சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்!

சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
யிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது,
கூட்டமைப்பின் தலைமை.
அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது.
புதிதாய்த் தொடங்கப்பட்ட,
தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால்,
தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின்,
தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற,
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர்,
கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர்.
அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல்,
எவர் எப்படிப் போனால் எனக்கென்ன எனும் அலட்சியத்துடன்,
‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடாத குறையாய்,
தலைவர் சம்பந்தன் அலட்சியத்தின் எல்லைதொட்டு நிற்கிறார்.
தமிழினம் இந்நிலை கண்டு அதிர்ந்து நிற்கிறது.
 

➢➣➢

போர் முடிந்து புலிகள் மறைந்ததுமே,
சம்பந்தனின் இவ் அலட்சியப் போக்குத் தொடங்கிவிட்டது.
மக்களுக்கோ, எதிராளிகளுக்கோ,
நான் பதில் சொல்லத் தேவையில்லை.
நான் சொல்வதை எல்லோரும் கேட்கவேண்டியதுதான்” என்பதான,
அவரது நடவடிக்கை சற்றேனும் ஜனநாயகத்திற்குப் பொருத்தமாயில்லை.
அதுமட்டுமல்ல, சர்வாதிகாரத்தின் ஆரம்பமாகவும் அது தெரிகிறது.
➢➣➢

‘கூட்டமைப்பைப் புலிகள் உருவாக்கவில்லை’,
‘பிரதமரின் கூட்டத்தில் நான் கையேந்தியது தேசியக் கொடியையல்ல,
பத்திரகாளியின் சிங்கக் கொடியையே’ என்பது போன்ற,
அவரது ‘முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்’ அறிக்கைகள்,
கேட்டவர்களுக்கு நகைப்பையும்,
இத்தகைய ஒரு பொய்யரா? நம் தலைவர் எனும் சலிப்பையும் தந்தன.
இப்பொய்மைகள் தேவையற்றவை,
காலம் மாறியிருக்கிறது.
அதனால் கருத்திலும் மாற்றம் வந்தது என,
உண்மை பேசியிருந்தால் அவர் உயர்ந்திருப்பார்.
இனி என்னை எவர் கேட்க முடியும் எனும் அலட்சியமே,
இப் பதில்களின் பின்னணி என்று உணரமுடிகிறது.
➢➣➢

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்
கூட்டமைப்பை அரசியல் கட்சியாய்ப் பதியவேண்டும் என்றும்,
வெளிநாடுகளுடனான தொடர்பாடலை எமக்கும் அறியத் தாருங்கள் என்றும்,
கோரிக்கை விடுத்தபோதும்,
தேர்தல் காலத்தில் வேட்பாளர் தேர்வின்போதும்,
முதலமைச்சருடனான முரண்பாட்டின்போதும்,
இவை பற்றியெல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை என்றாற்போல்,
சம்பந்தர் காட்டிய அலட்சியத்தின் விளைவே,
ஒற்றுமையாய் இருந்த தமிழர்களின் பிளவுக்குக் காரணமாயிற்று.
➢➣➢

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முக்கியமான விடயங்களில் கூட,
கட்சியின் கொள்கை பற்றி,
ஆளுக்கொருவராய் அவரவர் இஷ்டப்படி,
முரண்பாடாய் அறிக்கைகள் விட்டு,
மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் கொள்கை தான் என்ன? எனும்,
ஐயத்தை எழுப்பியபோதும்,
அவர்களை அடக்கிக்கண்டிக்க சம்பந்தன் முன் வரவே இல்லை.
கட்சி உறுப்பினர்கள், வெவ்வேறு திசையில்,
பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அறிந்த பிறகும்,
சம்பந்தன் ஏதுமே நடக்காதது போல்,
தலைவர்ப் பதவியை இறுகப்பற்றியபடி இழிந்திருந்தார்.

➢➣➢

எல்லாவற்றுக்கும் மேலாக,
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் கூட்டமைப்பை ஆதரிக்க மறுத்தபோது,
கூட்டமைப்புக்குள் பெரும் பிளவு உருவாவதை உணர்ந்து,
உடன் அதுபற்றி விசாரிக்காமல்,
‘ஆறுதலாய்ப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று,
அசட்டுத்தனமாய் அறிக்கை விட்டார் சம்பந்தர்.
தேர்தல் வெற்றியின் பின்னும்,
அந்தப் பிரச்சினையை ஆராய அவர் முனையவில்லை.
முதலமைச்சரை வரவேற்று ஆனந்தசங்கரியின் அறிக்கை வந்தபோதுமட்டும்
சற்று உணர்ச்சிவசப்பட்டு சம்பந்தர் வெளியிட்ட கருத்துக்கள்,
அவர் உசாராகிவிட்டார் என்னும் உணர்வைத்தந்தன.
அப்போது 'கிழவரின் துணிவு' எனும் தலைப்பில்,
நான்கூட அவரைப்பாராட்டி எழுதியிருந்தேன்.
என் எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கி,
சம்பந்தனார் மீண்டும் உறங்கு நிலைக்குச்சென்றார்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சனை முற்றி,
கூட்டமைப்பின் எதிராளிகளுடன்,
முதலமைச்சரும், வேறு சிலரும் கைகோர்த்து,
தமிழ் மக்கள் பேரவையை அமைத்த பிறகுதான்,
போர் நடந்துகொண்டிருப்பதுகூடத் தெரியாமல் நித்திரையால் எழுந்து,
‘ஆனதோ வெஞ்சமர்’ என்று அசட்டுத்தனமாய் கேட்ட கும்பகர்ணனைப்போல,
தமிழ் மக்கள் பேரவையை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டுவிட்டு,
மீண்டும் தியான நிலைக்குச்சென்று விட்டார் சம்பந்தர்.
அனைத்திலும் அலட்சியம்.
➢➣➢

கூட்டமைப்புத் தலைமையின் கருத்தை மீறி,
தமிழ் மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தில்,
முதலமைச்சர், சுரேஸ் பிரேமச்சந்திரன்,
பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டதைப்பற்றி,
சம்பந்தனார் ஏனோ தானோ என்று அறிக்கை விட்டுவிட்டு ஓய்ந்து போக,
பயம் அறுந்து துணிவு துளிர்விட்டதால்,
பேரவையின் இரண்டாவது கூட்டத்தில்,
புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் கலந்து அதிர்வு தந்தார்.
பாவம், சம்பந்தனிடம் இருந்து அப்போதும் எந்த ‘அசுமாத்தமும்’ இல்லை.
➢➣➢

கூட்டமைப்பை எதிர்க்கும் முன்னவர்களின் துணிந்த நடவடிக்கை,
கூட்டமைப்பிற்கு விசுவாசமாய் இருந்த மற்றவர்களுக்கும் துணிவுதர,
முதலில் பேரவையைக் கடுமையாய்க் கண்டித்து, அறிக்கை விட்டு விட்டு,
பின்னர் அதை மறுத்து அறிக்கை விட்டார்,
ரெலோ அமைப்பின் தலைவர் அடைக்கலநாதன்.
முதலில் மனதளவில் பேரவையை எதிர்த்த,
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றோரும்,
தமிழ்ப் பேரவைக்கான ஆதரவு பெருகுவதைக் கண்டு,
தாமும் அதற்கான பச்சைக்கொடியை விரைந்து ஆட்டத் தொடங்கினர்.
இவை எது பற்றியும் கவலைப்படாமல்,
சம்பந்தனின் மௌனம் தொடர்ந்தது.
ஊனம் விரிந்தது.
➢➣➢

சம்பந்தனின் இவ் அலட்சியப் போக்கால்,
கூட்டமைப்பு என்றதொரு கட்சி இருக்கிறதா?
அது யார் தலைமையின்கீழ் இன்று இயங்குகிறது?
அதன் உள்ளிருக்கும் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு என்ன?
என்பதான கேள்விகள் தமிழ் மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின.
➢➣➢

போர்க்களத்தில் உயிர் விட்டுக்கொண்டிருந்த கர்ணனிடம்,
அவன் தர்மத்தைக் கண்ணன் தானமாய்க் கேட்க, 
 ‘ஆவியோ நிலையிற் கலங்கியது 
ஆக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் !’ என்று கூறி,
பதிலளிக்கத் தொடங்கினானாம் அவன்.  
‘எனது உயிர் உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? என்று
நானே கலங்கி இருக்கிறேன்.’, என்பதான அவனது கூற்று,
இன்று கூட்டமைப்புக்கு மிகப்பொருத்தமாய் இருக்கிறது.
கூட்மைப்பின் அங்கத்துவக் கட்சிகள், 
கூட்டமைப்பின் உள்ளே இருக்கின்றனவா? வெளியே போய்விட்டனவா?
என்பது பற்றியெல்லாம் இன்று பெருங்குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வேளையிலும்,
ஏதும் நடக்காததுபோல் சம்பந்தன் காட்டும் அலட்சியம்,
சலிப்பைத் தாண்டிக் கோபத்தை வருவிக்கின்றது.
➢➣➢

கடந்த வாரத்தில் தனித்தமிழீழக் கொள்கையைக் கைவிடுவதாய்,
திடீர் அறிக்கைவிட்டுத் திகைப்பூட்டியிருக்கிறார் சம்பந்தர்.
சாவி கொடுத்ததும் எழும்பிச் சதிர் ஆடுகின்ற பொம்மையைப் போல,
திடீர் திடீரென வெளிவரும் இவரது அதிர்வறிக்கைகளின் பின்னால்,
யாரோ சாவி கொடுக்கும் சதி நடக்கிறதோ? எனும் ஐயம் பிறந்திருக்கிறது.
➢➣➢

தமிழீழக் கொள்கை சம்பந்தர் சார்ந்த கூட்டணியால் கொண்டுவரப்பட்டதுதான்.
பின் அக்கொள்கையை ஆயுதக் குழுக்கள் வலிமைப்படுத்தின.
அக்கொள்கையின் அதிர்வால்,
இலங்கை, உலக அரங்கில் ஏறவேண்டி வந்துவிட்டது.
அவ் அதிர்வுகள் தந்த அழிவுகளால் தமிழினம் தள்ளாடி நிற்கின்றது.
இந் நிலையில்,
தமிழீழக்கொள்கையைக் கைவிடுவதான சம்பந்தரின் கருத்தை,
அறிவார்ந்தவர்கள் ஏற்கவே செய்வர்.
பிரச்சினை அதுவல்ல,
➢➣➢

அவ் அறிக்கையை விடும் முன்,
தமிழ்மக்கள் மன்றில்,
தமிழீழக்கொள்கையைக் கைவிடப்போவதான முடிவை முன்வைத்து
சம்பந்தன் கருத்தறியாதது ஏன்?
ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்குள் இணைந்திருந்த,
மற்றைய கட்சிகளுடன் கூட இதுபற்றி ஆராயாதது ஏன்?
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக,
பிறநாடுகளுக்கு ஓடியும், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தும்,
உயிரிழப்பு, உறவிழப்பு, உடமையிழப்பு என்பவற்றைச் சந்தித்தும்,
தமிழினம் பட்ட துன்பத்திற்கோர் அளவில்லை.
எல்லையில்லா இன்னல்கள் ஈந்து,
தமிழ்மக்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட,
தமிழீழக் கொள்கையை,
தனி ஒருவராய் நின்று கைவிடத் துணிந்தது ஜனநாயக முறையா?
பதில் அளிக்கவேண்டியது சம்பந்தனின் கடமையாகிறது.
➢➣➢

தேர்தல் வெற்றி மூலம்,
மக்கள் தமக்கு இந்த அதிகாரத்தைத் தந்ததாய்க் கூறியிருக்கிறார் சம்பந்தன்.
ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து!
அவர் கருத்து உண்மையெனின்,
தேர்தல் காலத்தில் இக்கருத்தை மக்கள் மன்றில்,
அவர் முன்வைத்திருக்க வேண்டும்.
அங்ஙனம் வைத்ததாய் ஞாபகமில்லை.
அப்படியிருக்க தேர்தல் வெற்றியை மட்டும் வைத்துக்கொண்டு,
அனைத்து முடிவுகளுக்கான அதிகாரத்தையும்,
தான் பெற்றுக்கொண்டு விட்டதாகச் சொல்வது சரியா?
இங்கும் அவரது அலட்சியமே பதிவாகிறது.
➢➣➢

மற்றொரு முக்கியமான கேள்வி!
முதல்முதலாகத் தனித்தமிழீழக் கொள்கையை,
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கொண்டு வந்தது.
தமிழர் விடுதலைக்கூட்டணிக் கட்சியே.
அப்போது அதன் உறுப்பினராய் இருந்தவர்தான் சம்பந்தன்.
இன்று அவரே அக்கொள்கையைக் கைவிடுவதாய்க் கூறுகிறார்.
அப்படியாயின் இதுவரை கூட்டணியின் கொள்கையால் விளைந்த,
இனத்தின் பேரழிவுக்கு,
அக்கட்சியின் எஞ்சியிருக்கும் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்ற வகையிலும்,
அத்தகுதியைச் சொல்லி இன்று தமிழ்மக்களின் தலைமையேற்றிருப்பவர் என்ற வகையிலும்,
ஜனநாயக மரபுப்படி, முதலில் அவர் தமிழ்மக்களிடம் மன்னிப்புக்கோரவேண்டாமா?
தனித்தமிழீழக் கொள்கையை உரைத்தபோதும் அவர்களே தலைவர்கள்,
அக்கொள்கை பிழையென உரைக்கும் போதும் அவர்களே தலைவர்கள்.
இடையில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு மட்டும் இவர்கள் பொறுப்பாளிகள் அல்லராம்.
நல்ல வேடிக்கை.
➢➣➢

சம்பந்தனின் இவ் அலட்சியங்களின் காரணந்தான் என்ன?
ஞானத்தின் எல்லையா?
அன்றேல்  ஊனத்தின் எல்லையா?
எவரும் என்னை ஏதும் செய்யமுடியாது எனும் தலைமையின் திமிரா?
அன்றேல் எது நடந்தால் எனக்கென்ன எனும் முதுமையின் சோர்வா?
நிகழ்வதைக் கொண்டு வருவதைக் கணிக்கத் தெரியாத மடமையா?
என்வாழ்வு முடியப்போகிறது இனி இனம் என்னானால் என்ன? எனும் விரக்தியா?
ஏதும் அறியாமல் எல்லோரும் குழம்புகின்றனர்.
➢➣➢

சம்பந்தரின் இத்தனை அலட்சியங்களினதும் காரணத்தை ஓரளவு விளங்க முடிகிறது.
செயற்படத் தேவையில்லாத சிம்மாசனத்தில் இன்று அவர் உட்கார்ந்திருக்கிறார்.
இன்று சில வல்லரசுகளின் வலிமை அவர் பின்னால்,
அவ்வலிமை கண்டு பேரினத்தலைமைகளும்,
அவர் முன் தலைசாய்த்து  நிற்கின்றன.
அந்தத் திமிர்தான் சம்பந்தரின் அலட்சியம் போல் தெரிகிறது.
➢➣➢

போர் முடிந்ததன் பின்னான சூழ்நிலையில்,
சீனச்சார்பு நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இலங்கையை,
தமிழர்ப் பிரச்சனையை முன்வைத்து மிரட்டி,
ஆட்சி மாற்றத்தையும் அதிகார மாற்றத்தையும் நிகழ்த்துவித்து,
தமிழர் பிரச்சினை என்னும் ஆயுதம் கொண்டு,
இன்று, இலங்கையைக் கையாளத் தொடங்கியிருக்கும்,
சில வல்லரசுகளின் வலிமை தனக்குப் பின்னால் இருப்பதால்,
எவர் எப்படிப் போனால் என்ன?
என்னை எல்லாரும் பேணித்தான் ஆகவேண்டும் எனும் அறிவற்ற துணிவே,
சம்பந்தனாரின் அலட்சியத்தின் அடிப்படையாய்த் தெரிகிறது.
➢➣➢

எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கோ, மக்களுக்கோ
பதிலேதும் சொல்லாத சம்பந்தனின் துணிவும் (துணிவா? அறியாமையா?),
கட்சிக்குள்ளும் வெளியிலும் கிளம்பியிருக்கும் எதிர்ப்பை
அலட்சியம் செய்யும் அவரின் அநியாயப்போக்கும்
வல்லரசுகளின் மடியில் இருக்கும் துணிவால் விளைந்தவை தான்.
இன்றைய நிலையில் எவர் பற்றியும் கவலைப்படாத,
சம்பந்தனாரை யாரும் அசைக்க முடியாது என்பது உண்மையே.
➢➣➢

அவருக்கான செயற்பாடுகளை வல்லரசுகளே பார்த்துக் கொள்ளப் போகின்றன.
ஜனாதிபதி, பிரதமர் என பலரும் அவரைப் போற்ற நினைப்பது,
அவர் மீதான மரியாதையால் அல்ல.
அவருக்குப் பின்னால் இருக்கும் பேரரசுசக்திகளின் பயத்தினால்தான்.
➢➣➢

இது தெரியாமல்தான்,
பாவம் நம் முதலமைச்சர்,
தான் ஏதோ புதுப்பாதை அமைப்பதாய்க் கூறி வீறு கொண்டு எழுந்தார்.
பிரதமரை வரவேற்கமாட்டேன் என்று முகம் திருப்பி நின்ற அவர்,
இன்று தானாய்ப் பணிந்து, வலியப்போய் முடியும், பொன்னாடையும் சூட்டி,
பிரதமரை வரவேற்று நிற்கிறார்.
அனைத்திற்கும் காரணம் அரசியல் அழுத்தங்களே!
கடைவாய்ச் சிரிப்போடு கடைக்கண்ணால் இக்காட்சியைப் பார்த்தபடி,
சம்பந்தனாரின் இருப்புத் தொடர்கிறது.
எவர் எதிர்த்தாலும் அடக்குவதற்கு ஆளிருக்கிறது என்னும் துணிவே
எதைப் பற்றியும் கவலைப் படாமல் சம்பந்தனை இருக்க வைத்திருக்கிறது.

➢➣➢

இந் நேரத்தில்,
தமிழ் மக்கள் சார்பாக,
உலக நிலையை உணர்ந்து,
சம்பந்தனாருக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய உங்கள் இருப்பு பலமானதுதான்.  அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இவ்விருப்பு என்றும் தொடரப் போவதில்லை.
ஏழ்மை நாடுகளில் தமது சப்பாத்துக் கால்களை ஆழப் பதித்து,
அசையாது நிற்கும்வரைதான் பேரரசுகளின் அன்பு நிலைக்கும்.
தம் கருத்துக்கேற்ப இலங்கையை வளைத்தெடுத்தபின்,
தம் வசதிக்காக மடியில் வைத்திருந்த உங்களை,
அப்பேரரசுகள் தூக்கி எறிய அதிகநேரம் ஆகாது.
அந்நேரத்தில் நீங்கள் அவர்களுக்குப் பாரமாய்த் தோன்றுவீர்கள்.
அப்போது அவர்கள் தட்டுகிற தட்டில், தூரப்போய் விழுவீர்கள்.
➢➣➢

பிரச்சினை உள்ள நாடுகளில்,
தம் தேவை நிறைவேற்ற உட்புகுந்து,
புதிய தலைமைகளுக்குப் பலமளித்து,
அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்குமாற்போல்,
தம் நோக்கம் நிறைவேற்றிக் கொண்டபிறகு,
பிரச்சினைத் தீர்வுக்குத் தாம் பயன்படுத்திய தலைமைகளை,
வல்லரசுகள் செல்லாக்காசாக்குவது,
வரலாறு உணர்ந்தார் அறிந்த உண்மை.
புலிகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட இத்தகையவே.
இந்நிலை உங்களுக்கும் வராது என்பதற்கு,
எவரும் உறுதி சொல்ல முடியாது.
வானில் பறக்கும் பந்துகள் என்றோ ஒருநாள் பூமிக்கு வந்துதான் ஆகவேண்டும்.
➢➣➢

ஒரு ஜனநாயக நாட்டில்,
மக்கள் ஆதரவே தலைமையின் உண்மைப் பலமாம்.
அப்பலத்தைப் பெற்றே, வியட்நாம் அமெரிக்காவைத் தோற்கடித்தது.
வல்லரசுகளோடு முரண்படவேண்டும் என்று நான் சொல்லவில்லை.
காலம் முடிந்ததும் அவர்கள் கை விடுவார்கள் என்பதை முன்னரே அறிந்து,
நாம் நாளைய நகர்விற்கான திட்டம்  தீட்ட வேண்டும்.
அதுதான் தலைமையின் லட்சணம்.
தமிழர்களுக்கு ஆதரவாய் வந்த இந்திய சமாதானப்படையால்,
பின்னாளில் தமிழர்கள் பட்ட இன்னல்களை நாம் அதற்குள் மறந்துவிடமுடியுமா?
அஃதன்றி, இன்று வாய்த்திருக்கும் தற்காலிகப் பின்பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு,
மக்களையும், உடன் இருப்பவர்களையும் உதாசீனம் செய்யும் போக்கு,
நிச்சயம் உங்களுக்கோ, உங்களது கட்சிக்கோ உகந்ததல்ல.
ஏன் உங்களை நம்பிய தமிழினத்தின் நல்வாழ்வுக்கும் அது உகந்ததல்ல.
➢➣➢

தமிழ்ச் சினிமாவில் அடிக்கடி வரும் ஒரு காட்சி,
தன் பின்னால் பலமுள்ள கதாநாயகன் நிற்கிறான் என்ற துணிவில்,
நகைச்சுவை நடிகர் வடிவேலு ரௌடிகளை அலட்சியமாய் விமர்சிப்பார்.
அவரை அறியாமல் கதாநாயகன் நகர்ந்துவிட,
எதிரிகளிடம் அவர் வாங்கும் ‘மொத்தலை’,
பல தரம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
இன்றைய உங்களின் அலட்சியமும்,
வடிவேலுவின் அலட்சியத்தை ஒத்ததே!.
மனித வாழ்வு நேற்றோடும், இன்றோடும் முடிவதில்லை.
நாளையும் அது இருக்கத்தான் போகிறது.
அதையும் நினைந்து வாழ்பவன்தான் அறிவாளி.
தமிழர்கள்,
தம் தலைவர் அறிவாளியாய் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
➢➣➢➣➢➣➢
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.