அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்! அன்றேல் தாழ்வோம்!

அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்!  அன்றேல் தாழ்வோம்!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
லகப்படத்தின் ஒரு மூலையில் கிடந்த,
சின்னஞ்சிறு தீவான இலங்கை,
கடந்த பல தசாப்தங்களாக விஸ்வரூபம் எடுத்தது.
இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டம், தனிஈழம் என்பனவாய்,
இலங்கையின் பிரச்சினைகள் உலகளாவி விரிய,
உலகின் கூர்ந்த கவனிப்புக்குள் இலங்கை வந்தது.
அடுத்தடுத்துப் பலப்பல மாற்றங்கள்.
நிமிர்ந்து விரிந்த தமிழர் விடுதலை ஆயுதப் போராட்டம்,
முள்ளிவாய்க்கால் போராட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
முடிவுக்கு வந்த அப்போராட்டம்,
வெறுமனே ஓய்ந்து போகாமல்,
இலங்கையை,
சர்வதேசத்தராசில் ஏற்றி விட்டே ஓய்ந்திருக்கிறது.
 

✸✸✸

ஆயுதப்போராட்டத்தை அடக்கிவிட்டால்,
கேட்பார் எவரும் இன்றி,
தமிழினத்தை ஏதும் செய்யலாம் என்ற பேரினவாதிகளின் நினைவு,
போராட்ட முடிவில் நடந்த அரச அட்டூழியங்களால் கனவாய்ப் போனது.
அநியாய மரணங்கள், அகதிகள், அட்டூழியங்கள் என,
அப்போதைய அரசு செய்த காரியங்களின் விளைவுகள்,
ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னும்,
இலங்கை அரசை இன்னலுக்கு ஆளாக்கின.
உலக மன்றின் முன்னால்,
இலங்கை அரசு குற்றவாளியாய் நிறுத்தப்பட்டது.

✸✸✸
 
உலகு தொடுத்த வினாக்களை உதாசீனம் செய்து,
மஹிந்த அரசு வித்தை காட்ட,
உலக, பிராந்திய வல்லரசுகளின் மறைமுக வலிமையால்,
நாடிழந்து நலிவுற்றார் மஹிந்த.
அவரது தந்திர முயற்சிகளே அவரைத் தனிக்கச் செய்ய,
கூட இருந்தவர்களே வெட்டிய குழியில்,
தப்பவழியின்றி 'தொப்"பென வீழ்ந்தார் அவர்.

✸✸✸
 
அடுத்தடுத்து மாற்றங்கள்.
ஜனவரி 8 இல் நடந்த அரசியல் மாற்றம் புரட்சி என்றே உரைக்கப்பட்டது.
புதிய ஜனாதிபதியும் அவரைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறிய பிரதமரும்,
இனப்பிரச்சினைத் தீர்வில் நம்பிக்கை விளக்கேற்ற,
வாடிக்கிடந்த தமிழர் மனம் சற்று நிமிர்ந்தது.

✸✸✸
 
புலிகளின் மறைவின் பின்,
அதுவரை சுரங்கத்துள் கிடந்த தமிழர் கூட்டமைப்பு அரங்கத்தில் ஏறி,
தாமே தமிழரின் தனித்தலைமை என உரைத்து மக்களை ஈர்க்க,
தேர்தல் வெற்றிகள் அவர்களைத் தேடி வந்தன.
ஜனவரி 8 புரட்சியிலும், தொடர்ந்த பாராளுமன்றத் தேர்தலிலும்,
புதிய ஆட்சியாளர்களோடு கைகோர்த்து உறவுகாட்டிய தமிழர் கூட்டமைப்பு,
எதிர்பாராமல் வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும்,
விமர்சனங்களுக்கு மத்தியில் ஏற்று,
புதிய ஆட்சியாளர்தம் உறவை வலுப்படுத்திக்கொண்டது.

✸✸✸
 
அதன்பின் உலக அரங்கில் பல மாற்றங்கள்.
அதுவரை இலங்கை அரசுக்கு எதிராக நின்ற அமெரிக்க வல்லரசு,
தன் ஆதரவு பெற்ற இலங்கை அரசை மறைமுகமாய் தானும் ஆதரித்து,
தன் ஆதரவு சக்திகளையும் ஆதரிக்க வைத்தது.
ஐ.நா.சபையில் அகப்படப்போகிறது இலங்கை எனப் பலரும் நினைத்து இருக்க,
அங்கு இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்பட்டதும்,
அப்பிரேரணைக்கு இலங்கை அரசே அனுசரணை செய்ய முன்வந்ததும்,
அதை ஏற்று சர்வதேச விசாரணைக் கோரிக்கை குப்பைக்குள் போடப்பட்டு,
உள்ளக விசாரணைக்கு உலகம் ஒத்துக்கொண்டதும்,
அதனை நம் கூட்டமைப்பு வரவேற்று உடன்பட்டதும்,
நடந்து முடிந்த செய்திகள்.

✸✸✸
 
அரசியலில் விட்டுக்கொடுப்புக்கள் தவிர்க்க முடியாதவை.
சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுப்புக்களோடு காரியமாற்றுவதை,
அரசியலார் ராஜதந்திரம் என்கின்றனர்.
அதனையே நம் கூட்டமைப்பு செய்தது என்று கருதியிருந்தோம்.
அதிலும் பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

✸✸✸
 
சிங்கள அரசும், ஆட்சியாளர்களும்,
தமிழர்தம் உரிமைப்போராட்டம் பற்றி,
உலக அரங்கில் உரைத்த முடிவுகள்,
நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டவையே தவிர,
நெஞ்சத்தால் உணரப்பட்டவை அன்றாம்.
அதை அறியத்தவறின்,
நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

✸✸✸

இலங்கை அரசுக்கும், தமிழ்த்தலைமைக்கும் ஏற்பட்ட,
அண்மைக்கால உடன்பாடுகள்,
உலகின் அழுத்தத்தின் பேரில் ஏற்பட்டவை.
அவ் அழுத்தம் இருபக்கத்துக்கும் தரப்பட்டது.
உலகின் மேற்பார்வையில்,
சிங்களத் தலைமைகளோடு சமநிலை கொள்ளும் வாய்ப்பு,
தமிழர்க்கு இன்று கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு.
இவ்வாய்ப்பு இதுவரை கிடைக்காதது.
இனியும் கிடைக்க முடியாதது.
இந்நிலையில் விட்டுக்கொடுப்புக்களோடு,
விட்டுக்கொடாமைகளும் செய்து,
கொண்டும், கொடுத்தும்,
தமிழ்த் தலைமைகள்,
தம் ஆளுமையைக்காட்ட அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

✸✸✸
 
அதற்கான ஒரு அக்கினிப்பரீட்சையாய் அமைந்திருப்பதுதான்,
அரசியல் கைதிகளின் விடுதலை விடயம்.
இருபது வருடங்களுக்கு மேற்பட்டும் கூட,
இன்றும் புலி ஆதரவாளர்கள் என்ற பெயரில்,
கேட்பாரின்றி பலரும்,
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும், நிறுத்தப்படாமலும்,
அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
போரின் முடிவில் புலிகளுக்குக்கூட மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
ஆனால் இவர்களுக்காய் இரங்க எவரும் தயாராயில்லை.
தாமே தலைவர் என உரைத்து,
பாராளுமன்று சென்று பலகாலம் ஆன நிலையில் கூட,
கூட்டமைப்புத் தலைவர்களும்,
இவர்கள் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.
புதிய அரசு, புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம் என வந்த பிறகும்,
இவர்தம் துன்பம் தீர்க்க எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில்தான் கடந்த மாதம்,
கைதிகளின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியது.

✸✸✸
 
அதன்பின்னர் தான்,
தம்மீதான மக்கள் கருத்து மாறிவிடக்கூடாது என்பதற்காக,
ஒப்புக்கு நம் தலைவர்கள் உருக்கொண்டு ஆடத்தொடங்கினர்.
இவர்கள் தந்த அழுத்தத்தில்,
ஜனாதிபதி நவம்பர் 7 இன் முன்,
இக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குத்தந்தார்.
அந்த வாக்கைப் பெற யார் அதிகம் முயன்றார்கள் என்று,
கூட்டமைப்புத் தலைவர்களுக்குள் நடந்த குதறல்கள்,
நம் கீழ்மையை எடுத்தியம்பின.
ஜனாதிபதியின் வாக்கை நம்பி,
கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

✸✸✸
 
இந்நிலையில் இன்று மீண்டும் மாற்றம்.
அமைச்சர்களும், பிரதமரும்,
கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என அறிவித்திருக்கிறார்கள்.
சட்டத்தைச் சாட்டுச்சொல்லி அதற்கு ஆயிரம் காரணங்கள்.
சட்டம் ஒருபக்கம் கிடக்கட்டும்.
சாதாரணர்களாலும் கேட்கப்படும் கேள்விகள் பல,
அவர்கள் முன் அடுக்கப்படுகின்றன.
அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

 1971 இல் ஜே.வி.பி. புரட்சி அடக்கப்பட்ட பொழுது தலைவர்களை மட்டும் சிறையில் வைத்து ஆதரவாளர்களை விடுவித்தது அப்போதைய அரசு. இப்போது நிலமை தலைகீழ். தலைவர்களை விடுவித்து ஆதரவாளர்களை அடைத்துவைத்து வதைக்கிறார்கள். இந்த முரண்பாடு எதனால்?

 ஆயுதப் போராட்டத்தில் குதித்து அரசுக்கு எதிராகப் போராடிய புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.பி.டி.பி. தலைவர்கள் எல்லாம் பாராளுமன்றத்துள் பதவியேற்றுப் பத்திரமாய் இருக்க ஆதரவளித்தவர்கள் மட்டும் அநியாயமாய்ப் பல்லாண்டுகள் சிறையில் வாடுவது சரியா?

 ஒருவேளை புலிகள் தான் நம் எதிரிகள் என்று அரசு சொல்லத் தலைப்பட்டாலும் புலி அமைப்பின் பழைய முதன்மைத் தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றோர்க்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட உயர்பதவிகள் வழங்கப்பட்டதும், கே.பி. போன்றோர் பாதுகாப்போடு உலா வருவதும், எந்த சட்டத்தின் அடிப்படையில்?

 ஆட்சிக்கு வந்ததுமே ஜனாதிபதி தனது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் இராணுவத்தளபதிக்கு முழு உரிமை வழங்கமுடியுமென்றால், அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரையில் சிறையில் வாடிவிட்ட இவர்களை விடுவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

 1971 இலும் 1987 இலுமாக கிளர்ச்சிகள் செய்யத் தலைப்பட்டும் 1983 கலவரத்தின் பின்னணியில் நின்றதாகச் சொல்லப்பட்டும், ஒதுக்கி வைக்கப்பட்ட ஜே.வி.பியினருக்கு ஒன்றுக்கு இரண்டுதரமாக மன்னிப்பு அளிக்கப்பட்டு, இன்று இலங்கைப் பாராளுமன்றத்தினுள் அவர்கள் மூன்றாவது பலம் பெற்ற பேரினக்கட்சியாகத் திகழ முடியுமென்றால் இவ் அப்பாவிகளை மன்னிப்பதில் மட்டும் என்ன தவறிருக்கப்போகிறது?

கேள்விகள் இப்படியாய் விரிகின்றன.
சிங்களத்தலைவர்களிடமும், அரசிடமும்,
நியாயத்தை எதிர்பார்க்க முடியாதென்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
இனப்பகை என்னும் விருட்சம் வீழ்த்தப்பட்டாலும்,
அதன் வேர் இன்னும் அறுக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகியிருக்கிறது.
கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அறிவித்ததும்.
தம்மாலேயே அக்காரியம் நடந்தது என்று,
கொடி உயர்த்தி கூக்குரல் இட்ட தமிழ்த்தலைவர்கள்,
அமைச்சரவையின் அறிக்கையின் பின்னால்,
ஏனோ மௌனித்திருக்கிறார்கள்.

✸✸✸
 
இப்பிரச்சினை,
கைதிகளின் பிரச்சினை என்பதை விட,
நிகழ்ந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்,
உலக ஆதரவுடன் கூடிய உரிமை,
எமக்கும் உண்டு என்பதை அரசுக்குக்காட்ட,
கூட்டமைப்பினருக்குக் கிடைத்திருக்கும்,
நல்ல சந்தர்ப்பம் இது என்பதுவே முக்கியம்.
உரிமையுடன் இதைப் பயன்படுத்தத் தவறினால்,
குட்டக்குட்டக் குனிவார்கள் எனும் துணிவு,
பேரினத்தார்க்கு மீண்டும் வந்துவிடும்.
தொடரும் பிழைகளைத் திருத்துவதை விட,
முதல் பிழையைத் திருத்துவது சுலபம்.
சட்டம் படித்த தமிழ்த்தலைவர்கள்,
சட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்காமல்,
உரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்கவேண்டும்.
இல்லாவிட்டால் மீண்டும் வரலாற்றில் பின்தள்ளப்படுவோம்.

✸✸✸
 
சரி.
இதற்கு என்னதான் செய்யலாம்?
கேள்வி பிறக்கும்.
ஜனாதிபதியால் தரப்பட்ட வாக்கு மீறப்படுமானால்,
ஒட்டு மொத்தத் தமிழ்த்தலைவர்களும்,
தம் பதவிகளை ராஜினமாச்செய்ய முன்வரவேண்டும்.
சிறைக்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கவேண்டும்.
தமிழர்தம் பிரதேசங்கள் அனைத்திலும் கைதிகளுக்கு ஆதரவான,
அகிம்சைப் போராட்டம் கிளர்ந்தெழ வேண்டும்.
இவற்றின் மூலம் நம் ஒற்றுமையையும், பலத்தையும் வெளிப்படுத்தி,
நேர்மையான தம் கோரிக்கைகளுக்காக,
தமிழினம் போராடத் தயங்காது என்பதை,
உலகுக்கும், பேரினத்தார்க்கும் உணர்த்துதல் வேண்டும்.

✸✸✸
 
ஈழத்தமிழர் பிரச்சினை,
உலக அரங்கில் சூடாறாமல் இருக்கும் இன்றைய நிலையில்,
நம் தமிழ்த்தலைவர்கள் அனைவரும் ஒருமித்து,
எதிர்கட்சித்தலைவர், மாகாண முதலமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்,
நகர சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் என்பதான
தம் பதவிகளை ஒருமித்து ராஜினாமாச் செய்தால்,
நிச்சயம் உலகம் அதிரும்.
நடுநிலை வகிப்பதாய்க் காட்டிக்கொண்டு,
இலங்கையின் இரு அணியினரையும்,
தம் அழுத்தத்தால் அணி சேர வைத்த வல்லரசுகள்,
ஆப்பிழுத்த குரங்காய் அவதியுறும்.
இந்த விடயத்தில் உலகின் அழுத்தங்களையும் மீறி,
தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும்.
அங்ஙனம் செய்தால்,
தமிழர்களை எல்லா விடயத்திலும் கைப்பொம்மைகள் ஆக்க முடியாது,
அவர்களுக்கும் சில சுயங்கள் உண்டு எனும் உண்மையை,
உலகுக்கும் நம் அரசுக்கும் தெளிவுற உணர்த்தலாம்.
உணர்த்தவேண்டும்!

✸✸✸
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைப்பிரச்சினை,
அவர்களின் தனிவாழ்வுப் பிரச்சினை அன்றாம்.
உலகின் முன்னின்று நீதி கோரும்
தமிழர்களின் உரிமைப் பிரச்சினை அது.
உலகம் வகுத்துத் தந்த சமாதானப் பாதையில்,
முதல் தடை வந்திருக்கிறது.
இவ் அக்கினி ஆற்றை,
ஆளுமையோடு நாம் கடந்தே ஆகவேண்டும்.
வென்றால் வாழ்வோம்!
அன்றேல் தாழ்வோம்!

✸✸✸✸✸✸
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.