எள்ளுகிறார் பகைவரெலாம் இழிவு !

எள்ளுகிறார் பகைவரெலாம் இழிவு !
 
ன்னதமாம் எங்கள் உரிமைதனைக் காப்பதற்காய்
சன்னதமாய்ப் போராடிச் சரிந்திட்டோம் - மண்ணதனில்
வந்த இழப்பதனின் வகை தெரியார், தம்முள்ளே
முந்திப் பகைக்கின்றார் முனைந்து!

தம்மைத் துறந்து தம் உயிரும் தாம் துறந்து
அம்மை அப்பனென அனைத்தையுமே - செம்மையுற
முன் துறந்தார் இளையரெலாம், மூத்த தலைவர்களின்
தன்னலத்துப் போராட்டம் தனி!

 

நேற்றெங்கள் தலைவரென நிமிர்ந்து குரல் கொடுத்து
மாற்றங்கள் கொடுவந்தார் நம்மண்ணில் - ஏற்றங்கள்
இவரால் விளையுமென ஏங்கித் தவமிருந்தோம்
தவறாதுட் பகைவிளைத்தார் தனித்து!

வெளியிருந்து ஒருவர்வரின் வேற்றுமைகள் தணிந்தெங்கள்
அழியும் இனத்திற்கு அமைதி வரும் - நலியும்
பகையென்று நாம் நினைக்க, பண்பின்றி அவர்தாமோ
வகையின்றிப் பகைவிரித்தார் வரிந்து!

போதாத காலமது தமிழர்க்குப் போகாதோ?
தோதாக நற்தலைவர் தோன்றாரோ?-மாதே!
ஒன்றாகித் தலைவரெலாம் உயர்வதனைக் காணாரோ?
நன்றாகும் நாள் எந்த நாள்?

மாற்றார் தம்முள்ளே மனமொத்துத் தமிழர்களின்
ஊற்றம் தணித்திடவே ஒன்றானார்- வேற்றுமையால்
தம்முள் பகைத்துத் தனித்தனியே நிற்கின்றார்
எம் இனத்துத் தலைவரெலாம் இழிந்து!

நேற்றெங்கள் மண்ணில் நிகழ்ந்தவைகள் தாம் மறந்தார்
மாற்றார் செழித்திடவே மாண்பிழந்தார் - ஊற்றாக
ஒன்றாகிப் பகைமுடிக்கும் உயர்வில்லார் இவர் தமக்கு
நன்றாமோ! நம்தலைமை நவில்!

ஓடிப்பிடித்து உயர் பொய்கள் தாம் சொல்லி
நாடிப்பிடித்(து) எம்மை நலித்திட்டார் - கூடி
தள்ளரிய பகை வளர்த்து தமக்குள்ளே இவர் மோத
எள்ளுகிறார் பகைவரெலாம் இழிவு!

சம்பந்தம் இல்லார் போல் சம்பந்தனார் செய்யும்
அம் மந்தப் போக்கதனை யார் கேட்பார்?- தம் பந்தம்
நாளுக்கு நாள் நலிய நல்லார் போல் நடித்தவர்கள்
ஆளுக்காள் பகைத்தாரே அறிந்து!

தளை பிழைத்து வெளிவரவே தம்முள் தவமிருக்கும்
இளையரெலாம் சிறையுள்ளே ஏங்கிடவும் - நிலையறியா
வெற்றுத் தலைவர்களோ வெறும் வாய் அவல் சப்பிச்
சுற்றி வருகின்றார் சுகித்து!

மெல்லத் தமிழினத்தின் மேன்மை உயர்ந்திடுமா?
நல்ல தலைவர்களும் நமக்காகி - வெல்ல
வழிவகுத்து இங்கே வான் புகழும் தருவாரா?
நலிவறுத்துச் செய்வாரா நலம்?

சவலை வெண்பா எனவே சரிந்து இனம் கிடக்கக்
கவலை துளியின்றிக் களிப்பாரோ? - தவளை
மாரியிலே கத்தி மடிவது போல் நல்லவர்கள்
கூறியது வீணாமோ கூறு !
♨♨♨♨♨♨♨♨
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.