அதிர்வுகள் 18 | பலவீன ஈர்ப்பு !

அதிர்வுகள் 18 | பலவீன ஈர்ப்பு !
 
லகின் மாறுபட்ட இயல்பே,
நம்வாழ்வைச் சுவைப்படுத்துகின்றது.
நல்லவன், கெட்டவன்;
அறிவாளி, அறிவிலி;
வீரன், கோழை;
பணக்காரன், ஏழை;
அழகன், அசிங்கன் என,
உலகு வேறுபட்டுக் கிடப்பதால் தோன்றும் முரண்பாடுகள்,
வாழ்வைச் சுவைப்படுத்துவது யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டால்,
உலகில் வெறுப்புக்கு இடமில்லை.
மனிதர்களின் பலவீனங்களும் நம்மை ஈர்க்கும்.
அவ் ஈர்ப்புப்பற்றிச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
 

❆❆❆
 
யாழ் இந்துக்கல்லூரியில் நான் படித்த ஆரம்ப காலத்தில்,
படிப்பு, விளையாட்டு, பிற ஆளுமைகள் என,
எவையுமின்றி வெறுமனே திரிந்தேன்.
என் கிராமம் தந்த புதிய அனுபவங்களில் திளைத்துக் கிடந்ததால்,
கல்லூரி எனக்குக் கசக்கும் இடமாயிற்று.
❆❆❆
 
பல இடர்கள் தாண்டி,
நான் 'ஏ.எல்' வகுப்பிற்கு வந்த பிறகு,
இந்தச் சூழ்நிலை மெல்ல மாறிற்று.
இளமையின் வரவு, புதிய நண்பர்களின் அறிமுகம் என்பவை,
குடம்பி உடைத்து வெளிவந்த வண்ணத்துப்பூச்சியாய்,
என் வாழ்வை வசந்தப்படுத்தின.
வகுப்புக்களைக் 'கட்' பண்ணி, 
நண்பர்களோடு நான் அனுபவித்த,
கள்ளப் படம், கடைத்தீனி,
சுற்றுலாக்கள், சுகானுபவங்கள் என,
வாழ்க்கைப்பாதை வளம் மாற,
இளமையின் இனிமைகள் எனக்கு செங்கம்பளம் விரித்தன.
❆❆❆
 
இங்குதான் எனக்கு முதல் முதலில் நட்புக் கிடைத்தது.
ஆளுக்கொரு வடிவம்.
ஆளுக்கொரு சுவை.
ஆளுக்கொரு விருப்பு.
ஆளுக்கொரு கொள்கை என,
வேறுபட்டு மலர்ந்து கிடந்த எங்களை,
இளமை என்னும் நார் ஒன்றாக்கி,
மாலையாய்க் கட்டிப்போட்டது.
நட்பின் அருமையை,
அப்பொழுதுதான் முதல் முதலாய் அறிந்தேன்.
❆❆❆
 
ஜமீல், வசந்தன், தாசன், ஸ்கந்தா,
நகுலன், சிவலோகன், சிவகுமார் என,
என்னோடு சேர்த்து எட்டு நண்பர்கள்.
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோம்.
ஊர் சுற்றி உவந்திருந்தோம்.
அந்தக் காலத்தில் 'ஏ.எல்.' இல் நான்கு பாடம் எடுக்கவேண்டும்.
எங்கள் அஷ்ட நண்பர் குழாமிற்கு,
முதல்தரம் மொத்தமாய் முப்பத்திரண்டு 'எப்(F)'கள் வந்தன.
அதைப்பற்றி எங்களுள் எவரும் துளியும் கவலைப்படவில்லை.
❆❆❆
 
இக்கட்டுரையில் நான் எழுதப்போவது,
என் நண்பன் நகுலன் பற்றியே.
பாரம்பரியமான குடும்பத்தில் வந்தவன்.
கல்லூரியின் அருகிலேயே அவனின் வீடு இருந்தது.
எங்கள் இயல்புக்கு இடர் செய்யாத இனிய குடும்பம்.
அப்போது அவர்கள் குடும்பம் ஏழ்மையின் வாயிலில் நின்றது.
நகுலனுக்கு ஒரு தம்பி, மூன்று சகோதரிகள்.
தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தாய் இனிமையின் இருப்பிடம்.
அவர்கள் எல்லோரும்,
எங்களையும் வீட்டுப்பிள்ளைகளாகவே கருதினார்கள்.
ஏழ்மையில் வடிக்கும் சோற்றில் கூட,
எப்போதும் எங்களுக்கும் பங்கிருக்கும்.
❆❆❆
 
அவர்கள் சுத்த சைவர்கள். 
சைவச்சாப்பாட்டின் சுவையை,
அந்த வீட்டில்தான் முதல் முதலாய் அறிந்து அனுபவித்தேன்.
அவர்களின் தாயாரின் கைபட்டால் பாகற்காயும் இனிக்கும்.
முருக்கம் இலை வறையுடன் மட்டும்,
மூன்று கோப்பை சோறுண்ணலாம்.
இராசவள்ளிக்கிழங்குப் பொரியலை,
அங்குதான் முதல்முதல் சுவைத்தேன்.
அதுபற்றிச் சொல்வதானால் கட்டுரை நீண்டுவிடும்.
❆❆❆
 
குடும்பத்தில் மூத்தவர் நீலா அக்கா.
சிவந்த நிறம். 
பூசினால் போல் இருக்கும் உடம்பு.
காரணமின்றிச் சிரிக்கும் முகம்.
அடுத்தவள் வசந்தா.
வெள்ளைக் குடும்பத்தில்,
கறுப்பாய்ப் பிறந்து விட்டதாகக் கவலைப்படுபவள்.
அவர்களுக்குள் நிதானமானவள்.
முன்றாமவன் மதுரன்.
பெண்தன்மையுடையவன்.
தேவையின்றியும் பொய் சொல்வான்.
அம்மாவைப் போல் சமைக்கக் கூடியவன்.
நாலாமவள் சந்திரிக்கா.
நிறத்தால் நீலா அக்காவை ஒத்து,
குணத்தால் வசந்தாவின் சாயல் பெற்று,
சற்று அமைதிகாப்பவள்.
நீலா அக்காவிற்கு நேர் இளையவன் எங்கள் நகுலன்.
❆❆❆
 
அப்பா கதிர்காமர் பெரிய கலாரசிகர்.
எந்த நேரமும் சிரித்த முகம்.
பழைய சினிமா நடிகர் ரி.ஆர். மகாலிங்கத்தை,
நினைவூட்டும் வடிவம்.
எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என்று சொல்லமுடியாத,
ஒரு கலவைக்குணம்.
என் பேச்சின் பரம ரசிகர் அவர்.
❆❆❆
 
அம்மா,
அப்பாவை விட சற்று மூப்பாய்த் தோன்றுவார்.
ஒருவேளை மூப்போ தெரியவில்லை.
எந் நேரமும் வெற்றிலையால் வாய் சிவந்திருக்கும்.
அணிந்திருக்கும் சோடாபுட்டிக் கண்ணாடியின் பாதிப்பால்,
நேராய் பார்க்கையிலும் அண்ணாந்து பார்ப்பதாய்த் தோன்றும்.
எல்லோரையும் பிள்ளைகளாய்க் கருதும் பெருந்தன்மை.
வறுமையில் கிடைத்த சோற்றையும்,
மற்றவர்க்கு வழங்கி உண்ணும் பண்பாடு.
இதுதான் அவர்களின் குடும்ப அறிமுகம்.
❆❆❆
 
அம்மாவையும் வசந்தாவையும் தவிர,
அந்த வீட்டு உறுப்பினர் அனைவரிடமும்,
இருந்த ஒரு பொது இயல்பு விசித்திரமானது.
திடீர் திடீரெனக் கோபம் வரும்.
வினாடி நேரம் நிற்கிற கோபந்தான்.
ஆனால் அந்த வினாடி நேரத்திற்குள்,
ஏதாவது சேதம் நிகழ்த்தி விடுவார்கள்.
மற்றவர்களுக்கல்ல தங்களுக்கு!
கோபம் வந்துவிட்டால்,
கையில் கிடப்பது உடையும் அல்லது கிழியும்.
பக்கத்தில் இருப்பது பறக்கும்.
தமக்குத் தாமே துன்பம் விளைவித்து,
கோபம் தணிப்பார்கள்.
❆❆❆
 
என் நண்பன் நகுலனின்,
சேட் பொத்தான்கள் எல்லாம் பெரும்பாலும் அறுந்து கிடக்கும்.
மணிக்கூட்டு வார் பிய்ந்து கிடக்கும்.
சைக்கிள் சீற் வெட்டப்பட்டு பிளந்து கிடக்கும்.
சான்றிதழ்கள் எல்லாம் கிழிந்து ஒட்டப்பட்டிருக்கும்.
கைகளில் வெட்டுக்காயத் தழும்புகள் எப்போதும் இருக்கும்.
அவையெல்லாம் அவனது கோபத்தணிப்பு முயற்சிகளின் அடையாளங்கள்.
அவன் என்று இல்லை.
அந்த வீட்டில் அம்மாவையும், வசந்தாவையும் தவிர,
மற்றவர்கள் அனைவரதும் இயல்பு அப்படித்தான்.
அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
சில நேரங்களில் மகனை வெல்லுவார்.
ஒரு சம்பவம் சொல்லுகிறேன்.
❆❆❆
 
ஒரு நாள் மதியம்.
நான் அவர்கள் வீட்டில் இருக்கிறேன்.
அரிசி வாங்க கடைக்குப் போன நகுலன்.
மிகத்தாமதமாய்,
பை நிறைய அரிசியைத் தோளில் சுமந்தபடி வருகிறான்.
அவன் முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.
முகத்தின் சிவப்பில் சின ஓவியம்.
அவர்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடிய நேரம் அது.
❆❆❆
 
அரிசிக்காய்க் காத்திருந்த அம்மா,
வாசலில் வந்த நகுலனிடம்,
' இவ்வளவு நேரமும் என்ன செய்திட்டு வருகிற மேனே? ' என்று,
தெரியாமல் கேட்டுவிட,
நகுலனின் கோபம் கொந்தளித்து வெளிவருகிறது.
முற்றத்தில் திடீரென நிற்கிறான்.
காலைத் தூக்கி நிலத்தில் இரண்டு தரம் குத்தியவன்,
கொண்டு வந்த அரிசியை முற்றத்தில் அப்படியே கொட்டி விட்டு,
இரண்டு கைகளாலும் தனது சேட்டைப்பிடித்து,
'பறார்' என கிழித்துவிட்டு உள்ளே போய்விட்டான்.
நான் திகைத்துப் போனேன்.
❆❆❆
 
தாயார் கண்ணீர் வடிக்க,
எங்கேயோ இருந்த தந்தையார் மெல்ல வந்தார்.
அவர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
பேசாமல் உள்ளே போனவர்,
இரண்டு பெரிய சட்டிகளையும்,
ஒரு அரிக்கண் சட்டியையும்,
ஒரு தட்டுச்சுளகையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
அவர்கள் வீட்டு முற்றத்தில் ஒரு பைப் இருந்தது.
மகன் கொட்டிய அரிசியை எல்லாம்,
பொறுமையாய் தட்டுச்சுளகில் அள்ளியவர்,
பைப்படியில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்,
அரிக்கண்சட்டியால் அரித்து அரித்து,
அரிசியில் கலந்த மண்ணை அகற்றி,
பொறுமையாய் மற்றச் சட்டியில் போடத்தொடங்கினார்.
❆❆❆
 
அரைவாசி அரிசியை அரித்திருப்பார்.
உள்ளே இருந்த மூத்த மகள் நீலா,
திடீரென தடதடவென்று வெளியே வந்தார்.
கதவோரத்தில் நின்ற தாய்க்குப் பின்னால் நின்று,
அரிசி கழுவிய தந்தையைப் பார்த்தார்.
வழக்கம் போலவே காரணமின்றி,
'களுக்'கென்று ஒரு சிரிப்பு அவரிடமிருந்து வெளிவந்தது.
மகளின் சிரிப்புக் கேட்டு நிமிர்ந்த தந்தையின் முகத்தில்,
சிறியதாய்க் கோபச் சாயல்.
அதைப் பார்த்து மகள் உள்ளே ஓடிவிட்டார்.
❆❆❆
 
அரைமணி நேரம் சென்றிருக்கும்.
தந்தையார் பைப்படியிலிருந்தபடி,
தொண்ணூறு வீத அரிசியைச் சுத்தப்படுத்தியிருந்தார்.
உள்ளே போன நீலா அக்கா,
மீண்டும் திரும்பி வந்தார்.
மீண்டும் தாயின் மறைவில் நின்றபடி,
தந்தையைப் பார்த்து அதே 'களுக்' சிரிப்பு.
தந்தையின் முகம் இப்பொழுது முற்றாய்ச் சிவந்தது.
திடீரென எழுந்தார்.
மகளைப் பார்த்து முறைத்தார்.
காலை இரண்டு தரம் நிலத்தில் குத்தினார்.
பின் மகனைப் போலவே தன் சட்டையைக் கிழித்தார்.
அதுவரை தான் கழுவிய அரிசி முழுவதையும்,
திடீரென மீண்டும் மண்ணுக்குள் கொட்டிவிட்டு,
வீட்டுக்குள் விறுக்கெனப் போய்விட்டார்.
நான் அதிர்ந்து போய் நின்றேன்.
❆❆❆
 
நல்லவர்கள். 
அன்பானவர்கள்.
உலகை நேசிப்பவர்கள்.
வறுமையிலும் மற்றவர் மேல் அன்பு செய்கிறவர்கள்.
அவர்களிடம் பொறுக்க முடியாத கணநேர கோபத்தைப் புதைத்து,
ஆண்டவன் செய்த விளையாட்டின் அதிசயம் புரியவில்லை.
இன்று எங்கெங்கோ பிரிந்திருக்கிறோம்.
வாழ்க்கை தடம் மாறிவிட்டது.
ஆனாலும் நண்பர்களின் நினைவு வந்ததும்,
நகுலனும், அவர்கள் வீடும்,
அவர்களின் தனி அடையாளமான கோபமுந்தான்,
நெஞ்சுக்குள் வருகின்றன.
மனிதர்களின் பலங்கள் மட்டுமல்ல,
பலவீனங்களும் நம்மை ஈர்க்கத்தான் செய்கின்றன.
❆❆❆❆❆❆
 
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.