நல்லவர்கள் உள்ளமெலாம் கோயில் கொண்டான்! | அமரர் வி. கைலாசபிள்ளை அஞ்சலிக்கவிதை

நல்லவர்கள் உள்ளமெலாம் கோயில் கொண்டான்! | அமரர் வி. கைலாசபிள்ளை அஞ்சலிக்கவிதை
 
லகனைத்தும் தன் வீடாய் உணர்ந்து நின்றே
        ஒப்பற்ற பெரும் அறங்கள் செய்த வேந்தன்
நில உலகை விட்டின்று விண்ணைச் சேர்ந்தான்
        நெஞ்சமெலாம் கருகிடவே சோர்ந்து நின்றோம்.
தலமதனில் தன் உழைப்பால்; சேர்த்த செல்வம்
        தனதென்று நினையாமல் பலருக்கீந்து
திலகமென எம்மண்ணில் திகழ்ந்து நின்ற
        தெய்வத்துக் கொப்பானான் பிரிந்துபோனான்.
 

எள்ளளவாய்க் கேட்டேதான் இரந்து நின்ற
        ஏழைகட்கு இனி வறுமை இன்றிப்போக
பள்ளமதில் பாய்கின்ற வெள்ளம் போல
        பலகொடுத்து அவர் துயரைத் தீர்த்த தெய்வம்
கள்ளமிலா உள்ளமதால் கனிந்து நின்று
        கண்ணெனவே அறம் அனைத்தும் காத்த தெய்வம்
நல்லவர்கள் உள்ளமெலாம் கோயில் கொண்டான்
        நனி சிறக்க விண்ணவர்க்கும் ஈயச் சென்றான்.

எங்களது கழகமதை இதயந்தன்னில்
        எப்போதும் வைத்தேதான் காத்து என்றும்
தங்களது பிள்ளைகளாய் எமையும் ஏற்று
        தயவோடு எம் முதுகை நிமிரச்செய்தோன்.
பொங்குகிற கருணையதால் புவியில் வாழும்
        புண்பட்டு நின்றோரைப் புரந்து நின்ற
பங்கமிலாப் பெரும்புகழோன் பாரை நீத்தான்.
        பற்றெமக்கு எவரென்று பலரும் வேர்த்தார்.

அன்போடு கதியிழந்த சிறுவர்க்கெல்லாம்
        ஆலமரம் போல் நின்று நிழல்கள் செய்தோன்
பண்போடு அவர்தம்மை தங்கள் இல்லின்
        பாலரென நினைந்தேதான் பற்றும் வைத்தே
நண்போடு அவர்துயரம் துடைத்து நின்றோன்
        நல்வாழ்வு அவர்க்கீந்து நலன்கள் செய்தோன்.
என்போடு உயிர் உருகி அவர்களெல்லாம்
        ஏங்கி அழ விண்சேர்ந்தான் இதயம் நோக.

சிவனவனை  தன்  உறவாய்ச்   சேர்த்து   நின்று
        சிந்தையிலே  எப்போதும்  வைத்த  அன்பன்
அவனருளால்   தன்  வாழ்வும்    வாய்த்ததென்றே
        ஆலயங்கள்  பல செய்து மகிழ்ந்த அன்பன்
தவமதனால் ஈழமதில் வந்து வாய்த்த
        தன்னிகரில்லாக்   கேதீச்சரத்தான்    கோயில்
நவமுறவே   கற்பணிகள்   செய்த   அண்ணல்
        நாதன்தாள் தொழுதற்காய் விண்ணைச் சேர்ந்தான் .

எப்போதும் மற்றவரை நினைந்து வாழ்ந்தோன்
        இதயமதில் ஏழைகளை வைத்து வாழ்ந்தோன்
முப்போதும் சிவனடியை மனதுள் வைத்து
        முழுநேரம் தொண்டாற்றி மகிழ்ந்து வாழ்ந்தோன்
தப்பேதும் செய்யாதே பழிகள் சூழ
        தவமெனவே அவைகடந்து தனித்து வாழ்ந்தோன்
இப்போது இறைவன் அடி சேர்ந்து நின்றான்.
        இதயமெலாம் இறையெனவே பதிந்து நின்றான்.
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்
                   ***
செகம் போற்றும் உம் பணிகள் சான்றாய் நிற்கும் !

தருமமெலாம் ஒன்றிணைந்து தரணி நீங்கி
        தனியிடத்தில் ஒதுங்கியதோ தனித்து ஏங்கி
பெருவிருட்சம் என இருந்த பெரிய உந்தன்
        பெரியதுவாம்  இழப்பாலே வெந்தோம் இன்று
அருகிருந்து ஆற்றிய பேர் அறங்கள் எல்லாம்
        அந்தரித்து அரற்றுவதை என்ன என்பேன் ?
தருவளத்தால் தங்க நிகர் பணிகள் ஈந்து
        தரணிக்காய் வாழ்ந்த பெரும் தகையே போற்றி

இரக்கமொடு இணை பிரியா ஏந்தல் உம்மை
        இழப்பதற்கு என்ன குறை செய்தோம் சொல்லும்
வருத்தமொடு வாழ்வது தான் வரமோ இங்கு
        வற்றாத அறங்கூட வதங்கிப் போச்சே
நிரதமெமை அணைத்து நின்று நேசம் செய்து
        நீங்காத அன்புரிமை காத்த செம்மல்
பெருவலிகள் எமக்கீந்து பேயர்ந்து பேனான்
        பேதுற்றோம் என நாங்கள் துவண்டு போனோம்

கம்பனவன்  கழகமதை  காதல்  பொங்கக்
        காதலித்துக்  காதலித்துக்  காத்த  வள்ளல்
தம்பெரிய கொடையதனால்  தாழ்வு  நீக்கி
        தரம் பேணி எமை  வளர்த்த  நிமிர்ந்த  நெஞ்சன்
அம் புவியின்  அருமந்த  வாழ்வினாலே
        அமரர்க்கு அதி  விருந்தாய்  ஆன  அண்ணல்
செம் பொருள் சேர் தமிழ்க் கவியாய் நிலைத்து வாழ்வீர்

        செகம் போற்றும் உம் பணிகள் சான்றாய் நிற்கும்
-அ. வாசுதேவா
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.