திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 9: "அன்னவரே எம் கணவர் ஆவார்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 9: "அன்னவரே எம் கணவர் ஆவார்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

பாவையர்கள் எல்லோரும் பக்குவமாய் ஒன்றிணைந்தார்.
ஒன்றான காரணத்தால் உற்சாகம் வளர்ந்தோங்க,
நன்றாகக் குரலெடுத்து நாதன் தன் பெருமைகளை,
சேர்ந்தே இசைக்கின்றார் செய்திகளைக் கேளீர் நீர்!

♢♢

 


தோழி அவள் ஒருத்தி தூயன் அவன் பழமையினை,
சொல்ல நினைந்தே அச்சோதி வடிவானவன் தான்,
காலங்கடந்தென்றும் கணக்கிடவே முடியாத,
கோலங்கடந்து, நற்குறிகடந்து, குணங்கடந்து,
தத்துவங்கள் அத்தனையும் தானே கடந்ததனால்,
தனிப்பெருமை கொண்டேதான், சாலப் பழமையிலும்,
பழமையனாம் என்கின்ற பக்குவத்தைச் சொல நினைந்து,
பரமன் பெருமையினைப் பாடத் தொடங்குகிறாள்.

♢♢


முன்பின் என்கின்ற முறையெல்லாம் காலமெனும்,
தத்துவத்திற்குட்பட்டார் தமக்கே உரியதுவாம்.
ஆண்டவனோ அத்தகைய அருமைமிகு தத்துவங்கள்,
தன்னைக் கடந்தேதான் தனித்திருப்பான் என்பதனை,
சொல்ல நினைந்தாள் அச்சுருதிப் பொருளதனை,
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே!
என்றந்த நங்கையளும் இனிதாய் உரைத்திட்டாள்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

♢♢


மற்றொருத்தி அது கேட்டாள். மனமதுதான் சலித்திட்டாள்.
பரமனைநாம் பழையனெனப் பகர்ந்திட்டால் பாரில் உள,
இளையரெலாம் இவன் நமக்கு இணையாகான் என எண்ணி,
தூரத்தே போய்விடுவார். தூயவனாம் நம் சிவனோ?
புதுமைக்கும் புதுமைகொளும் புகழுடையோன் என உணர்த்த,
எண்ணியவள் பாடுகிறாள். இதயமது கனிந்துருக,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
என்றே அந்நங்கையவள்  இனிமையுறப் பாடிடவே,
முன்னெனினும் பின்னெனினும் முன்னிற்கும் புதுமைமிகு,
காலம் கடந்திட்ட கண்ணுதலான் சிவனாரின்,
நீளப்பெருமையினை நெஞ்சுருகி மங்கையரும்,
ஆழ உணர்ந்து தம் அகம் நெகிழ்ந்து நின்றார்கள்.
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

♢♢


உருகிய அந் நங்கையர்கள் ஓங்காரத்துட்பொருளை,
வேண்டிப் பணிந்து விளம்புகிறார் தம் விருப்பம்.
மங்கையர்கள் நாமெல்லாம் மனத்துன்னை நாயகனாய்,
கொண்டவர்கள் ஆதலினால் கூடும் மனத்தன்பால்
உன் அடிமை கொண்டார்க்கே உளம்பொருந்தி உறவாவோம்.
நாமோ உன் அடியார் நாயகரும் அங்ஙனமே,
ஆனால்த்தான் எங்கள் அகம் மகிழ வாழ்ந்திடலாம்.
உன்னை உளம்பொருத்தி உயிர் உருகும் அடியார்கள்
எம்தம்மைக் கரம்பிடித்து எம் கணவராயிடினோ,
அன்னவரின் தாள் பணிவோம். ஆங்கவர்க்கே உரித்தாகி,
சொன்னவற்றை ஏற்றுத் தொழுதேதான் பணிசெய்வோம்.
எங்கோன் நீ எம்தமக்கு இவையெல்லாம் தருவாயேல்,
என்ன குறைதானும் இலராவோம் எம்பாவாய்!
என்றந்தப் பெண்களெலாம் ஏற்றமுறப் பாடினராம்.
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


♢♢


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


♢♢


ஓதுமணிவாசகனார் ஒப்பரிய சிவனாரை,
வேதமெனக் கொண்டேதான் விளம்புகிற செய்திதனை,
ஒன்பதாம் பாட்டதனுள் உள்நுழைந்து தேடிடலாம்.
வாசகனார் நம்தமக்கு வழங்குகிற உட்பொருளை,
தேடிச்சுவைத்தால்த் தான் தித்திப்பை உணர்ந்திடலாம்.

♢♢


காலம், இடம் என்ற கட்டுக்கள் நம் தமக்கே,
நீலகண்டத்து நிர்மலனார் தத்துவங்கள்,
அத்தனையும் கடந்து அப்பாலே ஒளிர்பவராம்.
தத்துவங்கள் கடந்த தனிப்பொருட்கு மாயையதன்,
வித்தகங்கள் விளையாது. விளங்கிடவும் முடியாது.
தத்துவத்தின் உட்பட்டு தளறுகிற நம்தமக்கே
முன்பின் என்கின்ற முறையெல்லாம் அமைந்திடுமாம்.
காலங் கடந்திருக்கும் கண்ணுதலார் சிவனாரும்,
முன்னென்று நாம் சொல்லும் முதலினிற்கு முதலாவார்.
பின்னென்று உரைத்திடினோ பின்னதற்குப் பின்னாவார்.
காலமிலாக் கடவுளுக்குக் கட்டெதுவும் இல்லையன்றோ!
ஆதலினால் அச்சிவனின் அரும்பெருமை உரைத்திடவே,
முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

என்று மணிவாசகனார் இயம்பிட்டார் இதை உணர்வீர்.
இந்த அடிகளுக்கு இன்னும் பொருள் வேண்டின்,
தத்துவத்தின் உள்நுழைவீர்! தாராளப்பொருள் கொளலாம்.

♢♢

எசமானன் எனும் பொருளில் இங்கேதான் பதிவான,
பிரான் என்ற வார்த்தைதனைப் பெண்கள் உரைக்கின்றார்.
ஆண்டவனை அகத்திருத்தி அடிமைகளாய்த்தமை நினைக்கும்,
மங்கையர்க்கு இறைவனிலோ மாறாத பெருங்காதல்,
கன்னியராய்ப் பணிசெய்யும் காலத்தே சுதந்திரமாய்,
எண்ணம்போல் இறைவர்க்கு ஏவாது பணி செய்தோர்,
பின்னாளில் மணமானால் பிரியமிகும் கணவனது
அன்பான பணி செய்து அவன் விரும்பி உத்தரவு,
தந்தால்த்தான் எம்முடைய தனித்தலைவர் சிவனார்க்கு,
அன்றாடம் செய்கின்ற அரிய பணி செய்திடலாம்.
என்றே நினைந்தவர்கள் ஏங்கிப் பதறுகிறார்.

♢♢

ஆதலினால் சிவனாரின் அடிபணிந்து அவரெல்லாம்
தீதறவே நுண்மதியால் தேர்ந்து வரம் வேண்டுகிறார்.
உனதடியார் ஒருவரையே ஒப்பற்ற மணம் புரியும்.
வரம் தாராய் என்றேதான் வனிதையர்கள் வேண்டுகிறார்.
ஓங்குகிற உனதடியார் உயிர்க்கணவர் ஆயிடிலோ,
அன்னவரின் தாள் பணிவோம். ஆங்கவர்க்கே பாங்காவோம்.
அன்போடு அவர் உவந்து ஆற்றுகிற பணிசெய்வோம்.
என்றுரைத்து நிற்குமவர் எண்ணமது புரிகிறதா?

♢♢

மெய்யடியார் கணவரென மேதினியில் வாய்த்திட்டால்,
அன்னவரும் இறைப்பணியே ஆற்றிடுவார் அவருவந்து,
சொன்ன பணிகளெலாம் சோதியனாம் சிவனாரின்,
வண்ணப்பணியாக வாய்த்திடுமாம் அதனாலே,
ஆண்டவர்க்கும் பணிசெய்து அன்புநிறை கணவர்தம்,
நீண்ட பணியினையும் நிறைவாகச் செய்திடலாம்.
ஒரு கல்லில் இருமாங்காய்  ஒன்றாகக் கிடைப்பதற்கு,
நங்கையர்கள் வரம் வேண்டும் நயமதனை உணர்ந்தீரோ?

♢♢

பாடிவரும் நங்கையரின் பண்பான வேண்டுதலில்,
பக்தியதும் இல்லறத்தின் பண்பதுவும் முரணின்றி,
ஒத்திருக்கும் இயல்புணர்ந்து உள்ளம் உவந்திடுவீர்!
வாசகனார் இப்பாட்டின் வரிகளிலே மங்கையரின்,
உள்ளமதை மட்டும்தான் உரைத்தாரா? அற்றன்று,
முத்திநிலை பெற்றுயர்ந்த முனிவர்க்கும் அடிசேர,
சங்கமத்தின் தேவைதனை சால உரைக்கின்றார்.
என்றுணர்ந்தால் இவ்வடியின் ஏற்றமதை அறிந்திடலாம்.
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து

♢♢

தொண்டியற்றும் பரிசதனை தொழுதேதான் வரமாக,
விண்டுரைத்து நிற்கின்ற விழியதனில் மான்கொண்டார்.
மெய்யடியார் கணவனென மேதினியில் வாய்த்திட்டால்,
என்னகுறையுமிலோம் என்றேதான் உரைப்பதனை,
நன்று கவனித்தல் நம்கடமை உணர்வீர் நீர்!
அடியார்கள் தாள்பற்றி ஆண்டவனை அடைகின்ற,
நெடியதுவாம் வழியதனை  நெஞ்சத்துள் சேர்ப்பிக்க,
வாசகனார் கையாளும் வளமான உத்தியிது.
அடியாரின் தாள்தொட்டால் ஆண்டவனின் தாள் தொடலாம்,
ஆண்டவனின் தாள்தொட்டால் யாண்டும் இடும்பை இல.
வள்ளுவனார் அடிநினைந்து வாசகனார் உரைக்கின்ற,
என்னகுறையுமிலோம் எனும் அடியை நீர் உணர்வீர்.
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


♢♢

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.