கழகம் தன்னை தாயெனவே காத்த மகன் - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

கழகம் தன்னை தாயெனவே காத்த மகன்   - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்
 

லகனைத்தும் தனதன்பின் ஆற்றலாலே
          ஒருமையுறச் செய்த மகன் உலகை நீத்தான்
தளமனைத்தும் தனதறிவுத்திறத்தினாலே
          தனிப்புகழை நிறுத்தியவன் உலகை நீத்தான்
நிலமனைத்தும் தன்கொடையால் நிமிரச் செய்த
          நேசமிகு பெருமனிதன் உலகை நீத்தான்
பலர் அறிய அறப்பணிகள் பலவும் செய்த
          பண்புநிறை பெருமனிதன் உலகை நீத்தான்

 


கம்பனது கழகமதின் தலைமை தன்னை
          கற்றவர்கள் உவந்திடவே சிறக்கச் செய்து
நம்பிய எம் உறவதனை நாளும் போற்றி
          நாவினிக்க மனமினிக்க நயந்து நின்றோன்
அம்புவியில் இவனிருந்தால் இடர்கள் வென்று
          ஆற்றிடுவோம் பெரும்பணிகள் என்றே நின்றோம்.
தெம்புதர இனி எவரே! என்று நொந்தோம்
          திகைக்கின்றோம் தெய்வமதாய் விண்ணைச் சேர்ந்தான்.

ஈஸ்வரனார் என்றொரு சொல் இயம்பிவிட்டால்
          ஏற்றமுற உலகமெல்லாம் எம்மைப் போற்றி
பாசமுற துணை புரிந்த பாங்கு கண்டோம்.
          பண்பாளர் அவர் புகழால் வாழ்ந்து நின்றோம்.
தேசுமிகு புகழ் வளர்த்து தெய்வம் போற்றி
          தேசமெலாம் எம்மக்கள் எனவே எண்ணி
மாசதனை நீக்கிய நல் மனத்தோன் இன்று
          மண்விட்டு விண் சென்றான் மருண்டு நின்றோம்.

எப்போதும் வார்த்தையிலே இனிமை பொங்கும்
          ஏற்றமுறும் மனமதனில் கனிவு தங்கும்
தப்பேதும் இல்லாது துன்பம் சொல்லி
          தனைச் சார்ந்த எவரையுமே தாங்கிக் கொள்ளும்
முப்போதும் இறைதனையே மனத்துள் எண்ணி
          முடியாத இன்பத்துள் மூழ்கி வெல்லும்
இப்போது அவனில்லை என்னும் செய்தி
          எவர் பொறுப்பர் இடர் துடைக்க எவரே உள்ளார்?

ஆத்மீகத் துறை என்றால் அதிலும் பங்கு
          அறிவதனின் திறன் என்றால் அதிலும் பங்கு
ஈத்தேதான் ஏழையர்க்கு உதவி நிற்கும்
          ஏற்றமிகு நற்பணியாம் அதிலும் பங்கு
சேத்தேதான் அனைவரையும் ஒன்றாய் என்றும்
          செகமதனில் உறவாக்கும் அதிலும் பங்கு
பூத்தேதான் முகம் மலர ஐயன் செய்த
          பொன்னான நற்பணிகள் எவரே செய்வார்?

மலையதனில் அனுமனையே கொணர்ந்து வைத்து
          மாபெரிய புகழ் சேர்த்த மன்னன் இன்று
நிலையறியா வாழ்வதனை நீக்கி விண்ணை
          நேருறவே சேர்ந்ததனால் மருண்டு நின்றோம்
தலைமகனாய் நின்றெங்கள் கழகம் தன்னை
           தாயெனவே காத்த மகன் தனித்துப் போனான்
அலையெனவே துயர் பொங்க  அழுது நின்றோம்
           ஐயனவன் திருவடியைத் தொழுது நின்றோம்!         
                                     ✽

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.