நான், இனி நாத்திகன் -ஸ்ரீ. பிரசாந்தன்
கவிதை முற்றம் 26 May 2019
கருணைகொண்ட அக்கடவுள் பேரிலா
கரத்தில் ஆயுதம் தாங்கிக் கொள்வது?
சிறுவர்மீதுதாம் மோதிக் கொல்வது?
சிறந்த உடல்களைச் சிதறச் செய்வது?
அருவருத்திடும் இழிய செயல்களை
அப்பன் ஆனவன் எப்படி ஏற்கிறான்?
முறுவலித் தருள் சுரக்கும் அற்புத
முகந்தனைக் கரும்புகையுள் மூடுறான்.
பார்த்துப் பார்த்து கடைகள் எரிப்பதும்
பள்ளிவாயில் உடைப்பதுமான கீழ்க்
கூத்து நடக்கவும், 'பஞ்ச' சீலத்துடன்
கொள்ளை அடிப்பவர் கூட்டம் பெருகுது,
ஆத்திகத்தினை நாடும் 'மதத்தினர்'
அன்புதான்இறை என்றுணராவிடின்
நாத்திகத்தினை நான் தழுவுவேன்,
நல்லபிள்ளையை நாதன் இழக்கவே.
❇❇❇