வரலாற்றில் அழியாத இடமே கொண்டாய்! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

வரலாற்றில் அழியாத இடமே கொண்டாய்! | கம்பவாரிதி  இலங்கை ஜெயராஜ்
 
லகெங்கும் வாழுகிற தமிழரெல்லாம்
        ஒருநிமிடம் உன்மறைவால் அதிர்ந்து போனார்
நிலமெங்கும் புகழ்பரப்பி நிமிர்ந்து நின்று
        நீ செய்த ஆட்சியதன் பெருமை கண்டு
தலமதனில் வியவாதார் யாரே உள்ளார்?
        தனிப்பெண்ணாய் ஆடவரை நிலத்தில் வீழ்த்தி
பலம்மிக்க இரும்புப்பெண் இவளே என்று
        பலர் புகழ வாழ்ந்தின்று விண்ணைச் சேர்ந்தாய்.
 

திரையதனில் கலைத்திறனால் மிளிர்ந்து ஓங்கித்
        திக்கெட்டும் புகழ் பரப்பி நின்றாய் முன்பு
மறைபொருளாய் இருந்திட்டாய் சிலகாலம் தான்
        மதிப்போடு மீண்டும் உனை அழைத்து வந்து
தரையதனில் புகழோடு தலைமை சேர்த்துத்
        தந்தித்திட்டார் எம்.ஜி.ஆர் என்னும் அண்ணல்
கரைகடந்து அன்றுமுதல் புகழைச் சேர்த்தாய்
        காட்டாற்று வெள்ளம் போல் களித்து ஆர்த்தாய்.

பழம் தின்று கொட்டைகளைப் போட்டோர் தம்மைப்
        பதறி எழ வைத்துந்தன் பதவி காத்தாய்
சிலர் உன்னை ஒழித்திடலாம் என்றே எண்ணிச்
        செய்தவைகள் அனைத்தினையும் புறமே கண்டாய்
வலம் வந்து அவரெல்லாம் உன்னைத் தாழ்ந்து
        வணங்கிடவே நீ நிமிர்ந்து வானந்தொட்டாய்
பலம் கொண்ட பெண்மணியாய் எழுந்து நின்று
        பார் வென்ற உன் பெருமை என்ன சொல்வேன்?

வீழ்ச்சியதை அறியாது அரசுக்கட்டில்
        வீற்றிருக்க மக்களெலாம் ‘அம்மா’ என்றார்.
தாழ்ச்சியதை அறியாது அவரும் வாழ
        தாழ்வில்லாப் பல திட்டம் தனித்துத் தந்தாய்
சூழ்ச்சியிலே நரியொத்த பலரை வீழ்த்தி
        சூழ்ந்த அவர் திட்டமெலாம் பொடியாய் ஆக்கி
மீள்ச்சியிலாத் தோல்விதனை அவருக்கீந்து
        மேதினியைப் பலமுறையாய் ஆட்சி செய்தாய்.

அன்னையென மக்கள்தமை அன்பால் ஈர்த்தும்
        ஆணவத்தால் உடனிருந்தோர் பலரை ஆட்டி
பண்ணியதாம் உன் செயல்கள் பலரும் கண்டு
        பண்பதிலா இவை உனக்கு ஏனோ என்று
எண்ணியதும் உண்மை அதை ஏற்றிடாமல்
        இழிவாகப் பலர்தம்மை இறங்கச் செய்து
மண்ணதனில் உன் புகழ்க்கு மாசைச் சேர்த்தாய்
        மதிமயங்கி ஆட்சிதனில் நீசம் சேர்த்தாய்.

அமைச்சர்களை உன் காலில் விழவே வைத்து
        அவர்தம்மைப் புல்லாக்கி மகிழ்ந்து நின்றாய்
சமைத்த பெரும்புகழெல்லாம் சரிந்து வீழச்
        சமம் எனக்கு எவர் இங்கே உள்ளார்? என்று
அமைத்து ஒரு புது ஆட்சி அறமே இன்றி
        ஆக்கினதால் பொய்யர் உனைச் சூழ்ந்துகொண்டார்.
தமைத்தாமே அவர் செய்த இழிவுகண்டு
        தரணியெலாம் சிரித்ததனை மறக்கலாமோ?

வானமதில் நீ பறந்து வருதல் கண்டு
        வணங்கித்தம் தலையாலே மண்ணைத் தொட்ட
ஊனரெலாம் உனைச் சிறையில் வைத்தபோது
        ஒப்பாரி வைத்தன்று பதவியேற்றார்.
நாணமது சிறிதின்றி இன்று நீயும்
        நலிவடைந்து உயிர்துறக்க நயந்து நின்று
மானமது இல்லாமல் பதவி தன்னை
        மகிழ்ந்தேற்ற காட்சிதனை என்ன சொல்ல?

பொய்யர்தமை உடனிருத்தி வளர்த்து நின்ற
        பொறுப்பற்ற உன் செயற்காம் பரிசே கண்டாய்.
உய்ந்துதமை வளர்ப்பதற்காய் உடனாய் நின்றார்
        உள்ளத்தில் அவர்தமக்கு அன்பே இல்லை.
செய்தவைகள் இனிப்பேசி என்ன செய்ய?
        சேராத இடம் சேர்ந்தும் வெற்றி கண்டாய்.
வையம் உனை மறக்காது ‘அம்மா’ பெண்மை
        வரலாற்றில் அழியாத இடமே கொண்டாய்.

போரதனில் உயிர் இழப்புப் பொதுவே என்று
        பொறுப்பற்று நீ சொன்ன பதிலைக்கண்டு
வேரறுந்த மரமெனவே ஈழத்தார்கள்
        வெம்பி மனம் சுருண்டார்கள் ஆனால் பின்பு
நேருறவே எம் இனத்தை அழித்தார்க்கிந்த
        நிலத்தினிலே இடமில்லை என்று சொல்லி
தீரமுறப் போர்ப்பயிற்சி பெறவே வந்த
        திறமில்லார் தமைத் திருப்பி புகழும் கொண்டாய்.

தமிழகத்து அரசியலாம் தராசில் இன்று
        தட்டொன்று கழற இனி தடுமாற்றம்தான்
அமிழ்தனைய உன் இடத்தை இனிமேலங்கு
        ஆராலும் நிரப்பிடவே முடியாதம்மா
நிமிர்ந்து தனியொருத்தி என நின்று வென்று
        நீ செய்த சாதனைகள் எவரே செய்வார்?
தமிழினத்துக்கொரு தலைமை தனித்துக்காட்ட
        தவறினையே இனி நரிகள் பரிகளாகும்
 
எற்றிய பேர் இடர் அலைகள் அனைத்தும் தாண்டி
        ஏற்றமுற உனைப்போலே எவரும் இல்லை.
வற்றியதாம் தனி வாழ்வின் வளங்கள் எண்ணி
        வாடாமல் வானளவாய் நிமிர்ந்து நின்று
பற்றுடனே மக்கள் உளப் பதிவு கொண்டாய்
        பலகோடிப்பேர் உந்தன் சடலம் சூழ்ந்தார்.
மற்றிதன்மேல் வெற்றிக்குச் சாட்சி வேண்டா
        மகிழ்வுடனே வானுலகில் அமைதி கொள்வாய்.
                                         ✿
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.