'நுண்மாண் நுழைபுலத்தரிசனம்': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'நுண்மாண் நுழைபுலத்தரிசனம்': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
ஆரம்பத்தில் அவரின் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந்தன. நாளடைவில் அவற்றின் உண்மையை உணர்ந்து வியந்து சிலிர்த்தேன். யாரேனும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவர் வாய்மூடுமுன்,  பதில்; சொல்லத் தொடங்குவதுதான், அறிவு என்று நினைக்கும் இன்றைய உலகில், கேள்வியை உள்வாங்கி, நிதானித்துப் பதில் சொல்வதும், தேவை ஏற்படின், 'நாளைக்கு வாரும் பதில் சொல்கிறேன்' என்று சொல்வதும்,  அவரிடம் எனக்கு வியப்பூட்டிய விஷயங்கள். ஒரு சம்பவம் சொல்கிறேன்.

💛 💚 💙 💛
உள்ளத்தில் நிரம்பிக் கிடக்கும் ஐயா பற்றிய  எண்ணங்கள்,
மீட்க மீட்க மேலெழும்பி வருகின்றன.
அதனால் இன்னும் சில செய்திகளைப் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.

💛 💚 💙 💛

ஒரு நாள் என் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கி,
நாளை பதில் கூறுவதாகச் சொல்கிறார் ஐயா.
அடுத்த நாள் நான் வகுப்புக்குச் செல்லச் சிறிது தாமதமாகிறது.
என் வரவை எதிர்பார்த்துத் தேடிவந்து வீதி முகப்பில் நிற்கிறார் அவர்.
என்னைக் கண்டதும் அவர் முகத்தில் சூரியன்.
'நீர் இன்றைக்கு வராமல் விட்டுவிடுவீரோ என்று பயந்து போனேன்.
நீர் கேட்ட கேள்விக்குப் பதிலை விளங்கி விட்டேன்.
வாரும்' என்று அழைத்துச் சென்று,
அப்பதிலைச் சொல்லத் தொடங்குகிறார்.
சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் ஓர் நிம்மதி.
'இனி நீர் போவதென்றால் போகலாம்'
மாணவனின் ஐயத்தைத் தீர்த்துவிட்ட திருப்தி அவர் முகத்தில்.
இந்தக்காலத்தில் இப்படியொரு மனிதரா!
என் நெஞ்சம் வியந்தது.

💛 💚 💙 💛


ஒரு கேள்வியைக் கேட்டால்,
அதற்குப் பதில் காட்டி,
பின் அப்பதிலையே கேள்வியாக்கி,
அதன் பதில் காட்டி,
மீ;ண்டும் அதனைக் கேள்வியாக்கி.........
இப்படியே உள்நுழைந்து செல்லும் அவர் அறிவு கண்டு,
நான் கொண்ட திகைப்பை,
வார்த்தைகளுள் அடக்கமுடியாது.

💛 💚 💙 💛

எந்தக் கேள்வியானாலும் அக்கேள்வியை அறிவுபூர்வமாய்க் காண்பதும்,
பின்னர் ஆழமான பதிலுரைப்பதும் ஐயாவின் வழக்கம்.
இதைச் சொல்கையில் அவரிடம் நான் கேட்ட,
இரண்டு கேள்விகள் என் நினைவில் வருகின்றன.
அதுபற்றிச் சொல்கிறேன்.

💛 💚 💙 💛

திருக்குறளில் பொருட்பால் படித்துக்கொண்டிருந்தோம்.
கல்வி எனும் அதிகாரம் முடித்துப் பின்னர் கல்லாமை சொல்லி,
அதன் பின் கேள்வி எனும் அதிகாரத்தைத் தொடங்கியிருந்தார் ஐயா.
என்மனதில் ஓர் ஐயம் உதித்தது.
கேள்வியும் கல்வியின் ஒரு கூறுதானே.
பின்னர் ஏன் அதை இரண்டு அதிகாரங்களாய்ப் பிரிக்கவேண்டும் என நினைந்தேன்.
துணிந்து ஐயாவிடம் 'கல்விக்கும் கேள்விக்கும் என்ன வித்தியாசம்?' என்று கேட்டேன்.
சிறிது நேரம் கண்மூடி மௌனித்துச் சிந்தித்தார்.
பின்னர் நிதானமாக அவரிடமிருந்து பதில் வந்தது.
ஒரு விடயத்தைத் தன் அறிவுகொண்டு காண்பது கல்வி.
நுண் அறிவாளர் அறிவுகொண்டு காண்பது கேள்வி.
ஐயா விடை சொல்ல அவ்விடையின் நுண்மை கண்டு வியந்துபோனேன்.

💛 💚 💙 💛

மற்றொருநாள்.
ஐயாவும் நானும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
உரையாடலின் இடையில்,
நீண்ட நாட்களாக என்மனதை அரித்துக் கொண்டிருந்த,
ஒருகேள்வியைக் கேட்கும் சூழ்நிலை வந்தது.
காமம் எந்தவயதில் மனிதனைவிட்டு நீங்கும்?
இதுதான் அக்கேள்வி.
அக்கேள்வியைக் கேட்க நினைந்து,
தவறுதலான முறையில் அக்கேள்வியை ஐயாவிடம் கேட்டேன்.
'ஐயா, உங்களுக்கு இப்போதும் காமம் இருக்கிறதா?',
கேட்டபிறகுதான் நான் கேட்டவிதத்தின் தவறு புரிந்தது.
எண்பது அகவையை அணுகிக் கொண்டிருந்த ஐயாவிடம் கேட்கத்தக்க கேள்வியா இது?
வேண்டுமென்றோ, கிண்டலுக்காகவோ அதை நான் கேட்கவில்லை.
இந்த, காமச்சனியன் எப்போது நம்மைவிட்டுத் தொலையும் என்பதை அறியலாம் என்பதுவே,
என் கேள்வியின் நோக்கமாய் இருந்தது.
கேட்டபிறகுதான் ஐயா தவறுதலாக அதனை எடுப்பாரோ? எனும் அச்சம் வந்தது.
நடுநடுங்கிப் போனேன்.
ஐயாவிடம் எந்தப் பதட்டமும் இல்லை.
வழமைபோலக் கண்மூடி மௌனித்துச் சிந்தித்தார்.
பின் கண் திறந்து பதிலுரைத்தார்.
'இப்போது உடம்பளவில் காமம் இல்லை.'
எப்பேர்ப்பட்ட சத்தியம் நிறைந்த பதில் அது.
இன்னும் உளத்தளவில் காமப்பதிவுகள் அழியாததை,
எத்தனை நாகரிகமாய் எடுத்துரைத்துவிட்டார் அவர்.
அவர் வார்த்தைகளில் சத்தியத்தைத் தரிசித்து விதிர்விதிர்த்தேன்.

💛 💚 💙 💛

விதியால் வந்த அறிவு.
அறிவால் வந்த அடக்கம்.
அடக்கத்தால் வாய்த்த குரு.
குருமேல் கொண்ட பக்தி,
இறை நம்பிக்கை,
இவை, ஐயாவின் விரிந்த அறிவின் வேர்கள்.
ஐயா, ஐயா என,
தன் குருவான கணேசையர் மீது அவர் காட்டும் பக்தி அளப்பரியது.

💛 💚 💙 💛

தொல்காப்பியத்திற்கு உரைக்குறிப்பு எழுதிய,
தனது குருவான புன்னாலைக்கட்டுவன்,
வித்துவசிரோன்மணி சி. கணேசையர் பற்றிய அனுபவங்களை,
சிலவேளைகளில் அவர் என்னோடு பகிர்ந்து கொள்வார்.
அவற்றுள் ஒருசில.......

💛 💚 💙 💛

ஒருமுறை கணேசையரோடு,
நயினாதீவுக்கு அம்பாளைத் தரிசிக்கச் சென்றிருந்தாராம் ஐயா.
அன்னையின் கோபுரவாசலில் நின்று,
தலையில் கைகூப்பிய கணேசையர்,
கண்களில் கண்ணீர் சோர,
'அம்மா உன்னை வணங்காமல் படிப்போடு என் காலத்தை வீணாக்கிவிட்டேனே.'
என்று கூறி அழுததை கண்கலங்கச் சொல்வார் ஐயா.
கற்பனவும் இனி அமையும் என்ற,
மணிவாசகரின் எண்ணக்கருத்தின்; வண்ணமாகத் திகழ்ந்த,
அப்பெரியோர்கள் எங்கே? நாம் எங்கே?

💛 💚 💙 💛

தாங்கள் கேட்கும் சிரமமான சந்தேகங்களுக்கு,
'நாளை அவரிடம் கேட்டுப் பதில் சொல்கிறேன்' என்று உரைப்பாராம் கணேசையர்.
இவர் யாரைக் கேட்கப்போகிறார் என்று தங்களுக்குள் ஐயம் வருமாம்.
ஆனால் அன்றைய மரபின்படி,
ஆசிரியரைக் கேள்வி கேட்கத் துணிவின்றி தாங்கள் மௌனிப்பார்களாம்.
ஒருநாள், ஊர்க் கோயிலில் நடந்த இரவுத் திருவிழாவைப் பார்த்துவிட்டு,
ஐயாவும் அவரது தோழர்களும், நடுச்சாமத்தில் திரும்பியிருக்கிறார்கள்
திடீரெனத் தூரத்துப் பிள்ளையார் கோயிலில்,
அந்த இருள் நேரத்தில் ஓர் வெளிச்சம் தெரிந்திருக்கிறது.

💛 💚 💙 💛

பேய்களுக்குப் பயந்த காலமது.
(இப்போது மனிதர்களே பேய்நிலை எய்திவிட்டபடியால்,
அப்பயம் சற்றுக்குறைந்திருக்கிறது.)
நடுங்கிப்போன ஐயாவும் நண்பர்களும் துணிவை வரவழைத்துக்கொண்டு,
கூட்டமாய்க் கைகோர்த்தபடி மெல்ல மெல்ல அருகிற் சென்று,
அதென்ன வெளிச்சம் என்று  பார்த்திருக்கிறார்கள்.
பிள்ளையார் கோயில் வாசலில், கை விளக்கு ஒன்று அருகில் இருக்க,
மூலஸ்தானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த கணேசையர்,
யாரோ முன்னே இருப்பது போன்ற பாவனையில்,
ஆழமான இலக்கணக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்.
இச்செய்தியை மெய்சிலிர்ப்போடு சொன்ன ஐயா,
அன்றுதான், கணேசையர் தங்களது கேள்விகளுக்கு,
பிள்ளையாரிடம் பதில் கேட்டுச் சொல்லும் ரகசியம் தெரியவந்தது என்று சொல்லி,
கண்கலங்கினார்.

💛 💚 💙 💛

கணேசையரின் தனி வகுப்பில் படித்து,
பாலபண்டிதப் பரீட்சையில் சித்தியடைந்தாராம் எங்கள் ஐயா.
ஐயாவுக்கு பண்டிதப் பரீட்சை எடுக்கவேண்டும் எனும் ஆவல் பிறந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் பண்டிதப் பட்டம் என்பது,
இப்போதைய கலாநிதிப்பட்டம் போல மரியாதைக்குரியதாய் இருந்திருக்கிறது.
அதனால்த்தான் ஐயாவுக்கு அப்பரீட்சையில் தோற்ற ஆசை வந்திருக்கிறது.
சாடைமாடையாகக் கணேசையரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் ஐயா.
கணேசையரோ 'இப்போதைக்கு அது வேண்டாம்' என்று சொல்லிவிட்டாராம்.
ஐயாவுக்கோ ஆசை விட்டபாடில்லை.
அதனால் கணேசையருக்குத் தெரியாமல்,
அந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்து அதில் தோற்றியிருக்கிறார்.

💛 💚 💙 💛

அடுத்தடுத்த மாதங்களில் பரீட்சை முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.
எங்கள் ஐயாவும் சித்தியடைந்த செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது.
இனி குருநாதரின் முகத்தில் எப்படி விழிப்பது? என்று அஞ்சி,
ஐயா, அவரின் கண்ணில்படாமல் ஒழிந்து திரிந்திருக்கிறார்.
ஒருநாள் தற்செயலாக வீதியில் கணேசையரை நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம்.
தலைகுனிந்து ஐயா நிற்க, 'பண்டிதர் வாரும்' என்று கிண்டலாய்க் கூப்பிட்டாராம் கணேசையர்.
பிறகு ஐயாவைப் பார்த்து,
'இனி நீ படிக்கமாட்டாய். அதனால் வீட்டுக்கு வந்து,
பாலபண்டிதர் வகுப்புக்குப் பாடம் சொல்லு' என்று சொல்லிவிட்டுப் போனாராம்.
குருநாதர் தன்னைக் கையாண்ட விதம் பற்றிச் சொல்லி மகிழ்வார் ஐயா.

💛 💚 💙 💛

                                                                                                  (அடுத்த வாரமும் வித்தகர் வருவார்)
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.