எழுக தமிழ்! விழுக பகை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

எழுக தமிழ்! விழுக பகை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
06 Oct 2016
 



ங்களில் சில பேர்,
ஊடகங்கள் பலவற்றினூடாகவும் என்னை திட்டப்போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டே,
நீண்ட யோசனைக்குப் பின் இக்கட்டுரையை எழுதுவதென்று நான் முடிவு செய்துவிட்டேன்.
கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி,
என்று பாரதி சொன்னாற்போல,
காலாகாலமாக சுய அறிவுப்பகுப்பின்றி பொய்யை உண்மையாய்க் கருதி,
மீண்டும் மீண்டும் தீர்க்கதரிசனமற்று உணர்ச்சிவயப்படுவோரின் கைவயப்பட்டு,
நம் இனம் சீரழியக்கூடாது என்பதே எனது இம்முடிவுக்கான காரணமாம்.

 

 



எனது முன்னுரையே நான் எதைப் பற்றி எழுதப்போகிறேன் என்று,
ஓரளவு உங்களை ஊகிக்க வைத்திருக்கும்.
நீங்கள் நினைப்பது சரிதான்.
கடந்த சில நாட்களின் முன் பெரும் விளம்பரத்துடன் நடந்தேறி,
இன்று நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும்,
‘எழுகதமிழ்’ ஊர்வலம் பற்றியும், அது சார்ந்த விடயங்கள் பற்றியுமே,
இக் கட்டுரையூடு ஆராயப் போகிறேன்.



சில மாதங்களுக்கு முன்பாக,
முரண்பட்டார் பலரின் ஒருமைப்பாட்டில்,
பூட்டிய அறைகளுக்குள் ரகசியமாய்த் திடீரென முளைத்தெழுந்த,
‘தமிழ்மக்கள் பேரவை’ எனும் அமைப்பு,
தன் தோற்றத்திற்கான ஆயிரம் காரணங்களை அடுத்தடுத்து அடுக்கியது.
அரசியலைக் கடந்த அமைப்பு என அவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும்,
அவ் அமைப்பு கூட்டமைப்பினரை எதிர்க்கவே தோன்றியது என்பதை,
எல்லோரும் பகிரங்கமாய் உணர்ந்தது உண்மை.


 

➧➧ நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தன்னைக் கெஞ்சிக் கூத்தாடி அரசியலுக்குக் கொணர்ந்த கூட்டமைப்புக்கு எதிராக திடீரென மறைமுகமாகச் செயற்படத் தொடங்கிய முதலமைச்சர் அவ் அமைப்புக்குத் தலைமை தாங்கியதும்
➧➧ கூட்டமைப்புக்கு எதிராய் இருந்த பலர் அவ் அமைப்பில் ஒன்று கூடியதும்
➧➧ ஊடகங்களுக்குக் கூடத் தெரியாமல் மிக ரகசியமாய் அவ் அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றதும்
➧➧ தலைமை ஏற்ற பின்பு முதலமைச்சர் ஆற்றிய உரையில் மறைமுகமாய்க் கூட்டமைப்பைத் தாக்கியதும்
➧➧ சரியோ பிழையோ அதுவரை கூட்டமைப்பை வெளிப்படையாய் வழிநடத்தி நின்ற சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கும், தமிழரசுக்கட்சிக்கும் பெயரளவில் கூட இக்கூட்டத்திற்கான அழைப்பு விடப்படாததுமாக
பல காரணங்கள் அடுத்தடுத்து ஒன்றுசேர்ந்ததால்,
தமிழ்மக்கள் பேரவையினர்’,
இப்பேரவை கட்சி சார்பற்ற அமைப்பு என,
ஆயிரந்தான் கூவிக்கூவிச் சொன்னாலும் அதை நம்ப,
அறிவுள்ள தமிழ் மக்கள் யாரும் தயாராயிருக்கவில்லை.



தமிழர்தம் சமூக, அரசியல் நலம் நோக்கி,
செயற்படப் போவதாய் உரைத்து எழுந்த ‘தமிழ் மக்கள் பேரவை’யின்,
அங்குரார்ப்பணத்தில் ஏற்பட்ட பரபரப்பு,
ஏனோ தெரியவில்லை ஒருசில நாட்களில் பெரும்பாலும் அடங்கிப்போயிற்று.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில்,
தமிழ், சிங்கள மாணவர்கள் மோதி பெரும் பரபரப்பு ஏற்பட்டபோதும்,
வவுனியாவில் பொருளாதார வர்த்தகமையம் அமைவது பற்றிய சர்ச்சை,
பெருமளவில் எழுந்தபோதும்,
ஓர் அறிக்கையைத்தானும் வெளியிடாத நிலையில்த்தான்,
அப்பேரவையின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
அங்ஙனம் அடங்கிக் கிடந்த பேரவை திடீரென ஊக்கம் பெற்று,
‘எழுகதமிழ்’ எனும் கோஷத்துடன் நடாத்திய ஊர்வலமும், கூட்டமும்,
அறிவோர் மத்தியில் பல ஐயப்பாடுகளைக் கிளப்பியுள்ளன.



உலக நெருக்கடிகளின் காரணமாக இலங்கை அரசாங்கம்,
புதிய அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்றை,
ஒரு சில மாதங்களில் கொண்டுவர இருக்கும் நிலையில்,
திடீரென ஏற்பட்டிருக்கும் பேரவையின் இவ் எழுச்சி,
அதன் பின்னணி பற்றி ஆராயத் தூண்டுகிறது.
முக்கியமான நேரங்களில் தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையை வஞ்சகமாய் உடைத்து,
மித்திரபேதம் செய்வதில் வல்லவரான தற்போதைய பிரதமரின் கைவண்ணம் ஏதும்,
பேரவையின் இவ் எழுச்சியிலும் பொதிந்திருக்கிறதோ எனும் ஐயம்,
இயல்பாய் எழப் பார்க்கிறது.



ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘எழுக தமிழால்
பேரவை, உலகிற்குப் புதிதாய்ச் சொன்ன விடயங்கள் யாவை?
தமிழர்தம் உரிமை பெறும் முயற்சியில் அதனால் விளைந்த நன்மைகள் யாவை?
திடீரென நடத்திய இவ் ஊர்வலத்தின் மூலம் பேரவை எதைச் சாதிக்க நினைத்தது?
இக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடவேண்டியிருக்கிறது.



எழுகதமிழ்’ மூலம் பேரவை புதிதாய்ச் சொன்ன விடயங்கள் யாவை?
முதலில் ஆராயப்படவேண்டிய விடயம் இது.

➧➧ புதிய அரசியல் யாப்பில் சமஷ்டி மூலம் தமிழர்தம் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்படல்.
➧➧ வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படல்.
➧➧ தமிழ்மக்களின் காணிகள் விடுவிக்கப்படல்.
➧➧ அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல்.
➧➧ மாகாண சபையின் உரிமையில் மத்திய அரசு தலையிடாது இருத்தல்.
➧➧ வடக்கில் பௌத்த மதப் பரப்புதலையும், சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துதல்.
இவையே ‘எழுகதமிழ்’ மூலம் அறிவிக்கப்பட்ட செய்திகள்.
மேற்சொன்ன விடயங்கள், ஏலவே கூட்டமைப்பாலும், வேறுசில கட்சிகளாலும் பேசப்பட்டவைதான்.
பெரிய புரட்சிக்கு வித்திடுமாப்போல் தொடங்கப்பட்ட ‘எழுகதமிழ்’ நிகழ்வு,
மேற்சொன்ன பழைய விடயங்களையே சொல்லி முடித்திருக்கிறது.
இது எதிர்பார்ப்புடன் இருந்த அரசியல் ஞானமுடைய பலரையும்,
ஏமாற்றமடைய வைத்தது உண்மை.



இரண்டாவதாக,
மேற்படி ‘எழுகதமிழ்’ நிகழ்வால் தமிழர்தம் உரிமை பெறும் முயற்சியில்,
ஏதேனும் நன்மைகள் ஏற்பட்டனவா? என்பது பற்றி ஆராய்தல் வேண்டும்.
இக்கேள்விக்கான விடையும் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.
இவ் ஊர்வலம் வெற்றி பெற்றிருக்கவேண்டுமாயின்,
அது நான்கு இடங்களில் தமிழர் சார்பான அதிர்வுகளை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.
அந்நான்கு இடங்களையும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. பெரும்பான்மை இன ஆளும் கட்சியினரிடம்.
2. பெரும்பான்மை இன எதிர்க் கட்சியினரிடம்.
3. உலகநாடுகளிடம்.
4. தமிழ் மக்களிடம்.
‘எழுகதமிழால்’ இந்நான்கு இடங்களிலும் ஏற்பட்ட அதிர்வுகள்,
மகிழ்ச்சி தருபவையாய் இல்லை என்பதுவே மனவருத்தத்திற்குரிய செய்தி.
அதுபற்றியும் ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.



முதலில் இவ் ‘எழுகதமிழால்’,
இன்றைய ஆளுங்கட்சியில் ஏற்பட்ட அதிர்வுகளை ஆராயப்புகுவோம்.
இன்றைய ஆளுங்கட்சி என்பதே ஓர் அதிசய ‘அர்த்தநாரீஸ்வரக்’ கூட்டுத்தான்.
வரலாற்றில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதே வேலை என்றிருந்த,
குறிப்பாக தமிழர்தம் சுதந்திர விடயத்தில்,
ஒருவர் இறங்கினால் மற்றவர் ஏறுவதை வழமையாய்க் கொண்டிருந்த,
பேரினவாத இரண்டு பெருங்கட்சிகளும்,
ஓர் சர்வாதிகாரியிடமிருந்து தாம் விடுபடுவதற்காக,
அமைத்துக்கொண்ட அதிசயக் கூட்டே இன்றைய ஆளுங்கட்சியாம்.



புறத்தில் ஒற்றுமையும், அகத்தில் பகைமையும் கொண்டு,
காலத்தின் கட்டாயத்தால் இணைந்து நிற்கும் இன்றைய இவ் ஆட்சியாளர்கள்,
உலகம் தரும் நெருக்கடியால்,
தமிழர்தம் உரிமை விடயத்தில் இறங்கி வரவேண்டிய நிலையில் நின்றும்,
இங்குள்ள பேரினவாதிகள் தரும் நெருக்கடியால்,
முழுமையாய் இறங்கி வரமுடியாத நிலையில் நின்றும்,
இருதலைக் கொள்ளி எறும்பாய் தத்தளித்து நிற்கிறார்கள்.



தம் வருங்கால நன்மை நோக்கி,
பெரும்பான்மை இன மக்களைத் திருப்திப்படுத்துவதும்,
உலக நெருக்கடி நோக்கித் தமிழ்மக்களைத் திருப்திப்படுத்துவதுமாக,
பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும்,
வாளைமீன் நிலையில் இன்றைய அரசின் வாழ்வு நகர்கிறது.



இந்நிலையில் தமிழர் சார்பான தேவையற்ற சவால்களும்,
எழுச்சி ஊர்வலங்களும், புரட்சிக்கருத்துக்களும்,
விரும்பியோ, விரும்பாமலோ சமாதானம் நோக்கி,
ஓரளவேனும் நகரத் தொடங்கியிருக்கும்,
பேரினவாத ஆட்சியாளர்களை நிச்சயம் மகிழ்விக்கப் போவதில்லை.
மேற்படி ஊர்வலம் பற்றிய தமது அதிருப்தியை,
ஜனாதிபதியோ, பிரதமரோ வெளிப்பட உரைக்காமல்,
தம் முக்கிய அமைச்சர்களைக் கொண்டும், கட்சி உறுப்பினர்களைக் கொண்டும்,
கடும் வார்த்தைப் பிரயோகங்களோடு வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்பதுவரையிலான,
அவ் உறுப்பினர்களின் சவால்களின் பின்னால்,
இப்பிரச்சினை பற்றி மௌனித்திருக்கும்,
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் குரல்கள் ஒழிந்திருப்பதை,
புத்திசாலிகள் நிச்சயம் இனங்காண்பர்.
தாம் பேசாமல் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் பேசவைக்கும்,
மேற்படி தலைவர்களின் இவ் உத்தி,
முதலமைச்சருக்கான முதல்நிலை எச்சரிக்கையேயாம்.



இவ் எச்சரிக்கையை முதலமைச்சரும்,
அவர் சார்ந்த குழுவினரும் உணர்ந்து கொள்வது அவசியம்.
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் மௌனமும், சகிப்புத்தன்மையும்,
நிச்சயம் தொடரப்போவதில்லை.
பேரவையினூடன முதலமைச்சரின் செயற்பாடுகள் இதே வகையில் தொடருமெனின்,
வருங்காலத்தில் முதலமைச்சர் பிரச்சினைகளைச் சந்திக்கப்போவது நிச்சயம்.



உணர்ச்சிவயப்பட்ட சிலர்,
முதலமைச்சருக்கு எதிராக அரசு ஏற்படுத்தக் கூடிய,
அவ் எதிர்வினை பற்றி ஏன் பயப்படவேண்டும்? எனக்கேட்பர்.
சற்று ஆழச் சிந்தித்தால்,
அவ் எதிர்வினை விளைவிக்கக்கூடிய தாக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில்,
அவருக்கான தனிப்பட்ட செல்வாக்கு உயரும் என்பதைத் தவிர,
வேறு பயன் ஏதும் இனத்திற்கு விளையப் போவதில்லை.



முதலமைச்சர் பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில்,
கூட்டமைப்பைச் சார்ந்த வேறொருவர் அப்பதவியை ஏற்கப் போவது நிச்சயம்.
அங்ஙனம் பதவியேற்கப்போபவர்  தற்போதைய முதலமைச்சருக்கு ஏற்பட்ட,
முன் அனுபவத்தை மனதில் கொண்டு,
அரசுடன் சரணாகதி நிலையில் ஒத்துப்போகவே நினைப்பார்.
முதல் முதலாய் தமிழர் கையில் கொடுக்கப்பட்ட ஆட்சி நிர்வாகத்தின்,
இந்த, ‘கருச்சிதைவைக்’ கண்டு உலகமும் உவக்கப்போவதில்லை.
நிர்வாகம் என்ற வகையில் கடந்த மூன்றாண்டு காலத்தில்,
முதலமைச்சரின் தலைமையிலான வடமாகாண சபை,
சாதனைகள் ஏதும் செய்யாததோடு,
ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்து முடித்திருப்பதால்,
தமிழர்க்கு நிர்வாக ஆற்றல் இல்லை எனும் பழியும் வந்துசேரும்.
இதனால் தொடரும் வடமாகாண சபையின் ஆட்சிகளில்,
ஆளுநர்களின் கைகளே ஓங்கும் வாய்ப்பிருக்கிறது.
இவைதான் அவ் எதிர்வினையால் வரக்கூடிய இனத்திற்கு எதிரான பயன்கள்.



அடுத்து,
பெரும்பான்மையின எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளை நாம் கவனிக்கவேண்டும்.
காரியங்களைத் தனித்துச் சாதிக்க முடியாத,
ஒருசில சிங்கள எதிர்க்கட்சிகளைத் தவிர,
மற்றைய அனைத்துக் கட்சிகளும்,
இவ் ‘எழுகதமிழ்’ பற்றியும் அதில் முதலமைச்சர் ஆற்றிய உரைபற்றியும்,
கடுங்கோபத்துடன் போர்க்கொடியைத் தூக்கியுள்ளன.
உலகத்திற்கு அஞ்சி தம் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி,
வெறும்வாய் சப்பி நின்ற மஹிந்தவின் பொது எதிரணிக்கு,
இவ் ‘எழுகதமிழ்’ சர்க்கரை சேர்த்த அவலைக் கொடுத்திருக்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்,
பெரும்பான்மை சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு,
தமிழர்கள் சிங்களவர்களுக்கும், பௌத்த மதத்திற்கும்,
எதிரானவர்கள் எனும் கருத்தை வீரியத்தோடு பிரச்சாரம் செய்ய,
இவ் ‘எழுகதமிழை’ வைத்து அவர்கள் முனையத் தொடங்கியிருக்கிறார்கள்.



பெரும்பான்மை மக்கள் மனதில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்தைப் பதிக்க,
தமிழ்த் தலைவர்களே ஆயுதம் தந்ததில் அவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
அவர்களால் பெரும்பான்மை மக்கள் மனதில் ஏற்படுத்தப்படும் இப்பகையுணர்வு,
தமிழர்க்கு ஆதரவாக, ஆட்சியாளர்கள் ஓரளவேனும் இறங்கி வருவதை,
நிச்சயம் தடை செய்யும் என்பதில் ஐயமில்லை.



மூன்றாவதாக ‘எழுகதமிழ்’ ஊர்வலம்.
உலக நாடுகளிடம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதிர்வுகளையும் நாம் கணித்தல் வேண்டும்.
எந்த உலகநாடும் தமிழர்பால் கொண்ட தனிப்பற்றின் காரணமாக,
இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கவில்லை என்பது சர்வ நிச்சயம்.
இன்று தமிழர் சார்பாக இரக்கத்துடன் பேசும் நாடுகள் எல்லாமே,
வன்னிப் போரில் நம் தமிழர்கள் பொசுங்கிச் சாவதை,
மௌனத்துடன் பார்த்திருந்தவைதான் என்பதை நாம் மறக்கலாகாது.
தமிழர்கள் மீதான அந்நாடுகளினது அக்கறை,
தத்தம் நலம் நோக்கியதே என்பதை முன்பும் பலதரம் நான் சொல்லியிருக்கிறேன்.
அதனால், இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர் சார்பான உலகநாடுகளின் ஆர்வத்தையும் அக்கறையையும்,
எவ்வளவு சீக்கிரம் நாம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துதல் நன்றாம்.



ஏலவே அந்த விடயத்தில் நாம் தாமதமாகிக் கொண்டிருக்கிறோம்.
அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இதனால் கவலை கொண்டிருக்கிறார்கள்.
போர் முடிந்தகையோடு தமிழர் சார்பாக உலகநாடுகளிடம் இருந்த அனுதாபம்,
இன்று கடகடவெனக் குறைந்து வருவது வெளிப்படை.
உலகநாடுகளைப் பொறுத்தவரை தென்கிழக்காசியாவில்,
இலங்கை பெற்றிருக்கும் ‘ஸ்தான’ முக்கியமே அவற்றின் ஈர்ப்பிற்காம் அடிப்படை.
அதனால் இலங்கையைத் தம்வயமாக்க அவை யாரோடும் கூட்டுச்சேரத் தயங்கப்போவதில்லை.



இன்றைய நிலையில் இலங்கை அரசு,
அந்நாடுகளின் வயப்பட்டு தம் தேவைகளை நிறைவேற்ற வேகமாய்த் தயாராகிக் கொண்டிருக்கிறது.
நாமோ அவற்றின் ஆதரவை உடன் பயன்படுத்தத் தெரியாமல்,
அறிவீனமாய் நமது ‘உட்குத்துகளில்’ வீணே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
அண்மையில் இலங்கை வந்த பான்கீமூனின்,
எம் மீதான பாராமுகமே நான் முன் சொன்ன உண்மைக்காம் சான்று.
இப்படியே போனால் இலங்கை அரசுக்கு எதிராக,
ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வர முனைந்த இதே உலகநாடுகள்,
காலப்போக்கில் நமக்கு எதிரான தீர்மானம் எதனையும் கொண்டு வந்தாலும்,
ஆச்சரியப்படுவதற்கில்லை.
வள்ளுவனைக் கையில் வைத்துக் கொண்டு,
‘காலம் அறிதல்’ செய்யாமல் நிற்கும் நம் அறியாமையை என் சொல்ல?



திடீரென நடத்திய இவ் ஊர்வலத்தின் மூலம் பேரவை எதைச் சாதிக்க நினைத்தது?
நிறைவாக நாம் ஆராய வேண்டிய விடயம் இது.
எழுகதமிழ் ஊர்வலத்தின் நிறைவுக் கூட்டத்தில் நடந்த விடயங்களை,
உன்னிப்பாய்க் கவனித்தால்,
முதலமைச்சரை ஒரு கதாநாயகனாகவும், ஒப்பற்ற தலைவனாகவும்,
தமிழ் மக்கள் மனதில் பதிவு செய்ய,
பேரவை திட்டமிட்டு செயலாற்றியதைத் தெளிவுற நாம் அறிந்து கொள்ளலாம்.



மற்றைத் தலைவர்களால் அங்கு பேசப்பட்ட,
‘இறைக்கொடையாய்க் கிடைத்த தலைவர் இவர்’ என்பது போன்ற,
புகழ் வார்த்தைகளில் அதிக நிஜம் இருந்ததாய்த் தெரியவில்லை.
ஒரு காலத்தில் தனது தம்பிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பதற்காக,
முதலமைச்சரைக் கடுமையாய்ச் சாடி நின்ற,
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சித்தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின்,
முதலமைச்சர் பற்றிய புகழ் வார்த்தைகளை ஐயப்படாமல் நாம் இருக்கமுடியாது.
அதுபோலவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில்,
ஏதோ வகையில் முதலமைச்சரை கூட்டமைப்புக்கு எதிராகத் திருப்பியும்,
மறைமுகமாகத் தன் சார்பாகப் பேச வைத்தும்,
ஒரு இடத்தில் கூட வெற்றியைத் தழுவ முடியாமல் தோற்றுப்போன,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் புகழ் வார்த்தைகளிலும்,
முதலமைச்சரை வைத்து தமிழ் மக்களின் ஆதரவைத் தமது கட்சிக்குத் திருப்பும் நோக்கமே,
உள் ஒழிந்து நின்றதை இனங்காண முடிந்தது.



இம்மாற்றுக்கட்சியினரைப் பொறுத்தளவில்,
வயதாகிவிட்ட முதலமைச்சரை வைத்து கூட்டமைப்பைச் சரித்து விட்டால்,
பின்னர் விரைவில் தமிழ்மக்களுக்குத் தாம் தலைமையேற்கலாம் எனும் எண்ணமே,
ஊன்றி நிற்பதாய்த் தெரிகிறது.
முன்னர் பலதரம் பதவிகளுக்காகப் பரிதவித்த இவர்களது நிலையைக் கொண்டு,
இவ் உண்மையை நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது.



அன்றைய கூட்டத்தில்,
தியாகியாகவும், புரட்சியாளராகவும் முதலமைச்சரை இவர்கள் புகழப்புகழ,
இவர்களால் ஆற்றலாளராய்ப் புகழப்படும் அவரை,
கூட்டமைப்புத்தானே இனங்கண்டு அரசியலுக்கு அழைத்து வந்தது எனும் உண்மை,
நம் மனத்தில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
இன்று, முதலமைச்சரைத் தக்க தலைவர் என்று புகழும் இவர்கள்,
அன்றே அவரை இனங்காணாமல் விட்டது ஏன்? எனும் கேள்வியும்,
நம் மனதை உறுத்தவே செய்கிறது.
இவர்களின் கருத்தை வைத்துப் பார்த்தாலே,
கூட்டமைப்பு இவர்களுக்கில்லாத தீர்க்க தரிசனத்துடன்,
அன்றே செயற்பட்டிருப்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.



இந்த என் கருத்துக்கள்,
இவ்விரு பிரிவினர்க்கும் இடையேயுள்ள பகையினைத் தூண்டும் நோக்கத்துடன்,
எழுதப்படுபவையல்ல.
சில உண்மைகளை தமிழர்கள் பாரபட்சமின்றி.
சிந்திக்கப் பழக வேண்டும் எனும் நோக்கத்துடனேயே எழுதப்படுகின்றன.



அன்றைய கூட்டத்தில்,
மற்றவர்கள் முதலமைச்சரை புகழும் போதெல்லாம் எழுந்த,
குறித்த குழுவினரின் கைதட்டுக்கள் (விசிலுடன் கூடிய),
அவை ஒரு குழுவினரால் மட்டும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதை,
தெளிவாக உணர்த்தின.
கூடியிருந்த ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும்,
ஒருமித்து அக்கோஷத்தில் ஒன்றவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது,
மேற்படி ‘எழுகதமிழ்’ கூட்டம்,
கூட்டமைப்பினைத் திட்டமிட்டு உடைக்கவும்.
முதலமைச்சரை வைத்து தமிழ்த்தலைமையை பிளவுபடுத்தவுமே,
முனைந்திருப்பதாய் எண்ண வைக்கின்றது.
எனவே இவ் ஊர்வலத்தின் மூலம் பேரவை சாதிக்க நினைத்தது இதைத்தானா?
என்று ஐயுறாமல் இருக்கமுடியவில்லை.



ஏன் கூட்டமைப்பு உடைந்து,
தமிழ்த்தலைமை இரண்டாகப் பிரியக் கூடாதா? என்று ஒரு சிலர் கேட்கலாம்.
ஏகதலைமையாக எத்தலைமையும் இருக்கக்கூடாது என்பதே எனது கருத்துமாம்.
சென்ற தேர்தலின் போதே இக்கருத்தை நான் வலியுறுத்தியிருக்கிறேன்.
அதற்குக் காரணம்,
கேட்க ஆளின்றி இயங்கும் இயக்கங்கள் எவையும்,
ஒருக்காலும் சரியான பாதையில் நடக்கப்போவதில்லை என்பதே.
கூட்டணி தொடக்கம் புலிகள் வரையிலும் இவ் உண்மையை நாம் கண்டிருக்கிறோம்.
ஆரம்பகாலக் கூட்டமைப்பின் செயற்பாட்டிலும் இக் கருத்துப் பதிவாகி இருந்தது.
இதுதான் வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம்.
அதனாற்தான் ஏகதலைமை என்ற ஒன்று இருக்கக் கூடாது என்று நான் கருதினேன்.
அப்படியானால்,
இப்போது மட்டும் இங்ஙனம் ஒரு மாற்றுத் தலைமை உருவாவதை,
நான் ஏன் கண்டிக்கிறேன் என்று உங்களில் ஒரு சிலர் சிந்திக்கக்கூடும்.
அதற்கான தெளிவான பதில் என்னிடம் உண்டு.



கீழ்க்கண்ட காரணங்களே இன்றைய என் எதிர்ப்பிற்காம் அடிப்படைகள்.

➧➧ புதிய அரசியலமைப்பை அரசு கொண்டு வர முனையும் இவ்வேளையில் தமிழர்கள் ஒன்றுபட்டு தம் உணர்வை வெளிப்படுத்தி நமக்கான உரிமைகளைப் பெறவேண்டியதன் அவசியம்.
➧➧ மாற்றுக்கட்சியினர் சுயமாக மக்கள் ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல் சூது செய்து  கூட்டமைப்பிலிருந்தே ஒருவரைப் பிரித்து, தம் சார்புபடவைத்து, தம்மை வளர்த்துக் கொள்ள முயன்றதில் இருந்த வஞ்சனை.
➧➧ முதலமைச்சரின் தோற்றத்தாலும் முன்னைப் பதவியாலும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் மரியாதையைப் பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்ள, முதலமைச்சரும் அவர் சார்ந்த குழுவினரும் மீண்டும் உணர்ச்சி அரசியலை செய்யத் தொடங்கியிருப்பதில் உள்ள ஆபத்து.
➧➧ இன ஒற்றுமைக்கான வாய்ப்பு ஓரளவு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், ஒன்றுபட்டு முடிந்த அளவு சூழ்நிலையை இனத்திற்குச் சார்பாகப் பயன்படுத்த நினையாமல் அவ்வாய்ப்பைச் சிதைக்க நினைப்பதில் இருக்கும் அறியாமை.
மேற் காரணங்களே இன்றைய நிலையில் நம் தலைமை பிளவுபடுவதை,
நான் எதிர்ப்பதற்கான காரணங்களாம்.



நிறைவாக நம் தலைவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

➧➧ முதலில் தமிழ்த்தலைவர்கள் இன்றைய எம் நிலையை உணர்ந்து தம்முள் பகை வளர்க்க நினையாமல் ஒருமைப்பட முனையவேண்டும்.
➧➧ ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிர் கொடுத்து உருவாக்கியிருக்கும் எம்மீதான உலகின் அனுதாபத்தை நமக்குச் சார்பாக முடிந்தவரை பயன்படுத்த உடன் முனையவேண்டும்.
➧➧ தமிழர்க்குச் சார்பாய் வலிமையாய்ப் பேசிய உலகநாடுகள் இன்று மெல்ல மெல்ல நம்மைவிட்டு விலகத் தொடங்கியிருக்கும் நிலையில் பதவி, கட்சி ஆகியவற்றால் வரும் சுயநன்மைகளைக் கடந்து தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை உலகுக்குணர்த்தி முடிந்தவரை இன நன்மையைப் பாதுகாக்க முனையவேண்டும்.
➧➧ நாற்பதாயிரம் பேரின் உயிர் இழப்பிலும் அதைவிட அதிகமானோரின் வாழ்விழப்பிலும்தான் இன்றைய தமது அரசியல் நடக்கிறது என்பதை மறந்து சூதும், வாதும், சூழ்ச்சியும் செய்து சுயநலமாய் இயங்குவதை உடனடியாக நிறுத்தியேயாகவேண்டும்.

இல்லாவிட்டால் பெரும் பாவமும், பழியும் இனத்தைச் சூழப்போவது நிச்சயம்.



இன்றைய நிலையில் இவற்றைச் செய்யவல்லார் யார்?
நிச்சயம் கேள்வி பிறக்கும்.
அதற்கான பதில் தெளிவானது.
இன்றைய இத்தனை குழப்பங்களுக்கும் யார் காரணகர்த்தராய் இருந்தாரோ,
அவராற்தான் இக்காரியத்தை இயற்ற முடியும்.
முடிச்சைப் போட்டவர்தான் முடிச்சை அவிழ்த்தாகவேண்டும்.



ஆம் நம் முதலமைச்சரைத்தான் சொல்கிறேன்.
கூட்டமைப்பில் குறைகண்டு முதலமைச்சர் கூடியிருக்கும் கூட்டத்திலும்,
கூட்டமைப்பினரிடம் கண்ட குறைபாடுகள் அத்தனையும் குவிந்திருப்பதை,
முதலமைச்சரால் மறுக்கமுடியாது.
எனவே சட்டியிலிருந்து நெருப்பில் பாயும் வேலையை விட்டுவிட்டு,
திடீரென அரசியலுக்கு வந்த தன்மேல்,
தமிழ்மக்கள் காட்டும் உண்மை விசுவாசத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் நன்றி பயக்கும் வண்ணம்,
தமிழினத்தின் எதிர்கால நன்மை கருதி,
பழைய பகைகளைத் தானும் மறந்து, மற்றவர்களையும் மறப்பிக்கச் செய்து,
உண்மை அரசியல் நாகரீகத்தை நிலைநிறுத்த முதலமைச்சர் முனைந்தால்,
‘எழுகதமிழ்’ கூட்டத்தில் தலைவர்கள் புகழ்ந்தது போல,
இறைக் கொடையாய் அமைந்த தலைவராய் முதலமைச்சர் மாறுவார் என்பதில் ஐயமில்லை.
இது நடக்குமா?
அது தமிழர்களின் தலைவிதியில்தான் தங்கியிருக்கிறது.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.