வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 5 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 5 |  கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 20 Feb 2017
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்களில் சிலருக்குக் கோபம் அதிகரிப்பதை,
கட்டுரை பற்றி வரும் கருத்துப்பதிவுகள் தெளிவாய் எடுத்துக் காட்டுகின்றன.
வர்ணாச்சிரம தர்மத்தையும் அந்தணர்களையும் அவர்களின் ஜாதிச் செருக்கையும்,
சிலர் வாங்குவாங்கென்று வாங்கித் தள்ளியிருக்கிறார்கள்.
அதைப்பற்றி எழுதும், என்மீதான ஏவுகணைகளுக்கும் குறைவில்லை.
மரியாதையாகவும் மரியாதையின்றியும் வந்த அவ் அபிப்பிராயங்களை,
உகரத்தில் இணைத்துக் கொள்ளும்படி ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன்.
ஒரு விடயம்.
என்னைத் திட்டுவதுபற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.
ஒவ்வொருவரின் உயர்வும் தாழ்வும் அவரவரால் மட்டுமே நிகழ்வன எனும் கருத்தில்,
அசையாத நம்பிக்கையுள்ளவன் நான்.
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்
என்கிறார் திருவள்ளுவர்.
என்னுடைய கவலையெல்லாம் என்னை இழிவுபடுத்துவதாய் நினைந்து,
எழுதப்படும் தரமற்ற வார்த்தைப் பிரயோகங்களால்,
உங்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்களே என்பது பற்றித்தான்!
என்னைத் தாழ்த்துவதற்காக உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 

♦  ♦

பலரும் அந்தணர்களின் ஜாதிவெறியால் அதிகம் பாதிப்புற்றிருப்பது தெரிகிறது.
அங்ஙனம் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டவர்கள்,
நான் ஏதோ அந்தணர்களைக் காக்க முயல்வதாய் எண்ணி என்மீதும் பாய்கிறார்கள்.
முன்பு சொன்ன ஒன்றையே  மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
அந்தணர்களைப் பாதுகாப்பதோ உயர்த்துவதோ இக்கட்டுரைத் தொடரின் நோக்கமல்ல.
குறித்த ஒரு தத்துவத்தைப் பின்பற்றியவர்கள் பிழை செய்தார்கள் என்பதற்காக,
அத்தத்துவத்தையே நிராகரிக்கவேண்டுமென்றால்,
உலகத்தில் ஒரு தத்துவமும் மிஞ்சப்போவதில்லை.
வர்ணாச்சிரம தர்ம தத்துவத்தின் நியாயம் உரைப்பதே,
எனது இக்கட்டுரையின் நோக்கம் என்று அறிக.

♦  ♦

வந்த கருத்துக்களில் முக்கியமான கேள்விகள் இரண்டு இருந்தன.
ஒன்று பியோன் மனேஜராகலாம். சூத்திரன் பிராமணனாகலாமா? என்பது.
அதற்கான பதிலை இக்கட்டுரைத் தொடர் பின்னர் உரைக்கும்.
அடுத்தது மற்ற ஜாதியினரை அங்கீகரிக்காத அந்தணஜாதியின் திமிர் பற்றியது.
அக்கேள்வியின் நியாயத்தையும் நிஜத்தையும் யாரும் மறுதலிக்க முடியாதென்பது நிச்சயம்.
ஆனால் இதைப்பற்றி கொந்தளிப்பவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டியே இருக்கிறது.
தனக்குக் கீழ்பட்ட ஜாதியினரை அங்கீகரிக்காத வக்கிரம்,
அந்தணஜாதியிடம் மட்டும் தானா இருக்கிறது?
அந்தணர்களைக் குறை சொல்லும் மற்றைய ஜாதியினர்,
தமக்குக் கீழுள்ள வேறு ஜாதியினரை அங்கீகரித்து அணைத்து வாழ்கிறார்களா?
கொந்தளித்து எழுதுகிறவர்கள் உண்மைக்கு மாறில்லாமல் தம் நெஞ்சில் கைவைத்து,
 ‘ஆம்’ என்ற பதிலை உறுதியாய்ச் சொல்லிவிடுவார்களேயானால்,
இக்கட்டுரைத் தொடரை இந்த அளவோடு நிறுத்திவிடுகிறேன்.

♦  ♦

ஒரு பியோன் மனேஜராய் வரலாம் என்பது நிஜமே.
ஆனால் இன்றைய வளர்ச்சி நிலையிலும் எந்த மனேஜரும்,
ஒரு பியோன் தனக்குச் சமமாய் வளர்வதை,
அடிமனதில் ரசிப்பதில்லை எனும் உண்மையையும்,
நாம் உணர்ந்தேயாகவேண்டும்.
வலியது மெலியதை விழுங்குதல் உலகியற்கை.
அரசியல், அதிகாரம், ஜாதி, சமயம் என எல்லாவற்றிலும்,
வலியது மெலியதை விழுங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
அதை மாற்ற வழியில்லையா? என்று கேட்பீர்கள்.
ஒரே ஒரு வழி இருக்கிறது.
மெலியது தன்னை வலியதாய் ஆக்கிக்கொள்வதே அவ்வழி!
அங்ஙனம் ஆக்கிக்கொண்டாலும் ஒரு பிரச்சினை இருக்கிறது.
வலியதாய் ஆனது தன் வலிமையைத் தொடர்ந்தும் நிலைநிறுத்த,
மெலியதை விழுங்குதல் தவிர்க்கமுடியாத ஒன்றேயாம்.
சரி நாங்கள் விடயத்தைத் தொடர்வோம்.

♦  ♦

அறம் உரைப்பதற்காக,
பலர் கூடிவாழும் ஒரு சமூகத்தையும்,
அச்சமூகத்தில் வாழும் ஒரு மனிதனின் தனிவாழ்வையும்  கூறுபடுத்தி,
சமூகத்தின் நலம் நோக்கி நம் மேலோர் வகுத்த வகுப்பே வர்ணாச்சிரமதர்மம் என்றும்,
அவர்களால் வகுக்கப்பட்ட சமூகப்பிரிவுகள் வர்ணங்கள் எனப்பட்டன என்றும்,
தனிமனிதவாழ்வுப் பிரிவுகள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன என்றும்,
அப்பிரிவுகளை அடிப்படையாய்க் கொண்டு சொல்லப்பட்ட தர்மமே,
வர்ணாச்சிரமதர்மம் என்றும் போன அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.
அந்த இடத்திலிருந்து தொடருவோம்.

♦  ♦

முதலில் ‘ஆச்சிரமம்’ என்று சொல்லப்படும்,
தனிமனித வாழ்வுப்பிரிவுகள் எங்ஙனம் பிரிக்கப்பட்டன என்று,
சற்று விரிவாய்ச் சொல்கிறேன்.
அதனைப் பொறுமை காத்து நீங்கள் கேட்கவேண்டும்.
தனிமனித வாழ்வுக்காலத்தை ஊன்றி அவதானித்த நம்மேலோர்,
அவ்வாழ்வின் பகுதிகளாய் நான்கு பெரும்பிரிவுகள் அடங்கியிருப்பதை இனங்கண்டனர்.
அவற்றையே தனிமனிதவாழ்வின் கூறுகளாய் அவர்கள் வகுத்துரைத்தனர்.

♦  ♦

அவர்கள் கவனிப்பில்,
ஒரு மனிதனின் ஆரம்பவாழ்வுக் காலம் கற்கும் காலமாய் அமைந்திருந்தது.
ஏதோ ஒரு விடயத்தைத் அறிந்துகொண்டு அவ்விடயத்தில் ஆட்சிபெற்று,
அதனால் வாழ்வியல் உபாயமொன்றைத் தேடிக்கொள்ள மனிதன் முயன்றான்.
அம் முயற்சிக்காலமே கற்கும்காலம் என உரைக்கப்பட்டது.
அந்த கற்கும் பருவத்தையே,
பிரம்மச்சரியம் அல்லது மாணவப் பருவம் எனப் பெயரிட்டு,
தனிமனித வாழ்வின் முதற்கூறாய் உரைத்தனர் உயர்ந்தோர்.

♦  ♦

பிரம்மச்சரியப் பருவத்தில் பெற்றுக்கொண்ட கல்வியால்,
தன்னைத்தான் காத்துவாழும் தகுதிபெற்ற ஒருவன்,
அந்நிலையில், தனக்கான சமூகப் பிரதிநிதித்துவத்தை,
விரும்பி, வேண்டி நிற்கத் தலைப்பட்டான்.
அதற்கு முன் அப்பிரதிநிதித்துவம் அவனுக்கு இல்லையா? என்று கேட்பீர்கள்.
இல்லை! என்பதே பதிலாம்.
கற்கும் பருவத்தில் மற்றவர்களில் தங்கி இயங்கவேண்டி இருந்ததாலும்,
இளமையால் அறிவு முதிர்ச்சி பெறாதிருந்ததாலுமே,
அன்று கற்கும் பருவத்தினர்க்கு சமூகப்பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்தது.
அன்று என்ன? இன்றும் அதுவேதான் நடக்கிறது.
இளமைப்பருவம் முடியும் நிலையில்த்தான்,
ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுவதிலிருந்தே,
மாணவப்பருவத்தின் பின்னர்தான் சமூகப்பிரதிநிதித்துவம்,
இன்றும் வழங்கப்படுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

♦  ♦

முதற்சொன்ன கற்கும் காலத்தில் ஒருவனின் பாலப்பருவம் நீங்கிப்போக,
சமூகப்பிரதிநிதித்துவம் பெறவேண்டி நிற்கும் இப்பருவத்தில்,
அவனது வாழ்வு இளமையைத் தொடுகிறது.
அவ் இளமை தந்த இயல்பான காமவிருப்பும்,
சமூகவாழ்வுக்கான துணையின் அவசியமும் ஒருங்குசேர,
இயற்கையேயான மனஈர்ப்பால் அவன் எதிர்ப்பாலிற் துணைதேடி,
தனது சமூகவாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.
அங்ஙனம் துணையோடு இணைந்து அவன் தொடங்கும் சமூகவாழ்வு,
கிருகஸ்தம் அல்லது இல்லறம் எனும் பெயரால்,
தனிமனிதவாழ்வின் இரண்டாம் நிலையாய் உரைக்கப்பட்டது.

♦  ♦

இல்லறவாழ்வின் பயனாய்,
புதல்வர்களையும், சமூக அனுபவங்களையும் பெற்றுக்கொண்ட ஒருவன்,
முதுமையைத் தொடும் தன்வாழ்வின் அடுத்த பருவத்தை எய்துகிறான்.
முதுமை தரும் உடற்சோர்வும்,
சமூகச்செயற்பாட்டின் தொடர் நடவடிக்கைகளால் ஏற்பட்ட களைப்பும்,
பிரம்மச்சரியப் பருவம் கடந்த தனது புதல்வர்களின் சமூகவாழ்வில் பங்கேற்கும் விருப்பும்,
இவ்வயதில் அவனுக்கு ஒருங்கே நிகழ,
தம் புதல்வர்களை இல்வாழ்வுக்காக்கி,
சமூகப் பொறுப்புக்களையும் இல்லப்பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்து,
இல்லில் இருந்தபடியே தன் வாழ்க்கைத்துணையோடு,
உலகியலிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெற்று வாழத்தலைப்படுகிறான் அவன்.
தனிமனிதவாழ்வின் இம்மூன்றாம் நிலையே,
வானப்பிரஸ்தம் என உயர்ந்தோரால் வகுத்துரைக்கப்பட்டது.

♦  ♦

மேற்சொன்ன இம்மூன்று பிரிவுகளிலும்,
பெரும்பான்மையானோரின் தனிவாழ்வு அடங்கிப்போக,
விதிவிலக்காய் ஒரு சிலர்
வானப்பிரஸ்தம் எனும் ஓய்வுநிலையிலிருந்து சற்று மேலேறி,
முற்றாய்த் தனிமனிதவாழ்வு, சமூகவாழ்வு என்பவற்றை ஒதுக்கி,
ஆன்மா என்ற ஒன்றைத் தம்முள் இனங்கண்டு,
அதன் வளர்ச்சியாய் இறை என்ற ஒரு சக்தியை உணர்ந்து,
அவ் இறைநிலை எய்துதலே பேரின்பம் என்றறிந்து,
அவ் இறைநிலை எய்துதற்கு,
இவ்வுலகியலை முற்றாய்த் துறக்கத் தலைப்பட்டனர்.
அங்ஙனம் உலகியலைத் துறந்து நின்ற அவர்கள்,
சமூக எண்ணிக்கையில் சிறு பகுதியினராய் இருந்த போதும்,
மேற்கூறிய தனிமனிதவாழ்வின் மூன்று நிலையையும்,
அவர்கள் வாழ்வுநிலை கடந்திருந்ததால்,
தனிமனிதவாழ்வின் ஓர் தனித்த நிலையாய்,
அவர்தம் வாழ்வுநிலையை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அங்ஙனம் இனங்காணப்பட்ட முற்றும் துறந்துநின்ற அத்தனிமனித வாழ்வுநிலையையே,
சந்நியாசம் அல்லது துறவு  என்ற பெயரால் உரைத்து,
தனிமனிதவாழ்வின் நான்காம் பிரிவாய் ஏற்றனர் நம் பெரியோர்.

♦  ♦

பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற,
இந்த நான்கு பிரிவுகளினுள் ஒரு தனிமனிதனின் வாழ்வு ஒட்டுமொத்தமாய் அடங்கிப்போக,
இந்நான்கு பிரிவுகளையும் தனிமனித வாழ்வின் அடிப்படைப் பிரிவுகளாக்கி,
அப்பிரிவுகளுக்கு ஆச்சிரமம் எனப் பெயரிட்டனர் நம் ஆன்றோர்.
இதுவே ஆச்சிரமப்பிரிவு அமைந்த அடிப்படையாம்.

♦  ♦

என்ன? கோபம் கொப்பளித்த உங்கள் விழிகளில்,
சிறிய சாந்த ஒளி தெரியுமாப்போல் தோன்றுகிறதே!
முதல்முதலாய் ஆச்சிரமப் பிரிவுகளின் அடிப்படையைத் தெரிந்துகொண்ட திருப்தியாக்கும்.
உண்மைதான். ஆழ்ந்தவிஷயங்கள் அறிவுள் ஏறும்போது விழியில் ஒளி வரத்தான் செய்யும்.
இதுவரை சொந்தப் பாதிப்புக்களை மட்டும் வைத்து வர்ணாச்சிரம தர்மத்தை வெறுத்த உங்களுக்கு,
உண்மை ஆச்சிரமதர்ம விளக்கத்தால் சுகானுபவம் ஏற்படுகிறது போல.
சந்தோஷம்! இன்னும் கொஞ்சம் கேட்பீர்கள்போல் தெரிகிறது.
வேண்டுமானால் ஒரு தேநீர் குடித்துவிட்டு வாருங்கள் தொடரலாம்!

♦  ♦

என்ன? தேநீர் கோப்பையோடு இங்கேயே வந்துவிட்டீர்கள்.
இதுதான் ஐயா உண்மையின் ஆற்றல்.
உங்களுக்கும் உண்மையில் ருசி ஏற்பட்டத் தொடங்கிவிட்டது.
மெத்தச் சந்தோஷம். இனி என் வேலை சுலபமாகிவிடும்.
வாருங்கள் விஷயத்தைத் தொடர்வோம்.

♦  ♦

இதுவரை தனிமனித வாழ்வின் நான்கு பிரிவுகள் பற்றி விளக்கினேன்.
இனி சமூகவாழ்வின் நான்கு பிரிவுகளையும்,
நம் பெரியோர் எங்ஙனம் வகுத்தனர் என்பது பற்றிச் சொல்கிறேன்.

♦  ♦

சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட மனிதர்கள்,
வாழ்வின் தேவைகளை நிறைவேற்றும் தேடலில் இறங்கினார்கள்.
அத்தேடலின் முதற்படியாய்  உற்பத்தி அமைந்தது.
ஜீவாதாரவாழ்வு நிலைத்தற்குத் தேவையான அடிப்படைப்பொருட்கள் அனைத்தும்,
சமூகத்தின் ஒருகுழுவினரால் உற்பத்தி செய்யப்பட்டன.
இயல்பாய் அவ்வுற்பத்தி செய்யும் வல்லமையும் விருப்பும் உள்ளவர்கள் அப்பணியைத் தமதாக்கினர்.
அக்குழுவினரின் முயற்சியால்,
சமூகத்திற்குத் தேவையான ஆதாரப்பொருட்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டன.
அங்ஙனம் உற்பத்தியைத் தொழிலாய்க் கொண்டவரை,
சமூகப்பிரிவின் முதல் நிலையினராய்க் கொண்டு,
சூத்திரர் என்ற சமூகத்தின் முதற்பிரிவு வகுக்கப்பட்டது.

♦  ♦

தமக்கு வாய்த்த இயல்பான முயற்சியால் சிலர் பலவான பொருட்களை உற்பத்தி செய்த போதும்,
சமூகவாழ்வு தன்னிறைவு அடையவில்லை.
உற்பத்தியாளர்களால் தனித்தனி உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை,
பலரிடமும் சேர்ப்பித்தலின் அவசியம் அப்போது உணரப்பட்டது.
அவ் உணர்ச்சியால்,
உற்பத்திப்பொருள்களை சமூகத்தில் வாழும் அனைவர்க்குமாய் பகிர்ந்தளிக்க,
அப்பகிர்ந்தளித்தலில் இயல்பாற்றல் பொருந்திய ஒருகுழுவினர் முன்வந்தனர்.
உற்பத்தித் திறனுக்கேற்ப விலை நிர்ணயித்து, கொள்வனவு செய்து,
தம் முயற்சிக்கான பலனையும் பெற்று,
பலரும் பலதையும் பெற்றுக்கொள்ளும் வகையில்,
உற்பத்திப் பொருட்களைப் பகிர்ந்து கொடுக்கும் பொறுப்பை அக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
உற்பத்திப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை ஏற்று இயற்ற முன்வந்த,
அவ்விரண்டாம் குழுவினரை உயர்ந்தோர் வைசிகர் அல்லது வணிகர் என்றுரைத்து,
சமூகத்தின் இரண்டாம் பிரிவினராய் அவர்களை அங்கீகரித்தனர்.

♦  ♦

என்ன? தேநீர் அருந்தாமலே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
அது ஆறிவிடப்போகிறது.
சொன்ன பின்பும் குடிப்பதாய்த் தெரியவில்லையே!
அதுதான் ஐயா அறிவின் ஆற்றல்.
இதைத்தான் நம் வள்ளுவப்பாட்டன்,
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றான்.
அக்கூற்றின் உண்மை இப்பொழுது தெரிகிறதா?
ஆனாலும் தேநீர ஆறுவதற்குமுன்னர் அதனில் ஒரு வாயேனும் குடித்துக் கொள்ளுங்கள்.

♦  ♦

சூத்திரர், வைசிகர் என்ற,
சமூகத்தின் இருபிரிவினரைப் பற்றிச் சொன்னேன்.
இனி மூன்றாம் நிலையாளர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
உற்பத்தி செய்யப்பட்டு,
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் பங்கீடு செய்யப்பட்ட நிலையிலும்,
சமூகவாழ்வு பூரணப்படவில்லை.
மனிதர்களின் கூட்டுவாழ்க்கையில் அப்போது ஒரு புதிய பிரச்சினை உருவாகியது.
வலியவர், மெலியவர் என அனைவரும் ஒன்றுசேர்ந்த சமூகத்தில்,
வலியவன், மெலியவனை விழுங்க முற்பட்டான்.
அவ்வலிவும், மெலிவும் உடலளவிலும், செயலளவிலும்,
சமூகத்துள் விரவிக் கிடந்தன.
என்ன புரியவில்லையா?
அதுபற்றி இன்னும் சற்று விளக்கமாய்ச் சொல்லுகிறேன்.

♦  ♦

உடலளவில் வலிமை பெற்றிருந்தவன் முயற்சியேதும் செய்யாமலிருந்து கொண்டு,
தனது உடல் வலிமையால் மெலியவர்களை நசுக்கி தான் வசதியாய் வாழத் தலைப்பட்டான்.
இது உடலளவில் ஏற்பட்ட வலிமை, மெலிமை வேறுபாடு.

♦  ♦

உடலால் வலிமை பெற்றிருந்தவர்கள் போலவே,
உற்பத்தியாளர்களிலும், விநியோகஸ்தர்களிலும்,
தொழிலால் வலிமை பெற்றவர்களும் இருந்தார்கள்.
அத்தொழில் வலிமை கொண்டவர்களும்,
தம்மில் தாழ்ந்தோரை விழுங்கவே முற்பட்டனர்.
விளக்கத்திற்காய் அவ்விடயத்தை இன்னும் சற்று விரிவாய்ச்சொல்கிறேன்.

♦  ♦

உப்பு உற்பத்தியாளன், நெல் உற்பத்தியாளன் எனும் இருவரில்,
நெல் உற்பத்தியாளன் காலத்தாலும், முயற்சியாலும்  அதிகம் பாடுபட்டு,
நெல்லை உற்பத்தி செய்தான்.
உப்பு உற்பத்தியாளன்,
காலத்தாலும், முயற்சியாலும் முன்னையவனை விட சிறிய அளவே பாடுபட்டு,
கடல்நீரைத் தேக்கிய அளவில் உப்பை உற்பத்தி செய்தான்.
உப்பு அனைவர்க்கும் தேவையான ஒரு பொருள்.
குறைந்த முயற்சியோடு உருவாக்கப்பட்ட அப்பொருளை,
தன் உற்பத்திப்பொருளின் ‘தேவை’ எனும் வலிமை நோக்கி,
நெல்லின் விலையை விட அதிகம் உரைத்தான் அவன்.
இந்நிலையையே தொழிலால் வலிமையுற்றநிலை என்றேன்.
சமநிலையற்ற இத்தொழில் வலிமை வேறுபாடு,
உற்பத்தியில் மட்டுமன்றி விநியோகத்திலும் நிகழ்ந்தது.

♦  ♦

வலியவன் மெலியவனை விழுங்க முற்பட்ட இந்நிலையால்,
சமூக சமநிலை குலையமுற்பட  அதனைச் சீர்செய்தற்காய்,
ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பொறுப்பேற்றுக் கட்டுப்படுத்தி நெறிசெய்ய,
சுய ஆற்றல் மிக்க ஓர் நிர்வாகி தேவைப்பட்டான்.
அந்நிர்வாகி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிர்வகித்ததால்,
அவனே அச்சமூகத்தின் தலைவனாய்க் கருதப்பட்டான்.
சமூகத்தின் உள்ளே நிகழ்ந்த பிரச்சினைகளையும்,
வெளியிலிருந்து சமூகத்திற்கு வருவதான பிரச்சினைகளையும் நீக்கி,
சமூகத்தைக் கட்டிக்காத்து சமநிலைப்படுத்தும் பொறுப்பு,
அந்நிர்வாகியிடம் விடப்பட்டது.
வலியவர்களால் சமூகம் விழுங்கப்படாமலிருக்க,
தனக்கு ஆறு அங்கங்களை உருவாக்கி தன்னைப் பலப்படுத்தி,
ஒட்டு மொத்த சமூகத்தையும் தன் காவலுக்குள்  உட்படுத்தி நின்றான் அந்நிர்வாகி.
தம்மைக் காக்கவென அந்நிர்வாகி செய்த முயற்சிகளுக்காய்,
சமூகத்தின் அனைத்துப பகுதியினரும் ‘வரி’ என்ற பெயரில்,
தம் வருமானத்தின் ஒரு பகுதியை அவனுக்கு ஈந்து துணை செய்ய முன்வந்தனர்.
உற்பத்தி, விநியோகம் என்ற இருநிலைகளையும் தாண்டி,
சமூக அமைப்புக்கு அவசியமாய் அமைந்த இந் நிர்வாகத்தை,
தம் இயல்பாற்றலாலும் விருப்பாலும் சமூகத்தின் ஒரு குழுவினர் செய்யத் தலைப்பட்டனர்.
இங்ஙனம் நிர்வாகத்தை இயற்ற முன்வந்தோரை,
சமூகத்தின் மூன்றாம் நிலையாளராய்க் கொண்டு,
சத்திரியர் அல்லது அரசர் எனும் சமூகத்தின் அடுத்த நிலை வகுக்கப்பட்டது.

♦  ♦

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் என்ற,
மூன்றுநிலைகளில் சமூக அமைப்பு ஓரளவு பூரணப்பட்டாலும்,
அதன் முழுமைக்கு மற்றொரு சமூகக்கூறும் வேண்டப்பட்டது.
உற்பத்தி, விநியோகம், நிர்வாகம்  என்ற விடயங்களைப் பொறுப்பேற்றோர்,
கால வளர்ச்சிக்கேற்ப தத்தம் துறைகளைப் புதுப்பிக்கும் அவசியம் உணர்ந்தனர்.
தாம்தாம் பொறுப்பேற்ற விடயங்களில் அவர்கள் மூழ்கவேண்டியிருந்ததால்,
தத்தம் துறைகளை வளர்த்தெடுக்கத் தேவையான கல்வியறிவினைப் பெறும் வாய்ப்பை,
அவர்கள் இழந்து நின்றனர்.
இந்நிலையில் இயல்பாகவே கற்கும் ஆற்றல்  நிறைந்த ஒரு குழுவினர்,
ஆழ்ந்து கற்று மற்றையோர் துறைகளை வளர்ச்சிப் பாதையில் செலுத்தத் தாமாக முன்வந்தனர்.
அங்ஙனம் உற்பத்தியாளன், விநியோகஸ்தன், நிர்வாகி எனும்,
மேற்சொன்ன மூன்று சமூக நிலையினரையும் உயர்விக்க முன்வந்த கல்வியாளன்,
அனைவர்க்கும் துணை புரிந்து நின்றதால் சமூகத்தில் முக்கியப்படுத்தப்பட்டான்.
தம் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவனுக்கு,
மற்றை மூன்று வர்ணத்தாரும் தானம் என்ற பெயரில் நன்கொடைகளை வழங்கி,
அறிவுத்தேடலையே தம் வாழ்வின் முழுநேர வேலையாக்கி அவன் இயங்க வழி சமைத்தனர்.
அறிவுத்தேடலையே தம் வாழ்வாக்கி,
ஒட்டுமொத்தச் சமூகத்தின் உயர்வுநோக்கிச் செயற்படத் தொடங்கிய அக்குழுவினரை,
சமூகத்தின் நான்காம் நிலையினராக்கி,
அந்தணர் அல்லது பிராமணர் என வகுத்துரைத்தனர் நம் ஆன்றோர்.

♦  ♦

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்னும் நாற்கூறில்,
ஒட்டுமொத்த சமூகஅமைப்பும் உள்ளடங்குதலைக் கொண்டே,
சூத்திரன், வைசிகன், சத்திரியன், பிராமணன் எனும்,
இந்நான்கு வர்ணங்களும் வகுக்கப்பட்டன.
இதுவே வர்ணஅமைப்பு தோன்றியதன் அடிப்படையாம்.

♦  ♦

சென்றமுறை கருத்து எழுதிய ஓர் அன்பர்,
ஆச்சிரமதர்மம் இயற்கை என்றும்,
வர்ணதர்மம் செயற்கை என்றும் எழுதியிருந்தார்.
வயது மாற்றத்தால் இயற்கையாக வரும் வாழ்வு மாற்றப் பிரிவுகளே,
ஆச்சிரமங்கள் என்பதால் அதனை இயற்கை என்றும்,
உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்பவற்றை,
அடிப்படையாகக் கொண்ட வர்ணப்பிரிவுகளை நாமாக வகுத்துக் கொள்வதால்,
அதனை செயற்கை என்றும் கருதி,
அங்ஙனம் அவ் அன்பர் எழுதினார் போலும்.
ஆனால் எப்படி ஆச்சிரமப்பிரிவுகள் இயல்பாய் அமைந்தனவோ,
அதே போலத்தான் வர்ணப்பிரிவுகளும் அவரவர் ஆற்றலுக்கேற்ப இயல்பாய் அமைகின்றன.
உற்பத்தித்திறனோ, விநியோகத்திறனோ, நிர்வாகத்திறனோ, அறிவுத்திறனோ,
பிறக்கும் போதே ஒருவனுக்கு இயல்பாக அமைந்து விடுகிறது.
சமுதாயத்தைச் சற்றுக் கூர்ந்து கவனிப்பீர்களோயானால்,
இவ் உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் வர்ணப்பிரிவும் இயற்கையின் விளைவே என நாம் அறிதல் வேண்டும்.

♦  ♦

பிறக்கும் ஜாதியால் அன்றி வாய்க்கும் இயல்பாற்றலினாலேயே ஒருவர்,
எந்த வர்ணத்திற்குரியவர் என இனங்காணப்படுகிறார்.
இசைவேளாளர் மரபில் வந்த கலைஞர் கருணாநிதி அவர்களும்,
அந்தணர் மரபில் வந்த ராஜாஜி அவர்களும்,
வணிகர் மரபில் வந்த முன்னைய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அவர்களும்,
பிறந்த குலத்தால் கணிக்கப்படாமல் அவர்தம் இயல்பாற்றலால் கணிக்கப்பட்டு,
சத்திரிய நிலை எய்தி தலைவர்களாய் நின்றமை இதற்காம் சான்றாம்.

♦  ♦

என்ன? ரொம்பத்தான் களைத்துப்போய்விட்டீர்கள் போல,
ஆறினாலும் பரவாயில்லை கொஞ்சம் தேநீரைக் குடித்துக் கொள்ளுங்கள்.
வேண்டுமானால் ஒருதரம் முகத்தைக்கூட கழுவிவிட்டுக் கூடவரலாம்.
முறைசார் வழியில் மேலோட்டக்கல்வியை இதுவரை பயின்று வந்த உங்களுக்கு,
புத்திக்களைப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்காது.
இப்போது அதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.
இன்னும் அதிகம் உங்களைச் சிரமப்படுத்துவது நியாயமல்ல.
வர்ணம் என்றால் என்ன?
ஆச்சிரமம் என்றால் என்ன? என்று,
இப்போது உங்களுக்கு ஓரளவு விளங்கியிருக்கும்.
என்ன? உங்களில் சிலருக்கு இன்னும் முகத்தில் தெளிவைக்காணோம்.
இதுவும் புரியவில்லையா?
விளங்காத வார்த்தைகளில் விளங்காத விஷயத்தை விளங்காத விதத்தில்,
விளங்காத புதுமையாளர்கள் விளக்கினால் மட்டும்,
விளங்காமலே விளங்கியவர்கள்போல்,
தலையாட்டிப் பழகிய உங்களுக்கு இது மட்டும் விளங்கவில்லையாக்கும்.
இதுவும் விளங்காதபட்சத்தில்,
உங்களுக்கு இக்கட்டுரையை வாசிப்பதற்கான முன்னறிவு இல்லையென்றுதான் அர்த்தம்.
அப்படிப்பட்டவர்கள் இக்கட்டுரை வாசிப்பை இந்த அளவோடு விட்டுவிடலாம்.

♦  ♦

வருணாச்சிரமம் என்றால் என்னவென்று சொல்லிவிட்டேன்.
அதனோடு தர்மம் என்ற சொல் இணைக்கப்பட்ட காரணத்தை இனிச்சொல்கிறேன்.
நீங்கள் பயப்படாதீர்கள்! இப்போது இதற்குமேல் உங்களைக் கஷ்டப்படுத்த,
நான் ஒன்றும் மனச்சாட்சி இல்லாதவன் இல்லை.
அந்த விடயத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
 

-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.