உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 08 | சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் !

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 08 | சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் !
நூல்கள் 14 Jul 2016
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
 
முதல் இந்திய நண்பன்

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்த எனது கைகளை,
திடீரென ஓர் இந்திய இளைஞன் வந்து பிடித்துக்கொண்டு,
கண்ணீர் வழிய விம்மினான்.
“ஈழத்தில் தமிழர்கள்படும் துன்பத்தைக்கண்டு நாங்கள் வருந்துகிறோம்.
எப்போதும் நாங்கள் உங்களோடு இருப்போம்” என்று,
உணர்ச்சி வசப்பட்டான்.
அவன் ஒரு சட்டக்கல்லூரி மாணவன்.
நக்கீரன் என்பது அவனது பெயர்.
சென்னையில் அவனது தந்தை ‘ஸ்ரூடியோ’ ஒன்றை வைத்திருந்தார்.
மாநாட்டைப் படம்பிடிக்க வந்த அவரோடு நக்கீரன் வந்திருந்தான்.
முகவரி தந்து அவன் எங்களைச் சென்னைக்கு அழைத்தான்.
பின்னர் அவன் வீட்டுக்கும் சென்று வந்தோம்.
நெருங்கிய நண்பனாகிவிட்ட அவன்,
பின்னாளில் யாழ்ப்பாணத்திற்கும் வந்து சென்றான்.
இப்போது, சென்னையில் நீதிபதியாய் இருக்கிறான்.
இவன்தான் இந்தியாவில் எனக்குக் கிடைத்த முதல் நண்பன்.
 



மூவேந்தர் அரங்கு சென்றோம்

இப்படியாய் மற்றவர்கள் பாராட்டில் மகிழ்ந்து நின்றபின்பு,
அன்று “மூவேந்தர் அரங்கில்” கவிஞர் கண்ணதாசனின் தலைமையில்,
கவியரங்கு இருப்பதாய் அறிந்து,
உடனே நாம் அங்கு சென்று விட்டோம்.
நாம் சென்ற பின்பு, பரபரப்பான பல விடயங்கள்
தொல்காப்பியர் அரங்கில்  அரங்கேறி,
இலங்கையில் எங்களுக்குப் பெரிய பிரபல்யம் கிடைத்தது.
அதுபற்றிப் பின் சொல்கிறேன்.



கற்றோரின் சங்கமமும்
கண்ணதாசன் கவியரங்கும்

நான் முன்சொன்னதுபோல மூவேந்தர் அரங்கு நிகழ்ச்சிகள்
பொதுமக்களின் தமிழ்த்தாகத்தைத் தீர்க்கும்படி அமைந்திருந்தன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர் அமர்ந்திருக்கக்கூடிய பெரிய பந்தல்.
அவ்வரங்கில் பட்டிமண்டபம், வழக்காடு மன்றம்,
கவியரங்கம், கருத்தரங்கம் என பல நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழுலகில் பெயர்பெற்றிருந்த பல அறிஞர்களையும் பேச்சாளர்களையும்,
அவ்வரங்கில்தான் முதன்முதலில் நேரில் கண்டேன்.
திருமதி சௌந்தரா கைலாசம், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன்,
நீதியரசர் மு.மு. இஸ்மாயில், தவத்திரு குன்றக்குடி அடிகளார்,
திரு. குமரிஅனந்தன், திரு. சாலமன் பாப்பையா, திரு. சுகி. சிவம்,
கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வலம்புரி ஜோன் போன்ற
பலரையும் தரிசிக்கும் வாய்ப்பை அவ்வரங்கு தந்தது.
ஒரே இடத்தில் அத்தனை அறிஞர்களையும் கண்டு நான் பிரமித்ததை
இன்றும் மறக்க முடியவில்லை.
மேடையிலேயே கவிஞர் கண்ணதாசன்,
ஊசி போட்டுக்கொண்டிருந்து கவி பாடியதையும்,
பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த
வழக்காடு மன்றத்தில்,
வலம்புரி ஜோனும் சுகி. சிவமும் கடுமையாய் மோதிக் கொண்டதையும்,
நடுவருக்குக் கட்டுப்பட மறுத்த அவர்களை
பேராசிரியர் இராமகிருஷ்ணன்,
தன் ஆளுமையால் உத்தரவிட்டுக் கட்டுப்படுத்தியதையும்,
சபையைக் கலங்க வைத்த கவிஞர் வாலியின் கவிதையையும்,
சான்றாண்மை மிக்க அம்மையார் சௌந்தரா கைலாசம் அவர்கள்
தந்த ஆசியையும்,
இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது.
அன்று கண்ணதாசன் தலைமையில் நடந்த கவியரங்கத்தைக்
கிறங்கக் கிறங்கப் பார்த்து இரசித்துவிட்டு இருப்பிடம் திரும்பினோம்.



“கண்டறியாதன கண்டேன்!”

இம்மாநாட்டில் பார்த்ததைப்போன்ற மக்கள்கூட்டத்தை
எனது வாழ்நாளில் இன்றுவரை நான் பார்த்ததில்லை.
பின்னாளில் தமிழ்நாட்டில் பல மாநாடுகளில் கலந்துகொண்டேன்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் நடாத்திய,
கோவை செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், மதுரை மாநாட்டுக்கு நிகராக,
அவற்றில் எதனையும் கூற முடியாது என்பது உறுதி.
மதுரை வீதிகள் முழுவதும் தலைகளே தெரிந்தன.
எள்விழ இடமில்லை என்ற கற்பனை உவமையை நிஜமாக்கிய கூட்டம்.
எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, எம்.எஸ். சுப்புலஷ்மி,
பத்மா சுப்பிரமணியம் போன்ற
மக்கள் கவர்ச்சிமிக்க பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
தற்போதைய தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா,
எம்.ஜி.ஆரை விட்டுப் பலகாலம் பிரிந்திருந்து,
மீண்டும் எம்.ஜி.ஆரால் இம்மாநாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன்பின்னரே, அ.தி.மு.க. கட்சியில் ஜெயலலிதாவின் கை ஓங்கியது.
இப்படி மக்களை ஈர்க்க,
பல காரணங்கள் அம்மாநாட்டில் அமைந்திருந்தன.
வாழ்க்கையில் நாங்கள் கனவிலும் கண்டிராத கூட்டம் அது.
மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.



சாப்பாட்டுக்குத் திண்டாட்டம்!

மாநாட்டு ஒழுங்குகளை மிக அற்புதமாகச் செய்திருந்தார்கள்.
மாநாடு தொடங்கி ஒரு நாள் கழிந்தபின்னர்தான்
நாம் மதுரை வந்துசேர முடிந்தது.
இராமேஸ்வரத்திலேயே மாநாட்டின் அதிர்வுகளைக் கண்டு வியந்தோம்.
எம்.ஜி.ஆரின் செயலாளரது கடிதத்தைக் காட்டியதும்,
இராமேஸ்வர ‘இரயில்’ நிலையத்திலேயே,
எங்களுக்கு ராஜ மரியாதை தந்தார்கள்.
மதுரை வந்து சேர்ந்ததும் அம்மரியாதை மேலும் அதிகரித்தது.
நாம் தங்குவதற்கென மதுரை, ‘பொலி ரெக்னிக்’ கல்லூரியில்,
மூன்று அறைகளை ஒதுக்கித் தந்தார்கள்.
ஒரு அறையே நாம் ஏழு பேரும் தங்கக்கூடிய வகையில்,
பிரமாண்டமாய் இருந்தது.
உணவு மட்டும் எமது பொறுப்பு.
மாநாட்டுக்காரர்கள் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை,
எதிர்பார்க்கவில்லைப் போலும்.
சாப்பாட்டுக்குப் படாத பாடுபட்டோம்.
சாப்பாட்டுக் கடைகளுக்குள் நுழையவே முடியவில்லை.
கடைக்காரர்கள் ஒற்றைக் கதவை மட்டும் திறந்து,
தொகுதி தொகுதியாக மக்களை உள்ளெடுத்தார்கள்.
கடைக்குள் நுழைய பலதரம் விழுந்தெழும்ப வேண்டியிருந்தது.
எல்லாக் கடைகளிலும் ஊத்தப்பம் மட்டும்தான் எப்போதும் கிடைத்தது.
அந்த அனுபவமும் மறக்க முடியாததே!



காற்றினிலே வந்த கீதம்

காலையில் கிடைத்த மறக்க முடியாத இன்ப அனுபவம்,
மாலையில் கேட்ட இனிய கவியரங்கம்,
கிடைத்தற்கரிய அறிஞர்களின் சந்திப்பு,
சன நெரிசல் அனுபவம்,
சாப்பாட்டுச் சண்டை என,
அன்று முழுதும் கிடைத்த,
வேறுபட்ட அனுபவங்களால் களைப்புற்றிருந்தோம்.
எம்.ஜி.ஆர். சந்திப்பின் சந்தோசத்தை மறக்க முடியவில்லை.
அந்தக் களைப்புக்குள்ளும் நடந்தவற்றை நான் சொல்லச் சொல்ல,
குமாரதாசன் கடிதமாய் எழுதி,
அடுத்த நாளே அக்கடிதத்தை
சிவராமலிங்கம் மாஸ்டருக்கு அனுப்பி வைத்தான்.
பின், உடைமாற்றிப் படுக்கப்போனோம்.
திடீரென அருகில் எங்கோ பாடகர் மதுரை சோமுவின் பாட்டுக் கேட்டது.
விசாரித்ததில் அருகிலுள்ள மைதானத்தில் அவர் பாடுவது தெரியவந்தது.
நான், கிரி, மாணிக்கத்தின் அத்தான் என எல்லோரும் இசைப்பிரியர்கள்.
அந்த நாட்களில் இப்படிப்பட்ட பெரிய கலைஞர்களை,
காணக்கிடைப்பதே பெரிய விஷயம்.
அதனால், களைப்பை மறந்து,
உடனே, மீண்டும் எழுந்து உடைமாற்றிக்கொண்டு,
அக்கச்சேரியைக் கேட்கப் போனோம்.



மதுரை சோமு தரிசனம்

இசைமேதை மதுரை சோமு அவர்களின் அன்றைய கச்சேரியை,
வாழ்நாளில் மறக்க முடியாது.
சோமு அவர்களின் சொந்த ஊர் மதுரை.
நீண்ட நாட்களின்பின் தன் தாய் மண்ணில் பாடுகிற சிலிர்ப்பு,
அவரின் அன்றைய கச்சேரி முழுவதும் பதிந்திருந்தது.
பல இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்ததால்,
அன்று அம்மைதானத்தில் பெரிய கூட்டம் இல்லை.
சபையின் முன்வரிசையில் இருந்தே கச்சேரியைக் கேட்க முடிந்தது.
கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களிலேயே,
இசைக்குள் மூழ்கிப்போனார் மதுரை சோமு.
தன்னை மறந்து தன் நாமம் கெட்டுப் பாடினார்.

தோடி இராகத்தை மெய்மறந்து நீண்ட நேரம் பாடிய அவர்,
சில வினாடிகள் நிறுத்தி,
“இராஜரத்தினம்பிள்ளை சார் அல்லவா,
இதற்குச் சொந்தக்காரர்” என்று சொல்லிவிட்டு,
சில நிமிடங்கள் விம்மி விம்மி அழுதார்.
மேடை, பக்கவாத்தியம், சபை என,
எதைப்பற்றியும் அவர் கவலைப்படவில்லை.
மறைந்த நாதஸ்வரவித்துவான் இராஜரத்தினம்பிள்ளை அவர்களை,
ஞாபகப்படுத்தியவர்,
என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
திடீரெனத் தனது வாயை நாதஸ்வரம் ஊதுவதுபோல உப்பிப்பிடித்து,
நாதஸ்வர ஓசை வருமாற்போல்,
பிறகும் சில மணித்துளிகள் தோடியை உருகி உருகிப் பாடினார்.
பிறகு ஒரு விருத்தம்.
மதுரை மீனாட்சியை,
“எங்கள் வீட்டுப் பொருள்களில் வந்திருப்பாய்” என்று
அழைக்கும் பாட்டு அது.
பாடலின் இறுதி அடி,
“மீனாட்சி தாயே!
எங்கள் வீட்டுக் கும்பத்தில் நீ வருவாய்” என அழைப்பதாய் முடியும்.
அந்த அடியை அவர் உருகி உருகிப் பாடியபோது,
சபை உறைந்து போனது.
பக்கவாத்தியக்காரர், சபையோர் என
அனைவர் கண்களிலும் கண்ணீர் வெள்ளம்.
யாரையும் கவனிக்காத அவர்,
உச்ச ஸ்தாயியில் அந்த அடியைப் பாடிவிட்டு,
ஒரு குழந்தைப் பிள்ளையைப்போல் விம்மி விம்மி அழுதார்.
பக்கவாத்தியக்காரர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்
ஸ்தம்பித்து இருந்தனர்.
சில நிமிடங்கள் நிசப்தமாய்க் கழிந்தன.
அந்த அமைதியில் உச்ச இசை பதிவாகியிருந்தது.
பிறகு, “தாயே யசோதா” என்ற கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார்.
அவரது மாணவரொருவர் பின்னாலிருந்து தம்புரா மீட்டியபடி
அவரோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.
அம்மாணவர் சற்று வயதானவர்.
ஓரிடத்தில் ஒரு சங்கதி அம்மாணவருக்கு வழுக்கி விட்டது.
அதைத் தாங்க முடியாத சோமு அவர்கள்,
இருந்த இடத்தில் இருந்தபடி கையை மட்டும் பின்னால் விட்டு,
அம்மாணவரின் காதைப் பிடித்து முன்னால் இழுத்து,
அவர் கன்னத்தில் ‘பளாரென’ அறைந்தார்.
சபை திகைத்துப் போனது.
அடி வாங்கிய மாணவர் எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல்,
அடியை வாங்கிக்கொண்டு,
மீண்டும் பின்னால் தலையை இழுத்து அசையாது தம்புரா மீட்டினார்.
மதுரை சோமு அவர்களின் அச்செயல்,
சற்று மிகையோ என எனக்குப் பட்டது.
கச்சேரி தொடர்ந்தது.
மற்றோரிடத்தில்,
சோமு அவர்கள், தனது பாணியில் ஒரு ‘பிர்கா’ அடிக்க,
அது சரியாய் அமையாமல் போயிற்று.
அடுத்த நிமிடம் துடித்துப்போன சோமு அவர்கள்,
“குருநாதா, குருநாதா” எனப் பெரிய சத்தமிட்டுக் கதறி,
தனது இரண்டு கன்னங்களிலும்,
பளார் பளாரென தனது கைகளாலேயே அறைந்து கொண்டார்.
அக்காட்சியைக் கண்டு திகைத்துப்போனேன்.
மாணவனது பிழையைக் கண்டித்த அவர்,
தன் பிழையையும் மறைக்காமல்,
குருநாதரை நினைந்து
தன்னைத்தான் கண்டித்துக்கொண்டதைக் கண்டபின்பு,
அவர் மாணவரை அடித்ததன் நியாயம் புரிந்தது.
இப்படியாய் அன்றைய கச்சேரி முழுவதும்,
சோமு அவர்கள் இசைத்தேவதையாகவே மாறி விஸ்வரூபம் எடுத்தார்.
இன்றுவரை அத்தகைய ஓர் இசை அனுபவத்தை நான் பெறவில்லை.
கச்சேரி முடிந்ததும், அவர் காலில் விழுந்து அனைவரும் ஆசிபெற்று,
அவர் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டோம்.
இன்று எத்தனையோ கச்சேரிகளைக் கேட்டாகி விட்டது.
இன்றும் பலரும் நன்றாகவே பாடுகிறார்கள்.
ஆனால், ஒரு வித்துவான்,
தன்னை மறந்து இசைக்குள் கரையும் அனுபவத்தை,
மதுரை சோமுவிடம் கண்டதுபோல்,
பின்னர் முழுமையாய்க் காண முடியவில்லை.
தன்னுணர்வு முற்றாக நீங்காத வரை,
இசையின் விஸ்வரூபம் முழுமையாய் வெளிப்படாது எனும் உண்மையை,
அன்று சோமு உணர்த்தினார்.



கம்பன் அடிப்பொடி சா. கணேசன்

 
காரைக்குடிச் செட்டியாரான சா.கணேசன் அவர்கள்தான்,
எங்கள் காலத்தில் கம்பனைப் பிரபலப்படுத்தியவர்.
கம்பனுக்காகவே வாழ்ந்த பெரிய மனிதர்.
செட்டி நாட்டவர்கள் செல்வம் தேடுவதில் வல்லவர்கள்.
இவர் பொருட்செல்வத்தை மறந்து,
கம்பனின், தமிழ்ச் செல்வத்தைத் தேடினார்.
தம் வாழ்நாள் முழுவதையும் கம்பனுக்காகவே அர்ப்பணித்தார்.
இவர் ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்.
போராட்ட காலத்தில் ஒரு சிப்பாய் இவரின் சட்டையைக் கிழிக்க,
அன்றிலிருந்து சட்டை போடுவதை விட்டு விட்டு,
சால்வையுடன் திரிந்த மனிதர்.
பட்டிமண்டபம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான,
இன்றைய வடிவத்தை உருவாக்கியவர்.
பேரறிஞர்களை ஒன்றுகூட்டி,
கம்பனுக்கு விழா எடுக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்தவர்.
கம்பனுக்கு மணிமண்டபமும், தமிழ்த்தாய்க்குக் கோயிலும் அமைத்தவர்.
நாட்டரசன் கோட்டையில் கம்பன் சமாதியை இனங்கண்டு,
ஆண்டுதோறும் அங்கு பூசையும், விழாவும் நடாத்தியவர்.
பெரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.
சிற்பக்கலை நிபுணர்.
முத்தமிழும் தெரிந்திருந்த மூதறிஞர்.
கோபத்தில் துர்வாசராய்ப் பெயர் பெற்றிருந்தவர்.
நிமிட நேரமும் தவறாது விழா நடாத்தியவர்.
தாமதமாய் விழாவுக்கு வந்த முதலமைச்சர் கருணாநிதியை நிராகரித்து,
விழாவை நேரத்துக்குத் தொடங்கிய நிமிர் மனிதர்.
விழாவுக்கு வந்த அத்தனைபேருக்கும் பெரு விருந்திட்ட வள்ளல்.
காரைக்குடியைக் கம்பன் குடியாக்கியவர்.
தன்னைப் பேச அழைத்தவர்களுக்கு,
“உங்கள் ஊரில் கம்பன் கழகம் அமைத்தாற்தான் வருவேன்” என,
நிபந்தனையிட்டு,
நாற்பத்தெட்டுக் கம்பன் கழகங்களை உருவாக்கியவர்.
கம்பன் கழகம் ஆரம்பித்த அத்தனைபேருக்கும்,
சீர்கொடுத்துச் சீராட்டியவர்.
கம்பன்மேல் எல்லையற்ற காதல் கொண்டு,
தன் பெயரைக் “கம்பன் அடிப்பொடி” என மாற்றிக்கொண்டவர்.
திராவிடர் கழகங்கள் உண்டாக்கிய கம்பராமாயண எதிர்ப்பை,
தம் கம்பன் விழாக்களால் நிர்மூலமாக்கியவர்.
பின்னாளில், திராவிடர் கழகத் தலைவர்களையே,
கம்பன் மேடையில் ஏற்றிப் பேச வைத்து வெற்றி கண்டவர்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
பாகம் 009ல்...

· கண்டேன்! கம்பன் அடிப்பொடியை · சென்னைக்குப் பயணம் · மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் · யார் அந்த குரு ? · ஒலி வடிவாய் குரு தரிசனம் · வானொலி வகுப்பறை · யாரோ அவர் யாரோ? · ஆனந்தம் தந்த விகடன்
· குருநாதரின் சந்திப்பு
· குரு தரிசனம்

· பேச்சா அது!
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.