இரு கோட்டுத் தத்துவம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

இரு கோட்டுத் தத்துவம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

ர் இரண்டுபட்டது வடக்கில்,
இப்போது நாடும் இரண்டுபட்டுக் கிடக்கிறது.
இத்தகு கோளாறுகளால் இலங்கையைப் பொறுத்தளவில்,
உலகும் இரண்டுபடும் போலிருக்கிறது.
எல்லாம் அரசியல் கூத்தாடிகள் செய்யும் கோளாறு.
அரசியல்வாதிகள் செய்யும் வஞ்சகங்களிற்கு,
'இராஜதந்திரம்" என்ற பெயரில் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,
தன்னைச் சார்ந்த இனக்குழுமத்திற்கு நன்மை ஏற்படும் வகையில்,
சுயநலமின்றி தீர்க்கதரிசனத்தோடு செயற்படுவதே,
உண்மை இராஜதந்திரமாம்.
இன்றோ நாடு பற்றிய கவலையின்றியும், மக்கள் பற்றிய கவலையின்றியும்,
அரசியல்வாதிகள் தத்தம் சுயநலத்திற்காய்ச் செய்யும்,
அடாவடித்தனங்களுக்கெல்லாம்,
இராஜதந்திரம் என்ற பெயரைச் சூட்டி விடுகிறார்கள்.
இத்தகைய இழிசெயல்கள்,
இலங்கை போன்ற சிறுநாடுகளில் தொடங்கி,
வல்லரசுகள் வரை நடக்கத் தொடங்கிவிட்டன.
கலி முற்றத் தொடங்கிவிட்டது.
சுயநலத் தலைவர்களால் வெகுசீக்கிரத்தில்,
உலகம் மூன்றாம் உலக யுத்தத்தைச் சந்தித்தாலும்,
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
✜ ✜ ✜
 
 
இராஜதந்திரத்தின் பெயரிலான இத்தகு சுயநலக் கூத்தொன்றை,
சென்ற வாரத்தின் ஆரம்பத்தில் மு.முதலமைச்சர் வடக்கில் அரங்கேற்றினார்.
தமிழினத்தை பிளவுறச் செய்யும் அவரது செயற்பாடுகளால்,
தமிழின உண்மை அனுதாபிகள் மனங் கொதித்துப் போய் இருக்கின்றனர்.
வெற்று வாய்ச்சவடாலுடன் கூடிய,
மு.முதலமைச்சரின் புதிய கட்சி அங்குரார்ப்பணம் உண்டாக்கிய அதிர்வலைகளை,
நாட்டின் மேதகு ஜனாதிபதி தொடக்கி வைத்த,
புதிய அரசியல் கூத்து விழுங்கிவிட்டது.
✜ ✜ ✜
 

 

ஜனநாயக முறைமைக்கு மாறாக,
பாராளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளாமலே,
ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்கப் போக,
இலங்கையின் உண்மைப் பிரதமர் யார் என்று தெரியாமல்,
இன்று ஒட்டுமொத்த நாடும் பிளவுபட்டுக்கிடக்கிறது.
குழப்பநிலையின் உச்சத்தில் மக்கள். 
பிரதமர்களின் சார்புபட்டு மக்கள் பிரிந்ததோடல்லாமல்,
மூக்கு நுனிவரை கடலில் மூழ்கிவிட்ட,
நாட்டைக் காக்க உதவக்கூடிய,
உலகநாடுகளும் அணிபிரிந்து அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருக்கின்றன.
இது நாட்டின் வளர்ச்சிக்கான நற்சகுனமாய்ப்படவில்லை.
✜ ✜ ✜
 
புதிய பிரதமரை நியமிக்க,
ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், இருக்கிறது என்றும்,
தர்க்கங்கள் ஒரு பக்கம் நடக்க, 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிங்களப் பிரதியில்,
அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று,
வேறொருசிலர் வாதிடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இலங்கை ஜனநாயகத்தின் விசித்திரத்தன்மை,
உலகுக்குப் புலனாகத் தொடங்கியிருக்கிறது.
ஒரே நாட்டிற்கு வேவ்வேறு மொழியில் வேவ்வேறு விதமான
அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் ஆச்சரியத்தையும்,
அவ் அசிங்கத்தைத் துணிந்து பேசும் அரசியலாளரின் அடாவடித்தனத்தையும்,
உலக அரசியல் அவதானிகள் அருவருப்போடு பார்க்கிறார்கள்.
✜ ✜ ✜
 
கீறப்பட்ட ஒரு கோட்டில் கைவைக்காமலே,
அதனைச் சிறிதாக்குவது எப்படி?
அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடொன்றை வரைந்துவிட்டால்,
முதற்கோடு தானாகச் சிறிதாகி விடுமாம்.
இது பலராலும் முன்னர் சொல்லப்பட்ட செய்திதான்.
இருகோடுகள் என்ற பெயரில்,
இயக்குநர் பாலச்சந்தர் எடுத்த சினிமாவை,
யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
அந்த இருகோட்டுத் தத்துவம் தான் இங்கு இன்று நடக்கிறது.
✜ ✜ ✜
 
ஜனாதிபதி நாடளவில் இட்ட பெரிய கோட்டுக்கு முன்னால்,
மு.முதலமைச்சர் வடக்கில் இட்ட கோடு,
கவனிப்பாரின்றிச் சிறிதாகிப் போய்விட்டது.
பரபரப்புக்காய் பேசியும் செயல்பட்டும் வரும் மு.முதலமைச்சருக்கும்,
அவருக்குச் 'செடில்" பிடித்துவரும் தமிழ்மக்கள் பேரவைக்கும்,
அவர்கள் எதிர்பார்த்த ஆரவாரம் நிகழாமல் அடங்கிப் போனதில்,
சற்று மனவருத்தமாய்த்தான் இருக்கும்.
அரசியலில் நேரடியாய் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்து,
சில காலம்கூட ஆகாத நிலையில்,
தமிழ்மக்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக்கி,
மு. முதலமைச்சர் புதியகட்சி தொடங்கிய மேடையில்,
அவரோடு உடன் நின்று பேசி உசுப்பேத்திய,
தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள்,
தாம் பொய்யர்களாய் இருந்துகொண்டு,
மற்றைத் தலைவர்களைப் பொய்யர்களாய் ஆக்க முயல்வதே வேடிக்கை!
அவர்களை நம்பி இன்னும் ஒரு கூட்டம் இருப்பது அதைவிட வேடிக்கை!
✜ ✜ ✜
 
சுரேஷ் பிரேமச்சந்திரனை வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் கஜேந்திரகுமார் ஒரு பக்கம்.
அவரை உள்வாங்கியே தீர்வது என்று பிடிவாதம் பிடிக்கும் மு.முதலமைச்சர் மறுபக்கமுமாக,
புதிய கட்சி ஆரம்பித்தவுடனேயே குழப்பம் தொடங்கிவிட்டது.
எவரை எங்ஙனம் கையாள்வது என்று தெரியாமல்,
தத்தளிக்கிறார் மு.முதலமைச்சர்.
ஜனாதிபதி உண்டாக்கிக் கொடுத்த நாடளவிலான பரபரப்பால் வந்த இடைவெளி,
முடிவுகாண முடியாத மு.முதலமைச்சருக்குச் சற்று ஆறுதலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
மூன்று கட்சிகளை ஒன்றிணைக்கும் நிலையிலேயே,
வந்திருக்கும் முட்டுப்பாடுகளால் முக்கி முனங்கும் மு.முதலமைச்சருக்கு,
ஒன்றோடு ஒன்று மாறுபட்ட ஆறு கட்சிகளை ஒன்றாய் ஒருகுடைக்கீழ் வைத்திருக்க,
சம்பந்தனார் பட்ட சங்கடம் இப்போது புரிந்திருக்கும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்று வள்ளுப் பாட்டன் சும்மாவா சொன்னான்?
மு.முதலமைச்சர் பேசி வரும் வாயளவிலான இலட்சியங்கள்,
எதிர்காலத்தில் அடையப்போகும் இழி நிலைக்கு,
ஒற்றுமை விடயத்தில் இப்போது நடந்திருப்பதை,
ஒரு முன்னோட்டமாகவே கொள்ளலாம்.
✜ ✜ ✜
 
மேற் சொன்னவை ஊர்க்கூத்துக்கள்.
இன்று அந்த ஊர்க்கூத்துக்களை நாட்டின் கூத்துக்கள் விழுங்கிவிட்டன.
சோதிடர்களின் ஆலோசனைப்படி, பாராளுமன்றைக் கலைத்து,
புதிய தேர்தலை நடாத்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆயத்தம் செய்ய,
2015 இல், பெரிய புரட்சி செய்யுமாப்போல்,
யாரும் எதிர்பாராதவண்ணம்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து,
ஐக்கியதேசியக் கட்சியோடு கைகோர்த்து தேர்தலில் வெற்றிபெற்றார் மைத்திரி.
அன்று புரட்சி என்ற பெயரில் அங்கிருந்து இங்கு எப்படி வந்தாரோ,
அதுபோலவே, யாரும் எதிர்பாராத வண்ணம்,
இன்று இங்கிருந்து அங்கு போய் மீள்புரட்சி செய்திருக்கிறார் அவர்.
✜ ✜ ✜
 
மஹிந்தவோடு முரண்பட்டு வெளிவந்த போது,
பகிரங்கமாய்ப் பேசிய ஜனாதிபதி,
'தேர்தலில் தோற்றிருந்தால் நான் உயிரோடிருந்திருக்கமாட்டேன்.
என்னைப் புதைகுழிக்குள் அனுப்பியிருப்பார்கள்" என்றவர்.
இன்று,
'இவர்கள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்" என்ற ஒப்பாரியோடு,
மீண்டும் இந்த அரசை வீழ்த்தியிருக்கிறார்.
அவர் இந்த அரசை வீழ்த்தி வெளிவந்ததைக் கண்டல்ல,
முன்பு தான் கொலைப்பழி சுமத்திய,
அதே அணியுடன் இணைந்ததைக் கண்டுதான்,
பலரும் வியக்கிறார்கள்.
✜ ✜ ✜
 
ஜனாதிபதியின் கூற்றில் 
எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்ற குழப்பத்தில் நாட்டு மக்கள்.
இவரைக் கொன்றால்த்தான் நமக்கு வாழ்வு என்று எதிராளிகளை நினைக்கச் செய்வது,
மைத்திரியின் அரசியலின் வலிமையா? அடிமட்ட வஞ்சனையா?
அரசியல் வலிமையில் அவரது நிலைப்பாடு பகிரங்கமானது.
இந்நிலையில் 'என்னைக் கொல்லப்பார்க்கிறார்கள்" என்று,
திரும்பத்திரும்ப அவர் ஓலமிடுவது,
நாட்டுமக்கள் மத்தியில் அனுதாபத்திற்குப் பதிலாக நகைப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
'புலி வருகிறது, புலி வருகிறது" என்று தினம் தினம் ஊர்மக்களை ஒருவன் ஏமாற்றிவந்தானாம்.
ஒருநாள் உண்மையாகவே புலி அடித்த போது,
யாரும் அவனைக் கவனிக்காமல் இருந்ததாய் ஒரு கதை சொல்வார்கள்.
அக்கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இங்கு நான் சொல்வது உண்மைக் காட்டுப் புலியைப் பற்றிய கதையேயாம்.
✜ ✜ ✜
 
ஊரில் மு.முதலமைச்சர் செய்த புரட்சியும்,
நாட்டில் ஜனாதிபதி செய்திருக்கும் புரட்சியும்,
மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
அக்கேள்விகள் கவனிக்கப்படவேண்டியவை.
பதில் சொல்லும் கடமையோடு,
மு,முதலமைச்சர்,
கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனார்,
நாட்டின் மேதகு ஜனாதிபதி,
யார் உண்மைப் பிரதமர்? யார் போலிப் பிரதமர் என்று,
இன்றுவரை உறுதியாய்த் தெரியாத இரு பிரதமர்கள் எனும்,
ஐவரும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
✜ ✜ ✜
 
இலங்கையை ஜனநாயக நாடாய்ச் சொல்கிறார்கள்.
ஒரு உண்மை ஜனநாயக நாட்டின் தலைவர்கள் மக்களேயாம்.
அவர்களால் அனுப்பப்படும் பிரதிநிதிகளாகத்தான்,
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், மு.முதலமைச்சர் போன்ற,
அனைவரும் இருக்கிறார்கள்.
ஆகவே அவர்களைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
அந்த உரிமைபற்றி இவ் ஐவரிடமும்,
மக்கள் சார்பாக சில கேள்விகளைக் கேட்கப்போகிறேன்.
அக்கேள்விகள் தலைவர்களை விழிக்கச்செய்வதோடு,
மக்களையும் விழிக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.
என்ன கேள்விகள் என்கிறீர்களா?
அவை அடுத்தவாரத்தில்!
அடுத்த வாரத்தில் பாராளுமன்று கூடுவதாய்ச் சொல்கிறார்களே,
அங்கு என்னென்ன நடக்கப்போகிறதோ?
யாரறிவார்?
அதற்கு முன் உங்கள் கேள்விகள் வெளிவருமா?
உங்கள் ஆர்வம் புரிகிறது.
முடிந்தால்,
திங்களன்று சந்திக்க முயல்கிறேன்.
எதற்கும் பொறுத்திருங்கள்!
✜ ✜ ✜
 

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.