செய்தியும்.. சிந்தனையும் .. 04 | 'அர்த்தநாரீ அரசு' | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
சிந்தனைக்களம் 23 Aug 2017
செய்தி
தினக்குரல் 2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை
அமைச்சர் விஜேதாச விவகாரம் - இறுதித் தீரமானம் பிரதமரின் கரங்களில்
ஆளும் தரப்பினரின் குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியினரின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச தானாக முன்வந்து பதவி விலகாவிட்டால் அவர் ஜனாதிபதி சிறிசேனாவினால் பதவிநீக்கம் செய்யப்படுவதும் அல்லது கைவிடப்படுவதும் அரசியல் அமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முடிவிலேயே தங்கியுள்ளது.
சிந்தனை:
‘வாசமிலா வங்கனத்தில் நன்று
வலிய பகை’ (ஒளவை)
பொருள்:-
அன்பற்ற உறவினைக் காட்டினும் கொடிய பகையே மேலானது.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
அர்த்தநாரீ அரசு
உருப்படுமா? உடையுமா? எனும் கேள்வியை எழுப்பி, தள்ளாடி நிற்கிறது நல்லாட்சி அரசு.
சைவசமயத்தில் சிவனும் உமையும் பாதி பாதி கலந்ததான ஓர் வடிவம் உண்டு.
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இருக்கும் அவ்வடிவிற்கு அர்த்தநாரீ என்று பெயர்.
இரண்டுங் கெட்டதாய் இருக்கும் அவ் ‘அர்த்தநாரீ’ வடிவை ஒத்ததாகவே இருக்கிறது இன்றைய நல்லாட்சி அரசு.
கிட்டத்தட்ட நம் வடமாகாணசபையின் நிலையைப் போலத்தான்; நல்லாட்சி அரசின் நிலையும்.
ஒரே ஒரு வித்தியாசம். - நல்லாட்சி அரசின் தலைவர்கள் சற்று நிதானமாய்ச் செயற்படுகிறார்கள்.
எங்கள் தலைவர்களிடம் அதுவும் இல்லை!
♚♚♚♚♚
சோதிடத்தை நம்பி அவசர அவசரமாய்த் தேர்தலில் குதித்த ‘மஹிந்தவுக்கு’ எதிராக,
அதுவரை பகைமுகம் காட்டி நின்ற பேரினத்தின் இருபெருங்கட்சிகளும் கைகோர்த்தன.
மஹிந்தவின் சர்வாதிகாரத்தை வீழ்த்தவென தேர்தல் களத்தில் குதித்து வெற்றியும் ஈட்டின.
அப்புரட்சியில் மற்றவர்களால் முன் தள்ளப்பட்டு அதுவரை முகம் தெரியாதிருந்த மைத்திரி அவர்கள்,
வடக்கு முதலமைச்சரைப் போலவே திடீரென யாரும் எதிர்பாராத வண்ணம் ஜனாதிபதியானார்.
♚♚♚♚♚
மஹிந்த குடும்பத்தினரிடமிருந்து கட்சியையும் தேசத்தையும் மீட்கவேண்டிய அவசியம் ஒருபுறம்.
இறுதிப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக உலகு தந்த நெருக்கடி மறுபுறம்.
இவ்விரண்டு நெருக்கடிகளிலிருந்தும் மீண்டுவர, நல்லாட்சி அரசு பெரும்முயற்சி செய்யவேண்டியிருந்தது.
அதனால், தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினையை அங்கீகரித்து நல்லாட்சித் தலைவர்கள் பேசிய போதும்,
எளிமையும் இனிமையும் பட ஜனநாயகப் பண்புகளைக் காட்டி மைத்திரி நடந்து கொண்டபோதும்,
தமிழ்த் தலைவர்களை மதித்ததன் மூலம் தமிழர்களை அங்கீகரிப்பதாய் அவ் அரசு காட்டிக் கொண்டபோதும்,
இலங்கையில் புதிய சமாதானயுகம் ஒன்று பிறக்கப் போகிறது எனும் நம்பிக்கை பலரது மனங்களிலும் ஆழப்பதிந்தது.
எல்லாம் சில நாட்களுக்குத்தான்!
♚♚♚♚♚
மைத்திரியின் தலைமையிலான சுதந்திரக்கட்சியும், ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும்,
ஆரம்பத்தில் ஒன்றுபட்டு நற்சகுனம் காட்டி நகர்ந்த போதும், அச்சகுனம் அதிக நாள் நீடிக்கவில்லை.
அதற்குப் பல காரணங்கள்.
இன ஒற்றுமை விடயத்தில் தமிழர்கள் சார்பாக அவர்கள் எடுத்த சில முயற்சிகள்,
சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுக்கும் முயற்சிகளாய்,
மஹிந்த அணியினராலும் வேறு சில தீவிரவாத பேரின அமைப்புக்களாலும்,
பேரினத்தார் மத்தியில் வியாக்கியானம் செய்யப்பட்டன.
அபூர்வமாய் நிகழ்ந்த, ஆட்சி அமைக்கும் ஆற்றல் கொண்ட இருபேரினவாதக் கட்சிகளின் இணைப்பை,
புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்தி தமிழினத்திற்கு நன்மைதேடத் தெரியாத தமிழ்த்தலைவர்கள் சிலர்,
உலக நிர்ப்பந்தத்தால் நிகழ்ந்த, நல்லாட்சித்தலைவர்களின் பணிவை நிஜப்பணிவென நினைந்து,
‘மிகைப்பட்டு செம்மாந்து’ அறிக்கைகள் மூலம் அறைகூவல்களை அள்ளிவிட,
பேரினவாதிகளிடம் நீறுபூத்துக் கிடந்த இனப்பகை மீண்டும் மெல்லக் கிளர்ந்தௌத் தொடங்கியது.
அங்ஙனம் கிளர்ந்த பகைச்சூட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குழுவினர் குளிர்காய ஆரம்பித்தார்கள்.
♚♚♚♚♚
அதன் விளைவாய் சுதந்திரக்கட்சியில் பிளவு உருவாகத் தொடங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சியிடம் சுதந்திரக்கட்சியை மைத்திரி அடகு வைப்பதாய் எதிரணியினர் பிரச்சாரம் தொடங்க,
அவர்களின் பின் சுதந்திரக்கட்சியினர் சிலரும் அணிசேர ஆரம்பித்தார்கள்.
அதனால் ஐக்கிய தேசியக்கட்சியினரும் அவர்களுக்கு எதிராய் ‘கைமுறுக்கத்’ தொடங்கினார்கள்.
இச்சம்பவங்களால் நல்லாட்சி அரசின் பெயரால் ஒற்றுமைப்பட்ட இருபேரினவாதக் கட்சிகளும்,
மீண்டும் ‘கயிறிழுப்பை’ ஆரம்பித்திருக்கின்றன.
தனது நம்பிக்கைக்குரியவரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவியிறக்க,
சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் காட்டிய வலிமையான எதிர்ப்புக்கு ரணில் பணியவேண்டி வந்தது.
அதனால் கொதிப்படைந்த ஐக்கிய தேசியக்கட்சியினர்
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் விதுரனைப் பார்த்து துரியோதனன்,
நன்றி கெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா!
தின்ற உப்பி னுக்கே நாசம் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய்
மன்றி லுன்னை வைத்தான் எந்தை மதியை என் னுரைப்பேன்,
என்று சொன்னாற் போல,
இனங்களுக்கிடையிலான பகையுணர்வோடு, நடுநிலை தவறி, மஹிந்த சார்பாக இயங்கி நின்ற,
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக இன்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்த தினங்களில் இப்பிரச்சினைக்கான முடிவு தெரியப்போகிறது.
♚♚♚♚♚
சிறிதாய்த் தொடங்கிய பகை மெல்ல மெல்ல முற்றியதால்,
இன்று, ஒன்றை ஒன்று விழுங்கும் ஆவேசத்துடன் இருகட்சிகளும்….
அவர்தம் பிளவு மஹிந்த தலைமையினரான மாற்றணியினர்க்கு வலியவரும் வரப்பிரசாதமாய்த் தோன்ற,
அடங்கிக் கிடந்த அவர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிளவு நிச்சயமெனத் தோன்றுகிறது.
இவர்தம் பிளவுக்குப் பலியாகப் போவது தமிழர்தம் உரிமை முயற்சியேயாம்.
♚♚♚♚♚
ரணிலின் வருகையோடு அமெரிக்க அரசு,
இலங்கை மீதான பகையை மெல்ல மெல்லக் கைவிடத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையின் வளங்களைக் கூறுபோட்டுக் கொடுத்து, சீனாவையும் இந்தியாவையும் கூட,
தன் ராஜதந்திரத்தால் ரணில் ஓரளவு வயப்படுத்தி நிற்கிறார்.
இங்கனமாய் உலக, பிராந்திய வல்லரசுகளின் அனுசரணை பெற்ற காரணத்தால்,
இனி, தமிழர்தம் பிரச்சினையை அந்நாடுகள் உலக அளவில்; விரித்து,
இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.
எனவே நல்லாட்சி அரசு உடையும் பட்சத்திலும் நஷ்டப்படப்போவது நாம்தான்.
வாராது வந்த மாமணியாக அமைந்த அரிய சூழலைப் பயன்படுத்தத் தவறிய நம் தலைவர்கள்,
அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தமக்குள்ளே மோதிப் பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருந்தாத இரண்டு பொருந்திய போதே இச்சூழல் சில நாட்களுக்குத் தான் என,
நம் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
அவர்கள் பிரியும் முன் அவ் அபூர்வ சேர்க்கையைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.
அந்த அளவு தீர்க்கதரிசனம் இருந்திருந்தால் என்றோ நாம் உயர்ந்திருப்போமே.
ஏன்தான் நம் இனத்திற்கு இந்த இழிவோ?
♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚