உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 05 | பேசிய பெண் யார்?

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 05 | பேசிய பெண் யார்?
நூல்கள் 10 Jun 2016
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
 
முதலாவது கம்பன் விழா 

இவ்விழா
1980 ஜுன் 20 ஆம் திகதி நடைபெற்றது.
இம் முதல் விழாவுக்கு எங்கள் இந்துக் கல்லூரியின்
முன்னை நாள் அதிபர்ச பாலிங்கத்தைத் தலைவராய் அழைத்திருந்தோம்.
அப்போதைய யாழ். மேயர் விஸ்வநாதன் சிறப்பதிதியாய் வந்திருந்தார்.
தன் தனிப்போக்கால் பெயர் பெற்றிருந்த
வக்கீல் இராஜ ராஜேஸ்வரன் தங்கராஜா வாழ்த்துரை வழங்க வந்திருந்தார்.
ஐந்து மணிக்குத் தொடங்க இருந்த விழா,
கூட்டம் வராததால் ஆறரை மணிக்குத் தொடங்கியது.
 

சம்பிரதாய நிகழ்ச்சிகளின் பின்,
ஒரு கவியரங்கமும், பட்டிமண்டபமும் அமைத்திருந்தோம்.
வித்துவான் ஆறுமுகம் தலைமை தாங்க,
அருட்கவி விநாசித்தம்பி, வீரமணி ஐயர்,
காரை சுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை ஆகியோரோடு,
எங்களுடன் படித்த நாயன்மார்கட்டு சிவகுமாரன்,
அவனது நண்பனான சற்குணநாதன் ஆகியோரும்,
கவியரங்கில் கலந்துகொண்டனர்.
கூட்டம் குறைவானாலும் வெற்றியாய் அமைந்த கவியரங்கம் அது.
கவியரங்கத்தின் பின், பட்டிமண்டபம் நடைபெற்றது.
சிவராமலிங்கம் மாஸ்டர், சொக்கன், நா. சுப்பிரமணிய ஐயர்,
அ. சண்முகதாஸ், அ.குமரன்,
பெ.வரதராஜப் பெருமாள் (பின்னாளில் வடகிழக்கு முதலமைச்சராய் இருந்தவர்),
திருமதி சண்முகதாஸ், அம்மன்கிளி, மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்,
ஆகியோரோடு நானும் பட்டிமண்டபத்தில் கலந்துகொண்டேன்.
வித்துவான் வேலன் நடுவராக இருந்தார்.
பட்டிமண்டபமும் வெற்றியாய் அமைந்தது.
நான் பேசி இறங்கியதும்,
அப்போது யாழில் பிரபலமாக இருந்த இசைஅறிஞர்,
பரம் தில்லைராஜா ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்தார்.
நீ பெரியாளாய் வருவாயடா” என்று வாழ்த்தினார், மகிழ்ந்தேன்.
முதல் விழாவிலேயே சற்றுத் துடுக்குத்தனமாய்ப் பேசி,
ஆசிரியர் சொக்கனின் பகையைச் சம்பாதித்தேன்.


பேசிய பெண் யார்?
அதிர்ச்சி தந்த ஆதீனத்தின் கேள்வி

என்னை உற்சாகப்படுத்திய ஒரு சுவாரஸ்யமான சம்பவம்
அவ்விழாவில் நடந்தது.
கதாப்பிரசங்கத்திற்காக வெளியே சென்றிருந்த ஆதீனக் குருமுதல்வர்,
இரவு திரும்பி வந்ததும்,
எங்கள் பட்டிமண்டபத்தை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறார்.
அடுத்தநாள் நான் அவரைச் சந்தித்தபோது,
பட்டிமண்டபத்தில் இந்தியத் தரத்தில் ஒரு பெண்மணி பேசியிருக்கிறாரே,
அது யார்?” எனக் கேட்டார்.
அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குப் புரியவில்லை.
ஒலிநாடாவை அவர் போட்டுக்காட்டிய பின்புதான்,
அவர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் எனும் உண்மை தெரிந்தது.
தொடர்ந்து விழாக்களை நடாத்தவேண்டும் எனும்,
உற்சாகத்தைத் தந்த சம்பவம் அது.
அந்த விழாத் தந்த வெற்றியால்,
மாதம் ஒரு கம்பன் விழா நடத்துவது என முடிவு செய்தோம்.



முதலில் கம்பனைப் படியுங்கோ!
திட்டு வாங்கினோம்

அந்த முதல் விழாக் கவியரங்கத்திற்கு,
வித்துவான் ஆறுமுகத்தைத் தலைமைதாங்கக் கேட்டபோது,
நாங்கள் வாங்கிய திட்டு இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
ஒரு நாள் அவரை வீதியில் சந்தித்து,
சேர்! நீங்கள் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கவேணும்” என்றதும்,
முறைப்பாக, “என்ன கவியரங்கம்?” என்றார்.
ஒரு கம்பன் கழகம் தொடங்கியிருக்கிறம் சேர்,
அதற்கு ஓர் அறிமுகவிழா. அதிலேதான் கவியரங்கம்” என்றோம்.
கம்பன்கழகமா, யார் தலைவர்?” என்று கேட்டார்.
திருநந்தகுமார்தான் தலைவர்” என்றதும்,
அவனை நோக்கி,
உனக்கு எத்தனை கம்பராமாயணப் பாட்டுப் பாடம்?” என்றார்.
அவன் மௌனமாய் நிற்க,
முதலில இராமாயணத்தைப் படியுங்கோ, பிறகு கழகம் நடத்தலாம்” என்றார்.
பிறகு, ஏதேதோ சொல்லிக் கெஞ்சி,
அவரைக் கவியரங்கத் தலைவராக்கினோம்.



கம்பன் கழகத்தின் முதல் அலுவலகம்

எங்கள் கழகத்தின் முதல் அலுவலகம்,
எங்கள் செயலாளர் குமாரதாசனின் வீட்டிலேயே அமைந்திருந்தது.
135, வாசிகசாலை வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம் எனும்,
முகவரியில் அமைந்திருந்த அவன் வீட்டின் முன்னறை,
எங்கள் முதல் அலுவலகமானது.
இங்குதான் என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன்,
தன் முதற் பயணத்தின்போது வந்து தங்கியிருந்தார்.
எங்கள் கழகத்தின் முதல் ஆண்டுக் கூட்டமும் இங்குதான் நடந்தது.



பண்டிதர் கந்தையா குடும்பம்

கம்பன் கழகம் ஆயுள் முழுவதும் போற்ற வேண்டிய இரு பெருமக்கள்,
குமாரதாசனின் தந்தை, தாயாரான,
திரு. கந்தையா அவர்களும் ஸ்ரீபத்மா அவர்களும் ஆவர்.
திரு. கந்தையா அவர்கள் ஒரு பண்டிதர்.
தமிழ்மேல் விருப்பம் கொண்டவர்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் மாணாக்கர்.
அவர் சொந்த ஊர் நெடுந்தீவு.
குமாரதாசனின் தாயாரும் அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
அவரும் இனிய சுபாவம் மிகுந்தவர்.
அவர்களுக்கு, குமாரதாசன் மூத்த ஆண்பிள்ளை.
பெற்றோர் குமாரதாசனில் அளவற்ற அன்பு வைத்திருந்தனர்.
மூத்தபிள்ளையான குமாரதாசனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக,
கம்பன் கழகத்தையும், என்னையும்,
பலகாலம் தங்கள் வீட்டிலேயே வைத்து வளர்த்தார்கள்.
குமாரதாசனின் பெற்றோர்களுக்கு, கம்பன் கழகத்தின் பெயரால்,
நான் கொடுத்த தொல்லைகள் ஏராளம்.
அத்தனையையும் சகித்து நாங்கள் வளரத்துணை செய்தார்கள்.
தங்கள் மூத்தபிள்ளையின் கல்வி, எதிர்காலம் எல்லாம்,
கழகத்தின் பெயரால் பாழாவதைப் பார்த்து உள்ளுக்குள் கொதித்தும்,
என்னை அவமரியாதை செய்யாமல் சகித்தார்கள்.
குமாரதாசனின் எதிர்காலம் கருதி அவர்கள் பின்னாளில் முரண்பட,
நான் வாடகைக்கு இடமெடுத்துத் தனியே சென்றேன்.
குமாரதாசனும் பெற்றோருடன் முரண்பட்டு,
என்னுடனேயே வந்து சிலகாலம் தங்கினான்.
அதையும் அப்பெரிய மனிதர்கள் தாங்கிக் கொண்டனர்.
அதையெல்லாம் இன்று நினைக்க,
நெஞ்சம் எல்லையில்லா வருத்தமடைகிறது.
பின்னாளில் மிகப்பெருந் தன்மையோடு பழையவற்றை மறந்து,
அவர்கள் என் தங்கைக்குக் குமாரதாசனை,
எந்தவிதச் சீதனமும் எதிர்பாராமல்,
திருமணம் செய்து வைத்தனர்.
இன்று அப்பெரியார்கள் உயிருடன் இல்லை.
காலங்கடந்து திரும்பிப்பார்க்க,
அவர்கள் பெருந்தன்மை என்மனதில் வானளாவி விரிகிறது.
அவர்களுக்கான கடனை,
இன்னும் எத்தனை பிறவியில் தீர்க்கப்போகிறேனோ?



திருகோணமலைக் கம்பன் கழக அங்குரார்ப்பணம்
(31.08.1980)
வித்தியாதரன்

இக்கழகம் 1980 ஓகஸ்ட் 31 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்துக் கல்லூரியில் எங்களுடன் படித்த வித்தியாதரன்,
பின்னாளில் கழக முயற்சிகளில் எங்களோடு இணைந்தான்.
அக்காலத்தில் யாழில் மிகப் புகழ்பெற்றிருந்த,
‘ஃபுட்போல்’ விளையாட்டு வீரன் இவன்.
கல்லூரியை விட்டதும் சிந்தாமணிப் பத்திரிகையில்,
புகழ்பெற்ற எஸ்.ரி. சிவநாயகம் ஆசிரியரின் கீழ் இவன் பணிபுரிந்தான்.
எந்தவொரு காரியத்தை எடுத்தாலும் அந்தக் காரியத்தின் வெற்றிக்காக,
தன்னை முழுதாய்த் தியாகம் செய்து பாடுபடுபவன் இவன்.
தன் விருப்பத்தை உலகத்தின் விருப்பமாக்கும் வித்தை தெரிந்தவன்.
எங்கள் கம்பன் கழகம் ஓரளவு செயற்படத் தொடங்கியிருந்தபோது,
அவனுடனான நெருக்கம் அதிகரித்தது.
அவன் பெற்றோர்கள் திருமலையில் இருந்தனர்.
அங்கு ஒரு கம்பன் கழகத்தை அங்குரார்ப்பணம் செய்ய முடிவு செய்து,
எங்களை இவன் அணுகினான்.
அப்போது திருமலையில் புகழ் பெற்றிருந்த தமிழறிஞர்,
பெ.போ. சிவசேகரம் அவர்களைத் தலைவராகவும்,
திரு. ஜெயச்சந்திரன் அவர்களைச் செயலாளராகவும்,
வித்தியாதரனை அமைப்பாளராகவும் கொண்டு,
அக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்தேர்வுகள் எல்லாம் அவனின் முடிவுகளே.
இப்போது சிவசேகரம் அவர்கள் மறைந்துவிட்டார்.
ஜெயச்சந்திரன் கனடாவுக்குக் குடிபெயர்ந்து விட்டார்.
வித்தியாதரன் பிரபலமான பத்திரிகையாளனாக,
உதயன், சுடரொளி பத்திரிகைகளில் ஆசிரியனாயிருந்து,
உயிர் போய்விடும் அளவிற்கு, போராட்டக்காலத்தில் பணியாற்றினான்.
இந்தியப் பத்திரிகைகளும் இவன் எழுத்துக்களை விரும்பிப் பிரசுரித்தன.
இவனது தமையனது திருமணத்திற்கு,
எங்கள் கழகத்தின் மூன்றாவது அலுவலகம்தான் பெண்வீடாய் இருந்தது.
நான் கந்தர்மடத்தில் வாடகை அறையில்,
கழக அலுவலகத்தை அமைத்திருந்தபோது,
இவனது தம்பிமார் சிலகாலம் என்னோடு தங்கியிருந்து கல்வி கற்றனர்.
அந்தளவுக்கு இவனது குடும்பம் எங்களோடு நெருங்கியிருந்தது.
இவனது ஒரே தங்கையைத் திருமணம் செய்த,
இவனது மைத்துனரான உதயன் பத்திரிகை நிறுவுநர் சரவணபவன்,
பின்னாளில் எங்கள் கழகத்திற்குப் பெரியதுணை செய்தார்.
உதயன் பத்திரிகை ஆரம்பித்த பின்பு,
இவனது கழகச்செயற்பாடுகள் குன்றிப்போயின.
1995 இடப்பெயர்வின் பின்,
சரவணபவன், எம்மோடு  முரண்பட்டதால்,
சிலகாலம் வித்தியாதரனும் பகையின்றி எமைவிட்டு விலகி இருந்தான்.
போர் முடிந்ததும் கூட்டமைப்பில் இணைந்து,
பாராளுமன்ற உறுப்பினராய் சரவணபவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் அரசியலில் நுழைய விரும்பாத வித்தியாதரன்,
பின்னர் அரசியலில் நுழைய ஆர்வப்பட்டான்.
ஆனால் அவன் முயற்சிகள் கைகூடவில்லை.
பின்னாளில் கழகப்பணிகளில் இணையாவிட்டாலும்,
இன்றும் எங்களுடனான அவனது நட்பு இனிமையாய்த் தொடர்கிறது.



இரண்டாவது கம்பன் விழா
(14.09.1980)

இந்த விழா 1980 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 14 ஆம் திகதி,
நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
மாதாந்தம் விழா நடாத்துவதென முடிவுசெய்து முயன்றபோதும்,
நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை.
பெரு முயற்சியின் பின்னர்தான் இவ் இரண்டாவது விழா அரங்கேறியது.
சுருவில் வர்த்தகர் திலகா ஸ்ரோர்ஸ் கந்தையா அவர்கள் பொருளுதவி செய்தார்.
விழாவிற்காக ஆயிரம் ரூபாவினை அவர் தந்தார்.
இவ்விழாவில், யாழ்ப்பாணத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த,
ஆசிரியர் தேவன் அவர்களுக்கு,
சொல்லின் செல்வர்” எனப் பட்டமளித்துப் பாராட்டினோம்.
இவ்விழாவுக்கு யாழ். இந்துக்கல்லூரியின் அப்போதையை அதிபர்,
பொ.ச.குமாரசாமி தலைமை தாங்கினார்.
நல்லை ஆதீனத்தின் இப்போதைய குருமுதல்வர்,
(அப்போது தம்பிரான்) கலந்துகொண்டார்.
ஆதீனப் பண்ணிசைப் புலவர் கணேசசுந்தரத்தின்,
திருமுறை ஓதலுடன் விழா ஆரம்பமாகியது.
தேவன் அப்பொழுது சுகவீனமுற்றிருந்தார்.
யாழ் இந்துக்கல்லூரி உயர்தர ஒன்றிய வழக்காடு மன்றத்தில்,
அவரை நான் தோற்கடித்த பின்பு,
சிலகாலம் என்மேல் அவரும் வெறுப்பாய் இருந்தார்.
இந்த விழாத்தான்,
அவர் அன்பை எனக்கு மீண்டும் ஆக்கித் தந்தது.
குடிப்பழக்கத்தால் நோயுற்றிருந்த அவரைப் பாராட்டிப் பேசியபோது,
தேவன் எங்களுக்குத் தேவை,
தேவனைத் தேவனாக விடமாட்டோம்” எனப் பேசினேன்.
விழா முடிந்த அடுத்தநாளே,
நோய் கடுமையாகி வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார்.
பின் நலமுற்று வெளிவந்தார்.
இவ்விழாவில்,
புதியவர்களாய், பிரம்மஸ்ரீ சாம்பசிவக் குருக்கள்,
திருமலை பெ.பொ.சிவசேகரம், திருமதி ஞா.குலேந்திரன்,
கவிஞர் அரியாலை ஐயாத்துரை, திருமலை ஜெயச்சந்திரன்,
திருமதி வசந்தா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டிமண்டபம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தேவனுக்கிருந்த புகழால் இவ்விழாவுக்கு ஓரளவு கூட்டம் கூடியது.



ஆரம்பகாலத் தொண்டர்கள்

கழக முயற்சிகளில் காலத்திற்குக் காலம் பல இளைஞர்கள்,
தன்னலமற்று, தொண்டர்களாய்ப் பணி செய்தனர்.
அவர்களிற் சிலர் எங்கள் நட்புக்காக மட்டும் இணைந்தவர்கள்.
வேறுசிலர் விழாச் சந்தோஷத்திற்காக இணைந்தவர்கள்.
ஒருசிலர் உண்மைத் தொண்டர்களாய்க் கழகத்திற்காகக் பாடுபட்டனர்.
அத்தகையோரில்,
ஆரம்பகாலத் தொண்டர்களாய் மனதில் பதிவானவர்கள் அறுவர்.
அவர்கள் பற்றிச் சில சொல்கிறேன்.



கிரிதரன்

முதலாமவன் கிரி என்று எங்களால் அழைக்கப்பட்ட கிரிதரன்.
இவன் படித்தது யாழ். மத்திய கல்லூரியில்.
பின்னாளில் எப்படியோ எங்களுக்கு நண்பனானான்.
எனக்குத் தூரத்து உறவினன்.
நட்பின் பின்னர்தான் அவ்வுறவு தெரியவந்தது.
இளைஞர்களுக்கே உரியதான பலவீனங்கள் நிரம்பியவன்.
ஆனாலும் தமிழை நன்கு விரும்பினான்.
புல்லாங்குழல் பழகியிருந்தான்.
எங்களது ஆரம்பகால முயற்சிகளில்,
இவன் பங்களிப்பு மறக்கமுடியாதது.
என்னுடனும் குமாரதாசனுடனும் பலகாலம் உடன் நின்று பணியாற்றியவன்.
பேராசிரியர் இராதாகிருஷ்ணனின் வருகையின் போதெல்லாம்,
உயிர்கொடுத்து உழைத்தான்.
வசதியில்லாத காலத்தில் இவன்தான்,
எங்கள் கழகத்தின் முதல் ‘ஃபோட்டோ கிராபர்’.
எங்கள் விழாவிலேதான் அக்கலையை அவன் பழகினான்.
அதனால் எங்களின் பல விழாப் படங்கள் இல்லாது போயின.
எந்த நேரமும் சிரித்துப் பழகுபவன்.
இன்று அமெரிக்காவில் விரிவுரையாளனாய் இருக்கிறான்.
இன்றும் அதே உரிமையும், நட்பும் தொடர்கின்றன.
கழக முயற்சிகளில் இவனது பங்களிப்பு,
இன்று பெரும்பாலும் இல்லை எனலாம்.



ரி.எஸ். சிவகுமாரன்

அடுத்தவன் நாயன்மார்க்கட்டு சிவகுமாரன்.
உணர்ச்சிகளின் மொத்த வடிவம்.
இந்துக் கல்லூரியில் எங்களோடு படித்தவன்.
எல்லா முயற்சிகளிலும் எங்களோடு உடன் நின்றவன்.
ஊர் இளைஞர்களுக்கு இவன் ஒரு முன்னோடி.
இவன் என்மேல் வைத்திருந்த அன்பும் மதிப்பும் கண்டு,
அவ்வூர் இளைஞர்களும் என்மேல் மதிப்புக்கொண்டனர்.
அவர்களில் பலர் பின்னாளில் போராளிகளாய் மாறினர்.
என்னோடு தொடர்புகொண்ட அவனது நண்பர்களில்,
இருவர் முக்கியமானவர்கள்.
ஒருவன் மனோகர், மற்றவன் சற்குணநாதன்.
எங்கள் ஆரம்பகால விழாக்களில்,
சிவகுமாரன் கவியரங்கங்களில் பாடினான்.
நாயன்மார்கட்டில் இருந்த இவனது வீடு,
எங்கள் சந்திப்புக் களமாய் இருந்தது.
படிக்கும்போதே  “ரியூட்டரி” நடாத்திவந்தான்.
பின்னர் சில காலத்திலேயே வெளிநாடு சென்றான்.
ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வந்திருந்தபோது,
என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனின் அஞ்சலிக்கூட்டத்தில்,
இவன் பேசிய பேச்சும், அழுத அழுகையும்
அனைவரையும் அதிர வைத்தன.
அவன் பற்றிப் பின்னர் எழுதியிருக்கிறேன்.
சிவகுமார் இன்று லண்டனில் வாழ்கிறான்.
கழக முயற்சிகளில் இப்போது இவனுக்கு அதிக ஈடுபாடு இல்லை.



வசந்தன் - மகாராஜா - விஷ்ணுதாசன்

இம்மூவரும் கழகத்தைவிட என்னை நேசித்தவர்கள்.
இன்று வரை உறவாய்ப் பழகுபவர்கள்.
என்மேல் கொண்ட அன்பால் கழக முயற்சிகளிலும் ஓரளவு ஈடுபட்டார்கள்.
வசந்தன், மகாராஜா இருவரும் என்னோடு,
இந்திய விழாக்களிலும் கலந்து கொண்டனர்.
வசந்தன் மகிழ்ச்சியான ஒரு மனிதன்.
எதிர்பார்ப்புக்களைக் குறைத்து,
வாழ்க்கையை நிறைவாக்கிக் கொள்பவன்.
நான் முன்னே சொன்ன இரசாயன ஆசிரியை கமலாசினியின் வகுப்பில்,
ஒரு முறை எங்களுக்குப் பரீட்சை நடந்தது.
அப்பரீட்சையில் மற்றவர்களைப் பார்த்தெழுதி,
வசந்தன் என்னைவிட அதிக புள்ளி வாங்கினான்.
கமலாசினியிடம் நல்ல பெயர் வாங்க,
இவனை இரகசியமாய்க் காட்டிக் கொடுத்தேன்.
அதையறிந்து, என்மேல் சிறிதும் பகை கொள்ளாமல்,
நேராக என்னிடம் வந்து, “இப்படி ஏன் செய்தாய்?” என்று கேட்டான்,
கூசிப்போனேன்.
அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் இறுகிற்று.
இவனது தந்தை, தாய், தமையன்மார், சகோதரி, சித்தி அனைவரும்,
என்னை உறவாய் நேசிப்பவர்கள்.
வசந்தன் இன்று யாழ்ப்பாணத்தில் வாழ்கிறான்.
மகாராஜா ஒருவிதத்தில் என் உறவினன்.
என்மேல் நிரம்பப் பிரியம் கொண்டவன். கொஞ்சம் கஞ்சன்.
ஆனாலும் வரையறுத்து செய்யவேண்டிய கடமைகளை,
எல்லோருக்கும் சரிவரச் செய்வான்.
கழகத்திற்காக இவனிடம் சண்டை பிடித்துப் பணம் பறிப்பேன்.
சுரக்கமாட்டான், கறப்பேன்.
ஆனாலும், கழகத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பான்.
விழாக்களை விரும்பி இரசிப்பான்.
இன்று லண்டனில் வசிக்கிறான்.
விஷ்ணுதாசனும் இவ்விருவரைப் போலவே
கழகத்தோடு இணைந்திருந்தவன்.
எங்கள்மேல் உறவாய் அன்பு செலுத்துபவன்.
இவன் குடும்பமும் எங்கள்மேல் அன்பு செய்த குடும்பமே.
நட்பு நெருக்கத்தால் கழகத்திற்குச் சில துணைகள் செய்தான்.
ஆரம்பகால உறுப்பினர்களில் இன்று இவன் ஒருவனே,
கொழும்பில் எம்மோடு தொடர்பில் இருக்கிறான்.
கழக முயற்சிகளில் இம்மூவரதும் பங்களிப்புக் குறைவுதான்.
ஆனாலும், அன்று தொட்டு இன்று வரை,
எனதும், கழகத்தினதும் வளர்ச்சி கண்டு ஆனந்திப்பவர்கள் இவர்கள்.



ஸ்கந்தமூர்த்தி

என் இந்துக்கல்லூரி நண்பன் இவன்.
நான் கல்லூரியில் இணைந்தபோது,
அங்கு இவன் பெரிய பேச்சாளனாய்ப் பெயர் பெற்றிருந்தான்.
இவனது நக்கல்களுக்குப் பயந்து,
இவனோடு மேடையில் பேச யாரும் முன்வரமாட்டார்கள்.
யாழ் இந்துக்கல்லூரியில் நான் பேசிய, முதல் வழக்காடு மன்றத்தில்,
வாதத்தால் இவனை மடக்கிப் பெயர் பெற்றேன்.
அதனால் என்னோடு பகை கொள்ளாமல்,
நட்புப் பூண்டு ஆச்சரியப்படுத்தினான்.
பின்னாளில் கல்லூரியில் ஏ.எல் யூனியன் தலைவர் பதவிக்கு,
என் ஆதரவு வேண்டிப் போட்டியிட்டான்.
முதலில் ஆதரவு தந்து,
பின்னர் கல்லூரியில் எங்கள் வகுப்பிற்கு நடந்த அவமரியாதையால்,
வகுப்பு மாணவர்கள் தூண்ட,
இவனோடு அப்பதவிக்காய்ப் போட்டியிட்டு வென்றேன்.
அது பெரும் பகையாயிற்று.
என்னோடு பேசுவதை நிறுத்தினான்.
ஆளுமையும், தலைமைத்துவமும் உள்ளவன்.
குரும்பசிட்டி இவனது ஊர்.
அந்தக் காலத்திலேயே அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கூட,
இவனை மதித்தனர்.
தன்னை நெறிப்படுத்தியிருந்தால்,
பெருந் தலைவனாகியிருக்க வேண்டியவன் இவன்.
அளவுக்கதிகமான கற்பனைகளால் அவ் உயர்வை இழந்தான்.
பின்னாளில் என்மேலான பகை மறந்து மீண்டும் நட்புச்செய்தான்.
லண்டன் சென்று குடியேறி,
கழக முயற்சிகளுக்குப் பலதரம் கை கொடுத்தான்.
ஆரம்பகாலத்துக் கழகப் பணிகளில்,
இவனது பங்களிப்பு இல்லை எனும்படியானதே.



பிற நண்பர்கள்

இவர்கள் தவிர எனது ஒத்த வயது நட்பு வட்டாரத்தைத் தாண்டி,
அறிவுசார் தொடர்பினால் என்னை விட மூத்த இருவர்,
அக்கால கழக வரலாற்றில் முக்கியம் பெறுகின்றனர்.
அவர்கள் பற்றியும் சொல்கிறேன்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
பாகம் 006ல்...

· குமரன் பி.ஏ.
· வரதராஜப்பெருமாள்
· மூன்றாவது கம்பன் விழா 
· ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாடு
· விழா ‘பட்ஜ்ஜூக்கு’ அலைந்தோம்
· கிண்டலடித்த பெரிய மனிதர்
· எம்.ஜி.ஆர். வந்தார்
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.