ஆண்டவனின் அம்மை - பகுதி 9:-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆண்டவனின் அம்மை - பகுதி 9:-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
(சென்ற வாரம்)
அன்னை பேயுருவான பேருருக்கொள்ள வானம் பூமாரி வழங்கிற்று. தேவ துந்துபி முழக்கம் திசை எட்டும் கேட்டதுவாம். அவ் அருள் நிலைகண்டு பெருமுனிவரெலாம் மகிழ்வுற்றனர்.
சிவகணங்கள் நம்முள் ஒருவர் நயப்புற வந்தார் என மகிழ்ந்து, பாட்டும் கூத்தும் கலந்த 'குணாலை'க் கூத்து ஆடின. நிகழ்ந்தது கண்ட நேச உறவினர் அஞ்சி அதிர்ந்து அகன்று போயினர். தனித்து நின்றாள் நம் தாய். ஆண்டவனைத் தேடி அவள் பயணம் தொடங்கிற்று.

உ லகம் பயனுற நம் அன்னையின் ஆன்மீகப் பயணம் தொடங்கிற்று.
பெண்மைக்கு முத்தியில்லை என்னும் பேதமையாளர் கருத்து,
உண்மைக்கு மாறானது என உலகிற்கு உணர்த்த,
அன்னை ஞானசொரூபியாய் நிமிர்ந்தாள்.
பேய்வடிவில் நின்றபடி அப் பெண்தெய்வம்,
'அற்புதத்திருவந்தாதியை' அவனிக்களித்தது.
வேதமுதல்வனின் விளங்கும் மலர்ப்பாதங்களைப் போற்றும்,
பூதகணங்களுள் தான் ஒன்றாயான செய்தியை,
அவ் அந்தாதியில் புகன்று நின்றார் நம் அன்னை.

உற்பவித்(து) எழுந்த ஞானத்தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி அப்பொழு(து) அருளிச் செய்வார்
'பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில் ஒன் றானேன் நான்' என்று நயந்து பாடி.


அன்னையின் பாடல்கள் அலைகடலாய்ப் பெருகின.
'அற்புதத்திருவந்தாதியை' அளித்த அன்னை,
அதனைத் தொடர்ந்து,
'இரட்டை மணிமாலை' அந்தாதியை இவ்வுலகுக்கீந்தார்.
வெண்பாவும் கலிப்பாவுமாய் விளங்கிய அந் நன்னூலை,
ஒண்பாவில் அமைத்து ஓங்குவித்தார் தமிழ்மொழியை.
பாடி முடிய நம் அன்னையின் உள்ளம்,
முப்புரம் எரித்த நம் முக்கணார் அமரும்,
கயிலையைக் காண விரும்பிற்று.
பயணம் தொடங்கினாள் அப்பாவை.

ஆய்ந்தசீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர வழிபடும் வழியால் வந்தார்.

ஐயனை நோக்கி அன்னை ஓடினாள்.
அன்னையின் பேயுருக்கண்டு அவனி ஓடிற்று.
பேயெனப் பேசினார்தம் வார்த்தைகளை,
அன்னை அலட்சியம் செய்தாள்.
'சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து  நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுதல் இன்றி' எனும்,
வாசகனார் உரைத்த வரிகளுக்கேற்ப,
அன்னையின் பயணம் தொடர்ந்தது.
மாக்கள் என்னை இகழின் இகழ்க!
மகேசன் என்னை மதிப்பானாகில்,
எவ்வுரு வாய்த்தால் எனக்கென் என்று?
இயம்பிச் சென்றாள் ஏந்திளை.

கண்டவர் வியப்புற்(று) அஞ்சிக் கையகன்றோடுவார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை உள்ளவா கூறக் கேட்டே
'அண்டநா யகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்களுக்(கு) யான் எவ்வுருவா(ய்) என்' என்பார்.

மங்கையின் வேகம் மனவேகத்தை முந்திற்று.
வடதிசைத் தேசங்களை வளமாய்க் கடந்தார்.
சிவனார் மேவும் சீர் ஒளி கயிலையின்,
அருகினில் சென்றாள் நம் அன்னை.
ஐயன் மேவும் அவ் அற்புத மலையில்,
பாதம் பதிப்பதா? பதறினாள் அவளும்,
அடுத்த கணமே அவள் மனம் தெளிவாய்,
நல்லதோர் முடிவினை நயமுற எடுத்தது.
ஐயன் அமர்ந்த அற்புத மலையை,
தலையால் நடந்து தாண்டிட நினைந்தாள்.
முழுமுதலாம் அம்மூலப் பொருளை,
காணத் தலையால் கயிலையில் நடந்தாள்.

வடதிசைத் தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடையவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படரொளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்தாங்குக் காலின்
கடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.

வெள்ளிமலையில் தலையால் துள்ளி நடந்தாள் அன்னை,
தலை நடை அன்னைக்குத் தரவில்லை துன்பந்தன்னை.
மகிழ்ச்சியால் அன்பு பொங்க மங்கையும் நடந்தாள்.
பிறைசூடிய பெம்மானின் ஒருபாகத்தமர்ந்த,
வில்லொத்த நுதல் கொண்ட உமையம்மையின்,
திருக்கண் நோக்கு அப்பேயுருவின்மேல் பதிந்தது.

தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கட் கண்ணிக் கண்ணுதல் ஒரு பாகத்துச்
சிலைநுதல் இமயவல்லி திருக்கண் நோக்(கு) உற்றதன்றே.

அதிசயித்தாள் அம்பிகை.
எம்பெருமான், அம்பிகையின் தம்பெருமான் அன்றோ!
அவ் உரிமையில் ஐயனை நோக்கிய அன்னை,
மலையினில் தலையினால் நடந்துவரும்,
என்புருக்கொண்ட இவள் அன்பின் பெருமை என்னே!
வியப்பொடு சிவனாரை வினவுகிறாள்.
கேட்ட நாயகிக்குப் பதில் கிளறுகிறார் நம் சிவனார்.

அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்(து) அருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித் 'தலையினால் நடந்(து)  இங்கேறும்
எம்பெருமான்  ஓர் என்பின் யாக்கை அன்பென்னே!' என்ன
நம்பெரு மாட்டிக்(கு) அங்கு நாயகன் அருளிச் செய்வான்.

சிவனாரின் சிந்தையில் ஓர் கவலையாம்.
அன்னையாய் அனைத்துயிர்களுக்கும் அன்பு செய்யும் அவனுக்கு,
தோற்றமில்லாக் காரணத்தால் தாயென்னும் துணையில்லையாம்.
தாயில்லாப் பிள்ளையாய் தனித்து நின்ற ஐயன்,
அம்பிகை கேட்டதும் ஆனந்தித்துப் பதிலுரைக்கிறான்.
இப்பேயுரு என்னைப் பேணும் அன்னைகாண்.
ஐயனின் பதிலில் அன்னையைக் கண்ட அன்பு பொங்குகிறது.
அருகில் வந்த நம் அன்னையை நோக்கி,
'அம்மையே' எனச்செம்மையாய் அழைத்தான் சிவன்.
அவ் ஒப்பற்ற மொழி கேட்டு உலகம் உய்ந்தது.

'வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே! மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்' என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி 'அம்மையே!' என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.

ஐயன் 'அம்மையே' என்றழைக்க,
அம்மை 'அப்பா' என்றழைத்தாள்.
சிவனாரின் செம்பொற் கமலத் திருவடிகளில்,
வீழ்ந்தெழுந்தாள் நம் அன்னை.
ஐயன் நெஞ்சில் அருள் பொங்கிற்று.
தாயை நோக்கித் தனையன் பேசுகிறான்.
'யாது வேண்டும் உனக்கு? இயம்பு' என்கிறான் அவன்.

அங்கனன் 'அம்மையே!' என் றருள்செய 'அப்பா!' என்று
பங்கயச் செம்பொற் பாதம் பணிந்து வீழ்ந்(து) எழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையினாரும் தாமெதிர் நோக்கி 'நம்பால்
இங்குவேண்டுவதென்?' என்ன இறைஞ்சிநின்று இயம்புகின்றார்.

பிள்ளை கேட்க அன்னையின் பேதை நெஞ்சில்,
மேலும் அன்பு பெருகிற்று.
'இறவாத இன்ப அன்பு வேண்டினள் அவள்,
பின்னர் பிறவாமை வேண்டினாள்,
மீண்டும்  பிறப்பு இருப்பின் உன்னை மறவாமை வேண்டும்' என்றாள்,
தாயல்லவா அவள் தன் ஆசை தொடர்கிறது.
'நான் இருந்து பாட நீ நின்று ஆடும் பேறு வேண்டும்' என்கிறாள் அப்பேதை.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
'பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க' என்றார்.

ஐயனின் அகமும் உருகிற்று.
'அன்னையே ஆலங்காட்டில் என் ஆடல் காண்பாய்,
எப்போதும் கூடி நின்று நம்மைப் பாடி மகிழ்வாய்'
செம்பொருளாம் சிவனார் வரம் தர,
மகிழ்ந்த நம் அன்னை,
தலையால் நடந்தே அத்தலத்தினைச் சேர்ந்தாள்.

கூடுமா றருள்கொ டுத்துக் 'குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்டு ஆனந்தம் சேர்ந்(து) எப்போதும்
பாடுவாய் நம்மை' என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

ஆலங்காட்டில் ஐயனின் ஆடற்காட்சி கண்டு,
அகமகிழ்ந்தாள் அன்னை.
அங்கு 'மூத்ததிருப்பதிகத்தைப்' பாடி மகிழ்ந்தாள் அவள்.
பதிகம் பாடும் முறையினை நம் தமிழுக்கு உவந்து ஈந்தாள்.
அன்னையின் பதிகங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்தன.
அன்னை பாட ஐயன் ஆட,
அவன் அடியின் கீழ் இருக்கும் பேறு பெற்றாள் நம் அன்னை.

ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்(து) ஆடுகின்ற
கோலங்காண் பொழுது 'கொங்கை திரங்கி' என்றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி 
ஞாலங்காதலித்துப் போற்றும் நடம்போற்றி நண்ணு நாளில்.

காதை பாடிய தெய்வச்சேக்கிழார்தம் கண்கள் கசிகின்றன.
ஆதியும் அந்தமும் இல்லா நம் ஐயன் ஆடும்போது,
கீதம்பாடி அவன் முன் அமர்ந்த அன்னையை நினைந்து,
கிளர்ச்சியுறுகிறார் சேக்கிழார் பெருமான்.
அடியார் அறுபத்துமூவருள்,
அன்னை என்னும் உரிமையினால் ஐயன் முன் அமரும் தகுதிபெற்ற,
பேயுருக்கொண்ட அப்பெண்தனைப் பாடி,
அவள்தன் மலர்த்தாள் போற்றி மகிழ்ந்து,
காதையை நிறைவு செய்கிறார் அக் கடவுட்புலவர்.

ஆதியோ(டு) அந்தமில்லான் அருள்நடம் ஆடும்போது
கீதம் முன்பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றி

                                                                                  (அன்னையின் அருட்காதை நிறைவுற்றது)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.