அதிர்வுகள் 15 | “அன்னையைப்போல் ஒரு..”

அதிர்வுகள் 15 | “அன்னையைப்போல் ஒரு..”
 
ங்கள் அன்புக்கு நன்றி.
அதிர்வைப்’ படிக்கும் வாசகர்களின் தொகை,
நான் பிரமிக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.
எங்கெங்கோ இருந்தெல்லாம் தொலைபேசியில் பாராட்டுக்கள் குவிகின்றன.
வாசகர்களின் அழைப்புக்களால்,
உள்ளம் நெகிழ்ந்து போகிறேன்.
காணும் இடமெல்லாம் மகிழ்ந்து கருத்துரைக்கும் வாசகர்களின் அன்பு,
எரிபொருளாகி என் எழுத்துலக பயணத்தை ஏற்றம் செய்கிறது.
பல வருடங்களாய்ப் பேசி எடுத்த புகழை விட,
சிலநாட்களே எழுதியதால் வந்த புகழ் உயர்ந்து விட்டதாய்த் தோன்றுகிறது.
அத்தனையும் ஆண்டவனின் அருள் அன்றி வேறென்ன?
'உகரத்தின்" உத்வேகம் கண்டு வியக்கிறேன்.
 

நன்றி! நன்றி! நன்றி!

✿✿✿

விளையாட்டாய் ஒரு கதை சொல்வார்கள்.
உலகைப் படைத்து முடித்த ஆண்டவன்,
‘இத்தனை பேரையும் நான் எப்படிக் காக்கப்போகிறேன்?’ என்று மிரண்டானாம்.
நீண்ட சிந்தனையின் பின் ஓர் உத்தி தோன்ற அவன் மகிழ்ந்தானாம்.
வீட்டுக்கொரு தாயைப் படைத்துவிட்டால்,
தன் காக்கும் கடமை சுலபமாகி விடும் என்பதே,
அவன் புத்தியில் பதிந்த உத்தியாம்.
விளையாட்டான கதைதான்.
ஆனால் வீரியமான உண்மை அதில் பதிந்திருப்பதை,
யாரும் மறுக்கமாட்டார்கள்.

✿✿✿

துன்பம் செய்தார்க்கு மீளத்துன்பம் செய்ய விரும்புவது,
மனிதர்தம் பொது இயல்பு.
ஒரு சில ஞானியர் மட்டுமே இவ்விதிக்கு விலக்காவர்.
எல்லாச் சமயத்தாரும் தத்தம் ஞானியர் மேல் ஏற்றிச் சொல்லும் கதை ஒன்றுண்டு.
ஒரு ஞானி ஆற்றங்கரையில் நின்றாராம்.
அப்போது ஆற்றில் ஒரு தேள் அடிபட்டு வர,
உயிர்க்குப் போராடும் அதன் அவலத்தைக் கண்டு,
அதனை மீட்க நினைத்த ஞானி தன் கையை நீட்டினாராம்.
அவர் கையைப்பற்றிப் பிடித்து வெள்ளத்தில் இருந்து தப்பிய தேள்,
உடனேயே அவர் கையில் கொட்டியதாம்.
வலி தாங்காமல் ஞானி கையை உதற,
தேள் மீண்டும் வெள்ளத்தில் வீழ்ந்து தத்தளித்ததாம்.
அதன் துன்பம் கண்டு மீண்டும் ஞானி கையைக் கொடுக்க,
அதைப் பற்றி மீண்டும் அவர் கையில் ஏறிய தேள் மறுபடியும் கொட்டியதாம்.
இச்சம்பவம் பலதரமாய்  நிகழ,
அருகிலிருந்து அதைக்கண்ட ஒருவன் சகிக்க முடியாமல்,
'அதுதான் திரும்பத்திரும்பக் கொட்டுகிறதே, 
அறிவுள்ள நீங்கள் மீண்டும் மீண்டும் ஏன் கையைக் கொடுக்கிறீர்கள்?'
என்று கேட்டானாம்.
அதற்கு அந்த ஞானி,
கொட்டுகிறது தேளின் இயல்பு, 
இவ்வளவு ஆபத்திலும் அது தன் இயல்பை மாற்றுவதாய்த் தெரியவில்லை. 
துன்பம் செய்தவர்க்கும் கருணை செய்யவது ஞானியின் இயல்பு. 
அறிவு குறைந்த தேளே தன் இயல்பை மாற்றாத போது, 
அறிவு நிறைந்த நான் என் இயல்பை மாற்றலாமா?’ என்றாராம்.
நான் ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.

✿✿✿

ஒரு தாயின் வயிற்றில் ஜனித்த நாள் முதல்,
பத்தாம் மாதத்தில் வந்து பிறக்கும் வரை,
ஒரு தாய்க்குக் குழந்தை தரும் துன்பம், நினைத்துப் பார்க்க முடியாதது.
ஜனித்த ஓரிரு மாதங்களில் ஒன்றையும் உண்ண முடியாமல், வாந்தி எடுக்கும் வருத்தம்.
தொடர்ந்து நாளுக்கு நாள் வயிறு பெருக்க,
அதுநாள் வரை கட்டிக்காத்த அழகு குன்றும் அவலம்.
பின்னர் உள்ளேயிருந்து குழந்தை உதைக்கும் உதைப்பின் துடிப்பு.
பேறு மாதம் நெருங்க நெருங்க, படுக்க இருக்க முடியாமல் தாய் படும்பாடு.
எல்லாத் துன்பத்திற்கும் சிகரமாய், குழந்தைப்பேற்றின் போது,
வைத்திய நூல்கள் ராஜவலி என்றுரைக்கும், பெரிய வலி என,
இத்தனை துன்பமும் தந்து பிறக்கும் குழந்தையை,
துன்பம் செய்தார்க்கு மீளத் துன்பம் செய்யும் மனித இயல்பின்படி பார்த்தால்,
பெற்றதாய் வெறுக்க வேண்டும்.
ஆனால் எந்தத் தாயும் அங்ஙனம் நினைந்ததாய் வரலாறு இல்லை.
ஆண்களால் இது முடியுமா? நிச்சயம் முடியாது.
அதனால் தான் இவ்வரிய தாய்மை எனும் தகுதியை,
இறைவன் பெண்களிடம் கொடுத்தான் போலும்.
பெண்ணைப் பெருமை செய்த ஆணாதிக்கம் இல்லாத ஆண்டவனை,
ஆயிரம்; தரம் தொழத்தோன்றுகிறது.

✿✿✿

இவையெல்லாம் அறிவு சார்ந்து நான் விளங்கியவை.
உணர்வு சார்ந்து தாய்மையின் பெருமையுணர்ந்த இரு சம்பவங்களை,
இவ்வார அதிர்வில் பதிவாக்க விரும்புகிறேன்.

✿✿✿

கிராமத்தில் பறவை, விலங்கென, பலவற்றோடும் கூடி வாழ்ந்த அனுபவ விருப்பால்,
வீட்டில் அரிதாய்க் கிடைத்த இடத்தில்,
பத்திற்கு பதினைந்து அடி விஸ்தீரணத்தில்,
கொழும்பிலும் ஒரு சிறு ‘சரணாலயம்’ அமைத்தோம்.
பல சாதிக் கிளிவகைகள், சில உயரினப் புறாக்கள்,
வேறு சில ‘கினிப்பிக்’ எலி வகைகள் ஆகியவற்றோடு,
ஏழெட்டு வெள்ளை முயல்கள் என,
புதிய உறவுகள் எங்களுடன் ஒன்று கூடின.
அந்தக் கூட்டிற்குச் ‘சித்திரகூடம்’ என்று பெயர் வைத்து,
கம்பனையும் மரியாதை செய்தோம்.
சில நாட்களில் வெள்ளை முயல்களில் ஒன்று கர்ப்பவதியானது.
நாளுக்கு நாள் வளர்ந்த அதன் வயிறு கண்டு மகிழ்ந்து வந்தேன்.
அதன் வழமையான வேகமெல்லாம் குறைந்து,
தாய்மைக்கே உரிய நிதானத்துடன் அசைந்து நடந்த அதன் அழகால் ஈர்க்கப்பட்டேன்.
ஒரு போயா தினத்திற்கு முதல் நாள்.
அது நாளை குட்டி போடும்’ என்று டாக்டர் சொல்ல,
எனக்குள் பெரிய பரபரப்பு,
மறுநாள் கூட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டேன்.

✿✿✿

திடீரென அந்த முயலின் முகத்தில் சின்ன மிரட்சி.
எந்த நிமிடமும் அது குட்டி போடப்போகுமாப் போல் தெரிந்தது.
அதன்மேல் கொண்ட அன்பினால்,
என் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
என்ன நினைத்ததோ தெரியவில்லை.
அந்தத்தாய் முயல் தன் பற்களால்,
தன் உடம்பிலிருந்த உரோமத்தைக் கௌவிப்பிடித்து பிடுங்கி இழுத்தது.
அதன் வாய் நிறைய உரோமங்கள்.
நான் பதறிப்போனேன்.
அதே செயலை அம்முயல் விடாமல் தொடர்ந்து செய்தது.
என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை.
டாக்டரிடம் கேட்கலாம் என உள்ளே சென்று தொலைபேசியில் முயன்றேன்.
என் கஷ்டகாலம் டாக்டர் வீட்டில் இல்லை.

✿✿✿

நான் திரும்பி வருவதற்குள்,
தன் உடம்பின் கால்வாசிப் பகுதி உரோமங்களை அது பிடுங்கியிருந்தது.
அந்தப்பிடுங்குதலில் அதன் உடம்பு முழுவதும் வலியால் துடிப்பதை,
என்னால் அதன் முகக் குறிப்புக்கொண்டு உணர முடிந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் இப்போது எனக்குள் பிரசவ வேதனை.
ஓடிப்போய் என் பூசை அறையில் உட்கார்ந்து,
என் முயலின் நலத்திற்காய்ப் பிரார்த்தனை செய்தேன்.
திரும்ப வந்து எட்டிப்பார்த்தால்,
அதே காரியத்தை முயல் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தது.
அதன் துன்பத்தைக் காணச் சகிக்காமல்,
கண்கசியப் படுக்கையில் ஓடி வந்து விழுந்து விட்டேன்.

✿✿✿

என்னை மறந்து தூங்கியிருப்பேன் போல,
திடீரென்று கண் விழித்தேன்.
முயலின் வலிதாங்கா முகம் நினைவில் வர,
கூட்டை நோக்கி ஓடினேன்.
அங்கு ஆச்சரியம் காத்திருந்தது.
தன் உடம்பில் பிடுங்கிய உரோமங்களால் கூடமைத்து,
அதனுள் சதைத் துண்டங்களாக ஆறு குட்டிகளை ஈன்று அணைத்துக் கிடந்தபடி,
தாய்மைப்பெருமிதத்தோடு முயல் என்னைப் பார்த்தது,
கலங்கிப்போனேன்!
குட்டிகளின் சுகத்திற்காய் தன் உடல் வருத்தம் பாராது,
உரோமம் பிடுங்கி கூடமைத்துக் குட்டியீன்ற,
அந்த ஐந்தறிவு அன்னையின் அகன்ற கருணை கண்டு அதிசயித்தேன்.
என் தாய் நினைவில் வர நெஞ்சு நெகிழ்ந்தது.

✿✿✿

போர்க்காலத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி.
இச்சம்பவம் வன்னிப்பிரதேசத்தில் நடந்ததாய் என் நண்பன் சொன்னான்.
விதவைத்தாய் ஒருத்தி, தன்னை வருத்தி,
பிள்ளையைப் படிக்க வைத்து ஆளாக்கினாளாம்.
போரால் அவனுக்குத் தீமை வந்துவிடக்கூடாதே எனக்கலங்கி,
தன் உடமைகள் முழுவதையும் விற்று,
பிள்ளையை வெளிநாட்டிற்கு அவள் அனுப்பினாளாம்.
தனது நலத்தைக் கருதிய,
தாயின் நலத்தைக் கருதாது,
போர் மண்ணில் அவளைத் தனித்து விட்டுச் சென்ற பிள்ளை,
வெளிநாட்டில் கார், வீடு, மனைவி, மக்கள் எனப் பெருகி வாழ்ந்தானாம்.

✿✿✿

ஒருநாள் மரணப்படுக்கையில் தாய் வீழ்ந்துவிட,
உறவினரின் கெஞ்சுதலின் பின்,
வேண்டா வெறுப்பாய் தாயைப்பார்க்க வந்த பிள்ளையைக் கண்டு,
தாயிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
‘இன்னும் ஒருசில நாட்களில் நான் இறந்து விடுவேன்.
எனக்குக் கொள்ளி வைத்துவிட்டுப் போ?’ என, தாய் கெஞ்ச,
அவள் கோரிக்கையை நிராகரித்து,
‘நான் வேலைக்குப் போகவேண்டும்.
அம்மாவின் கடமையை வடிவாய்ச் செய்யுங்கோ!’ என,
உறவுகளிடம் காசை வீசிப்  புறப்படத்தயாரானான் அப்பிள்ளை.
தாயின் கெஞ்சுதல்கள் அவனிடம் எடுபடவில்லை.
அடுத்த நாள் அவன் பயணம்.
முதல் நாளன்று தாய் தனக்குத்தானே தீ மூட்டி இறந்து போனாளாம்.
தன் வசதி நோக்கி தாயிற்கு கொள்ளி வைக்கப் பிள்ளை மறுத்தான்.
பிள்ளை கொள்ளி வைக்க வசதியாகத் தாய் உயிர் துறந்தாள்.

✿✿✿

விலங்கு, மனிதர் என்ற பேதமில்லாமல்,
தாயினம் முழுவதும் பிள்ளைக்குக் கருணை செய்வதில்,
ஒன்றாய்த்தான் இருக்கிறது.
தாயைக் கண்ட பிறகும் சில முட்டாள்கள்,
உலகத்தில் கடவுள் இல்லை என்று சொல்லித்திரிகிறார்கள்.

✿✿✿✿✿✿
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.