தொல்லை தரும் காதல் துணி! - கவிதை

தொல்லை தரும் காதல் துணி! - கவிதை
 
உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும்
கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென
அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம்
கண் கலந்த காதற்(கு) அணி.
 

ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும்
தீயாக நம் உடம்பு திகுதிகுக்கும் - மாயாது
எண்ண அலைகள் எப்போதும் மேலெழும்பும்
உண்ணப் பிடிக்காது உணவு.

தாய் தந்தைகூட தம் மனதுக்கந்நியமாய்
போய் நெஞ்சு மாறிப் புதுமை செயும்-வாயென்றும்
மந்திரமாய்த் துணை நாமம் மனத்துள் உருப்போடும்
அந்தரமாம் காதல் அறி.

தாய் பார்த்துச் சிரித்தால் தலை திருப்பும் தன்னுடைய
நாய் பார்த்து அன்பாய் நலம் கேட்கும் - பேய் பார்த்த
பிள்ளையென நெஞ்சு பிறழ்ந்தேதான் பேதலிக்கும்
தொல்லை தரும் காதல் துணி.

நாளும் இனித்திட்ட நட்பதுவும்தான் கசக்கும்
ஆளும் நம் மனத்துள்ளே ஆயிரமாய் - மூளுகிற
எண்ணங்கள் கரையின்றி எங்கெங்கோ போய்வரலால்
மண்ணாகிப் போயிடுமே மனசு.

கண்மூடிக் கிடந்தாலோ கனவு வரும் கண் திறக்க
வண்ணத் துணையதனின் வடிவு வரும் - தன்னாலே
பேசும் பிதற்றும்  பிறர் நகைக்கச் செய்திடுமே
நாசமதாம் காதல் நமக்கு.

கண்ணாடி தன்வடிவைக் காட்டாது கருவிழிக்குள்
என்னேரமும் துணையின் எழிலேதான்- மண்ணாகப்
போகும் மனசு புலன்களொடு புத்தியெலாம்
வேகுங்காண் உயிரதுவும் விரைந்து.

கல்வி கசக்கும் கண்ணதுவும் துயில் மறக்கும்
பள்ளியிலே முள்ளகுhம் பஞ்சணையும்- வெள்ளி
முளைத்தாலும் கண்மூடா விந்தையினை என்சொல்ல
களைத்தாலும் காதல் கனி.

வெண்பாவில் தளை பிழைத்து வீணாகும் விளங்காது
தன்பாட்டில் பிழையெல்லாம் சரியாகும் - பண்பாட்டில்
ஊறியவர் தன்நெஞ்சும் ஊறுபடும் அறிவாய் நீ
பாரியது காதற் பனி.
***
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.