கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் !

கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் !
07 Dec 2015
 
 
 
லகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ 
இஃது நம் தமிழ்ச்சான்றோர் முடிவு.
இவ்வுயர்ந்தோர்,
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும்,
ஐந்து பண்புகளையும் தாங்கி நிற்கும்,
தூண்களாய்த் திகழ்வர் என்பார் வள்ளுவர்.
இத்தகு பண்புடைய சான்றோரே,
அறிவுலகின் கண்களாய்த் திகழ்வர்.



கல்வி, அறிவுக்காக என்றும்,
அறிவு, ஒழுக்கத்திற்காக என்றும்,
ஒழுக்கம், அன்பிற்காக என்றும்,
அன்பு, அருளுக்காக என்றும்,
அருள், துறவுக்காக என்றும்,
துறவு, வீட்டுக்காக என்றும்,
வரையறை செய்து வாழ்ந்த,
அன்றைய அறிவுலகில்,
மேற்சொன்ன உயர்ந்தோர் தொகை விரிந்து கிடந்தது.
 




கல்வி, தொழிலுக்காக என்றும்,
தொழில், பொருளுக்காக என்றும்,
பொருள், போகத்திற்காக என்றும்,
போகமே, வாழ்வின் நோக்கம் என்றும்,
இயங்கத் தொடங்கிவிட்ட இன்றைய அறிவுலகில்,
மேற்சொன்ன உயர்ந்தோர் தொகை,
இல்லையெனும்படியாய் அருகிவிட்டது.
எனக்குத் தெரிந்து,
இன்றைய அறிவுலகில்,
வள்ளுவ வரையறைக்கு இலக்கணமாய்,
அண்மையில் வாழ்ந்து மறைந்த அற்புதர்
எங்கள் அ.ச.ஞா. ஐயா அவர்களே.
“முன்னோன் காண்க முழுதோன் காண்க”



ஐயா எனக்குக் கடவுள்.
அக்கடவுள் எனக்கு ஓசையாய் அறிமுகமாயிற்று.
அது என் முன்னைத் தவப்பயன்.
தமிழ்நாட்டின் தலைமையறிஞராய் திகழ்ந்த ஐயா எங்கே?
ஈழத்தின் ஒரு மூலையில் வாழ்ந்த,
அறிவில்லா இவ்விளைஞன் எங்கே?
ஆனாலும் விதி அவரை எனக்கு அறிமுகப்படுத்திற்று.
இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒன்றில்,
ஐயாவின் அற்புதமான ஒரு பெரியபுராண உரை.
தற்செயலாய்க் கேட்டேன்.
அப்போது எனக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்.
அவ்வற்புதரின் ஓசையும், உணர்வும்,
காற்றாய் வந்து என் கருத்துள் புகுந்தன.
ஓசையின் ஈர்ப்பும், ஒப்பற்ற கருப்பொருளும்,
அப்பேச்சில் கண்டு பிரமித்துப்போனேன்.
வடிவமறியாமலே அவ்வள்ளல்,
இப்பொடியனின் நெஞ்சில் புகுந்து கொண்டார்.



ஏற்கனவே ஓசையாய் என் நெஞ்சம் புகுந்து,
உயிர் கலந்த என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனார்,
இவ் ஏழை இதயத்துள் அறிவுச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க,
அருகிலேயே ஐயாவுக்கும் அன்றே ஓர் ஆசனம் இடப்பட்டது.
வசிட்ட, விசுவாமித்திரராய் வாய்த்த குருநாதர்கள்,
ஒன்று கம்பக்கடல், மற்றது பெரியபுராணப் பேராறு.
என்னே! நான் செய்த தவப்பயன்.
இருவருமே காற்றாய் என்கருத்துள் புகுந்த கடவுளர்.
அதனால்தானோ என்னவோ?,
இன்றும் என் உயிர்க்காற்றுள்,
அவ்விருவர்தம் உறையுள் தொடர்கிறது.
“சிவனென யானும் தேறினன் காண்க”



ஒலிவடிவாய் உணர்ந்த ஐயாவை,
வரிவடிவாய்க் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்',
'தம்பியர் இருவர்',
'அரசியர் மூவர்',
'நாடும் மன்னனும்'
இந்நூல்களாய் ஐயா என்னருகில் வந்தார்.
படிப்பறியா இப்பாலகனை,
கம்பகாவியக் கடலுள் கைபிடித்து இறக்கி,
கால் நனைக்கக் காட்டித்தந்தார்.
கதையாய்த் தெரிந்திருந்த கம்பகாவியத்துள்,
தூர நடமாடிய பாத்திரங்கள்,
அவர் எழுத்துக்களூடு அருகில் வந்து,
உறவு கொண்டாடின.
இராமனும், இலக்குவனும்,
சீதையும், மண்டோதரியும்,
அனுமனும், அங்கதனும்,
ஐயாவின் எழுத்துக்களால்,
என் உறவுப்பட்டியலுள் ஒட்டிக் கொண்டனர்.
என் உலகம் விரிந்தது.
காலத்தைக் கடந்தேன்.
கல்வியாய்க் கற்ற காவியங்களை,
உணர்வாய் உணர்ந்து உயர முடிந்தது.
ஒலியாய் நின்று ஈர்த்தவர்,
வரியாய் நின்று வளர்த்தெடுத்தார்.
அப்போதும் அவர் வடிவறியேன்.
“நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க”



காலம் எத்துணை அற்புதமானது.
எண்ணத்துள் நின்ற அவ் ஏந்தலை,
கண்ணெதிரே ஒருநாள் காட்டிற்று.
பேச்சாளனாய்ப் பிரகடனஞ் செய்து,
பிள்ளமை பேசித் திரிந்த இப்பேதையை,
அவ்வள்ளல்முன் ஒருநாள் நிறுத்திற்று.
புதுவைக்கம்பன் கழக மேடை.
1989 ஆம் ஆண்டு என்று நினைவு.
‘வியத்தகு வீரர் செறிந்தநாடு எது?’
பட்டிமண்டபத்தில் இலங்கைக்காய் வாதிட்டேன்.
வெளியே ஐயா இருந்தது தெரியாது.
கம்பவாணர் அருணகிரிஐயாவும் அ.ச.ஞா. ஐயாவும்,
ஒன்றாய் வெளியேயிருந்து கேட்டிருக்கிறார்கள்.
‘அயோத்தியிலும், கிஷ்கிந்தையிலும் வாழ்ந்த வீரர்கள்,
தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள்.
அவர்கள் அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
உண்மையைச் சொல்லப்போனால்,
அவர்களுக்கு அந்நாடுகளில் ‘சிற்றிஷன்சிப்’ கூட கிடையாது.
இலங்கை வீரர்கள்தான் மண்ணின் மைந்தர்கள்.
எனவே இலங்கைதான் வியத்தகு வீரர் செறிந்தநாடு’
என்று வாதிட்டேன்.
அதைக்கேட்டுக்கொண்டிருந்த அ.ச.ஞா.ஐயா
‘பலே, பலே எங்கடா இவனைப் புடிச்ச’ என்று,
அருணகிரி ஐயாவிடம் பாராட்டினாராம்.
என் நண்பர்கள் இந்தச் செய்தியைச் சொன்னார்கள்.
ஆனால் நான் மேடையால் இறங்குவதற்கு முன்னரே,
ஐயா போய்விட்டார்.
அ.ச.ஞா. ஐயா என்னைப் பாராட்டினாரா? நம்பமுடியவில்லை.
அன்றிரவு தூக்கம் தொலைத்தேன்.
“மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க”



இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின்தான்,
மீண்டும் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
என் முதல் இலக்கியநூலான ‘அழியாஅழகுக்கு’ ,
அ.ச.ஞா. ஐயாவிடம் முன்னுரை வாங்கவேண்டும் எனும் பேராசை.
சிறுமுயலுக்கு சிங்கத்திடம் முன்னுரை வாங்கும் விருப்பு.
அறியாமை என்று தெரிந்தும் ஆசை துரத்திற்று.
அவர் எழுத்தின் வன்மை தெரிந்திருந்ததால்,
அணுக அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன்.
இலக்கியச்சுடர் இராமலிங்கம்,
அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார்.
நீங்கள் கண்டித்து எழுதினால் கூட,
அதை வெளியிடுவதில் எனக்குப் பெருமை’.
பணிவோடு நான்கூற,
கொடு பார்க்கலாம்’ அதிகம் பேச்சின்றி வாங்கிக்கொண்டார்.
பாதங்களில் சமர்ப்பித்து வந்துவிட்டேன்.
ஏதோ ஒரு சம்பிரதாய முன்னுரை வருமென்று நினைத்திருத்த எனக்கு,
பெரும் ஆச்சரியம்.
பல பக்கங்களில் ஒரு முன்னுரை வந்து சேர்ந்தது.
நானே நினைக்காத பல நுண்ணிய விடயங்களை,
என் கட்டுரையிலிருந்தே எடுத்துக்காட்டியிருந்தார்.
கட்டுரைகளைப் படித்து அவர் வியந்ததாயும்,
ஒவ்வொரு கட்டுரையாகப்படித்து முன்னுரை எழுதியதாயும்,
பின் கேள்விப்பட்டேன்.
‘வசிட்டர்வாயால் பிரம்மரிஷிப்பட்டம்’
பிறவிப்பயன் எய்தினேன் !
அதுமட்டுமல்ல,
அக்கருணைக்கடல்,
வானதிபதிப்பகத்தாருடன் தொலைபேசியில் தானே தொடர்புகொண்டு,
அந்நூலைப் பதிப்பிக்கவும் ஒழுங்கு செய்தது.
அவ் அறிவுக்கடலின் அன்புக்கு ஆளானேன்.
“கண்ணால் யானும் கண்டேன் காண்க”



என்முன்னைத் தவப்பயன்,
என்னை அத்தமிழ்முனியின் தயவுக்கு ஆளாக்கிற்று.
பிறகென்ன?
ஒவ்வொரு இந்தியப் பயணத்திலும்,
அத்தெய்வத்தரிசனம் திகட்டாமற் கிட்டிற்று.
குழந்தைபோல எங்களைக்கண்டதும் மகிழ்வார்.
எங்கே சாக்லேற்?’ அப்பேராசான் பிள்ளையாய்ச் சிரிப்பார்.
என்னோடு அத்தெய்வத்தைத் தரிசித்தார் பலர்.
எங்கள் மண்ணின் பிரச்சினையால்,
தமிழ்நாட்டிற்கு அகதியாய் வந்திருந்த,
என்நண்பன் மார்க்கண்டு,
என்னோடு வந்து,
ஐயாவின் தரிசனம் பெற்று அவர் அன்புக்காளாகினார்.
பின் அவர் அணுக்கத்தொண்டரானார்.
அத்தொண்டு ஐயாவின் உயிர்பிரியும்வரை நிகழ்ந்தது.
அருகிருந்து ஐயாவுக்கு தொண்டாற்றும் வாய்ப்பிழந்த எங்களுக்கு,
எங்கள் பிரதிநிதியாய்,
ஒருவர் ஐயாவின் அருகிருந்து தொண்டாற்றியதில்,
எல்லையற்ற திருப்தி.
இன்றும் ‘என்னதவம்செய்தனை’ என்று,
மார்க்கண்டுவை காணும்போதெல்லாம் கேட்டு மகிழ்வேன்.
அக்கேள்வியுள் துளியளவு பொறாமையும் கலந்திருக்கும்.
“நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க”



ஐயாவினுடனான ஒவ்வொரு சந்திப்பையும்,
தனித்தனி கட்டுரையாக்கலாம்.
விரிவஞ்சி சுருக்கவேண்டியிருக்கிறது.
தொடர்ந்த சந்திப்புக்களில் நிகழ்ந்த,
மறக்கமுடியாத சிலவற்றைக் குறித்து,
கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.



அன்புரிமையால் நாம் வேண்ட,
கண்பார்வையற்ற நிலையிலும் அக்கடவுள்,
எங்கள் விழாவில் கலந்து சிறப்பித்தது.
பலதரம் அவரைக்கண்டும், கேட்டும் மகிழ்ந்திருந்த,
எங்கள் இலங்கை மண்,
நீண்டநாட்களின் பின்னான அவர் வருகையால் செழித்தது.
ஈழத்து இலக்கிய உலகிற்கு,
அவர் வருகை புது இரத்தம் ஏற்றிற்று.
எங்கள் மேடையில் நிகழ்ந்த,
அந்த எண்பதுவயதுச் சிங்கத்தின் கர்ச்சனை கேட்டு,
எழுச்சியுறா இதயந்தான் ஏது?
அப்பெருமகனின் வருகையால்,
எங்கள் கழகத்தின் பெருமை வானளாவி உயர்ந்தது.
கற்றோர் மதிக்கும் கண்ணியம் பெற்றது.
“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”



பேசாப்பொருளைப் பேசும் வல்லமையுள்ள அப்பேராசான்,
தன் குருநாதரின் உத்தரவேற்று,
பேசுவதை நிறுத்தியிருந்த நேரம் அது.
இரண்டாம் முறையாக எங்கள் கம்பன் விழாவுக்கு
அழைத்திருந்தேன்.
நான் தான் பேசமாட்டேனே, என்னை ஏன்டா கூப்பிடுற?’ சத்தம் போட்டார்.
தெய்வம் பேச வேண்டுமா? எங்கள் சபையில் இருந்தால் போதாதா?
தங்கள் சந்நிதிமாத்திரையில் அனைத்தும் சிறக்குமே’ பணிந்து வேண்டினேன்.
பைத்தியக்காரா, பைத்தியக்காரா’ சிரித்தபடி என்கோரிக்கையை ஏற்றது அத்தெய்வம்.
அ.ச.ஞா. ஐயாவின் முன்னிலையில் என,
எங்கள் விழா அழைப்பிதழில் அச்சிட்டு மகிழ்ந்தோம்.
விழாப்பார்க்க வந்தவர்களை விட,
ஐயாவைப் பார்க்கவந்தவர்களின் தொகை அம்முறை அதிகமாயிருந்தது.
“சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க”



ஈழம் வந்திருந்தபோது, எனக்கு மட்டுமன்றி,
என் உறவினர்களுக்கும், மாணாக்கருக்கும், நண்பர்களுக்கும்,
அத்தெய்வம் தன்கருணையால் தீட்சை செய்தது.
அம்மகானின் வாயால் உபதேசம் பெற்று உயர்ந்தோம்.
இன்றும் எங்கள் எல்லோருக்கும்,
அவர் தந்த ஆத்மபலமே வாழ்வாம்.
நீளநினைந்திருப்போம்.
“அவன் எனை ஆட்கொண்டருளினன் காண்க”



என் இரண்டாவது நூல் வெளிவந்தது.
நர்மதா பதிப்பகத்தினர் வெளியிட்ட,
பழம்பண்டிதரின் பகிரங்கக்கடிதம்’ எனும் அந்நூலில்,
பலரையும் விமர்சித்துக் கடிதங்கள் வரைந்திருந்தேன்.
அக்கடிதங்களில் ஒன்று அப்போதைய தமிழக முதல்வர்,
ஜெயலலிதாவை விமர்சித்திருந்தது.
அதைப் படித்துவிட்டு,
சரியாத்தான்டா எழுதியிருக்கான். ஆனாலும்,
அவனுக்கு இதனால சங்கடங்கள் வரலாம்.
உடனடியா பதிப்பகத்திற்கு போன் போடு’ என்று சொல்லி,
அந்நூலை வெளியிட்ட நர்மதா பதிப்பக அதிபர் இராமலிங்கம் அவர்களிடம்,
அந்தக்கடிதம் தமிழகப்பிரதிகளில் இருக்கக்கூடாது என்று,
கேட்டுக்கொண்டாராம்.
ஒருபிள்ளைபோல் அத்தெய்வம் என்மேல் காட்டிய அக்கறையை,
மார்க்கண்டு சொல்லக்கேட்டு,
மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.
பிள்ளையாய் எனை நினைத்த அப்பேராசான் அன்பின்,
எல்லை நினைந்து என்இதயம் இப்போதும் கசியும்.
“கருணையின் பெருமை கண்டேன் காண்க”



வேற்றுக் கிரகவாசிகளின் தொடர்புபற்றி,
நம்மிலக்கியங்களில் ஏதேனும் பதிவுண்டா?’ஒருநாள் நான் கேட்க,
என்வாய் மூடுமுன் சிலப்பதிகாரத்திலிருந்து செய்தி தந்தார்.
மரபிலக்கியங்கள் அத்தனையும்,
அம்மகானின் மனதில் பதிவாகியிருந்தன.
நூலகமாய் திகழ்ந்தார் அந்நுண்ணறிவாளர்.
மாறா முதுமையிலும் அவர்தம் மனப்பதிவுகளில்,
சிறுசிதைவும் இருக்கவில்லை.
இளமையிற் கற்ற கல்வியின் ஏற்றம் !
கற்றோர்க்குத்தாம் வரம்பாகிய தலைமையர் அவர்.
“அற்புதன் காண்க”



தெய்வச் சேக்கிழாரிடம்,
அவர் கொண்டிருந்த காதல் எல்லையற்றது.
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சிமையத்தின்,
ஆன்மாவாய்த் திகழ்ந்தார்.
அப்பெரியாரின் அன்பினால்,
ஆராய்ச்சிமைய அரங்கேறும் வாய்ப்புக்கிடைத்தது.
நாம்பேசும் ஒவ்வொரு சொல்லையும் நிறுத்து விமர்சிப்பார்.
முதுமையின் எல்லையில் நின்றுகொண்டு,
கண்ணொளி மறைந்த அந்நிலையிலும்,
சேக்கிழாருக்கு விழா எடுக்க,
அவர் படும்பாட்டைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை காட்டுவார்.
தெய்வச் சேக்கிழாருக்கு,
சிறுஇழுக்கும் வந்துவிடக்கூடாது எனும் சிந்தையால்,
சிறுதவறுக்கும் பதறிப்பரிதவிப்பார்.
அடியார்க்கு அடியார்க்கு, அடியார் இவர்.
தொண்டர்தம்பெருமை சொல்லவும் அரிதே.
“பக்திவலையில் படுவோன் காண்க”



ஐயா ஓர் அதிர்ஷ்டப்பிறவி
தமிழ்க் கடலான தந்தை.
தெய்வத்தன்மைபெற்ற திருத்தாய்.
தடம்பற்றி நடக்கும் தன்னிகரில்லா வாழ்க்கைத்துணை.
பெற்றோரைத் தக்காரென நிரூபிக்கும் எச்சங்கள்.
மாண்புற்ற மாணாக்கர்.
அறிவிலே தெளிவு.
நெஞ்சிலே உறுதி.
அகத்திலே அன்பினோர் வெள்ளம்.
அத்தனையும் அவர்க்கு இறைக்கொடையாய் தானாய் அமைந்தன.
வாழ்வாங்கு வாழ்ந்தார்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டார்.
“தன்னிகரில்லோன்  தானே காண்க”



கட்டுரையை முடிக்குமுன் ஒரு வார்த்தை
கட்டுரையின் சில பகுதிகள்,
என்பெருமை உரைக்குமாற்போல் அமைந்தன.
தற்பெருமையென தக்கார் எள்ளுவர்.
அத்தெய்வத்தின் கருணை உரைக்க,
இக்கடையேனை ஆட்கொண்ட வண்ணம் பாடினேன்.
அக்கருத்துக்கள் அவர்தம் அருட்திறம் உரைப்பன.
இக்கடையேன் அறிவுத்திறம் உரைப்பன அன்றாம்.
அறிக.



 
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.