அரசியற்களம் 08: இலங்கைத் தேர்தல் முடிவுகள் - சில அவதானிப்புக்களும், எதிர்வுகூறல்களும்

அரசியற்களம் 08: இலங்கைத் தேர்தல் முடிவுகள் - சில அவதானிப்புக்களும், எதிர்வுகூறல்களும்
 
ள்ளம் பதைபதைக்க பலரும் எதிர்பார்த்திருந்த,
இலங்கைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வடகிழக்கில், எதிர்பார்த்ததற்கு மேலாக,
தமிழர் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றிருக்கிறது.
தெற்கில் ஜனவரி 8 புரட்சியை முன்னெடுக்க,
அனுமதிகோரி நின்ற ஐக்கியதேசியக்கட்சிக் கூட்டணி,
வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றிருக்கிறது.
முடிந்த அளவு ஊதிப்பார்த்தும் இனத்துவேச அக்கினியை,
முழுமையாய் மூளச்செய்ய முடியாது,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோற்றிருக்கிறது.
 


ஆனாலும் மஹிந்த மூட்டிய நெருப்பின் பாதிப்பு இருப்பதை,
தோல்வியிலும் அவர் பெற்றிருக்கும் வெற்றி உறுதி செய்கிறது.
இம்முறை கற்ற இளைஞர்களின் மனதைக் கவர்ந்து,
வலிமை பெற்றிருந்ததாகப் பரவலாய்க் கருதப்பட்ட,
ஜே.வி.பி. கட்சியின் வெற்றி,
தெற்கில் எதிர்பார்த்த அளவு இல்லாது பொய்த்துப் போயிருக்கிறது.
அதேபோல வடக்கில் கூட்டமைப்புக்குச் சமமாய் பேசப்பட்ட,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி,
ஒரு தொகுதியைத்தானும் பெறமுடியாமல்,
பெருந்தோல்வி அடைந்திருக்கிறது.
பத்திரிகையாளர் வித்தியாதரனால் திடீரென ஆரம்பிக்கப்பட்ட,
புதிய போராளிகளின் கட்சி முன்னரே எதிர்பார்க்கப்பட்டது போல்,
தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்விரு கட்சிகளாலும்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராய் நின்று போட்டியிட்ட,
அங்கஜன் இராமநாதன் பெற்ற வாக்குகளைக் கூட பெறமுடியாமல் போயிருக்கிறது.
பலகாலமாய்ப் பலராலும் துரோகி முத்திரை குத்தப்பட்டிருந்தும்,
முன்னைய வெற்றிகள் எல்லாம் அரச செல்வாக்கால் பெறப்பட்டவை என்று,
பழி சுமத்தப்பட்டிருந்தும் அவற்றைத்தாண்டி
இம்முறை நடந்த நேர்மையான தேர்தலிலும்,
டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி,
முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று,
ஒரு ஆசனத்தை கைப்பற்றியிருக்கிறது.
அதுபோலவே விஜயகலா மகேஸ்வரன் அவர்கள்,
வடக்கில் ஐக்கியதேசியக்கட்சியின் சார்பில் நின்று,
இருபதாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று,
ஒரு ஆசனத்தை தனதாக்கியிருக்கிறார்.
அதுபோல கிழக்கில்,
ஐக்கியதேசியக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ்,
ஒரு மாவட்டத்தில் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு,
ஒரு ஆசனத்தை மட்டும் வென்றிருக்கிறது.
அதுபோலவே ஐக்கிய தேசியக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட,
ரிஷாத் பதியுதீன் இம்முறை வன்னி மாவட்டத்தில்
ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் வெற்றி பெற்று பின்தங்கியிருக்கிறார்.
இம்முறை புதிய பாராளுமன்றத்தில்,
ஐக்கியதேசியக்கட்சி. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.,
முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. எனும் ஆறு கட்சிகள்,
தனிக்கட்சிகளாய் பிரதிநிதித்துவம் வகிக்கப்போகின்றன.
இவைதான் இம்முறைத்தேர்தல் முடிவுகள்.
இனி இத்தேர்தல் முடிவுகள் பற்றிய சில அவதானிப்புக்களைக் காணலாம்.
****

மென்மைப்போக்குடையவர், உறுதி இல்லாதவர் என்று,
எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரி அவர்கள்,
இந்தத் தேர்தலின் போது காட்டிய ராஜதந்திரம்,
பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
ஏமாளி என்று தேர்தல் தொடக்கத்தில் கருதப்பட்டவர்,
தேர்தலின் முடிவில் மற்றவர்களை ஏமாளியாக்கி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் தேர்தலில் நிற்க மஹிந்தவுக்கு இடம்கொடேன் என்றவர்,
பின்னர் மஹிந்தவுடன் சந்திப்புக்களை நிகழ்த்தியதும்,
மெல்லமெல்ல தனது நிலையினின்றும் இறங்கி வந்து,
மஹிந்த தேர்தலில் போட்டியிட அனுமதித்ததுமான செயல்கள் கண்டு,
பலரும், இவர் தலைமைக்குப் பொருத்தமற்றவர்,
மற்றவர்கள் தந்த நெருக்கடிக்குப் பயந்தே,
மஹிந்த தேர்தலில் நிற்க அனுமதி தந்தார் என்று கருதினர்.
அச்செயற்பாடுகள் அவரது பலயீனம் எனக் கருதி,
ஆரம்பத்தில் ஜனவரி எட்டுப் புரட்சியில் மைத்திரியுடன் உடன் நின்ற
கட்சியின் செயலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் ,
தேர்தல் நெருங்க நெருங்க,
மஹிந்தவின் நிழல் தேடி மெல்ல மெல்லச் சென்றனர்.
ஆனால், அவரது செயற்பாடுகளின் ஆழம்,
தேர்தலின் முடிவில்தான் வெளிப்பட்டிருக்கிறது.
****

ஆரம்பத்தில் மஹிந்தவை தேர்தலில் நிற்கமுடியாமல் செய்திருந்தால்,
நிச்சயம் மஹிந்த தன் அணியோடு பிரிந்து,
புதிய கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நின்றிருப்பார்.
அங்ஙனம் நடந்திருந்தால் அவர் பலம் பெற்றிருப்பதோடு,
நிச்சயம் கட்சி உடைந்து பலயீனம் அடைந்திருக்கும்.
மஹிந்தவுக்கு தேர்தலில் இடம் கொடுத்து அதனைத் தவிர்த்ததோடு,
அவரைப் பலம் பெறவைக்குமாப்போல் செய்து,
கட்சிக்கும், தனக்கும் விசுவாசம் அற்றவர்களையும்,
தெளிவாய் இனங்கண்டு கொண்டார் மைத்திரி.
தேர்தல் பதிவு நிறைவடையும்வரை காத்திருந்த மைத்திரி,
அது முடிந்து ஓரிருநாட்களில் வெளியிட்ட,
கடுமையான தனது அறிக்கை மூலம்,
முதல் குண்டைத் தூக்கிப் போட்டார்.
அவரது அவ் அறிக்கை தனது கட்சியை மட்டுமன்றி,
நடுநிலையோடு ஐக்கிய தேசியக்கட்சியையும் விமர்சித்திருந்தது.
பின் மெல்ல மெல்ல மைத்திரியின் சூட்சுமங்கள் வெளிவரத் தொடங்கின.
மஹிந்தவை எதிர்த்து நின்று ஐக்கிய தேசியக்கட்சியுடன்,
தேர்தலில் போட்டியிட முன்வந்த,
தனது கருத்தோடு உடன்பட்டுச் செயற்பட்டவரான,
அர்ச்சுன ரணத்துங்க போன்ற நால்வரை,
கட்சியிலிருந்து விலக்கியதன் மூலம் தனது கட்சி விசுவாசத்தையும் நிறுவி,
தன் கட்சியினர் யாரும் தன்னைக் குறை சொல்லாதவகையில்,
தனது நடுவுநிலைமையையும் உறுதி செய்தார்.
தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னதாக,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,
மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆகியவற்றின் செயலாளர்களை நீக்கி,
அடுத்த குண்டினைத் தூக்கிப் போட்டார்.
அச்செயற்பாடு ஆழமான திட்டத்தோடு அமைந்தது என்பதை,
எதிரிகள் மெல்ல மெல்லத்தான் தெரிந்து கொண்டனர்.
தேர்தல் முடிவின் பின் கட்சிகளுக்கு வழங்கப்படும் போனஸ் இருக்கைகளை,
தீர்மானிக்கும் உரிமை கட்சிச் செயலாளர்களுக்கே உரியதாயிருந்தது.
செயலாளர்களை நீக்கியதன் மூலம் அந்த உரிமையைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார் மைத்திரி.
அதன் பிறகு தேர்தலுக்கு மிக அண்மித்தாக,
மஹிந்தவுக்கு விஸ்வாசமான கட்சி முக்கியஸ்தர்கள் 13 பேரை மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கி,
யாரும் எதிர்பாராத அடுத்த அதிரடியை நடத்தினார் மைத்திரி.
உத்தரவைக் கையில் வாங்காது செயலாளர்கள் ஓடி ஒழிய,
அவ் உத்தரவுகள் அவர்களது ஆளில்லா வீட்டு வாசலில் ஒட்டப்பட்டன.
அவ் உத்தரவுகளைக் கையில் தந்துவிடுவார்கள் என்பதற்காக,
அவர்களில் சிலர் தேர்தலில் வாக்களிக்கக் கூட வரவில்லை என்பது சுவாரஸ்யமான விடயம்.
அதுபோலவே கடைசி நேரத்தில் மஹிந்தவுக்கு அவர் எழுதிய இரண்டாவது கடிதம்,
மைத்திரியை ஓர் இரும்பு மனிதனாய்க் காட்டியதோடு,
மஹிந்தவின் அரசியல் வாழ்விற்குப் பெரும்பாலும் முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது ஜனவரி எட்டுப் புரட்சியில் உடன் நின்ற,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முதலியோரை,
கட்சியின் மத்தியகுழுவுக்குள் கொண்டுவந்து,
சிந்தாமல்; சிதறாமல் கட்சியை நெறிசெய்து நிற்கும் ஜனாதிபதி மைத்திரிதான்,
நிச்சயம் இம்முறைத் தேர்தலில் கதாநாயகன் என்பதில் ஐயமில்லை.
****

மொத்தத்தில் வடகிழக்கில் கூட்டமைப்பு தான் எதிர்பார்த்ததைப்போல,
கிட்டத்தட்ட ஏகத்தலைமை என்னும்படிக்காய் பெரு வெற்றி அடைந்திருக்கிறது.
தெற்கில் ஐக்கியதேசியக்கட்சி அத்தகு வெற்றியைப் பெறாவிட்டாலும்,
நீண்ட நாட்களின் பின் ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது.
வடக்கிலும், தெற்கிலும் வெற்றி பெற்றிருக்கும் இக்கட்சிகள்,
அவ்வெற்றிகளைக் கொண்டு தனித்து மகிழமுடியாது இருக்கப்போவது திண்ணம்.
வெற்றியின் பின்னணியில் அவ்விரு கட்சிகளுக்கும் இருக்கப்போகும் பிரச்சினைகளைப் பற்றி,
விரிவாய் ஆராயவேண்டியிருக்கிறது.
****

ஐக்கிய தேசியக்கட்சி

ஐக்கியதேசியக்கட்சி இம்முறை போனஸ் தொகுதிகளையும் சேர்த்து,
106 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது.
அவர்களுடன் இணைந்து யானைச்சின்னத்தில் தேர்தலில் நின்ற,
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி,
தனித்துக் கேட்டு வெற்றிபெற்ற ஒரு தொகுதியையும் சேர்த்தால்,
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் பலம் 107 ஆக இருக்கப்போகிறது.
எனவே, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற,
ஐக்கியதேசியக்கட்சிக்கு இன்னும் ஆறு ஆசனங்கள் தேவைப்படப்போகின்றன.
அந்த ஆறு ஆசனங்களையும் பெற,
ஐக்கியதேசியக்கட்சிக்கு இருக்கும் வழிகளை,
பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. அமைச்சுப்பதவிகளைக் காட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து சில பேரைத் தம்பக்கம் இழுப்பது முதல் வழி.

2. அல்லது ஜே.வி.பி. கட்சியின் ஆதரவைக் கோருவது இரண்டாவது வழி.

3. அதுவும் இல்லையெனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது மூன்றாவது வழி.

4. இவை தவிர ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது நான்காவது வழி.

ஐக்கியதேசியக்கட்சி மேற்குறிப்பிட்ட நான்கு வழிகளின் மூலமும்,
பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கமுடியும்.
ஆனால், இவ் ஒவ்வொரு வழிமுறைகளிலும்,
சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.
அவற்றை ஒவ்வொன்றாய்க் காண்போம்.
****

அமைச்சுப்பதவிகளைக் காட்டி,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து,
ஐக்கியதேசியக்கட்சி சில உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுத்தால்,
அது ஐக்கியதேசியக்கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாய்த் துணை செய்த,
ஜனாதிபதி மைத்திரிக்கு துரோகம் செய்வதாய் முடிவதோடு,
ஜனாதிபதிக்கு அவர்கட்சிக்குள் எதிர்ப்பை உருவாக்கவும் வழி செய்யும்.
இன்னும் ஜனாதிபதியின் கைவசம் பல அதிகாரங்கள் தங்கியிருப்பதால்,
கூட்டரசாங்கம் அமைக்கப்போகும் ஐக்கியதேசியக்கட்சி,
தொடரும் காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளில்,
ஜனாதிபதியின் தாக்கமான முடிவுகளை அதனால் எதிர்வுகொள்ளவேண்டி வரும்.
இது தவிர, இன ஐக்கியம் பற்றிப் பேசிவரும் ரணிலின் முயற்சிகளுக்கு,
இனவாதத்தை அடிப்படையாய்க் கொண்டு,
எதிர்கட்சியால் எதிர்ப்புக் கிளப்பப்படுமானால்,
அவ் எதிர்ப்பு உடன் பாதிப்பை ஏற்டுத்தாவிட்டாலும்,
வரும் தேர்தலில் அது ஐக்கியதேசியக்கட்சிக்கு,
பெரும் சரிவை உருவாக்கும் என்பது நிச்சயம்.
எனவே, மேல் முடிவு ஐக்கியதேசியக்கட்சிக்கு,
நன்மை பயப்பதாய் அமையும் என்று சொல்வதற்கில்லை.
****

அடுத்து ஐக்கியதேசியக்கட்சிக்கு இருக்கக் கூடிய வாய்ப்பு,
ஜே.வி.பி. கட்சியின் ஆதரவைக் கோருவது.
இருக்கும் 107 எம்பிக்களுடன் ஜே.வி.பி. யின்  6 எம்பிக்களையும்,
விரும்பினால் டக்ளஸின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து,
ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை அரசை அமைத்துக் கொள்ளலாம்.
ஆனால், அங்கும் பல சிக்கல்கள் அமைந்திருக்கின்றன.
நடந்து முடிந்த தேர்தலில் ஜே.வி.பி.,
ஐக்கியதேசியக் கட்சியையும் கடுமையாய் விமர்சித்து வந்தது.
எனவே,அக்கட்சியுடன் இணைப்பு ஏற்பட்டாலும்,
அவ் இணைப்பின் உறுதிப்பாடு,
எத்தனை தூரம் பலமாயிருக்கும் என்று சொல்வதற்கில்லை.
அதைவிட தனித்து சுயமாய் வளர விரும்பும் ஜே.வி.பி.,
ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டங்களோடு,
எத்தனைதூரம் முழுமையாய் ஒத்துழைக்கும என்பதும் கேள்விக்கிடமானதே.
அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி,
முதலாளித்துவக் கோட்பாடுகளைக் கொண்டது.
ஜே.வி.பி. 'மாக்சீயக்" கோட்பாடுகளை அடிப்படையாய்க் கொண்டது.
எனவே, இக் கோட்பாட்டு முரண்பாடும்,
இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான தேனிலவை,
அதிகதூரம் நீடிக்கவிடாதென்பது திண்ணம்.
எனவே, ஜே.வி.பி யுடன் இணையும் இத்திட்டமும்,
ஐக்கிய தேசியக்கட்சிக்கு உகந்தது என்று கருதமுடியாது.
****

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இணைப்பின் மூலமும்,
ஐக்கிய தேசியக்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கமுடியும்.
அதற்கான பச்சைக் கொடியை கோரிக்கை வைக்கப்டாமலே,
தேர்தலுக்கு முன்பு சம்பந்தனும், தேர்தலுக்குப் பின்பு மாவையும்,
மாறிமாறி தாமாய்த் தனித்து ஆட்டியபடி உள்ளனர்.
ஆனால், இவ் இணைப்பிலும் ஐக்கியதேசியக்கட்சி,
மிகப்பெரும் இடர்களைச் சந்திக்கவேண்டி வரலாம்.
ஏற்கனவே தேர்தலுக்குப் பின் புதிய தேசம் உருவாகும் என்ற,
ஐக்கிய இலங்கை பற்றியதான ரணிலின் கூற்றினை,
இனவாதிகள் அத்தேசம் தனிஈழம்தான் என
விஷமப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து,
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்குமாயின்,
அது பேரினத்தார் மத்தியில் ரணிலுக்கு எதிராகத் தூபம் போட,
இனவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாய் அமைந்துவிடும்.
அதுதவிரவும் கூட்டமைப்பினர் தாம் இந்தப் பாராளுமன்ற வாய்ப்புடன் ,
தமிழர்தம் உரிமைகளை முழுவதுமாய்ப் பெற்றுவிடுவோம் என,
ஏதோ நம்பிக்கையில் உரைத்து வெற்றி பெற்று நிற்கின்றனர்.
எனவே அவர்கள் தமிழ்மக்களுக்குத் தாம் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றவேனும்,
தாம் முன்வைத்த சமஷ்டிக்கோரிக்கையை நிறைவேற்ற நிச்சயம் பாடுபடுவர்.
ஆனால், அது பேரினவாதிகளின் பிரதிநிதியாய்ப் பதவிக்கு வந்திருக்கும் ரணிலால்,
நிச்சயம் ஆகாத காரியமாய்த்தான் அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் யதார்த்தம் அறியாது,
பேரினவாதிகளின் உணர்வைப் புறந்தள்ளி,
ரணில் தம் சார்பாக நடக்கவேண்டுமென நிச்சயம் எதிர்பார்ப்பர்.
ஒருவேளை அவர்கள் யதார்த்தம் உணர்ந்து,
மென்மைப்போக்கைக் கடைப்பிடிக்கத் தலைப்படினும்,
ரணிலை, பிடிக்காத மாப்பிளையாய் முகம் திருப்பி நிற்கும்,
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கிளப்பப் போகும் பிரச்சினையும்,
நிச்சயம் மேலெழும்பும்.
அதுமட்டுமல்லாமல்,
கூட்டமைப்புக்குள் இருந்து தோல்விகண்டிருக்கும்,
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் போன்றோரும்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வித்தியாதரன் போன்றோரும்,
அப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி,
தமிழ்மக்களின் உணர்ச்சிகளைக் கிளறுவார்கள் என்பது திண்ணம்.
அங்ஙனம் நடந்தால் கூட்டமைப்பு மீண்டும் தமிழ்மக்கள் மத்தியில்,
துரோகிகளாய் தலைகுனிந்து நிற்கவேண்டியிருக்கும்.
'ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம்,
இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம்" எனும் கதையாகத்தான்,
கூட்டமைப்பின் கதை நிச்சயம் ஆகும் என்பதால்,
இக்கூட்டும் நீண்டநாள் நிலைக்க வாய்ப்பில்லை என்றேபடுகிறது.
****

எனவே, உள்ளதுக்குள் சிறந்ததாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு இருக்கும் வாய்ப்பு,
ஜனாதிபதியின் தலைமையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து,
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஆகும்.
இதிலும் ஐக்கியதேசியக்கட்சிக்கு ஒரு இடர்பாடு இருக்கப்போகிறது.
இணைந்து அமைக்கப்போகும் அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர்க்கும்,
அமைச்சுப் பதவிகளை ஒதுக்கவேண்டிவரும்.
அதனால்,
நீண்டநாள் பதவிகளுக்காய்க் காத்திருக்கும் ஐக்கியதேசியக்கட்சியினரில்,
சிலருக்குப் பதவி கிடைக்காமல் போகலாம்.
இதனால் கட்சிக்குள் சில எதிர்ப்புக்களை ரணில் சந்திக்கவேண்டிவரும்.
அதுமட்டுமன்றி தேசிய அரசு அமைத்தாலும் ஒருமித்துச் செயற்படாது,
முன்புபோல் தத்தம் கட்சி வளர்ச்சிக்காக இரு அணியும் பாடுபடத்தலைப்படின்,
அதுவும் ரணிலுக்கு தலையிடியாகும்.
இவை, மேல் இணைப்பினால் ஐக்கியதேசியக்கட்சிக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள்.
ஆனாலும் அங்ஙனம் ஆட்சி அமைத்தால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு,
சில வாய்ப்புக்களும் இருக்கப்போகின்றன.
இனப்பிரச்சினை தீர்வில் தாம் தனித்து நில்லாமல்,
எதிரணியையும் ஒன்றிணைத்து செயற்பட்டால்,
பிற்காலத்தில் தமிழர்க்கு இடம் கொடுத்ததான குற்றச்சாட்டினை,
எதிரணி ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் தனித்துச் சொல்லமுடியாமற் போகும்.
அதிகாரத்துடனும், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனும் எண்ணத்துடனும்,
அமர்ந்திருக்கும் ஜனாதிபதியின் ஆதரவும்,
அதே கருத்துடன் அவரைச் சூழ்ந்திருக்கும் சந்திரிக்கா போன்றோரின் ஆதரவும்,
ஐக்கிய தேசியக்கட்சிக்குத் தொடர்ந்து நிலைக்கும்.
அதுதவிர ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ரணிலின் தலைமைக்கு,
எதிராகக் கொடி உயர்த்திய சஜித் ஆகியோரை,
எதிரணி ஒருவேளை ஈர்க்கமுற்படும் ஆபத்தும், இருந்து கொண்டே இருக்கிறது.
இவ் ஆபத்தினைக் கடக்கவும், ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகியவை தரும்,
நெருக்கடிகளிலிருந்து தப்பவும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு,
ஜனாதிபதி ஆதரவுடன் கூடிய,
இத்தேசிய அரசாங்க முயற்சியே உகந்ததாய் இருக்கும் என்றுபடுகிறது.
****

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நடந்து முடிந்த தேர்தலில்,
மூன்றாம் அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணியும் கிடைத்த வெற்றியின் பின்னணியில்,
பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வந்துள்ளது.

1. ஏகத்தலைமைத்துவத்தைத் தாம் வேண்டிப் பெறும் கடைசித்தேர்தல் இதுவே. இவ் ஆட்சிக் காலத்திற்குள் தமிழர்தம் பிரச்சினையை எப்படியும் தீர்த்துவிடுவோம் என்று எவ்வித கணிப்பும் இல்லாமல் மக்களின் மறதியைமட்டும் நம்பி வாக்குக்கொடுத்திருக்கும் கூட்டமைப்பு அந்த வாக்கினை எங்ஙனம் நிறைவேற்றப்போகிறது என்பது முதல் பிரச்சினை.

2. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு தர ஆர்வப்படும் கூட்டமைப்பு, தாம் முன்வைத்த சமஷ்டியைக் கூட இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணைப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறது என்பது இரண்டாது பிரச்சினை.

3. கடந்த எட்டுமாத ஆட்சிக் காலத்திற்குள் பிரதமர் ரணிலுடன் முரண்பட்டு மேடைகளில் அவருக்கு முகம் கொடுக்கக் கூட விரும்பாமல் முகம் திருப்பி நின்ற வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பகையிலிருந்து இறங்கிவரச்செய்து ஒன்றுபட்டு செயற்பட வைப்பது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. முதலமைச்சருக்கும் ரணிலுக்குமான பிரச்சினை தீராதபட்சத்தில் மாகாணசபையின் இயக்கம் நிச்சயம் தடைப்படும். இடைக்கால அரசின்போதே இறங்கிவராத ரணில் நிரந்தர ஆட்சி அமைக்கும் இவ்வேளையில் முதலமைச்சரின் முரண்பாட்டை இறங்கி வந்து தீர்ப்பார் என்பது ஐயமே. இயல்பான பிடிவாதம் குணம் கொண்ட முதலமைச்சரும் தனது பிடிவாதத்தைவிட்டு பகை தீர்க்க இறங்கி வருவாரா என்பதும் ஐயமே. இந்நிலையில் மாகாணசபையினூடு கூட்டமைப்பு எப்படி செயற்படப்போகிறது என்பது கூட்டமைப்புக்கு ஏற்படப்போகும் மூன்றாவது பிரச்சினை.

4. அமெரிக்கச் சார்பாளரான ரணிலின் ஆட்சிக்கு அமெரிக்கா வெளிப்பட ஆதரவு அளிக்கப்போவது நிச்சயம். அவ் ஆதரவு இலங்கை சார்பான ஐ.நா.சபையின் தீர்மானத்தில் தமிழர்க்கு சார்பற்ற மாற்றங்களை உறுதியாய் உருவாக்கும். அதனால், ஈழத்தமிழர் மத்தியிலும், புலம்பெயர்தமிழர் மத்தியிலும் ஏற்படப்போகும் எதிர்ப்பினைச் சமாளிக்கவேண்டியது கூட்டமைப்பினர்க்கு ஏற்படப்போகும் நான்காவது பிரச்சினை.

5. ஏலவே நமது கூட்டமைப்பும் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அண்மைக்காலமாக அமெரிக்கச் சார்பினையே நம்பி செயற்படுகிறது. ரணிலின் நிர்வாகம் சீனப் பிரசன்னத்தை இலங்கையில் நீக்கி அமெரிக்கச் சார்புபட்டு இயங்கத் தொடங்குமானால், ரணிலின் ஆட்சியைப் பாதுகாக்க அமெரிக்கா நிச்சயம் முன்வரும். பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலத்தை நோக்க நமது இனப்பிரச்சினை அதற்குத் துளியாய்ப் போய்விடும். அதனால் இலங்கையுடன் ஒருமித்துச் செயற்படும்படி ஈழத்தமிழர்கள் மீது நிச்சயம் அமெரிக்கா தனது அழுத்தத்தைச் செலுத்தும். இந்தியாவும் இன்று ஓரளவு அமெரிக்கச் சார்புடன் இயங்குவதால் அதன் ஆதரவையும் நாம் பெறுவது கடினமாகவேயிருக்கும். எனவே இச்சூழ்நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகும் அவசியம் ஏகத்தலைமையாய்த் தன்னை அறிவித்து நிற்கும் கூட்டமைப்பிற்கு ஏற்படப்போகிறது. அங்ஙனம் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிவதைத்தவிர கூட்டமைப்புக்கு வேறு வழி இருக்கப்போவதில்லை. இந்நிலையில் முன்னர் இக்கட்டுரையில் சொன்ன கூட்டமைப்புக்குள் தோல்வி கண்ட கட்சிகளும், கஜேந்திரகுமார், வித்தியாதரன் ஆகியோரும் தமிழர் பிரச்சினையில் ஆவேசம் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களும் நிச்சயம் கூட்டமைப்பைத் துரோகிப்பட்டியலில் இணைக்க முயலுவர். இது கூட்டமைப்புக்கு ஏற்படப்போகும் ஐந்தாவது பிரச்சினை.

6. தேர்தலில் தனது ஆதரவினை யாருக்கும் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி ஊமையாய் மாறி ஒதுங்கி நின்ற வடக்கு முதலமைச்சரின் முடிவு, ஏற்கனவே கூட்டமைப்புக்குள் நீறு பூத்த நெருப்பாய்க் கொதித்து நிற்கிறது. கூட்டமைப்புக்குள் இருந்து தோற்றுப்போன கட்சியினர் நிச்சயம் தமது தோல்விக்கு முதலமைச்சரை நோக்கி விரல் நீட்டப்போகின்றனர். தேர்தலின் பின் இப்பிரச்சினைபற்றி ஆராய்வோம் என ஏற்கனவே சம்பந்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமைக்குக் கட்டுப்படாத முதலமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய அழுத்தம் கூட்டமைப்பின்மேல் திணிக்கப்படப்போகிறது. நடவடிக்கை எடுத்தால் முதலைசை;சரின் ஆதரவாளர்களின் எதிர்ப்பும், எடுக்காவிட்டால் மற்றைக் கட்சிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பும் ஏற்படப்போகிறது. இந்நிலையில் கூட்டமைப்பு இருதலைக்கொள்ளி எறும்பாய் தத்தளிக்கப்போவது உறுதி. முதலமைச்சரைப் போல கட்சிக்குள் ஒவ்வொருவரும் தனித்து இயங்கத் தலைப்படின் பெரும் இக்கட்டுக்களைக் கட்சி சந்திக்க நேரும். ஒருவேளை கட்சிக்குள்ளேயே இருக்கும் உறுப்பினர்கள் முதல்வர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும். இங்ஙனமாய் முதலமைச்சர் பற்றி எழுந்திருக்கும் சிக்கல்கள் கூட்டமைப்புக்கு ஏற்படப்போகும் ஆறாவது பிரச்சினையாகும்.

7. கூட்டமைப்புக்குள் குறித்த சிலரே திரும்பத்திரும்பத் தேர்தலில் நிற்பது பற்றியும், கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் வெறுப்புத் தோன்றியுள்ளது. குறித்த சிலரின் அதிகாhங்களுக்கு அஞ்சி பதவிகள் வழங்கப்படுவதாய்க் கட்சியினர் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது. இப்பிரச்சினை கூட்டமைப்புக்கு எழுந்துள்ள ஏழாவது பிரச்சினையாகும்.

8. கூட்டமைப்புக்குள் குறித்த பிற கட்சிகள் சார்ந்த முக்கியஸ்தர்கள் தோல்வி கண்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் குறித்;த ஒரு கட்சியின் தலைவருமாவார். இந்நிலையில் கட்சிக்குக் கிடைக்கக் கூடிய போனஸ் இருக்கைகள் இரண்டில் ஒன்றை அக்கட்சி கோரப்போகிறது.  அதுபோலவே தென்மராட்சியில் தேர்தலில் நின்ற அருந்தவபாலனின் தேர்தல் முடிவிலும் சில ஐயங்கள் கிளப்பப்பட்டுள்ளன. தம்மண்ணின் மைந்தனுக்கு இருமுறை துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாய்க் கூறி தென்மராட்சி மக்கள், மாவை சேனாதிராஜாவை அணுகி போனஸ் இருக்கைகளில் ஒன்றை அவருக்கு வழங்கவேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்ததாய்ச் சொல்லப்படுகிறது. அதுபோலவே கிழக்கிலும் செல்வராஜா, அரியனேந்திரன் ஆகிய இருவரது தோல்விக்கும் போனஸ் இருக்கைகளில் பிராயச்சித்தம் கோரப்படலாம். இந்நிலையில் இதுபற்றி முடிவெடுப்பது கூட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய எட்டாவது பிரச்சினையாகும்.

9. நடந்த தேர்தலில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்கள் பலர் வடக்கு முதலமைச்சர், கஜேந்திரகுமார், வித்தியாதரன் அணிகளின் சார்புபட்டு இயங்கத் தொடங்கியது வெளிப்படை. இந்நிலையில் தேர்தலில் முன்னையவர்களில் இருவர் அடைந்த தோல்வி புலம்பெயர் தமிழர்களின் ஒருபகுதியினரைக் கூட்டமைப்புக்கு எதிராய்த் திருப்பப்போவது நிச்சயம். அதுபோலவே முதலமைச்சர் பற்றியபிரச்சினையும் அமையும். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைக் கூட்டமைப்பு மீண்டும் முழுமையாய்த் தமதாக்க முயலுதல்வேண்டும். இது கூட்டமைப்புச் சந்திக்கக் கூடிய ஒன்பதாவது பிரச்சினையாக இருக்கப்போகிறது.

இங்ஙனமாய் வடக்கிலும் தெற்கிலும் வெற்றி பெற்ற அணிகள்;,
வெற்றியின் பின்னணியில் சந்திக்கப்போகும் பிரச்சினைகள் காத்துக்கிடக்கின்றன.
இப்பிரச்சினைகளை இவ்விரு அணிகளும்,
எப்படி எதிர்கொண்டு வெல்லப்போகின்றன என்பது பற்றி அறிய,
இலங்கை மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
*******************
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
*******************
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.