கம்ப அரச அறம் -பகுதி-2
உயிராகத் தனது மக்களைக் கருதியவன் தசரதன்.
அரசனை உயிராகவும், மக்களை உடலாகவும் உரைப்பது,
நம் முன்னோர்தம் மரபு.
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என
இவ் உண்மையை சங்கநூல் உரைக்கும்.
நம் கம்பர், வழிவழி வந்த இக்கருத்தை மாற்றி,
மக்களை உயிராகவும், மன்னனை உடலாகவும்
உரைத்துப் புதுமை செய்கிறார்.
“வயிரவான் பூணணி மடங்கள் மொய்ம்பினான்
உயிரெலாம்; தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்
செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”
உயிர் நிலைத்த தன்மை கொண்டது.
உடலோ மாறிக் கொண்டே இருப்பது.
உயிர் இன்றேல் உடல் நிலையாது.
உடல் இன்றியும் உயிர் நிலைக்கும்.
மக்கள் எனும் தத்துவம் நிலைத்த தன்மை கொண்டது.
அரசு எனும் தத்துவம் மாற்றத்திற்குட்படுவது.
அரசின்றியும் மக்கள் நிலைப்பர்.
மக்களின்றி அரசு நிலையாது.
அதனாற்றான், அரசனை உடலாக்கி,
மக்களை உயிராக்கி உரைத்தார் கம்பர்.
அவர் காட்டிய இவ் உவமை மூலம்,
தசரதனது அரச நிர்வாகச் சிறப்பு,
தெளிவுற விளக்கம் செய்யப்படுகிறது.
ஓர் அரசனின் நல்லாட்சியின் சிறப்பை,
அந்நாட்டு மக்களின் ஒழுக்க வாழ்வே வெளிப்படுத்தும்.
அரசன் தன் மக்களை முறைசெய்து காத்தால்,
அவன் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மக்கள்,
ஒழுக்கம் பேணி வாழ்வராம்.
தசரதனின் ஆட்சியின் கீழ் இருந்த மக்கள்,
ஒழுக்க வாழ்வைக் கடைப்பிடித்தமையை,
ஓரு பாடல் மூலம் உறுதி செய்;கிறார் கம்பர்.
அயோத்தியிலிருந்த பெண்கள் தமது விழிகளையும்,
ஆண்கள் தமது ஐம்புலன்களையும்,
நெறியில் புறம் செல்லாது கட்டுப்படுத்தி வாழ்ந்த செய்தியை,
அப் பாடல் வெளிப்படுத்துகிறது.
“ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண்ணெனும்
பூசலம்பு நெறியின் புறம் செலா
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்”
பெண்கள் தமது கண்களை மாத்திரம் அடக்கி வைக்க,
ஆண்கள் தமது ஐம்புலன்களையும் அடக்கி நின்றனராம் என,
கம்பர் உரைத்தது ஏன்? எனக் கேள்வி எழும்.
பெண்களின் கண்கள் நெறி தவறின்,
ஆண்கள் தமது ஐம்புலன்களின் கட்டுப்பாட்டையும் இழப்பராம்.
இவ் உண்மையைக் குறிப்பால் நமக்கு உணர்த்தவே,
கம்பர் அங்ஙனம் உரைத்தார் என்க!
தன் மக்களை எந்தக் குறையுமின்றிக் காத்தல்,
அரச அறத்தின் முதன்மைக் கடமையாம்.
அக் கடமையையும் தசரதன் சரிவரச் செய்தனனாம்.
சூரியன் உலகம் முழுவதும் சஞ்சரித்து,
உயிர்களைக் காத்து வருவதைப் போல,
தசரதனும் தனது ஆக்ஞாசக்கரத்தினால்,
தன் மக்களைக் குறைவின்றிக் காத்தான் என்கிறார்,
கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
“குன்றென உயரிய குவவுத் தோளினான்
வென்றி அம் திகிரி வெம் பருதியாமென
ஒன்றென உலகிடை உலாவி மீமிசை
நின்றுநின்று உயிர்தொறு நெடிது காக்குமே.”
காவலைச் செய்யும் அரசர்கள் அத் தகுதியை,
தமக்குக் கிடைத்த பெருமையாய் நினையாமல்,
தம்மை மக்களின் சேவகனாய்க் கருதி,
அவர்தமைப் போற்றிக் காக்கவேண்டும் என்பது,
அரச அறம் உரைக்கும் உண்மையாம்.
தசரதனும், தனது நாட்டு மக்களை,
தனக்குக் கிடைத்த செல்வமாய் நினைந்து,
போற்றிக் காத்தனன் என்கிறார் கம்பர்.
இச் செய்தியை விளக்கம் செய்வதற்காய்,
கம்பர் பெருமான் ஓர் உவமையைக் கையாளுகிறார்.
வறுமைமிக்க ஒருவன்,
தனக்குக் கிடைத்த சிறியதோர் வயல் நிலத்தை,
எங்ஙனம் போற்றிப் பாதுகாக்க விளைவானோ?
அங்ஙனமே தசரதனும் தன் தேயத்தைக் காத்தான் என்கிறார் அவர்.
“எய்யென எழுபகை எங்கும் இன்மையான்
மொய் பெறாத் தினவுறு முழவுத் தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்.”
ஒரு நல்ல தலைவன் தனது குறைகளைப் பொருட்படுத்தாது,
மக்களின் குறைகளையே பெரிதாய் நினைந்து,
அவற்றை நீக்க முன்வரவேண்டும் என்கிறது அரச அறம்.
இக் கருத்தினையும் தசரதனில் ஏற்றிக் காட்டுகிறார் கம்பர்.
புதல்வர்கள் பிறவாததால் வருந்திய தசரதன்,
தனது நாட்டு மக்கள் துயருறாது இருக்க,
தனக்குப் புதல்வர்கள் வேண்டும் என,
குலகுருவான வசிட்டரிடம் தன் குறையை உரைக்கிறான்.
இவ்விடத்தில் தன் துயரைக் கருதாது,
மக்களின் துயர் கருதும் தசரதனின் மாண்பு வெளிப்படுகிறது.
“அறுபதினாயிரம் ஆண்டுகள் மாண்டுற
உறுபகை ஒடுக்கி இவ்வுலகை ஓம்பினேன்
பிறிதொரு குறையிலை என்பின் வையகம்
மறு உறும் என்பதோர் மயக்கம் உண்டரோ.”
ஒரு தலைவன் தான் செய்து வந்த நிர்வாகத்தை,
மற்றொருவருக்குக் கைமாற்றிக் கொடுக்கும் போது,
அந் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் தகுதி,
அதனைப் பெறுபவருக்கு உண்டா? என ஆராய்ந்து,
அளந்தறிந்து ஒப்படைக்க வேண்டியது கடன்.
இஃதும் அரச அறத்தின் ஒரு கூறாம்.
மேற்படி விடயத்தினையும் தசரதன் செயற்படுத்தியதாய்,
உரைக்கின்றார் கம்பர் பெருமான்.
தனது மந்திரிசபையினரோடு ஆராய்ந்து,
இராமனுக்கு முடிசூட்டுவது எனத் தீர்மானித்த தசரதன்,
அச் செய்தியை இராமனுக்கு உரைப்பதற்காய்,
அவனை அரசவைக்கு அழைத்து வரும்படி,
மந்திரி சுமந்திரனை அனுப்பி வைக்கிறான்
சுமந்திரன் சென்று அச் செய்தியைச் சொல்ல,
தந்தையின் கட்டளையை உடன் ஏற்ற இராமன்,
தேரேறி, தசரதன் இருந்த இடத்திற்கு வருகிறான்.
வந்த இராமனைக் கண்டு மகிழ்ந்த தசரதன்,
அம் மகிழ்ச்சியால் அவனை இறுகத் தழுவிக் கொள்கிறான்.
இங்ஙனமாய், தசரதன் இராமனைத் தழுவியதற்கான காரணத்தை,
கம்பர் பெருமான் கற்பனையோடு விபரிக்கிறார்.
அவரது அக் கற்பனையில்,
மேற்சொன்னதான அரச அறம் பதிவாகிறது.
அதுவரை தான் ஆண்டுவந்த நாட்டை,
தொடர்ந்து ஆள்வதற்கான தகுதி,
இராமனுக்கு உண்டா? என அறிய விரும்பிய தசரதன்,
தனது தோளையும், மார்பையும்,
இராமனது தோளிலும், மார்பிலும் பொருத்தி,
அளந்து பார்த்தான் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
“நலங் கொண் மைந்தனைத் தழுவின னென்பதென் னளிநீர்
நிலங்க டாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்க லன்னதிண் டோளையு மெய்த்திரு விருக்கும்
அலங்கன் மார்பையுந் தனதுதோள் மார்பு கொண்டளந்தான்.”
(தொடரும்)