தலைவர்களை புறந்தள்ளிவிட்டு மக்களின் மனதை வெல்ல முயல்வோம் !

தலைவர்களை புறந்தள்ளிவிட்டு  மக்களின் மனதை வெல்ல முயல்வோம் !
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
ள்ளத்தைக் கவரும் ஒரு செய்தியை,
இன்றைய பத்திரிகையில் பார்க்க முடிந்தது.
செய்தி சாதாரணமானதுதான்.
ஆனால் ஆழம் மிகுந்தது.
செய்தியை வெளியிட்டிருப்பவர்,
கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன்.


நான் இதைச் சொன்னவுடன்,
ஆஹா! சுமந்திரனுக்கு வால் பிடிக்கிறார் என்றும்,
இவர் சுமந்திரனின் ஆள்  என்றும்,
ஒருசில பேர் கூக்குரலிட முற்படுவார்கள்.
சென்றமுறை நான் எழுதிய,
சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! எனும் கட்டுரையைப் படித்துவிட்டு,
யாரோ ஒருவர்,
 

இவர் இதுவரை முதலமைச்சரைத் தாக்கினார்,
இப்போது சம்பந்தனைத் தாக்குகிறார்.
இவரது நோக்கம் அடுத்த தமிழ்த்தலைவராய் சுமந்திரனை ஆக்குவதே.
என்பதான ஒரு முன்னுரையோடு அக்கட்டுரையை,
பல பிரமுகர்களுக்கும் மின்னஞ்சல்களினூடாக அனுப்பிக்கொண்டிருந்தார்.


மனிதர்களை முதன்மைப்படுத்தி,
சார்புபட்டுக் கருத்துரைக்கும் பிழையான இயல்பை,
பலகாலமாகப் பழகிக் கொண்டுவிட்டபடியால்,
நடுநிலையோடு எழுதப்படும் கருத்துக்களுக்கும்,
சார்புச்சாயம் பூசி மகிழ நினைக்கிறார்கள் சிலர்.
என்னைப் பொறுத்தவரை என் கட்டுரைகள்,
மானுட உயர்வைக் கருத்தில் கொண்டு,
தவறுகளைச் சுட்டிக்காட்டியும்,
தீமைகளைக் கண்டித்தும்,
நன்மைகளைப் பாராட்டியும்,
கருத்தியல் சார்ந்து எழுதப்படுபவையே அன்றி,
தனிமனிதச் சார்புபட்டு எழுதப்படுபவை அல்ல.
எவரையும் உயர்த்தவோ, தாழ்த்தவோ வேண்டிய தேவை,
எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது.
என் அறிவுக்குச் சரியாய்ப்பட்டவற்றை எழுதுகிறேன்.
நான் எழுதியது தான் சரி! என்னும் பிடிவாதமும் எனக்கில்லை.
காலம் என்கருத்துக்களைத் தவறாக்கினால்,
அதனை தலைதாழ்த்தி ஏற்கவும் நான் தயங்கேன்.
எழுதத் தொடங்கிய கட்டுரையின் இடையில்,
இதனை ஒரு சிறு தன்னிலை விளக்கமாய்,
பதிவு செய்ய விரும்புகிறேன்.


சொல்ல வந்த விடயத்தைவிட்டு,
அதிக தூரம் சென்று விட்டேன்.
பொறுத்தருளுங்கள்!
நான் முதற்சொன்ன,
உளத்தை மகிழ்வித்த செய்தி இதுதான்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்,
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து,
நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்,
பின்வருமாறு கூறியிருக்கிறார்.

 
ஆட்சி மாற்றம் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியான தினத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நாடு முன்னேற வேண்டுமெனில் மூன்றாவது அரசியலமைப்பு மிக முக்கியமானது. இந்த அரசியலமைப்பே இனங்களுக்கிடையிலான உறவுகளை ஏற்படுத்தும். நாடு சுதந்திரமடைந்தது முதல் சிறுபான்மையின மக்கள் சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக வாழ முடியாமல் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசியலமைப்பின் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமென நாம் கூறவில்லை. புதிய அரசியலமைப்பின் ஊடாகவும், புதிய உறவுகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் தீர்வுக்கான ஆரம்பத்தை உருவாக்க வேண்டும். 
ஜனாதிபதியின் நியாயமான எண்ணத்தை உணராது, பிற்போக்குச் சக்திகள் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில், முன்வைத்த காலைப் பின்வைக்கக்கூடாது. தற்போது, பல உயிர் இழப்புக்களுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரங்களை அனைவரும் கையாளக்கூடிய வகையிலான அரசியலமைப்பு அவசியம் என்பது உணரப்பட்டிருக்கிறது. நாட்டின் பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது.
 வடக்குக் கிழக்கு மக்கள், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளதை யாரும் தட்டிக் கழிக்க முடியாது. நாட்டைப் பிளவுபடுத்தாது ஒரே நாட்டிற்குள் தாங்களும், ஏனைய மக்களும் சேர்ந்து உருவாக்குகின்ற புதிய அரசியலமைப்பில் இணைந்து கொள்கிறோம் என தமிழ்மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தைக் கைநழுவ விட்டுவிடக்கூடாதென சிங்கள மக்கள் தங்கள் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக் கோருகின்றோம். 

இவ் அறிக்கையின் கருத்து கூட்டமைப்பினதா?,
அல்லது சுமந்திரனினதா? என்று விவாதிக்கத் தொடங்காமல்,
இவ் அறிக்கையின் கருத்தை ஆராய்வோமானால்,
யதார்த்தமான, அறிவுபூர்வமான அறிக்கை இது என்பதை,
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


தமிழர்கள் தேசியச்சிந்தனையிலிருந்து தாமாக விலக விரும்பவில்லை.
பேரினவாதிகளின் அராஜகச் செயற்பாடுகளே,
அவர்களை அங்ஙனம் விலகினால் என்ன? எனச் சிந்திக்க வைத்தது. 
எளியவனை வலியவன் வாட்டினால்,
வலியவனை வாசற்படி வாட்டும் என்று,
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
இலங்கையில் நடந்ததும் அதுதான்.


எண்ணிக்கையில் அதிகரித்தவர்கள் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்து,
உடன் ஒன்றி வாழ்ந்த உறவுகளைச் சீண்டி, வதைத்து, சீரழித்து,
தம்மைக் கேட்பார் எவருமிலர் எனும் எண்ணத்தில்,
பேரினவாதிகள் செய்த அட்டூழியமே,
சாத்வீகமே தம் வழி என்று நடந்து கொண்டிருந்த,
தமிழர்களின் கையிலும் ஆயுதத்தை ஏற்றியது. 
இராம இலக்குவரை மானுடப்பூச்சிகள் என வர்ணித்து,
அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்து விளையாடிய,
இராவணனின் திமிர் கொண்ட செயற்பாடே,
அன்றைய இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
அதுபோலவே தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்து விளையாட நினைத்த,
பேரினவாத இராவணர்களின் அராஜகத்தால்தான்,
இந்துசமுத்திரத்தில் முத்தாய் முகிழ்த்து நின்ற இலங்கையும்,
மெல்லமெல்ல வீழத்தொடங்கியது.


ஏதோ நல்லகாலம்.
பகைக் கடலுள் அது முற்றாய் மூழ்கிச் சீரழிவதன் முன்,
உலகம் ஒன்றிணைந்து ஓடிவந்து தடுத்திருக்கிறது.
இன்று உலகம் தரும் நெருக்கடியைத் தவிர்க்க முடியாமல்,
பேரினத்தார் விழி பிதுங்கிய நிலையில் விக்கித்து நிற்கின்றனர்.
அதனாற்றான்,
இதுநாள் வரை பாம்பும் கீரியுமாய்ப் படமெடுத்துச் சீறி நின்ற,
பேரினத்தின் பெருங்கட்சிகள் இரண்டும் கைகோர்த்து,
இலங்கைத்தாயின் கண்ணீர் துடைக்க முன் வந்திருப்பதாய்க் கூறி,
ஒற்றுமை காட்டி ஒன்றுபட்டு நிற்கின்றன.


 தமிழர்தம் கோரிக்கை நியாயமானது என ஒப்புக்கொண்டு,
ஒன்றாகி நிற்கும் பேரினப்பெருங்கட்சிகளின் இணக்கப்பாடு,
 தமிழர்க்கு நீதி வழங்கத்தான் வேண்டுமென்று வலியுறுத்தி நிற்கும்,
உலகநாடுகளின் ஒருமைப்பாடு,
என்பதான இரண்டு வலிய துடுப்புக்கள்,
இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இன்னற் கடல்கடக்க,
இறைவன் தந்த வரமாய் இன்று கிடைத்திருக்கின்றன.
இஃது தமிழர்க்குக் கிடைத்த வாய்ப்பு மட்டுமன்றாம்.
சிங்களவர்க்கு கிடைத்திருக்கும் வாய்ப்புமேயாம்.
பகைக் கடலுள் படகோட்டி,
இதுவரைகாலமும் இன்னல் அலைகளால் எற்றுண்டு கிடந்த இரு இனத்தாரும்,
இச்சூழல் அமைந்தது இறைவரம் என்று கருதி,
ஏற்றமுற நினைக்கத் தவறின்,
இலங்கைத்தாய் இழிவடையப் போவது உறுதி.


தற்போதைய சமாதான சூழ்நிலை,
உலக நெருக்கடியால் ஏற்பட்டது உண்மையாயினும்,
அந் நெருக்கடிக்கு ஆட்பட்டதால் மட்டுமன்றி,
சமாதானத்தை உண்மையாய் விரும்பும்,
தன் முனைப்பில்லாத,
மானுட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கின்ற,
நீதியின் பால் விருப்புக் கொண்ட,
உண்மைத் தேசபக்தியுள்ள ஓர் உத்தமர்,
இத்தேசத்தின் ஜனாதிபதியாய்த் தலைமையேற்றிருப்பது,
இரு இனத்தாரினதும் அதிர்ஷ்டமேயாம்.


அதிசயமாயும், அற்புதமாயும் அமைந்திருக்கும்,
இச்சூழலைக் கெடுக்கவென இருபக்கத்திலும்,
சில பிற்போக்குச் சக்திகள் கங்கணம் கட்டி முனைகின்றன.
இத்தேசத்தைக் கெடுக்கவெனப் பாடுபடும் அத்தகு சைத்தான்களை,
ஒற்றுமையோடு இந்நாட்டு மக்கள் ஒதுக்கத்தவறின்,
வரலாற்றுத் தவறிழைத்தவர்கள் ஆவார்கள்.
ஜனாதிபதியின் நியாயமான எண்ணத்தை உணராது, 
பிற்போக்குச் சக்திகள் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதை,
தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனும் சுமந்திரனின் வேண்டுகோள்,
காலத்தின் தேவை உணர்ந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளாம்.


சர்வாதிகாரியாய் குடும்ப ஆட்சி நடத்தி,
இத்தேசத்தின் ஒற்றுமையையும், சமாதானத்தையும்,
தனது வலிய கரங்களால் நசுக்கி,
தமிழினத்திற்குத் தீங்கிழைத்த பழக்கத்தால்,
தம் இனத்திற்கும் அதையே செய்ய முனைந்து,
கேட்பார் எவருமின்றி ஆட்டம் போட்ட பழைய அதிபரின்,
நாடாளும் ஆசை இன்னும் நலிவடைந்து விடவில்லை.
அந்த சர்வாதிகாரியின் நிழலில் அமர்ந்து,
தாம் துய்த்த இன்பத்தின் ருசியை இன்னும் இழக்கவிரும்பாமல்,
அவரை ஆட்சிப் பீடம் ஏற்றி,
அவரைச் சார்ந்து தம் வயிறு வளர்க்க விரும்புவார் பலர்,
இன்றும் இத்தேசத்தில் இனத்துவேச விதையை,
மீண்டும் எப்படி விதைக்கலாம் என,
எண்ணித் தவம் கிடக்கின்றனர்.
இது ஒருபுறம்.


தமிழர் பட்ட வரலாற்று இழப்புகளை,
மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி,
மக்கள்தம் உணர்வுகளைத் தூண்டி,
அத்தூண்டுதலால் தம் பதவிகளை நிலைநிறுத்தி,
சுயநலம் துய்க்க நினைக்கும்,
நம் தமிழ் இனத்தலைவர்களில் ஒரு சாரார் மற்றொரு புறம்.
அப் பொய்மைத் தலைவர்கள்,
உலக நெருக்கடியால் பணிந்திருக்கும்,
பேரினவாதிகளின் உண்மைநிலையை அறியாமல்,
இன்று நினைத்தது நாளை நடக்கவேண்டுமென வலியுறுத்துவதும்,
ஒரேநாளில் இனப்பிரச்சினையை ஒழித்துவிடவேண்டுவதும்,
எதிராளிகளின் பலமும், தம் தகுதியும் அறியாமல் சவால்கள் விட்டு,
சண்டையை மீண்டும் தூண்ட நினைப்பதுமாய்,
மக்களைப் பேதமைப்படுத்தி,
பிழையான வழியில் நடக்க வைக்க முனைகின்றனர்.


உயர்வில் பணிவும், தாழ்வில் நிமிர்வும் வேண்டும் என்றார் வள்ளுவர்.
பெருக்கத்தில் வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்தில் வேண்டும் நிமிர்வு என்பது குறள்.
உலகியலில் பெரும்பாலும் இது நடப்பதில்லை.
உயர்வின்போது நிமிர்வும், தாழ்வின் போது பணிவும் காட்டுவதே கீழோரின் வழக்கமாம்.
அதனாற்றான் பிரச்சினைகள் தீருவதில்லை.
பலம் பெற்றிருந்த போது சிங்களவர்கள் தமிழர்களுக்கு விட்ட சவால்களை,
உலக ஆதரவைப்பெற்ற இன்றைய நிலையில்,
நாம் அவர்களுக்கு விட ஆரம்பிப்போமானால்,
உண்மைச் சமாதானம் ஒருகாலும் உதிக்காது.
பழிவாங்கும் மனப்பாங்கை நீக்குவதே,
உண்மைச் சமாதானத்தின் முதற்கதவைத் திறப்பிக்கும்.
இதனை அறியாதார் அறியாதாரே!


இரு திறத்திலும் இருக்கும் இத்தகு தீயோர்,
இத்தேசத்தில் நட்பு விருட்சம் வளர்ந்து விடாமல் இருக்க,
கரணம் அடித்துப் பாடுபடுகிறார்கள்.
தெற்கில் உலக சமத்துவம் பேசி,
‘மாக்சீய’ மாண்பினராய் முன்பு தம்மைக்காட்டிக்கொண்ட சிலரும்கூட,
இன்று இனத்துவேசம் பேசி இழிவுற்று நிற்கின்றனர்.
தமிழர்க்குச் சம-தானம் வந்தாலன்றி,
இந்நாட்டில் சமாதானம் வராது என்ற உண்மையை,
உணர்ந்தும் உணராமல் நிற்கும் இவ் அறிவிலரை என் செய்ய?


முக்கியமான விடயத்தை இனித்தான் சொல்லப்போகிறேன்.
சுமந்திரனின் அறிக்கையில் ஒரு விடயம் எனக்கு மிகவும் பிடித்தது.
அரசியல் தீர்வு முயற்சியில் ஒரு புதிய பாதைக்கு வழிகாட்ட முயல்கிறார் சுமந்திரன்.
இதுவரை காலமும் தமிழர்கள் தம்உரிமை பற்றிய கோரிக்கைகளை,
பேரினவாதத் தலைவர்களிடமே முன் வைத்து வந்தனர்.
சுமந்திரன் அத்தலைவர்களை விட்டுவிட்டு,
பேரினத்து மக்களோடு பேசத் தலைப்பட்டிருக்கிறார்.
தலைவர்களைச் சமாதான முயற்சி நோக்கி நகர்த்த,
நீங்கள் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்ற,
சிங்கள மக்களை நோக்கிய சுமந்திரனின் வேண்டுகோள்
மகிழ்வு தருகிறது.


மக்களைச் சரியாக இயங்கச் செய்யும் தகுதியுடையோரே,
உண்மைத் தலைவர்களாம்.
அத்தகு உண்மைத் தலைவர்களை அதிகம் பெறாதது இத்தேசத்தின் துரதிர்ஷ்டமே.
சுதந்திரம் பெற்ற நாள் முதல், நமக்கமைந்த இத்தேசத்தின் அத்தனை தலைவர்களும்,
தம் பதவிச்சுகம் நோக்கிக் குளிர்காய,
இனப் பகை நெருப்பை ஊதிஊதி வளர்த்தனர்.
பேரினம், சிற்றினம் எனும் இரு பகுதியிலும் இதுவே நடந்தது.
சுயநலம் நோக்கித் தலைவர்களால் வளர்க்கப்பட்ட நெருப்பே இலங்கைத் தீவை எரியூட்டியது.
மூண்டெழுந்த அப்பகை நெருப்பால் விளைந்த பேரழிவைக் கண்டு,
இன்று உலகம் ஓடிவந்து அதனை ஊதி அணைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மனிதனின் தலை பிழைத்தால் அவனைப் பைத்தியக்காரன் என்கிறோம்.
தலைவர்கள் பிழைத்தாலும் அவர்க்கும் அதுவே பெயராம்.


இந்நாட்டில் மக்களாகிய அங்கங்களை,
சரியான பாதையில் வழி நடத்திய தலைவர்கள் பெரும்பாலும் இலராயினர்.
அதனாற்றான் இப்பொன்னான தேசம் பொசுங்கிப் போயிற்று.
எனவேதான் தலைகளை நோக்கி அங்கங்களைச் சரிசெய்ய வேண்டாமல்,
அங்கங்களை நோக்கித் தலைகளைச் சரிசெய்ய வேண்டி நிற்கிறார் சுமந்திரன்.
அதுவே என் கருத்துமாம்.


நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும்,
திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்களும்
தேர்தலில் வெற்றிபெற்று பதவிகள் ஏற்றபோது,
அவர்களுடன் இருந்த தொடர்பின் காரணத்தால்,
என் மனக்கருத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.
பேரின அரசியலாளர்களுடன் மோதி வெற்றி கொள்ளும் அதேவேளை,
பேரின மக்களுடன் நட்பையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
இது என் விருப்பு.
அவர்தம் மனங்களை வென்றெடுக்க சில வழிகள் உள.
ஒன்றைச் சொல்கிறேன்.
வெற்றி பெற்ற நம் தலைவர்கள் அனைவரும் 
இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்களிடம் சென்று ஆசி பெறுவதோடு, 
முக்கியமாக பௌத்த பீடாதிபதிகளிடமும் சென்று ஆசி பெறுங்கள். 
அவர்கட்கு உங்கள் கொள்கையை விளக்கம் செய்யுங்கள்.
தமிழர்கள் கோரும் உரிமை சிங்களவர்களுக்கு எதிரானதல்ல என்பதையும்,
சிங்களவர்களுடன் தமிழர்கள் உறவு பேணியே வாழ நினைக்கிறார்கள் என்பதையும்,
உறுதிபட எடுத்துச் சொல்லுங்கள்.
பௌத்த பீடங்களிலிருந்து நீங்கள் விடும் அறிக்கை,
நிச்சயம் சிங்கள மக்களிடம் சென்று சேரும் என்பதால்,
பகையற்ற தமிழர்களின் மன உணர்வைச் சிங்களவர்களிடம் சேர்ப்பிக்க,
அதுவே பொருத்தமான இடம் என்றுரைத்தேன்.
அதுபோலவே சிங்கள அறிஞர் குழாத்தையும், 
ஊடகவியலாளர்களையும்  ஒன்று கூட்டி அவர்களுக்கும் மேற்கருத்தை உரையுங்கள்.
இன ஒற்றுமைக்கான முயற்சியில் இது நல்ல பயன் தரும் என்றும் தெரிவித்தேன்.
அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப் போயின.


தீயவன் என்றும், தீயவர் என்றும்,
ஒரு தனிமனிதனையோ, ஒரு தனி இனத்தையோ,
ஒருநாளும் சொல்லுதல் தகாது.
எல்லோரும் நல்லவரே என்று ஒரு பழைய சினிமாப்பாடல் இருக்கிறது..
அது யதார்த்த உண்மை.
என்னைப் பொறுத்தவரை சிங்களவர்களும் நல்லவர்களே!
தலைமைகள் தான் அவர்கள் மனதில் நஞ்சை விதைத்துக் கெடுத்தன.
அத்தலைமைகள் இன்றும் பகை விதைத்து, இன்னும் பகை விதைக்கும்.
காரணம், அவர்க்கு தேசம் பற்றியோ, மானுடம் பற்றியோ கவலை இல்லை.
அவர்க்கு வேண்டியதெல்லாம் பதவிச்சுகம் மட்டுமே.
பதவிப் போதையில் ஊறி மகிழ்ந்து பழகிய காரணத்தால்,
அதற்காக எதையும் செய்யத் தயார் எனும் நிலையில்தான்
என்றும் அவர்களின் இருப்பு.
சிங்களத்தலைவர்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை.
இன்றைய தமிழ்த்தலைவர்கள் பலரது நிலையும் இதுவேதான்.


தலைவர்களின் மனதை இதுவரை நம்மால் வெல்ல முடியாமல் போனதற்கும்,
அவர்களூடு இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போனதற்கும் இதுவே காரணமாம்.
ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தாலன்றி, அவர்கள் என்றும் மாறப்போவதில்லை.
உத்தமராய் நாம் இன்றுவரை நினைத்திருக்கும் நம் ஜனாதிபதி,
அண்மையில் பி.பி.சி.க்கு அளித்திருந்த பேட்டி,
அவரும் மேற்தலைவர்கள் வரிசையில் சேர்ந்து விடுவாரோ? என்னும்
அச்சத்தை ஊட்டியிருக்கிறது.


அதனால் இனி சிங்கள மக்களின் மனதை வெல்ல முயல்வதே,
இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழர்க்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியாம்.
அவ்வுண்மையை உணர்ந்து சுமந்திரன் பேசியிருப்பதே,
என் உள்ளத்தின் உவப்பிற்கு காரணம்.


வெறும் அறிக்கையோடு,
இக்கருத்தை நிறுத்திக் கொண்டால் போதாது,
இன்னும் சற்று ஆழமாய்க் கூட்டமைப்பு செயல்படவேண்டும்.
ஆளுமையோடு சிங்கள மொழி பேசவல்ல
தமிழ் தலைவர்களையும், அறிஞர்களையும் குழுக்களாய் அமைத்து,
அவர்களைக்  கொண்டு சிங்களக் கிராமம் தோறும் சென்று,
சாதாரண சிங்கள மக்களிடம் நம் கருத்தைச் சொல்விக்க வேண்டும்.
நான் முதற் சொன்னதுபோல,
சிங்கள மக்களிடம் செல்வாக்குப் பெற்ற
ஊர்த் தலைவர்களையும், சிங்கள அறிஞர்களையும், சிங்களப் பத்திரிகையாளர்களையும்
தனித்தனி சந்தித்து, நம் கருத்தை அவர்கள் மனதில் ஆழப்பதிக்க வேண்டும்.
ஓரளவு இம்முயற்சி வெற்றிபெறும்போது, அவர்களை அழைத்து வந்து,
போரினால் பாதிப்புற்றவர்களைச் சந்திக்கச் செய்து,
அவர்கள் இன்றுவரை படும் இன்னல்களை
உணரச்செய்தல் வேண்டும்.


இம்முயற்சிகள் நிச்சயம்
சிங்களவர்களின் மனதில் மாற்றங்களை விளைவிக்கலாம்.
மக்களின் மனம் மாறினால்,
தலைவர்களும் மாறவேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.
மக்களை மக்கள் உணர்ந்துகொண்டு நட்புப் பாராட்டுவதன் மூலமே
உண்மைச் சமாதானம் பிறக்கவேண்டும்.
இதுவொன்றே நிரந்தர சமாதானத்திற்கான ஒரே வழியாம்.
புற அழுத்தங்களால் வரும் சமாதானம், நிலையானதாய் என்றும் இருக்கப்போவதில்லை.
அவ்வழுத்தங்கள் நீங்க, சமாதானமும் நீங்கும்.
சமாதானம் நீங்க, மீண்டும் மீண்டும் 
இலங்கை அன்னை இன்னல்களில் மூழ்குவாள்.


இவ்வுண்மையை,
இரு இனத்தாரும் உணரும்காலம் வந்துவிட்டது.
அதனால்த்தான் கூட்டமைப்பின் சார்பான சுமந்திரனின்
அவ்வறிக்கையைச் சிலாகித்துப் பாராட்டுகிறேன்.
நிரந்தர நிம்மதி வேண்டுமெனின்,
தலைவர்களை விட்டுவிட்டு
மக்களின் மனதை வெல்ல முயல்வோம்! 
➤➤➤➤
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.