அதிர்வுகள் 03 | "அன்பே துணை"

அதிர்வுகள் - 3
-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
உதட்டு முத்தம், ஆரத் தழுவல், உச்சி முகர்தல்,
இவையெல்லாம் என்ன என்கிறீர்களா?,
வேறொன்றும் இல்லை,
விமான நிலையத்தில் நான் அடிக்கடி காணும் காட்சிகள் தான் இவை.
சின்ன வயதில் ஊஞ்சல் ஆடுகையில்,
ஊஞ்சலை நண்பர்கள் சற்று உயர்த்தித் தள்ளினாலே,
எனக்குத் தலை சுற்றும்.
உயர்ந்த கட்டிடங்களின் மொட்டை மாடிகளிலிருந்து குனிந்து பார்த்தால்,
தலை சுற்றப் பதறிப் போய்விடுவேன்.
உயரப் போவதில் எனக்கு அவ்வளவு பயம்.
 
 
வாழ்க்கையில் நான் அதிகம் உயரப்போகாததன் காரணமும் இது தானோ?,
தெரியவில்லை.
ஆகாயபூதத்தில் எனக்கு அந்தளவு அச்சம்.
பூதங்களுள் ஆகாயபூதத்தை சூக்கும பூதம் என்கிறார்கள் தத்துவவியலாளர்கள்.
சூக்குமம் என்றால் தெரியப்படாதது என்று அர்த்தமாம்.
வெளிப்படத் தெரியப்படாத எவையும் அச்சத்தை ஊட்டுதல் இயல்புதானே!
சொல்ல வந்ததை விட்டு விட்டு ஏதேதோ சொல்கிறேன்.
நான் சொல்ல வந்தது இதைத்தான்.
மலை ஏறவே அஞ்சுகிற எனக்கு,
விமானம் ஏறுவதென்றால் உயிர் போகிற பயம்.
 
நிலையாமை பற்றியெல்லாம் மேடைகளில் நிறைய முழங்குவதால்,
பயத்தை வெளிக்காட்டவும் மனம் நாணும்.
வெளியில் துணிந்தவன்போல் காட்டிக்கொள்வேன்.
உள்ளுக்குள் குலை நடுங்கும்.
குலதெய்வங்கள் எல்லாவற்றையும் கூப்பிட்டுக்கொண்டுதான் விமானம் ஏறுவேன்.
விமானம் பறக்கையில் சிறு அதிர்வு ஏற்பட்டாலும் உயிர் போய் வரும்.
விமானப் பணிப்பெண்கள் முகத்தைப் பார்ப்பேன்.
அதில் அச்சம் தெரியவில்லை என்றதும் தான் சிறிது ஆறுதல் அடைவேன்.
என் அச்சம் பற்றியதில்லை இக் கட்டுரை.
மேற் சொன்ன எனது மன நிலையால்,
மேல் நாடுகள் போலிருக்கும் விமான நிலையச் சூழ்நிலையை,
என்னால் அதிகம் ரசிக்க முடிவதில்லை.
அதனால்தான், நான் முதல் பந்தியில் சொன்ன,
உதட்டு முத்தம், ஆரத் தழுவல், உச்சி முகர்தல் போன்ற,
மற்றச் சூழ்நிலைகளில் கிளுகிளுப்பூட்டும் காட்சிகளும்,
என்னைப் பெரிதாய் ஈர்ப்பதில்லை.
ஆனால், அவ் அச்சத்தையும் மீறி,
அங்கு தெரியும் சில காட்சிகளில் மட்டும் என் மனம் பதியும்,
அப்படி என்னை ஈர்க்கும் காட்சிகளில் முக்கியமானது,
வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புத் தேடிச்செல்லும் குடும்பப் பெண்கள் பலரின்,
குடும்பத்தாருடரான பிரியாவிடை உணர்ச்சிப் போராட்டம்.
அப்பெண்கள் படும் துன்பம் கண்டு என் நெஞ்சம் கனத்துப்போம்.
அழுது விடை பெறுகிற பெண்ணில் என் அம்மாவின் முகம் தெரிய,
அக் காட்சி தரும் துன்பம் தாங்காது,
சில வேளைகளில் எனக்கே அழுகை பொங்கிப்பொங்கி வரும்.
 
செத்தவீடுகளுக்குப் போனாலும் என் நிலை இதுதான்.
இறந்து கிடக்கிறவரையும், தழுவிக் கதறுகிறவர்களையும் மறந்து போவேன்.
இறந்து கிடப்பவரை நானாகவும், தழுவி அழுபவர்களை எனது அன்புக்குரியவராகவும்,
என் மனம் கற்பனை செய்யும்.
எனது செத்த வீட்டில் யாரெல்லாம் எப்படி எப்படி அழுவார்கள் என நினைந்து,
அவ் எண்ணம் தரும் கவலையால் என்னை அறியாமல் பொங்கிப் பொங்கி அழுவேன்.
உண்மை நிலை அறியாமல்,
பாசக்காரன் என உறவு என்னைப் பாராட்டும்.
 
வருகிறவர்கள் அழவேண்டுமென்றே,
எங்கள் செத்தவீடுகளில் சில காட்சிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள்.
குடும்பஸ்தர் ஒருவர் இறந்து போனால்,
பெட்டி மூடுவதற்கு முன் 'கிளைமக்ஸ்' துன்பக்காட்சியாக,
இறந்தவரின் மனைவி தாலியைக் கழற்றிப் போடுவதான ஒரு நிகழ்ச்சி உண்டு.
அழாதவரையும் அக்காட்சி அழ வைக்கும்.
இப்போதெல்லாம் அதற்குக் கூட சிலர் அழுகிறார்கள் இல்லை.
அண்மையில் நான் போன மேல் தட்டு வர்க்கச் செத்தவீடொன்றில்,
ஒரு பெண் எந்தக் கவலையும் இல்லாமல்,
கழுத்தைச் சுற்றிய பாம்பைக் கழற்றிப்; போடுவது போல,
தாலிக்கொடியை சாதாரணமாய்க் கழற்றிப்; போட்டு,
அருகில் இருந்தவர்களிடம்,'கெயா(க)புல்! திஸ் இஸ் (க)போட்டீன் சவறின்ஸ்' என்றார்.
செத்தவன் சிவனே என்று கிடந்தான்.
உயிரோடு இருக்கையிலும் அவன் அப்படித்தான் இருந்திருப்பான் போலும்.
அதுதான் அந்த அம்மையாருக்குக் கவலையே வரவில்லையோ? என்னவோ?,
யாரில் பிழையென்று யாருக்குத் தெரியும்?,
அந்தப் பெண்ணே அழாதபோதும்,
அங்கும் நான் விம்மி அழுதேன்.
காரணம்,
தாலியைக் கழற்றிப்; போடுபவரை,
என் நெருங்கிய உறவுகளில் ஒருவராய் மனம் கற்பனை பண்ணியதுதான்.
பின் அழாமல் இருப்பது எப்படியாம்?
 
விமான நிலையத்திலும் இதுவேதான் கதை.
பிரிந்து செல்லும் பெண்களின் பாச அழுகை கண்டு,
என்னை அறியாமல் நானும் அழத்தொடங்கி விடுவேன்.
இவன் யாராடா 'லூசன்?' என்றோ,
அவளுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? என்றோ,
மற்றவர்கள் ஏடாகூடமாய் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக,
முகத்தைத் திருப்பி, கண்ணீரைத் துடைத்துக்கொள்வேன்.
இவரைப் போய் பெரிய அறிவாளி என்று நினைத்தோமே!
உங்கள் மன நினைவு புரிகிறது.
அறிவு வேறு உணர்வு வேறு என்பதை,
நான் சொன்னால் மட்டும் நீங்கள் புரிந்து கொள்ளவா போகிறீர்கள்?
 
சென்ற வாரம் சென்னை செல்வதற்காக விமான நிலையத்தில் நின்றேன்.
வழக்கமாய் என்னை ஈர்க்கும் அதே காட்சி,
இளவயதுப் பெண்ணொருத்தி பயணிக்கத் தயாராய் நின்றிருந்தாள்.
அவள் ஒரு தாய் என்பதை கையில் இருந்த குழந்தை உணர்த்திற்று.
அக்குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும்.
தான் வெளிநாட்டில் தங்கப்போகும் மூன்று வருடங்களுக்குமாய்ச் சேர்த்து,
குழந்தைக்கு மொத்தமாய் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள்; அத்தாய்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிற்று.
புதிதான விமானப் பயணம் தரும் அச்சம்!
குழந்தையைப் பிரியும் பரிதவிப்பு!
கணவன் மேற் கொண்ட காதல்!
இவை அனைத்தும் ஒன்று சேர,
துன்பத்தின் சிகரத்தில் இருந்தாள் அவள்.
இவ்வளவு துன்பங்களையும் தாண்டி அவள் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்?
என் மனத்துள் கேள்வி.
குடும்பத்தில் என்ன கஷ்டமோ? யாரறிவார்.
கஷ்டமில்லாமலா இவ்வளவு பெரிய கவலையையும்,
கடலினையும் தாண்டிப்போகிறாள்?
 
அழும் அவளைப் போகாதே! என்று சொல்லும் துணிவுமின்றி,
அவள் படும் துன்பத்தைத் தாங்கும் திறனுமின்றி,
அந்த இளம் கணவன் வேறு வேறு திசைகளை வெறுமையாய்ப் பார்த்து,
ரகசியமாய்க் கண்ணீர் துடைத்தான்.
கைக்குள் வைத்து மனைவியைக் காக்கும் திறனில்லாத இயலாமை,
அவன் ஆண்மையை அழுத்த,
இடைக்கிடை நிலம் பார்த்துத் தலைகவிழ்ந்து நின்றான்.
தன் ஆற்றாமையை உணர்த்த,
கைகளால் அவள் முதுகை அடிக்கடி அழுத்தி தழுவினான்.
அத்தழுவலில் கவலையன்றி, காமம் சிறிதளவும் இருக்கவில்லை.
 
குழந்தைக்கோ நடப்பது எதுவும் தெரியவில்லை.
சொர்க்கமாய் மின்னிக் கொண்டிருந்த விமான நிலையத்தை,
அது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தாயின் துன்பமும், தந்தையின் கவலையும் அதற்குப் புரியவேயில்லை.
அதன் குழந்தைத்தனம் கண்டு தாய் மேலும் கவன்று அழுதாள்.
அப்போது பயணிகளை உள்வருமாறு ஒலிபெருக்கி அழைத்தது.
உச்சக்கட்டத் துன்பக் காட்சி தொடங்கியது.
மெல்ல அழுத அப்பெண் இப்பொழுது விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
கணவனின் மார்பில் தலைசாய்த்துக் கதறினாள்.
அவன் கண்களிலும் அருவி,
பிரிவில், மரணத்தின் சாயல் இருக்கும் போலும்,
அதனால் தான் பிரிவுகள் இத்துணைத் துன்பம் தருகின்றன என,
நினைத்துக்கொண்டேன்.
மெல்ல நிமிர்ந்த அப்பெண் குழந்தையைக் கணவனின் தோள்களில் கொடுத்து,
திரும்பிப் பார்க்காமல் விறுவிறு என்று உட்சென்றாள்.
அவள் நடையின் வேகம்,
மனம் தன்னை போகாது தடுத்து விடுமோ! எனும் அவளது அச்சத்தை உணர்த்திற்று.
 
அப்போதுதான் எதிர்பாராத அச்சம்பவம் நடந்தது.
தாய் இருந்தவரை கவலையில்லாமல் இருந்த குழந்தை,
தாய் தன்னை விட்டுச் செல்லத்தொடங்கியதும் பதறியது.
'அம்மே அம்மே' என்று கதறியது.
தன்னை அணைக்க முயன்ற தந்தையை உதறியது.
தந்தை வாங்கிக் கொடுத்திருந்த இனிப்பு அதன் கையிருந்து சிதறியது.
தந்தை என்னென்னவோ செய்து பார்த்தான்.
பிள்ளையின் கதறலைத் தடுக்கவே முடியவில்லை.
தாய் போன திசையையே பார்த்துப் பார்த்து கை நீட்டிக் கதறி,
அது பண்ணிய அட்டூழியத்தை தந்தையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வாரி இறுக அணைத்து 'அம்மே எய்' (அம்மா வருவா) என்று கூறி,
ஆறுதல் படுத்துவதற்காய் அதனை முத்தமிடப் போனான்.
அதுவரை கவலையால் கதறிக்கொண்டிருந்த குழந்தையின் முகத்தில்,
திடீரென ஆவேசம்! அது என்ன நினைத்ததோ தெரியவில்லை?
தந்தையின் முகத்தில் தன் பிஞ்சுக் கைகளால்,
'பளார் பளார்' என அறையத் தொடங்கியது.
கொஞ்சம் வலித்திருக்கும்போல,
தந்தை தடுக்கப்பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான்.
என் அம்மாவை ஏன் பிரித்தாய்? எனக்கு உடனே அம்மா வேண்டும்,
அம்மாவை அனுப்பும் நீ எல்லாம் ஒரு அப்பனா?
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
அந்தக் குழந்தையின் அடியில் இத்தனை வசனங்களும் அடங்கியிருந்தன.
அடியை விட குழந்தையின் அவலம் வலிக்க,
தந்தை இப்பொழுது கதறி அழத்தொடங்கினான்.
என்னை அறியாது நானும் விம்மினேன்.
 
அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறிவிலார்
மறத்திற்கும் அஃதே துணை.
என்றார் வள்ளுவர்.
அன்பு அறத்திற்குத் துணையாகும் மறத்திற்கு துணையாகுமா?,
குறளைப் படிக்கும் போதெல்லாம்; இக் கேள்வி எழும்.
குறளின் கருத்துச் சரிதான் என்று,
தந்தையின் முகத்தில் விழுந்த குழந்தையின் அடிகள்,
ஐயமின்றி உரை செய்தன.
அதிர்ந்து போனேன்!

 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.