ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் ! பேராசிரியர் செல்வகணபதி

ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் ! பேராசிரியர் செல்வகணபதி
 
த்தமனாய் செந்தமிழின் உயர்வு காத்த
         ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான்
வித்தகனாய்  நம் சைவ விழுமியங்கள்
         வீறுடனே காத்த மகன் உலகம் நீத்தான்
தத்துவங்களுள் நுழைந்து தளர்வேயின்றி
         தரமுரைத்த நற்புலவன் உலகம் நீத்தான்
பக்தியொடு பண்பதனின் உருவாய் நின்ற
         பண்பாளன் நமைவிட்டு உலகம் நீத்தான்
 

நெற்றியிலே திருநீற்றின் வெண்மை பொங்கும்
         நினைவதனில் எப்போதும் தண்மை தங்கும்
எற்றுகிற வார்த்தையிலும் இனிமை பொங்கும்
         எப்போதும் அன்பதனின் உரிமை தங்கும்
பற்றுகிற சிவனடியில் பாசம் பொங்கும்
         பார்க்கின்ற மனிதரிடம் நேசம் தங்கும்
சுற்றுகிற ஆடையிலும் வெண்மை பொங்கும்
         சுறுசுறுப்பில் எறும்புகளும் பின்னே தங்கும்
 
சைவத்தின் களஞ்சியத்தைத் தனியராக
         சகம் போற்ற ஆக்கினயே எவரே செய்வார்?
சைவத்;தின் நுட்பமெல்லாம் ஓடி ஓடி
         சகம் முழுக்கப் பரப்பினயே யாரே செய்வார்?
சைவத்தின் உட்பொருளை உணர்ந்து வாழ்வில்
         சகலர்க்கும் அன்பளித்தாய் எவரே செய்வார்?
சைவத்தின் பெருமையினை தாழ்வேயின்றி
         தரம் பேணிச் சொல்லினயே யாரே செய்வார்?
 
ஓங்கு புகழ் சைவத்தின் உருவாய் நின்ற
         ஒப்பற்ற பேரறிஞன் ஒருவர்க்கேனும்
தீங்கு நினையா நின்ற திகழும் செம்மல்
         திக்கட்டும் புகழ் பரப்பி வாழ்ந்த ஏந்தல்
தாங்குகிற மனத்தாலே வறியோர்க்கெல்லாம்
         தந்ததனைச் சொல்லாத தனித்த சான்றோன்
ஓங்கு சிவன் திருவடியை ஓயாதென்றும்
         உள்ளத்தில் நினைத்த மகன் சிவனே ஆனான்.
 
செந்தமிழின் கூர்வாளை ஒத்து நின்று
         சிறுபகையும் வாராமல் தமிழைக் காத்தோன்
முந்தையரின் சிந்தையெலாம் அள்ளி மாந்தி
         முப்போதும் இளையோர்க்கு அதனை ஈந்தோன்
விந்தை மிகு விரி அறிவால் பலரும் மெச்ச
         விரலதனுள் முன் நின்ற வெற்றி வேந்தன்
நிந்தையிலாப் பெருவாழ்வு வாழ்ந்த எங்கள்
         நெடும் செல்வகணபதியார் சிவனைச் சார்ந்தார்.
 
ஈசனவன் பெருங்கருணை வாய்த்ததாலே
         ஈழமதும் உன் தொடர்பைப் பெற்றதன்றே
தாசனெனக் கம்பனுக்கு ஆகி நீயே
         தந்தவைகள் என்னென்று சொல்வோம் நாமே ?
வேஷமிலாப் பெருமனித ! விளக்கே போல
         வெளிச்சங்கள் பாய்ச்சினயே தமிழின் மீது
ஆசையுற வானவரும் அழைத்தாராமோ ?
         ஐயோ! நம் சொத்தினையே இழந்து போனோம்.
                              ✽
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.