நோய் மீண்டு வருதற்காய் வேண்டி நின்றோம்! ( கம்பன்புகழ் விருது உருக்கமான வீடியோ இணைப்பு )

நோய் மீண்டு வருதற்காய் வேண்டி நின்றோம்! ( கம்பன்புகழ் விருது உருக்கமான வீடியோ இணைப்பு )
 
உயிர் கொடுத்து நம் மண்ணை மீட்க எண்ணி
ஒப்பற்ற பெருந்தொண்டு செய்த உன்னைப்
பயமறுத்துச் சில கீழோர் பற்றே இன்றி
பரலோகம் அனுப்பிவிடத் துடிக்கின்றார்கள்.
கயிறறுத்து ஓடுகிற மாட்டைப் போல
கற்பனையாய் நெறியின்றிப் பலவும் சொல்லி
உயர்வளித்த உந்தனையே செய்தியாக்கும்
உலுத்தர்களை என்சொல்வேன் உருப்படார்கள்.
 


பேராயர் ராயப்பு யோசப் என்னும்
பெயர் கேட்டவுடனேயே உலகமெல்லாம்
ஆராயாதுன் கருத்து உண்மையென்றே
அடித்தேதான் உரைத்திடுமே அதனால் எங்கள்
தீராத துன்பமெலாம் உலகம் கேட்க
தெம்போடு நீ உரைத்த போது ஐய!
ஆராத துன்பமெலாம் ஆறிற்றென்று
அயர்ந்தோமே ஆண்டவனாய் அருளே செய்தாய்.

நேற்றெமது மண்ணதனில் நிகழ்ந்த போரில்
நிமிர்ந்துலகம் வியந்திடவே நேராய் நின்று
மாற்றவரின் பயம் இன்றி மனத்தில் வந்த
மாண்பான உண்மைகளை உரத்துச் சொன்னாய்
போற்றியது உலகமெலாம், புகழ்ந்து உன்னை
போதகராம் நிலைகடந்து புகழ்க்காய் அன்றி
சாற்றிய பேருண்மைகளால் சகத்தார் உன்னை
சத்தியத்தின் உருவெனவே மனத்துள் கொண்டார்.

மதம் கடந்த உன் தொண்டின் மகிமை கண்டு
மக்களெலாம் சிலுவையிலே அறையப்பட்டும்
இதம் அளித்த இயேசுபிரான் இங்கே வந்து
எமக்காக பிறந்தனரோ? என்றே எண்ணி
நிதமும் உனைத் தொழுதிடவும் செய்தார் அந்த
நேசர்க்காய் முள்முடியும் சிலுவைதானும்
பதமெனவே சுமந்தவனே பரமன் உன்னை
பாரினிலே மீண்டுயிர்த்து வரவே செய்வான்.


எல்லோரும் வாழவென என்றும் உன்னை
எப்போதும் தேய்த்தவனே இடர்கள் தாங்கி
தள்ளாத வயதினிலும் தமிழர் தங்கள்
தலைவன் போல் தளர்வின்றி தனித்தே நின்றாய்
பொல்லாத எதிரிகளின் முன்னே நின்று
புகன்றதனால் தமிழர்களின் புன்மையெல்லாம்
நல்லோர்கள் வாழுகிற உலகமெல்லாம்
நயந்தேதான் பரவிற்றே நாமும் வாழ்ந்தோம்.

இவ்வுலக வாழ்வதனை நீக்கி அந்த
இனிய பரலோகத்தின் தலைவன் பாதம்
வெவ்விடர்கள் தொலைத்தேதான் சேரும் நாளை
வித்தகர்கள் விரும்பிடுவார் மரணந்தன்னை
செவ்வியதாம் பெருந்தொண்டு செய்து வென்ற
சிறப்பான உன் வாழ்வின் செழுமைகண்டு
அவ் இறைவன் இன்னும் எம் இனத்திற்காக
ஆறி வர உரைத்திடுவான் அதுவே உண்மை.

நல்லோர்கள் மனத்தவமும் செய்தாரய்யா
நலமுடனே நீ மீண்டு வருவாய் என்று
தள்ளாத வயதுடைய முதியோர் பாலர்
தவம் செய்வார் நீ மீண்டு வருவாய் என்று
கல்லாத மூடர்களும் கற்றோர் தானும்
காத்திருப்பார் நீ மீண்டு வருவாய் என்று
பொல்லாத விதி தன்னை வேண்டி ஐய!
போற்றுகிறோம் நோய் மீண்டு வருவாய் என்று.
                          ✿
 
பார்வையாளர்களை கண்ணீர் மல்கி வேண்ட வைத்த ராயப்பு ஜோசெப் அவர்களுக்குரிய கம்பன் புகழ் விருது வழங்கும் நிகழ்வு காணொளி. மதம் கடந்த மகான் என்பதற்கு சான்று.
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.