Array
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦கம்பன் கோட்ட அடிக்கல் நாட்டுவிழா
10.02.1986
அப்போதைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில்,
நல்லையாதீனத்தில் மேற்குறித்த திகதியில்,
அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
அங்கு கூட்டம் நடாத்தி முடித்த பின்னர்,
காணிக்கு அனைவருமாக வந்து அடிக்கல் நாட்டினோம்.
முதல் அடிக்கல்லை துணைவேந்தர்,
பேராசிரியர். சு.வித்தியானந்தன் எடுத்து வைத்தார்.
தொடர்ந்து எங்கள் ஆசிரியர்கள் வேலன் மாஸ்ரர்,
சிவராமலிங்கம் மாஸ்ரர் ஆகியோரும்,
பேராசிரியர் சண்முகதாஸ், டொமினிக் ஜீவா, சீ.வி.கே. சிவஞானம் போன்ற,
பலரும் அடிக்கற்களை நாட்டினர்.
அன்று கிரியைகள் செய்ய வந்திருந்த,
அர்ச்சகருக்குக் கொடுக்கக்கூட எங்களிடம் பணமிருக்கவில்லை.
சீ.வி.கே. சிவஞானம் அவர்கள்தான்,
வந்த அந்தணருக்குத் தட்சணை கொடுத்தார்.
ï ï ï
ஊக்கம் தந்த ‘ஈழநாட்டு’ ஆசிரியர்
என். சபாரட்ணம்
நாம் கம்பன் கோட்டம் கட்டத் தொடங்கி விழா எடுப்பதை,
எங்கள் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,
அப்போதைய “ஈழநாடு” பத்திரிகையாசிரியருமான,
என்.சபாரட்ணம் அவர்களிடம் தெரிவித்தபோது,
“யாழ்ப்பாணம் முழுவதற்கும் இராமாயணம் தெரியும்படி செய்யுங்கள்” என்று,
மகிழ்ந்து வாழ்த்தினார்.
ஓரளவு அவர் வார்த்தையை நாம் காப்பாற்றினோம் என்றே சொல்லவேண்டும்.
எம்மை வாழ்த்தியதோடல்லாமல் “ஈழநாடு” பத்திரிகையில்,
ஆசிரியத் தலையங்கமும் எழுதி எம்மை ஊக்கப்படுத்தினார் அவர்.
மேலும் பல பத்திரிகைகளும் கூட,
ஆசிரியர் தலையங்கம் எழுதியும், செய்திகள் வெளியிட்டும்,
கம்பன் கோட்டம் அமைக்கும் எம் முயற்சியை ஊக்கப்படுத்தின.
ï ï ï
முதற்கட்ட வேலைகள் முடிந்தன
நெருக்கடிகளுக்கிடையில் தொடங்கப்பட்ட கம்பன் கோட்டப்பணிகளின்,
முதற்கட்ட வேலைகள் (கீழ்த்தளம்) பல கழக ரசிகர்களின் ஆதரவினால்,
1986 ஓகஸ்ட் மாதத்தில் ஓரளவு நிறைவுபெற்றன.
வேலைகள் பூரணப்படாமலே,
எனது பெற்றோர், பேராசிரியர் சண்முகதாஸ்,
நண்பர்களான மகாராஜா, ஈஸ்வரநாதன் முதலானோரோடு சேர்ந்து,
ஒரு நல்ல நாளில்,
அந்தக் கட்டடத்தின் ஓர் அறைக்கு நிலை வைத்து
நாம் பால் காய்ச்சினோம்.
இராஜலிங்கம் குடும்பத்தினர் திரும்பி யாழ் வராததால்,
தொடர்ந்தும் நாம் வைமன் ரோட்டிலேயே தங்க வேண்டியிருந்தது.
அதனால், கட்டப்பட்ட கோட்டத்தின்
ஓர் அறைக்கு மட்டும் கதவுபோட்டு,
கந்தர்மட அலுவலகத்திலுள்ள பொருட்களையெல்லாம்,
கொண்டுவந்து வைத்தோம்.
பூட்டப்பட்ட கட்டடத்தின்; ஜன்னலை உடைத்துத் திருடன் புகுந்து,
இருந்த பொருட்களையெல்லாம் ஒருநாள் திருடிப் போனான்.
ï ï ï
காத்திருந்து கைக்கு வராமல் போன பணம்
அக்காலத்தில் கம்பன் கோட்டம் அமைக்கவென
மாநகரசபை ஊழியர்களிடம்,
சீ.வி.கே. சிவஞானம் ஒரு பெருந்தொகைப் பணத்தினைச் சேர்த்தார்.
அப்பணம் எங்கள் கைக்கு வந்து சேரவில்லை.
ஊழியர்களிடம் வலியுறுத்தி அவர் பணம் சேர்த்தது,
அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லைப் போலும்.
அவர்களின் தூண்டுதலால்
அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பல இயக்கங்களுள்
ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு,
சீ.வி.கேயிடமிருந்து அப்பணத்தைப் பறித்துச் சென்றது.
ï ï ï
கிட்டுவின் கோரிக்கையை மறுத்தேன்
கிட்டு ஒரு கதாநாயகனாக
ஆளுமையோடு யாழில் உலா வந்த நேரம் அது.
அப்போது எல்லா இயக்கங்களும் யாழில் இருந்தன.
எங்கள் கம்பன் கோட்ட கட்டிட நிதிக்கென,
மாநகர சபை ஆணையாளர் சிவஞானம் அவர்கள் சேர்த்திருந்த பணத்தை,
ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் பறித்துச்சென்றதும்,
கிட்டுவோடு நெருக்கமாக இருந்த சிவஞானம் அவர்கள்,
அச்சம்பவத்தைக் கிட்டுவுக்குச் சொல்ல,
“அண்ணை கம்பன்கழகத்தை புலிகளின் சார்பமைப்பு,
என்று அறிவிக்கச்சொல்லுங்கள்.
நான் பணத்தை மீட்டுத்தருகிறேன்” என்று கிட்டு சொல்லியிருக்கிறார்;.
இச் சம்பவத்தை சிவஞானம் எங்களுக்குச்; சொல்ல,
அதற்கு உடன்பட நாம் மறுத்துவிட்டோம்.
எமது முடிவை சிவஞானம் அவர்களும் வரவேற்றார்.
இயக்கத்துள் முற்றுமுழுதாய்க் கரைய விரும்பாத,
எங்கள் நிலைப்பாட்டிற்குச் சான்றான சம்பவம் இது.
ï ï ï
புதுவை இரத்தினதுரை
மிகச்சிறந்த கவிஞர் இவர்.
பின்னாளில் புலிகள் இயக்கத்தில் இணைந்து,
அவர்களின் ஆஸ்தான கவிஞராய் இயங்கியவர்.
அதுபற்றிப் பின் சொல்கிறேன்.
இவர் சிறந்த கவிஞர் மட்டுமன்றி, பெரும் கலைஞராயும் இருந்தார்.
தேர்ச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர் அவர்.
வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு,
அப்போதுதான் நாடு திரும்பியிருந்தார்.
அக்காலத்தில்,
கம்பன் கோட்டக் கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
வீதி வழியாகச் செல்கையில்,
கூலியாட்கள்போல் நாங்களே வேலை செய்வதைப் பார்த்துவிட்டு,
அவருக்கு எங்களில் மதிப்பு ஏற்பட,
“கம்பன் கோட்டத்திற்குக் கைகொடுங்கள்” என்று,
மல்லிகை சஞ்சிகையில் அப்போது அவர் ஒரு கடிதம் எழுதினார்.
அப்படி ஏற்பட்ட நட்பு, பின் நெருக்கமானது.
கழக இளைஞர்கள் எல்லோரும்,
சட்டநாதர் கோயிலடி மூலையில் இருந்த,
புதுவை அண்ணன் வீட்டு மாமரத்தின் கீழ்,
தினமும் காலையில் கூடிவிடுவோம்.
அவர் சிற்பம் செதுக்கிச் செதுக்கி எங்களோடு பேசுவார்.
கிண்டலும் கேலியுமான அப்பேச்சுக்கள் மறக்கமுடியாதவை.
அவரது அன்பு நெருக்கமாக,
எங்கள் கம்பன் கோட்டத்திற்குச் சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய,
வாசல் கதவு நிலை ஒன்றினைத் தன் கையினாலேயே செய்து தந்தார்.
முதல்முதலாக எங்களது 1986 ஆம் ஆண்டுக் கம்பன்விழாக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு,
அற்புதமாகக் கவிதை பாடினார்.
பின்பு காரைநகர்க் கம்பன்விழாக் கவியரங்கிலும் கவிதை பாடினார்.
“இக்காலத்தில் கம்பன்விழா தேவைதானா?” என விமர்சித்து,
சிலர் சுவர்களில் எழுத,
அக்கவியரங்கில் அவர்களுக்குப்
புதுவை கடுமையாய்ப் பதிலடி கொடுத்தார்.
பின்னர் எங்களது கம்பன் கழகத்தின் 1987 விழாக் கவியரங்கிலும்,
1992 கவியரங்கிலும்; கவிதை பாடினார்.
ï ï ï
கடவுள் காத்தார்!
கம்பன் கழகத்தின் அங்குரார்ப்பண நாளை,
வசதிப்படும் போதெல்லாம் கொண்டாடுவது எமது வழக்கம்.
ஓர் ஆண்டு வைமன் ரோட் அலுவலகத்தில்,
அந்நிகழ்வைக் கொண்டாட ஆயத்தம் செய்திருந்தோம்.
குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொல்லி
இரவு விருந்திற்கு அழைத்திருந்தோம்.
அன்று விருந்துக்காக உணவுகள் தயாரிக்கத் தொடங்கிவிட்ட நேரத்தில்,
காலை ஓர் அநாமதேயத் தொலைபேசி அழைப்பு வந்தது.
பேசிய குரல், “விருந்தை நடத்தக் கூடாது” என்று எச்சரித்தது.
குழம்பிப்போனோம்.
எல்லா இயக்கங்களும் சமநிலையில் இருந்த காலமது.
யாருடைய தொலைபேசி எனத் தெரியாத சூழ்நிலையில்,
என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபோது,
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த,
எங்கள் நண்பன் ஐங்கரநேசன்
(தற்போதைய வடமாகாணசபை அமைச்சர்),
அங்கு வந்தான்.
எங்கள் குழுவிலிருந்த மகாராஜாவின் நெருங்கிய நண்பன் அவன்.
அத்தொடர்பால் எங்களுக்கும் நெருங்கிய நண்பனாகி இருந்தான்.
அப்போது அவன் காலை,‘ரெலோ’ இயக்கத்தின் நெருங்கிய ஆதரவாளன்.
அந்த இயக்கத் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின்,
நெருங்கிய நண்பனாய் அவன் இருந்தான்.
அவரிடம் நிறையச் செல்வாக்குப் பெற்றிருந்தான்.
எங்கள் பிரச்சினையைச் சொன்னதும்,
“நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதைங்கோ,
நான் எங்கட ஆக்களிட்டைச் சொல்லி,
பின்னேரம் உங்கட வீட்டைச் சுற்றி,
‘காட்’ பண்ணச் சொல்கிறன்” என்றான்.
அந்த நேரம், அவன் சொன்னது தெம்பாக இருந்தாலும்,
நான் தீர்க்கமாய் யோசித்து, அவன் உதவியை நிராகரித்தேன்.
ï ï ï
சிறைப்பட்ட ஐங்கரநேசன்
அங்ஙனம் நிராகரித்தது நல்லதாய்ப் போயிற்று.
ஓரிரு வாரத்திலேயே புலிகள் இயக்கத்திற்கும் ‘ரெலோ’ இயக்கத்திற்கும்,
பெரும் மோதல் மூண்டது.
அந்த மோதலில் ‘ரெலோ’ இயக்கம் முற்றாக நசுக்கப்பட்டது.
எங்கள் நண்பன் ஐங்கரநேசனும் புலிகளால் கைது செய்யப்பட்டான்.
அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதே தெரியவில்லை.
ஒருநாள் கந்தர்மடச் சந்தியில் இருந்த ஊ.வு.டீ. தியாகராஜா வீட்டில்,
அவனது தமக்கையைச் சந்தித்தோம்.
அவனது தமக்கை, தம்பி பற்றி முடிவு தெரியாமல் கதறியழுதார்.
ï ï ï
காக்கா என்னும் மனோகர்
போராட்டம் தொடங்கிய 80 களில்,
புலிகள் இயக்க உறுப்பினர்கள்
விரல்விட்டு எண்ணும் படியாக இருந்தபோது,
அம் முதல் உறுப்பினர்களில் ஒருவனாக இருந்தவன் மனோகர்.
இவன் எனது உயிர் நண்பனான
நாயன்மார்கட்டு சிவகுமாரின் நெருங்கிய நண்பன்.
உணர்ச்சிகரமானவன்.
சிவகுமார் மேல் கொண்ட அன்பால்
என்மேல் மதிப்புக் கொண்டவன்.
இவன் இயக்கத்தில் சேர்ந்ததும், பயிற்சி பெற்றதும்,
பல காலத்தின் பின்தான் எங்களுக்குத் தெரியவந்தது.
புலிகளின் ஆரம்பகால நடவடிக்கைகளில்
இவன் முக்கிய இடம்பெற்றதாய்ப் பின்னர் அறிந்தோம்.
இயக்கம் வளர்ந்துவிட்ட பிறகு,
பலகாலம் இவனை நான் சந்திக்கவில்லை.
இவனது இயக்கப் பெயர் காக்கா,
இயக்கங்களுக்குள் முரண்பாடு வளர்ந்து விட்ட நிலையில்,
ரெலோ இயக்கம், புலிகளோடு மோத எண்ணி
இவனைக் கடத்திச் சென்றது.
அக்காலத்தில் புலிகள் அமைப்பின் தளபதியாய்,
மிகவீரியமாய் இயங்கி வந்த கிட்டு,
“காக்கா அண்ணையைத் தொட்டா விடுவமோ?”எனக் கூறி,
ரெலோ இயக்கத்தைத் தாக்கத் தொடங்கினாராம்.
பேரழிவு விளைவித்த அச்சண்டையில் மனோகர் மீட்கப்பட்டான்.
இடையில் மீண்டும் சண்டையில் காயப்பட்டு,
மனோகர் பலகாலம் இந்தியாவில் இருந்;தான்.
பிற் காலத்தில் இயக்கத்தில் அவனுக்கு,
பெரிய முக்கியத்துவம் இருக்கவில்லை.
இவனது தொடர்புதான் இயக்கத்துடனான எங்களது முதற்தொடர்பு,
ï ï ï
ஐங்கரநேசனை மீட்கத் துணைசெய்தேன்
ஐங்கரநேசனுக்காக, புலிகள் இயக்கத்தில் இருந்த,
மேற்சொன்ன மனோகரிடம் சென்று பேசினேன்.
“ஐங்கரநேசன் கல்வியுலகைச் சார்ந்தவன்.
நாட்டிற்குத் தேவையானவன்.
அவன் உயிருக்கு ஓர் ஆபத்தும் வரக்கூடாது.
எனக்காக அவனைக் காப்பாற்ற வேண்டும்” எனக் கெஞ்சினேன்.
அப்போது இயக்கத்தில் மனோகருக்கு நல்ல மதிப்பு இருந்தது.
நான் போய்ப் பேசியதும்,
“நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்,
ஐங்கரநேசன் உயிரோடிருக்கிறான்” என்று,
அவன் எனக்கு ஆறுதல் சொன்னான்.
அப்போதும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
அவன் உயிரோடு இருப்பதற்கு,
ஏதாவது ஆதாரம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஐங்கரநேசனிடம் ஒரு கடிதம் வாங்கிவந்து தந்தான்.
அக்கடிதத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து,
ஐங்கரநேசனின் தமக்கையை ஆறுதல்படுத்தினேன்.
பின்னர், விடுதலை செய்யப்பட்டு வீடு வந்து சேர்ந்ததும்,
ஐங்கரநேசன் எனக்கு நன்றி சொன்னான்.
ஒரு சில நாட்களில், தலைமறைவாகியிருந்த,
ரெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம்,
கோண்டாவிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அன்று நட்பின் நெருக்கத்தால் ஒரு குழந்தைபோல,
ஐங்கரநேசன் கதறி அழுதது இன்றும் என் கண்களில் நிற்கிறது.
பிற்காலத்தில், புலிகள் இயக்கத்தில் இருந்த புதுவை இரத்தினதுரையோடு,
நெருக்கமாக இருந்த ஐங்கரநேசன்,
பின்னர் சிலகாலம் குடும்பத்துடன் இந்தியாவில் தங்கியிருந்தான்.
அக்காலத்தில் ஒருதரம் புதுவையின் மகனுக்கு இந்திய விசா
எடுத்துத்தரும்படி தொலைபேசியில் கேட்டுக் கொண்டான்.
மற்றொருமுறை தன் தமக்கைக்கு ஒரு வேலை எடுத்து
கொடுக்கும்படி கேட்டு கடிதம் எழுதினான்.
இப்படியாக எம்மோடு தொடர்பில் இருந்த ஐங்கரநேசன்
போரின்பின், கூட்டமைப்பின் சார்பில்
மாகாண சபைத் தேர்தலில் நின்று வென்று,
இன்று மாகாண விவசாய அமைச்சராக இருந்து வருகிறான்.
அமைச்சரான பின்னர் கழகத்துடன் அவனுக்கு
அதிகம் தொடர்பில்லை.