வட மாகாண சபை குரங்கு கைப் பூமாலையாகிவிட்டது. இருக்...

14 Aug 2017

வட மாகாண சபை குரங்கு கைப் பூமாலையாகிவிட்டது. இருக்கும் அதிகாரங்களை வைத்து நொடிந்து போன எமது மக்களுக்கு செய்யக் கூடியதை வட மாகாண சபை முதல்வர் செய்து முடிப்பார் என்ற எதிர்பார்ப்பு சுக்கு நூறா நொருங்கிவிட்டது.
வட மாகாண சபையின் அபிவிருத்தி ஒன்றே முதலமைச்சரின் தலையாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நூற்றுக் கணக்கான தேவையற்ற தீர்மானங்கள், குழப்பமான அறிக்கைகள் போன்றவற்றை வெளியிட்டு தனது பொன்னான நேரத்தையும் சிந்தனையையும் வீணடித்துவிட்டார்.
முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு தனது பரிந்துரையில் இரண்டு அமைச்சர்கள் மீதான அதிகார மீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்பட்டுள்ளன எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லியது. இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகினார்கள். அத்தோடு இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் முதலமைச்சர் குற்றமற்றவர்கள் என்று விசாரணைக் குழு விடுவித்த இரண்டு அமைச்சர்கள் மீது மீண்டும் விசாரணைக் குழுவை அமைக்கப் போவதாகவும் அவர்கள் ஒருமாத காலம் கட்டாய ஓய்வில் போக வேண்டும் என்றார்.
ஒரு முதலமைச்சர் அமைச்சரவையின் சர்வாதிகாரியல்ல. அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சர்களும் சமமானவர்கள். அதில் முதலமைச்சர் முதல் இடத்தில் (Cabinet Ministers are all equal, the Prime Minister/Chief Minister is first among the equals) இருக்கிறார்.
ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சக அமைச்சர்கள் தனது வீட்டு வேலையாட்கள் என நினைக்கிறார். முதலமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்தை அகற்ற வேண்டும் என்பதில் வெறியோடு செயற்பட்டார். கேள்வி என்னவென்றால் அவர் மீது ஏன் இந்தக் கொலை வெறி? மருத்துவர் சத்தியலிங்கம் வவுனியா மாவட்டத்தில் 1400 வீடுகள் கட்ட தேசிய வீட்டு வாரியத்தோடு பேசி அனுமதி பெற்றுள்ளார். நெதலந்து நாட்டின் உதவியோடு வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்த நிதியுதவி பெற்றுள்ளார். நல்வாழ்வு சம்பந்தமாக வட மாகாணத்துக்கு தேவையானவற்றை (Needs Assessment) ஆவணப்படுத்தியுள்ளார்.
ஆனால் முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் என்ன? தமிழ் அரசுக் கட்சியோடு சண்டை, பிரதமரோடு சண்டை, மாகாண சபை உறுப்பினர்கள் (23) ஓடு முரண்பாடு. தகுதியில்லாதவர்களுக்கு அமைச்சர் பதவி. இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
இந்த சிக்கல்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு, ஒரே மருந்து மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களது நம்பிக்கையை இழந்து விட்ட முதலமைச்சர் பதவி விலக வேண்டும். எஞ்சியுள்ள மானத்தைக் காப்பாற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு இருக்கும் ஒரே வழி இதுவே!வட மாகாண சபையில் நிலவும் குழப்பத்தை போக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்!

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.