‘அங்ஙனமாயின் நான் என்பது பொய்யா?’
“நீங்கள் கேட்டபிறகு பொய் போல்த்தான் தோன்றுகிறது.”
‘நான் என்பதே பொய்யாயின், எனது என்பது?’
“சந்தேகம் என்ன? பெரும்பொய்.”
பதிலுரைத்த மாணவனின் விழிகளை,
ஊடுருவிப் பார்க்கிறார் குரு.
‘நீயும் பொய், உனதும் பொய் என்றால்,
பெறுதல் எப்படி நலமாகும்?’
விடை அறிந்த வியப்பில் விழி விரிக்கிறான் சீடன்.
குருவின் முகத்திற் கருணை.
***
மரக்கிளையில் நின்று கூவிய குயிலின் குரலுக்கு,
எதிர்க்கிளையில் இருந்து பதில் வர,
மகிழ்ந்த குயில்,
மீண்டும் பதில் எதிர்பார்த்துக் கூவுகிறது.
குருவின் முகம் பார்த்துச் சீடன் தொடர்கிறான்.
“அங்ஙனமாயின் இழத்தல் தான் நலமா?”
இப்போது பதிலுக்காயன்றி,
தெளிவுக்கான எதிர்பார்ப்பு, சீடன் குரலில்.
புன்னகைக்கிறார் குரு.
‘நீயும் பொய், உனதும் பொய்.
இங்கே இழப்பு எப்படி நிகழும்?
இல்லாததை இல்லாதவன் இழக்கமுடியுமா?’
மீண்டும் வினாவாற் குரு விடையுரைக்க,
“அங்ஙனமாயின் அருணகிரியார் இழந்த நலம் என்றது ஏன்?
இழத்தலும் நலம் இல்லையா?”
ஐயமே ஐயமாக சீடன் குரலில் நலிவு.
‘பெறுதலை விட இழத்தல் நலம், அவ்வளவே.’
“புரியவில்லை விரித்துச் சொல்லவேண்டும்.”
சீடனின் வார்த்தைகளில் அறிவுச் சரணாகதி.
***
‘நான் என்பதையே புரியாதவன்,
எனது என்ற ஒன்று கிடைத்ததும்,
அதன்மேல் கற்பனையில் பற்று வைக்கிறான்.
அப்பொருள் நிலைக்கும் என்பதும்,
தான் நிலைப்பேன் என்பதுமே பொய்யான கற்பனைகள்தான்.
பொய்யில் பற்று வைத்தவன் நிம்மதியடைய முடியுமா?
பற்றுவைத்த பொருள்கள்,
பொய்யானவை என உள்ளுணர்ச்சி உறுத்த,
அவை அழிந்துவிடும் என்ற உணர்வால்,
மேலும் அவை பற்றி அக்கறை பெருகும்.
பொய்யை மெய் என்று நினைப்பவன்,
நிம்மதியாய் இருக்கமுடியுமா?
அப்பொய்மை தரும் ஐயம்,
அவனையறியாமல் அவனைப் பதற்றத்திற்கு ஆளாக்கும்.
அப்பதற்றமே அவன் வாழ்வில் நிம்மதியைக் கெடுக்கும்.
நிலையற்றதை நிலை என்று நம்புபவன்,
அப்பொய்மை தரும் அச்சத்திலேயே வாழ்நாளைக் கழிப்பான்.
தோற்றிய பொருள்களுக்கெல்லாம் அழிவுண்டு.
பொய்மைமேல் கொண்ட பற்றினால்,
இவ்வுண்மையைத் தரிசிக்க மூடர் விரும்புவதில்லை.
அழியும் பொருளை அழியாததாய்க் கருதி மயங்குவதும்,
பின் அது அழிந்துவிடுமோ என எந்நேரமும் அஞ்சுவதும்,
தன் இயல்பினால் அது அழியும்போது,
அதன் இழப்பால் அதிர்வதுமே,
மனிதனின் வாழ்க்கையாகி விட்டது.
அதனால்த்தான் பெறுதலைத் தீங்கு என்கிறேன்.’
விடை வெள்ளமாய்ப் பெருகுகிறது.
***
“பற்று வைத்தபொருள் அழிய,
உண்மை பற்றிய ஞானம் வராதா?”
ஐயம் அகலும் ஆனந்தத்தில் மீண்டும் மாணவனின் கேள்வி.
‘அப்படி வந்தால் எல்லோரும் அல்லவா ஞானியாகி விடுவார்கள்.’
சிரித்துப் பதிலுரைக்கிறார் குரு.
“நிலையாமை உணர, ஞானம் வரவேண்டுமே!”
மீண்டும் சீடன்.
‘ஆணவம் விட்டால் வரும்’ - குரு.
“விடாவிட்டால்....?” இழுக்கிறான் சீடன்.
‘ஒரு பொருளின் இழப்புத்தரும் ஏக்கம்,
மற்றைப் பொருள்களின் மேல் அதிக பற்றினை உருவாக்கும்.
அதனால் மற்றைப் பொருள்களின் இழப்புப்பற்றி,
அதிக கவலையும்,
அவற்றைப் பாதுகாப்பது பற்றிய அதிக அக்கறையும்,
பின் அவற்றின் இழப்பில் அதிக வேதனையும் நிகழும்.
விருப்பினால் இழப்பு அதிகரிக்க,
இழப்பினால் விருப்பு அதிகரிக்க,
மாறி மாறிப் பற்று என்னும் நூற்கண்டில்,
மூடன் தன்னைத்தானே சிக்க வைத்துக்கொள்வான்.
சிக்குண்ட அந்நிலையினின்றும் மீள முடியாமல்,
முயல்வதும் தோற்பதுமாய்,
அவன் வாழ்க்கை முடிந்து போகும்.
இதுவே வேடிக்கை மனிதர் நிலை.’
உரைத்து மௌனிக்கிறார் குரு.
***
“அங்ஙனமாயின்,
சாதாரணர் இம் மாய வலையினின்றும் மீளவே முடியாதா?”
சீடனின் ஐயம் தொடர்கிறது.
‘யார் சொன்னார்? முடியும்!
நம்மைச் சிக்க வைத்திருப்பது,
நாமே அறுக்கக்கூடிய வெறும் நூலிழைதான்.’
குரு வாய்மூடுமுன் சீடன் தொடர்கிறான்.
“பின் ஏன் அதனுள் சிக்கி வருந்துகிறோம்?”
‘பற்றின் மேல் நாம்கொண்ட பற்று!
அதுவே பற்றறுத்தலை இழப்பாய் நமக்கு உணர்த்துகிறது.’
அப்பொய்யுணர்வு தவிர்ந்தவன்,
ஒரு நொடியில் அவ்விழைகளை அறுத்து வெளிவருவான்.
துயர் எனும் கடல் கடப்பான்.
மெய்யைத் தரிசிப்பான்.
மெய்யில் கலப்பான்.
மெய்யே ஆவான்.’
***
உபதேச மழை தொடர்ந்து பொழிகிறது.
‘மெய் என்றும் நிலைத்தது.
நிலைத்த பொருளில் கலந்தவனுக்கு இழப்பில்லை.
இழப்பில்லையேல் துயரில்லை.
துயரில்லையேல் என்றும், எங்கும் ஆனந்தமயம்.
அவ் ஆனந்தமயம் அடைந்தவனே ஞானி.
ஞானி தன்னைத் தரிசிக்கின்றான்.
அதனால் உண்மையைத் தரிசிக்கின்றான்.
உண்மைத் தரிசனம் தந்த தெம்பால்,
பொய்மைகளை மெல்ல மெல்ல அறுத்து எறிகிறான்.
பொய் அற அற ஆனந்தம் பொங்குகிறது.
முடிவாய்,
எல்லாம் அற, இழந்த நலம் புரிகிறது.’
கடல்போல் பொங்கிய குருவின் உபதேசத்தில்,
மெய்சிலிர்த்து நிற்கிறான் சீடன்.
ஆனாலும் அவன் முகத்தில் ஒரு சிறு குழப்பம்.
***
புலி உடல் உலுப்பி எழ,
அதன் மடியிலிருந்து வீழ்ந்த முயல்,
ஓடத் தயாராகுகிறது.
குரலுக்குக் குரல் தொடர்ந்து வர,
குயில் குதூகலமாய்த் தொடர்ந்து கூவுகிறது.
“இன்னும் ஒரு சிறு ஐயம்.”
குருவின் பார்வை அனுமதி தர தொடர்கிறான் சீடன்.
“இழப்பதே நலம் எனும் ஞானம் அறிவால் கைகூடுமோ?”
‘ஒருக்காலும் இல்லை!
அங்ஙனம் கைகூடுமாயின் கற்றவர் எல்லாம் ஞானியராக
அல்லவோ வேண்டும்?’
ஹா ... ஹா ... ஹா ... சிரிக்கிறார் குரு.
“அங்ஙனமாயின் அந்த ஞானத்தை எது தரும்?”
மீண்டும் சீடன்.
‘அனுபவம் தரும்.’
“அனுபவம் என்றால் அறிவனுபவமா?”
‘இல்லை.’
“வாழ்வனுபவமா?”
‘இல்லை.’
“பின் அவ்வனுபவம் தான் எது?”
சீடன் குரலில் சலிப்பு.
‘அது உயிரனுபவம்.’
“உயிரனுபவம் என்றால்?”
‘பல பிறவிகளில் அகப்பட்டு,
இன்ப துன்ப அலைகளால் மொத்துண்டு,
அவ்விரண்டையும் கடக்கும் உணர்வு நிலை பெறுதல்.
இதுவே தத்துவ உணர்வு.
இத்தத்துவ உணர்வைத் தருவதால்,
பெறுதலைவிட இழத்தலே நலமாம். புரிகிறதா?’
குருவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,
சிலிர்த்து நிற்கிறான் சீடன்.
‘என்ன? புரிந்து விட்டதாய்த் தோன்றுகிறதோ?’
குருவின் கேள்விக்கு,
சம்மதத்தை, மௌனத்தால் சீடன் பதிலாக்க,
ஹா .... ஹா .... ஹா ...., மீண்டும் குருவின் கேலிச்சிரிப்பு.
குற்றம் உணராமல் தடுமாறி,
குருவின் முகம் பார்க்கிறான் சீடன்.
‘புத்திக்கு விளங்கினால் மட்டும் தெரிந்தது ஆகாது.
அனுபவம் தேடு! இழந்தநலம் புரியும்.’
உபதேசம் நிறைகிறது.
புலி நடக்கத் தொடங்குகிறது.
புலியின் நடைகண்டு முயல் தாவி ஓடத்தொடங்குகிறது.
குரல் கொடுத்த குயிலினைக் கூடுதற்காய்,
மரம்விட்டுப் பறக்கிறது பெண்குயில்.
ஒளி விரிய, பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைகிறது.
மீண்டும் குருவின் பார்வை வானத்தில்.
சீடன் மனம் மோனத்தில்.
******